balance of payment

1980களிலிருந்து நவின தாராளமயக் கொள்கைகள் அதிகமாகச் செயல்படுத்தப்பட்டதால் இந்தியாவின் இறக்குமதிச் செலவினமும், வெளிநாட்டுக் கடன் நிலையும் அதிகரித்தது. 1991இல் வளைகுடாப் போர் இந்தியாவின் நிதிநிலையில் இரண்டு எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியது. முதலாவதாக, வளைகுடாப் போரின் விளைவாகக் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் இந்தியாவின் இறக்குமதிச் செலவினம் அதிகரித்து வர்த்தகச் சமநிலையை பாதித்தது. இரண்டாவதாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தின் அளவும் குறைந்து போனது. இதன் விளைவாக 1991இல் இந்தியா அயல்நாட்டுக் கொடுப்பு நிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இந்தியா சர்வதேசப் பண நிதியத்தின் நிதி உதவியை நாடியது. சர்வதேசப் பண நிதியம் இந்தியாவின் மீது நான்கு நவீன தாராளமய நிபந்தனைகளை விதித்தது. அதன் விளைவாக இந்தியாவில் “பொருளாதாரச் சீர்திருத்தம்” என்ற பெயரில் பொருளாதாரச் சீர்கேட்டுக் கொள்கைகள் தீவிரமாகக் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது பிடித்த சனிதான், 30 ஆண்டுகளாகி விட்டது, அதிலிருந்து இந்தியா மீளவில்லை என்பதுடன் அந்தப் படுகுழிப் பாதையிலேயே மிகவும் வேகமாகப் பயணித்து வருகிறது. இந்தியாவின் பொதுத்துறைச் சொத்துக்களும், முதலீடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வருகின்றன. இன்னும் கொஞ்ச காலத்தில் பொதுத்துறை என்றால் என்ன எனக் கேட்கும் நிலை வந்து விடும் போலிருக்கிறது.

இந்தியா நவீன தாராளமயப் பொறிக்குள் கழுத்தை நீட்டக் காரணமாகக் கருதப்படுகிற அயல்நாட்டுக் கொடுப்புநிலை நெருக்கடியைப் புரிந்துகொள்ள முதலில் அயல்நாட்டுக் கொடுப்பு நிலை என்றால் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் மூடிய அமைப்பாக இல்லை, அதாவது அதன் பொருளாதாரச் செயல்பாடுகள் உள்நாட்டுக்குள் முடிவடைந்து விடுவதில்லை. பொதுவாக ஒரு நாடு, உலகின் பல நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது அதாவது அந்நாடுகளுக்குப் பொருட்கள், சேவைகளை விற்கிறது, அந்நாடுகளிடமிருந்து பொருட்கள், சேவைகளை வாங்குகிறது. பண்டைய தமிழ்நாடு கடல்கடந்து கிரேக்கம், ரோமாபுரி எனப் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த வரலாற்றை நாம் அறிவோம்.

ஒரு நாட்டின் பொருளாதார நிலையையும், நடப்பு நிதி நிலையையும் பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கியக் குறியீடுகளில் ஒன்றாக அயல்நாட்டுக் கொடுப்புநிலை உள்ளது.

ஒரு நாடு உலகின் பிற நாடுகளுடன் எத்தகைய பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது, அது அந்நாட்டின் நிதிநிலையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை அயல் நாட்டுக் கொடுப்பு நிலையின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் விளைவாக எவ்வளவு வருவாய் பெறுகிறது, உபரி வருவாய் பெறுகிறதா, அல்லது கடன் நிலையில் உள்ளதா என்பதை வெளிநாட்டுக் கொடுப்புநிலையிலிருந்து அறிந்து கொள்ளலாம். இவை அல்லாமல் வெளிநாட்டிலிருந்து பெறும் வருவாய், வெளிநாட்டிற்குச் செலுத்தவேண்டிய வருவாய், பணப் பரிமாற்றங்கள், மூலதனப் பரிமாற்றங்கள், நிதிப் பரிமாற்றங்கள், ஒரு தரப்பிலிருந்து மட்டும் செலுத்தப்படும் பணம் இவை அனைத்துமே இதன் உட்கூறுகளாக பதிவுசெய்யப்படுகின்றன.

அயல்நாட்டுக் கொடுப்புநிலை மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன.

  1. நடப்புக் கணக்கு (Current Account);
  2. மூலதனக் கணக்கு (Capital Account);
  3. நிதிக் கணக்கு (Financial Account).

