தமிழறிஞர் திரு. கார்த்திகேசு சிவதம்பி அவர்களிடம் 08-01-2011 அன்று கொழும்பில் உள்ள அரசு இல்லத்தில் திருநெல்வேலி, சாராள் தக்கர் கல்லூரியில் பணியாற்றும் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை முனைவர் மூ.சு.தங்கம் அவர்கள் “சிதறல் (Diaspora) மற்றும் புலம் பெயர்த தமிழர்'' என்ற தலைப்பில் எடுத்த நேர்முகப் பேட்டியின் ஓர் தொகுப்பு :

இலங்கையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தாங்கள் சிதறல் பற்றிப் பேசினீர்கள். அதைப்பற்றி ஒரு சிறு விளக்கம் கூறுங்கள்.

“dia'' என்றால் throughspace என்று பொருள்படும். “spora' என்றால் விதைகள் வெடித்துச் சிதறுதல் என்று அர்த்தம் கொள்ளலாம். இதுவே மனிதர்களின் இயக்கத்தைக் குறிப்பிடும் போது “diaspora'' என்றால் “சிதறல் அடைதல்'' என்று பொருள்படும்.

ஜெர்மனி ஹிட்லரின் கட்டுப்பாட்டிலிருந்தபோது அங்குள்ள யூதர்கள் ரஷ்யா, இஸ்ரேயல் மற்றும் உலகில் பிற நாடுகளுக்கு சிதறிச் சென்றனர். இதுவே “Jewish Diaspora'' என்று பேசப்பட்டது. இவ்வாறு மனிதர்களை குறிக்கும் முகமாக முதலில் “DIASPORA'' என்ற வார்த்தை யூதர்களின் சிதறல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிகமான அளவில் சிதறல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இலங்கைத் தமிழ் மக்கள் சிதறல் என்பது முக்கிய இடம்வகிக்கிறது. அதாவது “சிதறல்'' என்பது இரண்டுவகைப்படும். நாடு கடத்தப்பட்டதற்கு (exiles) என்பது ஒருவகை. மற்றொன்று தாங்களாவே நாட்டைவிட்டுச் சென்றவர்கள் (self exiles). இலங்கைத் தமிழ் மக்களின் சிதறல் இரண்டாம் வகையில் சார்வது. இலங்கையில் உள்ள ஜாப்னா தீபகற்பத்திலிருந்து அதிகமான அளவில் தமிழர்கள் சிதறல் அடைந்துள்ளனர். இச்சிதறலுக்கு முக்கியக் காரணம் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இங்குத் தொடர இயலாதச் சூழலில் மற்ற நாடுகளுக்கு சென்றனர்.

அண்மைக்காலத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற தமிழர்கள் அதிகமான அளவில் தமிழ்வழியில் கல்வி கற்றவர்கள். அதாவது ஆங்கிலவழியில் கல்வி கற்றவர்கள் அல்லர். இவர்கள் தாங்கள் செல்லுமிடங்களில் தமிழ் பேசுவது மட்டுமல்லாமல் தங்கள் தமிழ் தன்மையை உண்மையாகப்பற்றிப் பாதுகாக்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது இங்கிருந்துச் சென்ற கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயங்களில் மாதத்திற்கு ஒருமுறை தமிழ்வழி ஆராதனை முறைமைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும் மொழிப்பற்றைத்தாண்டி திராவிட உறவுமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். இட்லி, தோசை, புட்டு போன்ற நம்முடைய உணவு முறைகளையே கைக்கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். தாங்கள் புகலிடமாகச் சென்ற இடங்களில் எல்லாவிதமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் சொந்த நாட்டில் தாங்கள் வசித்த இடத்தில் உள்ள கேணி, குளம், கோவில் என்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதனை நாடுகடந்த மனநிலை என்று அழைப்பர். இவ்வாறு நாடு, இனம், மொழியினைக் கடந்து பண்பாட்டுப் பேணுகை நடைபெறுகிறது.

புலம் பெயர்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?

