ஐக்கிய முடியரசின் சிலந்தி வலை என்பது ஐக்கிய முடியரசு, அதன் வெளிநாட்டுப் பிரதேசங்கள், முடிசார் நாடுகள் ஆகியவை பெருநிறுவன வரி மோசடி, தனியார் வரி ஏய்ப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் வரிப் புகலிடங்களின் வலையாக செயல்படும் விதத்தைக் குறிக்கிறது. வலையின் மையத்தில் லண்டன் நகரம் உள்ளது, இது ஐக்கிய முடியரசின் தலைநகரான லண்டனைக் குறிக்கவில்லை லண்டன் நகரத்துக்குள் உள்ள மற்றொரு லண்டனைக் குறிக்கிறது அதாவது லண்டனுக்குள் லண்டனை குறிப்பிடுகிறது.

உலகின் பெரும் பணம் இலண்டனுக்கு ஏன் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும், மிகவும் விசித்திரமான, பழமையான, அதிகம் அறியப்படாத உலக நிதியத்தின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்று: இலண்டன் கார்ப்பரேஷன் நகரம் (the City of London Corporation) என்கிறார் நிகோலஸ் ஷாக்ஸ்டன்.

the spiders webஇலண்டன் கார்ப்பரேஷன் நகரம் தனக்கான சொந்த அரசியலமைப்பையும், தனி மேயரையும் கொண்டுள்ளது. 1066இல் நர்மாண்டியின் கோமகன் வில்லியம் தலைமையிலான படையால் இலண்டன் இராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது நிகழ்வு நார்மன் வெற்றி என அழைக்கப்படுகிறது. இந்த நார்மன் வெற்றிக்கு முன்னர் குடிமக்கள் அனுபவித்த பழங்கால உரிமைகள், சலுகைகளில் வேரூன்றியுள்ளது இலண்டன் கார்ப்பரேஷன் நகரம்.

இந்த இலண்டன் கார்ப்பரேஷன் நகர மேயரின் முக்கிய அலுவலகப் பணியை அவரது இணையத்தளம் இவ்வாறு கூறுகிறது: ஐக்கிய முடியரசு- அடிப்படையிலான அனைத்து நிதி, தொழில்முறை சேவைகளுக்கான தூதராக." அவர் பிரஸ்ஸல்ஸ், சீனா மற்றும் இந்தியா போன்ற இடங்களின் தொலைதூர அலுவலகங்களில் தாராளமயத்தைப் பரப்புரை செய்கிறார். சிட்டி கார்ப்பரேஷன், அதனுடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட சிந்தனைக் குழுக்கள், நிதித்துறையின் மீதான வரிகளையும், ஒழுங்குமுறைகளையும் ஏன் குறைக்க வேண்டும் என்பதை விளக்கி எக்கச்சக்கமான வெளியீடுகளை வெளியிடுகின்றன. லண்டன் கார்ப்பரேஷன் நகரம் அதன் சொந்த அதிகாரப்பூர்வ பரப்புரையாளரையும் கொண்டுள்ளது, அவர் ‘ரிமெம்பரன்சர்’ என்று அழைக்கப்படுகிறார். லண்டன் நகரில் உள்ள பொதுப் பிரதிநிதிகள் சபையின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே ஒருவர் லண்டன் கார்ப்பரேஷன் நகரின் ‘ரிமெம்பரன்சர்’ தான். பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள இவர் ஊழல் மிக்க நிதித்துறையின் நலன்களை காக்கும் பிரதிநிதியாக செயல்படுகிறார். தற்போது ‘ரிமெம்பரன்சராக’ பால் டபுள் லண்டன் உள்ளார். கார்ப்பரேஷன் நகர உள்ளாட்சித் தேர்தல்கள் பிரிட்டனில் உள்ள மற்ற தேர்தல்களைப் போல இருப்பதில்லை. இங்கு வாழும் 7400 மனிதர்களுடன், இணைந்து அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களும் தேர்தலில் வாக்களிக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக இந்நகரம் செழித்தோங்கியுள்ளது, அரசாங்கங்கள், மன்னர்களுக்கு தேவைப்படும்போது கடன் கொடுக்க அதனிடம் பணம் உள்ளது. எனவே நகரத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, இதுவே பிரிட்டிஷ் தேசிய அரசை மாற்றிய வரலாற்றின் அலைகளைத் தாங்கும் ஒரு அரசியல் கோட்டையாக இருக்க அதை அனுமதிக்கிறது. கேள்வியில்லாது வெளிநாட்டுப் பணத்தை வரவேற்கும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தை இது வளர்த்து வருகிறது, மேலும் பல நூற்றாண்டுகளாக உலகின் பணக்கார குடிமக்களை ஈர்த்துள்ளது.