இவை ஒவ்வொன்றும் சில உட்கூறுகளைக் கொண்டுள்ளன. அவை என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

  1. நடப்புக் கணக்கு:
  2. i) வர்த்தகம்:

அ) பொருட்கள்;

ஆ) சேவைகள்.

  1. ii) வருவாய்:

            அ) ஊழியர்களின் வருவாய்;

            ஆ) முதலீட்டு வருவாய்.

iii) ஒரு தரப்பிலான நடப்புக் கொடுப்புகள்:

            அ) வெளிநாட்டிலிருந்து ஊழியர்கள் அனுப்பும் வருவாய்;

            ஆ) வெளிநாட்டிலிருந்து பெறும் நிதி உதவி.

  1. மூலதனக் கணக்கு:
  2. i) மூலதனப் பரிமாற்றங்கள்;
  3. ii) நிதியல்லாத சொத்துக்களின் வாங்கல் விற்றல்.
  4. நிதிக் கணக்கு:
  5. i) நிதி முதலீடு (போர்ட்ஃபோலியோ);
  6. ii) பங்குகள்;

      iii) கடன் (பத்திரங்கள், வருவிப்புகள்);

  1. iv) நேரடி அந்நிய முதலீடு;
  2. v) பிற முதலீடுகள் (வர்த்தகக் கடன், வங்கிக்கடன்);
  3. vi) சேம இருப்புகள்.
  4. நடப்புக் கணக்கு:

ஒரு நாட்டின் அயல்நாட்டுக் கொடுப்புநிலையின் மூன்று கூறுகளில் ஒன்றாக நடப்புக் கணக்கு உள்ளது. இதன் உட்கூறுகளாக நாட்டின் வர்த்தகச் சமநிலையும், வருவாய்ச் சமநிலையும் உள்ளன. இவற்றின் மதிப்புகளைக் கூட்டி, நடப்புக் கணக்கு நிலை அறியப்படுகிறது.

எளிதாகக் கூறவேண்டுமெனில், ஒரு நாட்டின் நடப்புக் கணக்கு என்பது அதன் இறக்குமதிகள், ஏற்றுமதிகள், நிகர வெளிநாட்டு வருவாய், ஒரு தரப்பு பணக் கொடுப்புகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் குறிப்பிடுகிறது.

ஒரு நாட்டின் நடப்புக் கணக்கு நேர்நிறையாகவோ, எதிர்மறையாகவோ, அல்லது சமநிலையிலோ காணப்படலாம்.

ஒரு நாட்டின் நடப்புக் கணக்கு சமநிலையில் இருக்கும் போது, அதன் குடிமக்களும், நிறுவனங்களும், அரசும் பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் செலவுகளுக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இதில் நிதி என்பது வருவாய் மற்றும் சேமிப்பினைக் குறிப்பிடுகிறது. செலவுகளில் நுகர்வுச் செலவினம், நிறுவனங்கள், அரசு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் செலவினமும் அடங்கும்.

ஒரு நாடு பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் செலவுகளை விட அதிகமாக வருவாய் ஈட்டும் போது. நடப்புக் கணக்கு நேர்நிறையாக உள்ளது. ஒரு நாடு பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் செலவுகளை விடக் குறைவாக வருவாய் ஈட்டும் போது நடப்புக் கணக்கு எதிர்மறையாக உள்ளது. இதுவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அதிகரிக்கும் போது நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்நாட்டு நாணயம் மதிப்பிழக்கும் அபாயம் ஏற்படும்.

நாட்டின் தேசிய வருவாய்க் கணக்குகளை நேரடியாகப் பாதிக்கும் அனைத்து ஓட்டங்களும் இந்தக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.

நடப்புக் கணக்கின் கூறுகள்:

வர்த்தகச் சமநிலை:

வர்த்தகச் சமநிலை என்பது நடப்புக் கணக்கின் மிகப் பெரிய அங்கமாகும். இதில் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிகளும், சேவைகளின் ஏற்றுமதி, இறக்குமதிகளும் அடங்கும்.