“புலம்'' என்றால் ஒரு நிலப் பகுதி அல்லது நிலப்பரப்பு என்று பொருள்படும். வடபுலம் என்றால் வடபகுதி அல்லது வடநிலம் என்றும் தென்புலம் என்றால் தென்பகுதி அல்லது தென் நிலம் என்றும் பொருள் கொள்ளலாம். புலம் பெயர்தல் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாழமுடியும் என்ற நம்பிக்கையோடு கடந்துச் செல்லுதலாகும். புலமை மற்றும் புலவோன் (அறிவின் எல்லை) என்ற வார்த்தைகள் இதனோடு தொடர்புடையவைகளே.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்கள் வாழும் நாடுகளில் அடையாள நெருக்கடி உள்ளதா?

தமிழர்கள், தமிழ் அல்லாதோர் மத்தியில் வாழும் போது அவர்கள் தமிழ்த்தன்மைக் கூடுகிறது. அத்தகுச் சூழ்நிலையில் அவர்கள் தங்கள் தமிழ்த்தன்மையைப் பராமரிப்பதையே நாம் அடையாள நெருக்கடி என்று கூறுகிறோம். இத்தகுப் பிரச்சனைகள் தனிப்பட்டோர் வாழ்க்கையில் வரலாம். மற்றபடி பொதுவில் தமிழன் என்ற அடையாளத்திற்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம் மிகவும் பழமையானது. அதிலும் மொழியில் மாத்திரம் அடையாள நெருக்கடி கிடையாது. ஏனென்றால் சங்க இலக்கியம் இருக்கிறதே.

கலாச்சாரம் என்று சொல்லும்போது நாம் அதன் மூன்று முக்கியப் பண்புகளை, பரிமாணங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒன்றோடு மற்றொன்று இணைத்தல் அல்லது கலத்தல், தெரிந்தெடுத்தல், மற்றொன்றை புதிய சூழ்நிலைக்கேற்ப புத்தாக்கம் செய்தல் என்பதாகும். அமெரிக்காவில் வாழும் கருப்பர்கள் தங்கள் மதம், மொழி போன்றவற்றை மறந்து விட்டு அமெரிக்க கலாச்சாரத்தோடு இணைந்து வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் ஒரு கூற்று வழக்கத்தில் உள்ளதாம். அதாவது "வெள்ளைக்காரன் வந்த போது எங்கள் கையில் நிலமும் அவன் கையில் வேதநூலும் இருந்தது. ஆனால் தற்போது அவன் கையில் நிலமும் எங்கள் கையில் வேத நூலும் உள்ளது' என்று. தமிழர்களுக்கு அந்த நிலைமை இல்லை. இந்தியக் கலாச்சாரம் அவ்வாறு இணையக்கூடாது என்பதற்காக இந்தியர்கள் தங்கள் இந்தியத்தன்மையைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு அமெரிக்காவில் வெள்ளையர், கருப்பர் வேறுபாடு இருப்பது போன்று கருப்பர்களுக்கும் brown நிறத்தினர்க்கும் இனச்சிக்கல் உள்ளது. அடுத்ததாக தெரிந்தெடுத்தல் என்று பார்த்தால் பனிபொழியும் ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி 14 ஆம் நாள் நடுங்கும் குளிரில் தமிழர்கள் பொங்கலிடுகின்றனர். அதேவேளையில் அவர்களால் முற்றத்தில் பொங்கலிட முடியாது. அடுப்பில் வைத்து அங்குள்ள வசதிகளைத் தெரிந்தெடுக்கின்றனர். மூன்றாவதாக புத்தாக்கம் என்ற அம்சம் மிக முக்கியமானது. அதாவது தாய்லாந்து நாட்டில் முத்துமாரியம்மன் கோவிலில் கால்ச்சட்டையோடு வந்து பிராமணன் பூசை செய்கிறான். கலிபோர்னியாவில் உள்ள கோவிலில் கடவுளிடம் வேண்டுதல் செய்ய தங்கள் வேண்டுதல்களைக் காகிதத்தில் எழுதி ஐயர் கையில் கொடுக்கின்றனர். இவ்வாறு புத்தாக்கங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

தமிழ்க் கலாச்சாரம் காலத்தைக் கடந்த பழமையானக் கலாச்சாரம் என்பதால் இது மற்ற கலாச்சாரத்தோடு இணையும் வாய்ப்பு குறைவு. அதேவேளையில் தெரிந்தெடுத்தல் மற்றும் புத்தாக்கங்கள் போன்ற அம்சங்களை எளிதாக உள்வாங்கிக்கொள்கின்றது. தமிழர் கலாச்சாரம் அவர்களுக்கு அடையாள நெருக்கடி வரவிடாது.