1950களின் இடைப்பகுதியில் பிரிட்டிஷ் பேரரசு சிதைந்தபோது, தளர்வான கட்டுப்பாடு மற்றும் தளர்வான அமலாக்கம் மூலம் உலகின் சூடான பணத்தை கவர்ந்திழுக்கும் புதிய மாதிரியாக லண்டன் மாறியது. உள்நாட்டில் நம்பகமான பிரிட்டிஷ் சட்ட அடித்தளத்தையும் உள்நாட்டு விதிகள், சட்டங்களை கடுமையாக நிலைநிறுத்துகிறது, அதே நேரத்தில் வெளிநாட்டு சட்டத்தை மீறுவதை கண்மூடித்தனமாக அனுமதித்தது. வெளிநாட்டு நிதியாளர்களிடம், "உங்கள் பணத்தை நாங்கள் திருட மாட்டோம், ஆனால் நீங்கள் மற்றவர்களின் பணத்தை திருடினால் நாங்கள் வம்பு செய்ய மாட்டோம்" என்று சொல்லும் ஒரு உன்னதமான நாடுகடந்த வரி-புகலிடமாக இருந்து வருகிறது.

பிரிட்டன் விரும்பினால் இந்த வரி-புகலிட கமுக்கத்தை ஒரே இரவில் மூடலாம், ஆனால் லண்டன் நகரம் அதை அனுமதிக்காது. லண்டனில் உள்ள ‘சிட்டி யுனிவர்சிட்டியின்’ சர்வதேச அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியரான ரோனென் பலன் விளக்குகிறார், " நாம் இதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். இன்று உலக நிதிச் சந்தைகளின் மையமாக இரண்டாவது பிரிட்டிஷ் பேரரசு உள்ளது. பிரிட்டன் மிக சிறப்பாக அதன் நிலையை விளம்பரப்படுத்தாமல் உள்ளது."

வெளிநாட்டுப் பிரதேசங்கள் மற்றும் முடிசார் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக பணம் இந்த லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. இங்கிலாந்தின் கடல்கடந்த பிரதேசங்கள் மற்றும் முடி சார் நாடுகள் பெரும்பாலும் லாபத்தையும், சட்டவிரோதமாக நிதிகளை கடத்துவதற்கு துணைக்கோள்களாக துணைபுரியும் ஆட்சிப் பிரதேசங்களாகும். உலகளாவிய பணப் பாய்ச்சல் வலையின் முனைகள் போல இந்த ஆட்சிப் பிரதேசங்கள் செயல்படுகின்றன, அதன் மையத்தில் லண்டன் நகரம் உள்ளது, அங்கு பன்னாட்டு நிறுவனங்களும் தனிநபர்களும் தங்கள் இலாபங்களையும் செல்வத்தையும் துணைக்கோள்களாக செயல்படும் ஆட்சிப் பிரதேசங்கள் வழியாக மடைமாற்றம் செய்து கடத்துகின்றன. இது வரி மோசடி செய்பவர்கள், அவர்கள் செலுத்த வேண்டியதை விட குறைவான வரியைச் செலுத்துவதற்காக, உலகில் வேறு இடங்களில் உள்ள தங்கள் இலாபங்கள் மற்றும் செல்வத்தின் உண்மையான மதிப்பைக் குறைத்து மதிப்பிட அனுமதிக்கிறது.

ஐக்கிய முடியரசு, அதன் வெளிநாட்டுப் பிரதேசங்கள் மற்றும் முடி சார் நாடுகளை சேர்த்த வலையமைப்பானது, உலகளாவிய வரி மோசடிக்கு மிகவும் முதன்மையான பங்கு வகிக்கிறது. வரி நீதிக்கான வலையமைப்பின் பெருநிறுவன வரி புகலிடக் குறியீடு 2019ன் அடிப்படையிலான தரவரிசையில், பெருநிறுவன, தனியார் வரி மோசடியால் உலகளவில் ஏற்படும் மொத்த வரி இழப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஐக்கிய முடியரசின் சிலந்தி வலையே காரணம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் பிரதேசங்கள் மற்றும் முடி சார் நாடுகளை கட்டுப்படுத்துவதற்கும், சட்டங்களை தடை செய்வதற்குமான முழு அதிகாரங்களை ஐக்கிய முடியரசு கொண்டுள்ளது, மேலும் இந்த வெளிநாட்டுப் பிரதேசங்கள் மற்றும் முடி சார்நாடுகளில் முக்கிய அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் பிரிட்டிஷ் அரசிடம் உள்ளது. இவற்றிற்கிடையேயான புவியியல், அரசியல் தூரமானது, உலகெங்கிலும் உள்ள சில மோசமான நிதி கமுக்கத்தையும், பெருநிறுவன வரி மோசடியையும் பாசாங்குத்தனமாக செயல்படுத்த ஐக்கிய முடியரசை அனுமதிக்கிறது, அதே நேரத்தில் தன் நாட்டில் மேன்மையான வரியமைப்பையும், வெளிப்படைத்தன்மை தரத்தையும் பராமரிக்கிறது.

ஐக்கிய முடியரசின் சிலந்தி வலை பற்றிய கூடுதல் தகவலுக்கு, மைக்கேல் ஆஸ்வால்டின் முக்கிய ஆவணப்படமான "The Spider's Web: Britain's Second Empire", YouTube இல் பார்க்கவும் வரி நீதிக்கான வலையமைப்பின் நிறுவனர் ஜான் கிறிஸ்டென்சன் இதன் இணை தயாரிப்பாளர்.

https://youtu.be/np_ylvc8Zj8

Source: Tax Justice Network

- சமந்தா

Pin It