ஒரு நாடு உலகின் இதர நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருட்கள், சேவைகளின் வர்த்தகத்தைக் கொண்டு வருவாய் ஈட்டுகிறதா? இல்லை, பிற நாடுகளுடன் வரவைத் தாண்டிச் செலவு செய்கிறதா? என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது வர்த்தகச் சமநிலை என்பது ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மதிப்பிற்கும், ஏற்றுமதி மதிப்பிற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது. பொருட்களின் இறக்குமதியையும், ஏற்றுமதியையும் வெளிப்படையாக அறிய முடியும் என்பதால் இது கட்புலனாகும் இறக்குமதி, ஏற்றுமதி என்றும் அழைக்கப்படுகிறது. சேவைகளில் செய்யப்படும் இறக்குமதியும், ஏற்றுமதியும் வெளிப்படையாகப் புலனாகாது ஆகையால் கட்புலனாகா இறக்குமதி, ஏற்றுமதி என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு நாடு ஏற்றுமதியின் மூலம் பெறும் வருவாய், அதன் இறக்குமதிச் செலவினங்களை விட அதிகமாக இருக்கும் நிலை வர்த்தக உபரியைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் இறக்குமதி செலவினங்கள் அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக இருக்கும் நிலை வர்த்தகப் பற்றாக்குறையைக் குறிக்கிறது.

பொதுவாக ஒரு நாடு எளிதில் விளைவிக்கக் கூடிய அல்லது உற்பத்திசெய்யக் கூடிய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டில் பற்றாக்குறையாக உள்ள பொருட்களைப் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. ஒரு நாட்டில் பயிர்ச்சேதம், வறட்சி ஆகியவற்றால் ஏற்றுமதி பாதிக்கப்படும் போது அதன் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கலாம். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றில் ஏற்படும் விலை உயர்வால் இறக்குமதிக்கான செலவினம் அதிகரிப்பதாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கலாம். அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை மட்டுமே கூட நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படக் காரணமாக அமையலாம்.

வருவாய் சமநிலை:

ஒரு நாட்டின் வருவாயின் வரவு, வெளியேற்றம் இவற்றுக்கிடையிலான வேறுபாடு, முதலீடுகளிலிருந்து பெறும் வருவாய், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதி உதவி அல்லது மானியங்கள், ஒரு தரப்பிலான பணக்கொடுப்புகள் ஆகியவை அனைத்துமே வருவாய்ச் சமநிலையை நிர்ணயிக்கும் உட்கூறுகளாகும்.

ஒரு நாட்டின் நிகர வருவாய் என்பது அதன் குடிமக்களும் நிறுவனங்களும் அரசும் வெளிநாட்டிலிருந்து பெறும் வருவாயிலிருந்து அந்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பும் வருவாயைக் கழிப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பைக் குறிக்கிறது. .நாட்டின் குடிமக்கள் இரண்டு ஆதாரங்களிலிருந்து வருவாய் பெறுகிறார்கள். முதலாவது ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்கள், முதலீடுகளிலிருந்து ஈட்டப்படும் வட்டி, ஈவுத்தொகை இதில் அடங்கும். இரண்டாவது ஆதாரம், வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு நாட்டின் குடிமக்கள் தங்கள் வருவாயிலிருந்து மேற்கொள்ளும் ஒரு தரப்பிலான பணக்கொடுப்புகள் ஆகும். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வருவாய் என்பது, ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுச் சொத்துக்களிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் வட்டி மற்றும் ஈவுத்தொகையைக் குறிக்கும். இரண்டாவதாக ஒரு நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டினர் பெறும் வருவாயிலிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஒரு தரப்பு பணக் கொடுப்புகளையும் அது குறிக்கும்.

வெளிநாட்டினரிடமிருந்து ஒரு நாட்டின் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு பெறும் வருவாய் வெளிநாட்டினருக்கு செலுத்தப்படும் வருவாயை விட அதிகமாக இருந்தால் நேர்நிறையான வருவாய்ச் சமநிலையுடன் உபரி வருவாய் பெறும் நிலையைக் குறிக்கிறது. அதற்கு மாறாக வெளிநாட்டினருக்குச் செலுத்தப்படும் வருவாயை விடக் குறைவாக இருந்தால், அது எதிர்மறையான வருவாய்ச் சமநிலையை வருவாய்ப் பற்றாக்குறையைக் குறிக்கிறது. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் திடீரெனக் குறையும் போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். ஒரு நாட்டின் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை அதன் உபரி வருவாயைக் கொண்டு ஈடுசெய்ய முடியும் போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

மூலதனக் கணக்கு:

மூலதனக் கணக்கின் கீழ் மூலதனப் பரிமாற்றங்கள், முதலீடுகள், தள்ளுபடி செய்யப்படும் கடன்கள், காப்புரிமை போன்ற நிதியல்லாத சொத்துக்களின் பரிவர்த்தனைகள் (பெறுதல், விற்றல்) ஆகியவை இடம்பெறுகின்றன. மூலதன இருப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலதனக் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு பெற்றுள்ள வெளிநாட்டுச் சொத்துகளுக்கும், வெளிநாடு உள்நாட்டில் பெற்ற சொத்துகளுக்கும் இடையிலான மாறுபாடுகள் இதன் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