புலம்பெயர்ந்த தமிழரில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் அடையாளம் எவ்வாறு பேணப்படுகிறது?

புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகளின் தமிழ்த்தன்மை அந்தந்த நாட்டு அரசாங்கத்திற்கு ஏற்றார்போல் பேணப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்ரிக்கா, இலங்கை மற்றும் மொரீசியஸ் போன்ற நாடுகளில் அரசியலமைப்பு மற்றும் ஆட்சித்திட்டங்களில் தமிழுக்கு இடம் இருக்கிறது. அதன் அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். மலேசியாவில் ஆறாம் வகுப்பு வரை தமிழ் கற்கின்றார்கள். டென்மார்க் நாட்டில் தமிழர்களின் பிள்ளைகள் சரளமாக டேனிஷ் மொழியில் பேசுகின்றனர். எனவே பிள்ளைகள் காலத்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிங்கப்பூரில் தமிழ்ப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தேவாரம் பாடுகின்றனர். மேலை நாடுகளில் இளைஞர்களிடம் dating என்ற முறை வழக்கத்திலிருக்கிறது.

ஆனால் அது செக்ஸ் அல்ல. நம்முடைய கலாச்சாரத்தில் நாம் அதனை செக்ஸ் ஆகப் பாவித்து ஏற்றுக்கொள்வதில்லை. சுவீடன் நாட்டில் உள்ள நண்பரின் மகள் ஒரு பையனோடு வீட்டிற்கு வந்தபோது அவளுக்கும் தகப்பனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் தீர்த்து வைத்தேன். எனவே மேலை நாடுகளிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்குமிடையே செறிவழுத்த நிலை (tensions) நிலவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ளத் தமிழரின் பையன் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற துணையைத் தங்கள் தாய்நாட்டிலிருந்துத் தெரிந்தெடுப்பவர்களும் உண்டு.

மேலை நாடுகளில் தமிழ்ப்பையனைத் திருமணம் செய்த வெள்ளைக்கார பெண்கள் தாலி அணிந்திருக்கின்றனர். எனவே நமது கலாச்சார பண்புகளின் மதிப்பு மற்றும் அமைப்பினை பொறுத்து அது தமிழரல்லாதோராலும் போற்றப்படுகின்றது.எனவே நமது கலாச்சாரம் எதிர்காலத் தலைமுறையினரால் புத்தாக்கங்கள் செய்யப்படுமே தவிர ஒருபோதும் மற்ற கலாச்சாரத்தோடு முழுவதுமாக இணையாது என்பது என் கருத்து.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழருக்கும் பிற பன்முகக் கலாச்சாரச் சூழல் கொண்ட நாடுகளுக்குச் சென்றவர்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

ஆம் வேறுபாடு உள்ளது. அந்தந்தப் பிரதேச சீதோஷ்ண நிலை மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபாடுகள் உள்ளன. ஏன் ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிலிருந்து வேறுபட வில்லையா? அங்கு இல்லாத அம்சங்கள் இங்கு இஸ்லாத்தில் இருக்கிறதே

இந்தியாவிலுள்ள இலங்கைக்காரர்கள் அதாவது இலங்கைச் சென்று பணம் சம்பாதித்துத் திரும்பியவர்களைத் தென்னம்பிள்ளைக்காரர் என்று சொல்வார்கள். ஏனென்றால் இலங்கையில் நாங்கள் வீட்டின் ஓரத்தில் தென்னை மரம் வளர்ப்போம். ஏன் இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் தானே? எனவே வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களிடம் பிரதேச வேறுபாடு உண்டு. ஆனால் தமிழ்தன்மை என்ற நீரோட்டம் மாறாது. அது மாறினாலும் இன்னொன்றாக புதிய சூழ்நிலைக்கேற்ப புத்தாக்கம் செய்யப்படும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மொழி எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

