einsteinஇந்த சுண்டல் பக்கத்தை எழுதும் இன்று மார்ச் 14.

இதே தேதியில் 1879ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்தார்.

அவர் பற்றி பேசுவோமா?

E=mc² என்று இளைஞர்கள் தம் டீ ஷர்ட்களில் புரிந்தோ புரியாமலோ பதித்திருக்கும் அணுகுண்டு உருவாகிய சூத்திரத்தைத் தந்த சூத்திரதாரி.

புகழ் பெற்ற சார்புக் கோட்பாட்டை (Theory of relativity) முன் வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் அசத்தினார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியதற்கு கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

'பள்ளிக்கூடம் என்னை தோற்கடித்தது. நான் பள்ளிக் கூடத்தைத் தோற்கடித்தேன். ஆசிரியர்கள் காவல்காரர்கள் போல நடத்தினர். நான் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை கற்க விரும்பினேன். ஆனால், அவர்கள், தேர்வுக்காக என்னை தயார்படுத்துவதில் குறியாக இருந்தனர்’ என்று கசப்பான பள்ளி அனுபவங்களைச் சொல்வார்.

அப்போதே பள்ளிகள் அப்படித்தான் போலும்!

இப்போது ஐன்ஸ்டைன் என்று யாரையாவது சொல்வதனால் அதிக புத்திக் கூர்மையுள்ளவர் என அர்த்தகுமளவுக்கு மூளையை பயன்படுத்தியவர்.

1955ல் மரணம் அடைந்தார். அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். அவரது அறிவு மிக்க மூளையை எடுத்து மறைத்து வைத்து கொண்டார்.

இதையறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர்.

ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்து கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக கூறி ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.

விஞ்ஞானியின் மூளையை ஆய்வு செய்வதற்காக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக் கொள்ள பல வருடங்களுக்குப் பிறகு அவரது மூளையின் சில பகுதிகளை பரிசோதனைக்காக நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார்.

தற்போது மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்ஃபியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரைப் போல மூளையின் பெரும் பகுதிகளை உபயோகிக்க ஆசைதான். (அவரே 10%க்கு சற்று கூடுதலாகத்தான் உபயோகித்திருந்தாராம்)

1999 ல் டைம்  "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு தந்தது.

2018 ஆம் ஆண்டில் 162 பேருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இது அதிகபட்சம்.

இந்த செய்தியயை வாசித்த போது விமானப்படையில் பணிபுரிந்த போது வாசித்து  விக்கித்து போன நூல் சி.ஏ பாலன் எழுதிய "தூக்கு மர நிழலில் ". நினைவு வந்தது. (குமுதத்தில் வந்ததை அப்பா பைண்ட் செய்து வைத்திருந்தார்)

பாலன் கேரளாவில்  ஒரு கம்யூனிஸ்ட் தலைவர். அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கருணை மனுவும் நிரகாரிக்கப்பட இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு எனும் நிலை.

அப்போது கேரளாவில் ஈ. எம் எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தது. வழக்கறிஞர் கிருஷ்ண ஐயர் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு மனு செல்ல, இம்முறை கருணை மனு ஏற்று கொள்ளப் பட்டுவிட்டது. (நடிகவேள் ராதாவும் அவரை விடுதலை செய்யச் சொல்லி போராடினார் என்பது கூடுதல் செய்தி)

பாலன் எந்த தவறும் செய்யவில்லை என விடுதலை ஆகி வெளியே வந்து எழுதிய நூல்தான் அது.

வார்டன்கள் செய்கிற கொடுமை; சிறைக்குள் உள்ள அரசியல் என்பதையெல்லாம் சொல்லிப் போகும் இந்நூல் முக்கியமாக தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலையைச் சொல்கிறது.

ஆசிரியர் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதால் பல தூக்கு தண்டனை கைதிகளுடன் பழகும் வாய்ப்புக்  கிடைக்கிறது. நூலில் அவர்களின் கதைகள் பலவற்றை கூறுகிறார். அநேகமாய் ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு நேரத்தில், கோபத்தில் அல்லது முட்டாள்தனத்தில் தவறு செய்து விட்டு அதற்காக கடும் மனவேதனையில் தவிப்பதைச் செல்கிறார்

"எந்த தவறும் செய்யாத எனக்கு தானே தூக்கு விதிக்கப்பட்டது? அந்த தீர்ப்பு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டிருந்தால் நான் இறந்திருக்க வேண்டும் தானே ? நமது நீதி முறையும் தூக்கு வழங்கும் விதமும் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கிறது பாருங்கள்"  என்று நூலை முடிக்கிறார் சி.ஏ பாலன் வருடங்கள் ஆகியும் இந்தப் புத்தகத்தை மறக்க முடியவில்லை.

*செல்வராஜ் ஜகதீசன் எழுதிய கவிதையொன்று மனதை நெருடிக் கொண்டேயிருக்கிறது*

அவசரமாய் தொலைபேசியில்

அழைத்து

அன்பு பற்றிய கவிதையொன்று

அச்சில் வந்திருப்பதைச் சொன்னேன்

வேலை முடிந்து

வீட்டுக்கு வரும்போது

மகனுக்கு மறுக்காமல்

மருந்து மாத்திரைகள்

வாங்கி வா என்றாய்

எனக்குப் புரிந்தது

அன்பைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும்

அன்பையே பற்றிக்  கொண்டிருப்பதும்.

- இரமணி முருகேஷ்

Pin It