நிதிக்கணக்கு:

நிதிக்கணக்கின் கீழ் நிதி முதலீடுகள், நேரடி அந்நிய முதலீடுகள், பிற முதலீடுகள், சேம இருப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன. நிதி முதலீடுகள் என்பது பங்குகள், பத்திரங்கள், வருவிப்புகள் போன்ற நிதிச்சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகளை குறிப்பிடுகிறது. நேரடி அந்நிய முதலீடு என்பது ஒரு நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சமாக 10 விழுக்காடு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் / முதலீட்டாளர்கள் பெறுவதைக் குறிக்கிறது. பிற முதலீடுகள் என்பது வர்த்தகக் கடன்கள், வங்கிக் கடன்கள் ஆகியவற்றைக் குறிக்கும். சேம இருப்புகள் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்கள், தங்க இருப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடும்.

தேசிய இருப்புநிலை அறிக்கையை நேரடியாகப் பாதிக்கும் அனைத்து ஓட்டங்களும் மூலதனக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மூலதனக் கணக்கின் உபரியால் சமன் செய்யப்படவேண்டும். இல்லையென்றால் நிதி நெருக்கடி ஏற்படலாம்.

அயல்நாட்டுக் கொடுப்புநிலை என்பது ஓராண்டில் வெளி உலகத்துடனான ஒரு நாட்டின் மொத்தப் பரிவர்த்தனைகளின் சுருக்கமான கணக்கியல் அறிக்கையாகும். பொருட்கள், சேவைகள், மூலதனப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் இதில் பதிவுசெய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாடு வெளி உலகுடன் மேற்கொள்ளும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் பற்றுகள் என்றும் வரவுகள் என்றும் பிரிக்கப்படுகின்றன. அயல்நாட்டுக் கொடுப்புநிலைக் கணக்கை உருவாக்குவதில் இரட்டைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது. நிறுவனங்களின் இருப்புநிலை அறிக்கையில் பற்றுகள் இடது பக்கத்திலும், வரவுகள் வலது பக்கத்திலும் காட்டப்படும். அயல்நாட்டுக் கொடுப்புநிலையில், வரவு இடதுபுறத்திலும், பற்று வலதுபுறத்திலும் காட்டப்படுகிறது.

ஒரு நாட்டின் குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு வெளிநாட்டின் குடிமக்கள், நிறுவனங்கள், அரசுக்கு பணம் செலுத்துவதற்கான கடப்பாட்டை உருவாக்கும் எந்தவொரு செயலும் கடனாகப் பதிவு செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு நாட்டிற்கு வெளிநாட்டின் குடிமக்கள், நிறுவனங்கள், மற்றும் அரசு ஆகியவை பணம் செலுத்துவதற்கான கடப்பாட்டை உருவாக்கும் எந்தவொரு செயலும் பற்று என வரவுப் பக்கத்தில் சேர்க்கப்படும். உதாரணமாக ஏற்றுமதியிலிந்தும் முதலீடுகளிலிருந்தும் பெறும் வருவாய், ‘பற்று’ பிரிவில் சேர்க்கப்படும். வெளிநாட்டுக் கடனுக்கான வட்டி, இறக்குமதிச் செலவினங்கள் ‘கடன்’ பிரிவில் வைக்கப்படும்.

அயல்நாட்டுக் கொடுப்புநிலை ஒரு கணக்கியல் அறிக்கை என்பதால், அதில் உள்ள மொத்தப் பற்றுகளின் தொகை, எப்பொழுதும் மொத்தக் வரவுகளின் தொகைக்குச் சமமாக இருக்க வேண்டும். அதற்கிடையில் ஏற்படும் எந்த வேறுபாடும் புள்ளியியல் முரண்பாடாகக் காட்டப்படும். பொதுவாக ஒரு நாட்டின் நடப்புக் கணக்கும், மூலதனக் கணக்கும் ஒன்றை ஒன்று சமன் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் நடப்புக் கணக்கையும், மூலதனக் கணக்கையும் ஒன்றுசேர்க்கும் போது பூஜ்ஜியம் வர வேண்டும். பிழைகள், விடுபடுதல் ஆகியவற்றால் பூஜ்ஜியம் அல்லாது வேறு மதிப்புகளும் கிடைக்கலாம்.

- சமந்தா

Pin It