இந்திய நாகரீகங்கள் முழுவதிலுமே சமய சார்பற்ற மிகப்பழமையான இலக்கியம் தமிழ் இலக்கியமே. வேதகால இலக்கியங்கள் பழமையானது என்று கூறப்பட்டாலும் அது பாராயண இலக்கியமே காப்பியம் என்பதே வடசொல்தான்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஜெர்மனியில் மோட்டார் வண்டி என்பதனை ஆட்டோ வண்டி என்று குறிப்பிடுகின்றனர். புறப்பட்டுவிட்டேன் அல்லது வெளியேறிவிட்டேன் (getting out) என்பதற்கு இறங்கிட்டேனே என்று சொல்கின்றனர். இலங்கையில் உள்ள கல்வீடு என்ற சொல் தமிழிலிருந்து வரவில்லை. தமிழில் மனை என்றால் வீடு. அரண் +மனை = அரண்மனை அதாவது அரண்களால் சூழப்பட்ட மனை. மனைவி என்றச் சொல் இதிலிருந்து தோன்றியதே. பெண்கள் அணியும் உள்ளாடைக்கு தமிழ்வார்த்தையில் மேல்கச்சை என்று சொல்ல வேண்டும். ஆனால் இவ்வார்த்தை வழக்கத்தில் இல்லை. இதனால் தமிழ்க் கெட்டுப்போகவில்லை. கடவுள் உலகத்தைப் படைத்தார், அம்மா சோத்தைப் படைத்தாள், இதில் “படைத்தல்'' என்ற செயல் ஒன்றா? இல்லையே. மொழியியல் ஆராய்ச்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதைத் தவறாகக் கையாண்டால் ஆபத்து நேரிடும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசுகின்றனர். அனைத்தும் ஒன்றா? இல்லையே. theatre என்ற ஆங்கில வார்த்தையை theater என்று அமெரிக்க மாணவன் எழுதுகிறான். கேட்டால் நாங்கள் இந்த மொழியினால் பிரிக்கப்பட்டிருக்கிறோம் (we were divided by the same language) என்று கூறுகின்றனர். ஆங்கிலத்தில் “girl'' மற்றும் “gale' என்ற வார்த்தைகளில் உள்ள ள் என்ற எழுத்தையும் “bun'' மற்றும் “burn'' என்ற வார்த்தைகளில் ன் என்ற எழுத்தையும் கவனித்துப் பாருங்கள். மலையாளத்தில் “he came'' என்பதை அவன் வந்நு என்கின்றார்கள். தமிழில் அவன் வந்தான் என்று சொல்லுகிறோம். அப்படியானால் “he came he'' என்று எழுத வேண்டும்.

ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட இயல்புகள் உள்ளன. இது மொழிகளின் இயல்பு, இதில் நாம் சென்று தலையை முட்டிக்கொள்ளக் கூடாது. தமிழ் மாறும், சங்கக்காலத் தமிழ் வேறு, பல்லவர்க்காலத் தமிழ் வேறு, சோழர்காலத் தமிழ் வேறு எனவே மொழியில் மாற்றங்கள் மற்றும் புத்தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவற்றினூடே ஏதோ ஒன்று மாறாமல் இருக்கும் அல்லவா அதுதான் தமிழின் தனித் தன்மை.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து அனைத்தையும் மாற்றிவிட்டனர் என்று சொல்லுகிறோம். ஆனால் கால்டுவெல் தமிழுக்கு ஒப்பிலக்கணம் என்ற புகழ் பெற்ற நூலைத்தரவில்லையா? எனவே மொழியில் புத்தாக்கங்கள் நிகழ்வதைத் தடுக்க இயலாது. சோழர்களைப்பற்றியும் பாண்டியர்களைப்பற்றியும் எழுதிய நீலகண்ட சாஸ்திரியை பாரதி “மெல்லத் தமிழ் இனிச்சாகும்... என்றந்தப் பேதை சொன்னான்'' என்று கடித்து கொண்டாரல்லவா தமிழுக்கு நெகிழும் தன்மை உண்டு. அது ஒரு வரலாற்று நெகிழ்ச்சி தமிழ் சாகாது. தமிழ் வாழும்.

