1784 இல் இந்திய ஆசியவியல் கழகம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் இக்கழகத்தின் தலைவர். 1933 இல் அகில இந்தியக் கீழ்திசை ஆய்வுகள் மாநாடு தொடங்கப்பெற்றது. பிரித்தானியர்கள் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சமசுகிருதம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள், இருபதாம் நூற்றாண்டில் உருவான புதிய சூழல்களோடு இணைந்து செயல்படும் நிலை உருவானது. 1917 இல் பூனாவில் உருவாக்கப்பட்ட ‘பண்டராகர் ஆய்வு நிறுவனத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஐரோப்பிய சமூகத்தில் உருவான புத்தொளிக்கால எழுச்சியோடு இந்தியாவில் சமசுகிருத ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இவ்வாய்வுகளை ‘இந்தியவியல்’ எனும் தொடரில் குறித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியவியல் ஆய்விற்குள் ‘திராவிட இயல்’ தொடர்பான ஆய்வுகள் நிகழ்த்தப்பெறவில்லை. திராவிட மொழிகள் தொடர்பான எல்லீஸ் மற்றும் கால்டுவெல் ஆகிய பிறர் மேற்கொண்ட ஆய்வுகள், சிந்துசமவெளி கண்டுபிடிப்பு, தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம் கண்டுபிடிப்பு ஆகியவை, திராவிட இயல் என்பதற்குக் கால்கோளிட்டது. இந்தப் பின்புலத்தில், இந்தியவியலுக்குள் ‘திராவிட இயல்’ என்பது தனித்த தன்மைகளைக் கொண்டது என்ற புரிதல் உருவானது.

சமசுகிருத மொழியோடு இணையாக தமிழ் மொழியைக் கருதும் சூழல் உருவானது. இந்தச் சூழலில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் திராவிட இயல் குறித்த ஆய்வுகளுக்கு வழி காணப்பட்டது. 1938 இல் வையாபுரிப் பிள்ளை உருவாக்கிய ‘சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன்’ மற்றும் 1964 இல் எமனோ பரோ உருவாக்கிய ‘திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி’ ஆகியவை திராவிட மொழிகள், குறிப்பாக தமிழ்மொழி குறித்து உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான குறியீடுகளாக அமைந்தன. இத்தன்மைகளைப் புரிந்துகொண்ட பேராசிரியர்கள் தனிநாயகம் அடிகள் மற்றும் வ.அய். சுப்பிரமணியம் ஆகியோர், 1964 இல் டெல்லியில் நடைபெற்ற ‘அகில இந்தியக் கீழ்த்திசை’ மாநாட்டில், ‘உலகத் தமிழ் மாநாடு’ நடத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தனர். 1966 இல் அது நடைமுறைப்படுத்தப்பட்டு, கோலாலம்பூரில் ‘முதல் உலகத் தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அகில இந்தியக் கீழ்த்திசை மாநாட்டில் சமசுகிருத மொழிசார்ந்த ஆய்வுகளுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வுகள் இடம்பெறவில்லை. இந்தப் பின்புலத்தில், தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளுக்காக ‘அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனம்‘ (மிகிஜிஸி) 1964 இல் உருவாக்கப்பட்டது.

அந்த நிறுவனமே உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது. இந்நிறுவனம் தமிழ்மொழி வழங்கும் மற்றும் தமிழாய்வு நிகழ்த்தப்பெறும் நாடுகளில் உள்ள புரவலர்களின் துணையோடு இம்மாநாடுகளை நடத்தியது. 1968, 1981, 1995 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு புரவலராக இருந்து இம்மாநாடுகளை நடத்தியது. இப்போது 2010 இல் நடத்தப் போகிறது. 1966, 1968, 1970, 1981 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளின் ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் நமக்குக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணம் (1974), கோலாலம்பூர் (1987), மொரீசியஸ் (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய மாநாட்டுக் கட்டுரைகள் அச்சு வடிவம் பெற்றதாகக் தெரியவில்லை. நான்கு மாநாடுகளில் வழங்கப்பட்ட ஒன்பது தொகுதிகள் உள்ளன. தமிழ் மாநாட்டைப் பற்றிய புரிதலை இத்தொகுதிகள் வழி நாம் அறிய முடியும். இதனை பின்வருமாறு நாம் தொகுத்துக் கொள்ளலாம்.

- தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகள் மூலம் அறியப்பட்ட புதிய தமிழியல்

- மொழி தொடர்பான ஆய்வுகளின் புதிய முறையியல்கள்

- தமிழ்ச் சமூக வரலாற்றைப் புதிய தரவுகளின் வழி கட்டமைக்கும் வாய்ப்பு

- உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் குறித்த புரிதல்

பிரித்தானியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களை இந்தியாவில் நிறுவினர். அந்நிறுவனங்களின் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. தமிழியல் ஆய்வுடன் தொடர்புடைய சிந்துசமவெளி அகழ்வாய்வு _ குறிப்பாக சிந்துசமவெளிக் குறியீடுகள், பிராமி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு, பல்வேறு புதிய அகழ்வாய்வுகள் ஆகியவை தமிழியலின் புதிய வரவுகள் ஆகும். இத்தன்மைகளை உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் உருவான ஆய்வுக்கட்டுரைகள் மூலமே உலகம் அங்கீகரித்தது. இந்தியாவில் 1881 முதல் குறியீடுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. பாறை ஓவியங்கள், பானை ஓடுகள் மற்றும் பல்வேறு புழங்கு பொருட்களில் காணப்படும் குறியீடுகள் ஆகியவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பின்புலத்தில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொடர்பான ஆய்வை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (1968) ஐராவதம் மகாதேவன் முன்வைத்தார். இக்குறியீடுகள் மூல திராவிட மொழிக் குறியீடுகளாக இருக்கலாம் என்ற ஆய்வு அண்மையில் முனைப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பின்லாந்தைச் சேர்ந்த அகஸ்தோ பர்போலா ஆகிய பிறர் இத்துறை தொடர்பான ஆய்வை நிகழ்த்தி வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1826) சிந்துசமவெளி குறித்த தேடுதல் தொடங்கியது. 1924 இல் ஜான் மார்ஷல் மூலம், அவ்வாய்வு உறுதிப்படுத்தப்பட்டது. 1968 இல் நடந்த மாநாட்டில், சிந்து சமவெளிக்குறியீடுகள் திராவிட மொழிக் குறியீடுகளாக் இருக்க வேண்டும் என்றும் வாதம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வகையில் சமசுகிருத மொழி மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இன்னொரு மொழி மரபு குறித்தக் கருத்து நிலை உறுதிபடுத்தப் பட்டது. இவ்வகையில் உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் உருவான ஆய்வுகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவைகளாயின.

சிந்து சமவெளிக் குறியீடுகளின் தொடர்ச்சியாக பிராமி எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளும் இம்மாநாடுகள் வழியே உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது. கொல்கத்தா அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் பிரின்சிப், 1830 இல் பிராமி எழுத்துக்களை காசுகளிலிருந்து கண்டறிந்தார். இவ்வடிவம் இந்தியா முழுவதும் உள்ள பழங்காசுகள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் காணப்படுவதைக் கண்டறிந்தனர். தேனீ பகுதியில் கிடைத்துள்ள நடு கல்லில் பிராமி எழுத்துவடிவம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. 550. தமிழ் மொழி பேசப்படும் நிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள பிராமி கல்வெட்டுக்கள் தமிழ் எழுத்து வடிவ வரலாற்றுத் துறையின் முக்கிய ஆவணங்கள் ஆகும். இத்துறை தொடர்பான ஆய்வுகளுக்கும் தமிழ் மாநாடுகளே அடிப்படையாக அமைந்தன. பிராமி எழுத்துக்களின் மூலம் அறியப்படும் செய்திகளுக்கும் சங்க இலக்கியங்களில் பேசப்படும் செய்திகளுக்கும் தொடர்பு இருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகம் தழுவிய அளவில் தமிழியல் ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்கள் சங்கமிக்கும்போது, அங்கு உரையாடலுக்கு உட்படுத்தப்படும் செய்திகள் தனி முக்கியத் துவம் பெறுவதை உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் அறிய முடிகிறது.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளைப் போல மொழி சார்ந்த ஆய்வுகள், உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் பல பரிமாணங்களை உள்வாங்கியதாகக் கூறமுடியும். திராவிட மொழியியல் எனும் தனிப்புலம் பரவலாவதற்கு இம்மாநாடுகளே உதவின. மொழி ஆய்வு என்பது மொழியியல், நாட்டார் வழக்காற்றியல், பழங்குடி மக்கள் ஆய்வியல் எனப் பலப்பரிமாணங்களில் அமைந்த ‘பண்பாட்டு மானிடவியல் ஆய்வாக’ அமையும். திராவிட மொழிகள், குறிப்பாக, தமிழ் தொடர்பான பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மூலமாக உலகத் தமிழ் மாநாடுகள் அமைந்தன. பேராசிரியர்கள் கமில்சுவலபில், எமனோ, பர்ரோ, ஆஷர், கா. சிவத்தம்பி ஆகிய பலர் உலகத் தமிழ் மாநாடுகளில் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ள ஆய்வுகளே மேற்குறித்த தமிழ் பண்பாட்டு மானுடவியல் துறைசார் ஆய்வுகளுக்கு கட்டியமாக உள்ளன.