தமிழில் புது பயன்பாட்டுத் தொடர்கள் மற்றும் idioms சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனை மொழியியல் வல்லுநர்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

கால்டுவெல் பற்றி குறிப்பிட்டீர்கள். கால்டுவெல் தனது திருநெல்வேலி சாணார்களின் வரலாறு என்ற நூலில் சாணார்கள் இலங்கை யிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கால்டுவெல்லின் நூல் சர்ச்சைக்குள்ளாகியது. அந்த நூல் புழக்கத்திலிருந்து தடைச்செய்யப்பட்டது. அதன் ஒரு பிரதி இலங்கையிலுள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதைத் தொடவிடார்கள். கால்டுவெல் தமிழ்க் கலாச்சாரத்தை நன்கு கற்றறிந்தவர். தமிழ்க் கலாச்சாரத்தோடு ஐக்கியமானவர். அதோடு அவர் சமஸ்கிருதப் பண்பாட்டை வேறுபடுத்தி ஒரு குறிப்பிட்ட தொகுதியை குறிப்பிட திராவிடன் என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். (ஆனால் தற்பொழுது அச்சொல் கட்சியாகிவிட்டது)

இலங்ஙகையில் தமிழ்ச்சாதிகளில் இரண்டு வகைகள் ஒன்று கோபியர் மற்றொன்று நளவர் (பள்ளர் இதில் அடங்கும்) மீன் பிடிப்பவர்களை கெரயான் என்று அழைப்பர். இவர்கள் கோவிலுக்குள் செல்லும் சாதி. முக்குவர் என்பவர்கள் ஒரு பிரிவினர். அதாவது கடலில் மூழ்குவதால் அவர்களை முக்குவர் என்று அழைக்கின்றனர். இது காரணப் பெயராக வந்துள்ளது. முத்துக்குளிப்பவர்கள் இதில் அடங்குவர். வெள்ளாண்மை (வேளாண்மை அல்ல) செய்கிறவர்கள் வெள்ளாளர்கள். இவர்கள் நெற்செடி வளர்ப்பவர்கள். அதன் மூலம் உணவு கிடைப்பதால் அவர்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து காணப்படுகிறார்கள். சம்மந்தப்பட்டவர்கள் சமூக அந்தஸ்து உயர அவர்கள் கோவில் அந்தஸ்தும் உயருகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் மதத்தை எவ்வாறு பேணுகின்றனர்?

தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த பிராமணர்கள் எந்த ஒரு மூலை முடுக்கில் இருந்தாலும் அது அவர்களுக்கு திருவையாறும், தஞ்சாவூரும்தான், அமெரிக்காவில் உள்ள இந்துக்கோவில்களில் அனைத்து விதமான பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறுகின்றன.

புலம் பெயர்ந்தவர்கள் மதம் மாறியதாகத் தெரியவில்லை. தெய்வங்களுள் முருகன் வேறு ஸ்கந்தன் வேறு. இலங்கையில் மட்டக்கிளப்பு முழுக்க கண்ணகி அம்மன் கோவில் உள்ளது. இத்தெய்வத்திற்கும் கண்ணகிக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியாது. இது ஒரு சிக்கலான விஷயம் திட்டமாக எதையும் அடித்துச் சொல்ல முடியாது.

தமிழ்நாட்டின் சின்னம் கோபுரம் காளிகோவில் சூலத்தையும், மண்டூர் வேலினையும் சின்னமாக பார்க்க வேண்டும். நான் அழகிற்காக கும்பகோணத்திலிருந்து ஒரு நடராஜர் சிலையை வாங்கி வந்தேன். ஒருநாள் அதில் பூ வைத்த போது என் ஐயா (தகப்பனார்) பண்டிதர் சொன்னார் பூ வைத்தால் சிலையாக இருக்காது, கும்பிட ஆரம்பித்து விடுவாய் என்று.