இந்திய வரலாறு என்பது சமசுகிருத மொழி சார்ந்த பின்புலங்களிலிருந்துதான் எழுதப்பட்டது. விந்திய மலைக்கு தெற்கேயுள்ள திராவிட மொழிகள் சார்ந்த வரலாறு இந்திய வரலாறு எழுதுவோரின் கவனத்தில் இடம் பெறவில்லை. அப்படி இடம் பெற்றாலும் சமசுகிருத மொழியின் பிறிதொரு வடிவமாகவே கட்டமைக்கப்பட்டது. சமசுகிருத மொழிக்கு இணையானதும் அடிப்படையில் முற்றிலும் வேறானதுமான திராவிட மொழிகள் குறிப்பாக தமிழ் சார்ந்த சமூக வரலாறு எழுதும் முறைக்கு உலகத் தமிழ் மாநாடுகள் உத்வேகம் அளித்தன. இம்மாநாடுகளில் உரையாடலுக்கு உட்படுத்தப் பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிற தொடர்பான விவாதங்கள் வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றுக்கு மாற்றானவையாக உலக அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. இப்புரிதலுக்கான ‘உரையாடல் வெளி’ உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் உருப்பெற்றது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நிலை பதினெட்டாம் நூற்றாண்டில் சாத்தியமாயிற்று. தமிழ்நாடு மற்றும் ஈழத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்குத் தமிழர்கள் குடிபெயர்ந்து சென்றதும் குடி பெயர்க்கப்பட்டதும் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பின்புலத்தில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழியல் குறித்த ஆய்வுகள், சமசுகிருத ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்ற அளவுக்கு இல்லை. ஆனால் 1950 களில், தமிழியல் ஆய்வு மேற்குறிப்பிட்ட நாடுகளில் இடம்பெறத் தொடங்கியது. இவ்வாய்வுகள் 1960-80 வரை நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் மூலம் உத்வேகம் பெற்றன. சமசுகிருத ஆய்வாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல், தமிழியல் ஆய்வாளர்கள் என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்களை அடையாளப்படுத்தினர். அதற்கான அங்கீகாரம் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுகள் மூலம் சாத்தியமாகியது.

இதுவரை நடந்து முடிந்த உலகத் தமிழ் மாநாடுகளின் தமிழியல் ஆய்வு புதிய பரிமாணத்தைப் பெற்றதை நாம் மகிழ்வோடு பதிவு செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் இம்மாநாடுகள் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் நடந்தபோது புதிய புதிய பதிவுகளும் உருவாயின. சிலைகள் எழுப்புதல், தோரணவாயில் கட்டுதல், சாலைகள் அமைத்தல் ஆகியவை நடந்தன. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் மூலமேன உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவானது. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் உத்வேகமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவானது. ஒன்பதாம் மாநாட்டின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’ புதிய பரிமாணத்தோடு செயல்படும் என்று எதிர்பார்ப்போம். நடந்து முடிந்த மாநாடுகளிலிருந்து நாம் பெற்றதைப் போல் இப்போது நடக்கப்போகும் மாநாட்டின் மூலம் பெறுவோமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருக்கின்றது. 1974 இல் யாழ்ப்பாண மாநாடு நடந்தபோது, தமிழர்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து தமிழர்களின் மிக அரிய நூலகமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. 1987 இல் கோலாலம்பூரில் நடந்த மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து பலர் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த மாநாட்டிற்கு வந்த ஈழத் தமிழ் அறிஞர்கள், மாநாட்டில் கலந்து கொள்ளவிடாது திருப்பி அனுப்பப்பட்டனர். இப்போது ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்கள் இருப்பிடங்களில் வாழ இயலாது முகாம்களில் அகதிகளாக சில இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் உலகத்தமிழ்மாநாடு நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் தமிழினம் வாழும் சூழல் உருவாகியுள்ளது. இத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யும் மாநாடாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

Pin It