எனவே புலம் பெயர்ந்தவர்களின் மதங்களின் வழிபாட்டுமுறைகளில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படலாம். அதுவும் புத்தாக்கமே

இலங்கையில் இனப் போர் முடிவுற்ற பிறகு புலம் பெயர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

போர் என்றோ வெற்றி தோல்வி என்றோ தயவு செய்து பேச வேண்டாம். இது தொடர் போராட்டம். இது ஒரு இடையறாத தொடர் அல்லது அறாத்தொடர் என்று கூறலாம். இது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாங்கள் புலிகள் அல்ல. ஆனால் புலிகள் இருக்கும் வரை எங்களுக்கு தெம்பும், முத்திரையும் இருந்தது. எங்களுக்குச் சிங்ளருடன் பிரச்சனை இல்லை. உணவு, சாப்பாடு மற்றும் சமூக ஒழுங்கு முறைகள் என்று எங்கள் ஒற்றுமைகளைக் குறித்துப் பேசாமல் வேற்றுமைகளைப் பற்றியே பேசுகின்றனர். வேற்றுமைப் பாராட்டி நாட்டைப் பிரித்துப் போட்டுக் கிடக்கின்றார்கள். சிங்களவர்கள் டிரஸ்டவாதி (terrorism) என்று கூறுகின்றனர். மற்றவர்கள் வரும் மாற்றங்களினூடே தமிழ் அழியாது. நிலைத்து நிற்கும். உலகத்தில் உள்ள சாமிகளோ, அல்லது மாநாடுகளோ தமிழினை வளர்க்க முடியாது. தமிழை வளர்த்தவர்கள் இளங்கோ, கம்பன், பாரதி என்ற மூன்று பேர் மடடுமே. யாரும் தமிழை அழிக்கவும் முடியாதுநான்கு பேர் வந்து தூக்கி நிறுத்தவும் முடியாது. தமிழர் இல்லாமல் தமிழ் மொழி அல்ல. எதிர்காலம் பற்றி நான் நம்பிக்கை இழக்கவில்லை. செல்வராஜ் தனது பாடலில் சொன்னது போல “நாளை வருவான் ஒரு மனிதன்'' உலகமயமாக்கலினால் எல்லா மொழிகளும் அழிந்து ஒரு மொழி தனித்து நிற்காது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் கால்களில் நின்று மற்றவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும். நாமும் நமது காலில் நிற்போமாக.

பண்பாடு (culture), நாகரீகம் (civilization) பற்றி விளக்கம் வேண்டும்.

பண்பாடு வாழும் முறை. நாகரீகம் என்பது historical concept. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் பண்பாடுதான். எகிப்து, சிந்து சமவெளி மற்றும் பாபிலோன் போன்ற இடங்களில் தோன்றிய நாகரீகங்களாகும். நாகரீகங்களுக்கு வரலாற்று எல்லை உண்டு. தமிழ்பண்பாடு மாறும் ஆனால் அதன் அடையாளங்கள் மாறாது. உன்னைப்போல் உன் மகளோ, பேத்தியோ இருப்பதில்லை. ஆனால் நீங்கள் மூவரும் தமிழச்சி இல்லையா? புதுமைப் பெண்கள் என்பதற்காக தமிழ் பெண்கள் தாலி அணிவது இல்லையா? திருமண முறைகள் நாட்டுக்கு நாடு வேறு படலாம் ஆனால் திருமணம் ஒன்றுதானே. பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கு வரலாற்று தொடர்ச்சி உண்டு. இதில் ஏற்ற தாழ்வு இருக்கலாம். பண்பாட்டின் மாற்றங்களும் தொடர்ச்சியுமே வரலாற்றின் இயல்புகள். இதில்தான் வரலாறு இருக்கிறது. பண்பாட்டில் புத்தாக்கம் நடந்து கொண்டே இருக்கும். இதை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும்.

நேர்காணல்: மூ.சு.தங்கம்

Pin It