நிழல் : 1

நான் அச்சநந்தி தேவரின் திருமேனி செய்விப்பதற்காக இந்த குன்றத்திற்கு வந்து இன்றோடு ஒரு மண்டலம் ஆகிறது. இங்கு வருவதற்கு முன்னால் என் பெயர் சாதமுக்கியன். குன்றத்தின் வடமேற்கு குகையினருகில் வலப்புற பாறையில் நாகக்குடையின் கீழ் அமர்ந்திருக்கும்

 தேவரின் திருமேனியை செய்விக்கவேண்டும் என் உளிகளையும் சாணைக்கற்களையும் இதர சுத்தியல்கள், ஆணிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய தோல் பையை ஸ்தூபியில் வைத்து தியானம் செய்து பணியைத் தொடங்கும்படிக்கு நந்தி கணத்தைச் சேர்ந்த அந்த முனிகள் கேட்டுக்கொண்டனர். அப்படியே பணிந்து முதற்கட்ட முன்னேற்பாடுகளை முடித்துக்கொண்டு குகைப்படுக்கை ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் அது நிகழ்ந்தது.

அந்த குகைப்படுக்கையின் மூலையின் இருந்த சுனையில் நீர் அருந்த குனிந்த போது என் உருவத்தைப் பார்த்தேன். குகையின் குளிர்ச்சிக்கும் இருட்டுக்கும் அது நிழலுருவமாக தெரிந்தது. நான் எப்போதுமே என் நிழலையோ. பிம்பத்தையோ கவனித்ததில்லை. என் மயிரடர்ந்த தலையை கைகளைக் கொண்டு உத்தேசமாக ஒரு கொண்டை, முகம் கழுவல், விசேஷ நாட்களில் தலைமயிருக்கு கொஞ்சம் பூ இதைத்தவிர வேறு அலங்காரம் எதுவும் செய்து கொண்டதில்லை. முதன் முதலாக என் நிழலுருவை மெல்லிய ஒளியும், குளிர்ச்சியுமான அந்த குகைக்குள் தரிசிக்கையில் என் மூளையில் ஒரு பிரகாசமான ஒளிக்கீற்று தாக்கியது. என் கலக்கங்கள் அந்த கணத்திலிருந்து கரைந்தது. அதிகாரங்களற்ற அன்பும், களங்கமற்ற சந்தோஷங்களுமாக கழிந்தன என் நாட்கள். நான் அச்சநந்நி ஆனேன். என் தலைமயிர் இப்போது பிரிக்கப்பட்டிருந்தது, ஆடைகளற்று திசைகளே ஆடைகளாக திகம்பரனாக நான் அலைக்கழிந்தேன்.

பிம்பங்களுக்கும் நிழலுக்கும் என்ன வித்தியாசம். என் மேல் விழும் ஒளி ஏதேனும் பிரதிபலிக்கும் பொருளில் விழும்போது அது கண்கள் மூலம் காட்சி ஆகிறது. அதே நேரம் என் மேல் விழும் ஒளி பிரதிபலிக்காத ஒரு பொருளில் விழுந்து நிழலாகிறது. பிம்பங்களும், நிழல்களும் ஒன்றே தானா? அப்படியானால் நான் செய்விக்கும் திருமேனிகள் என் மனதின் பிம்பங்களா? நிழல்களா . . . எங்கிருந்து என் மூளைக்குள் ஒளி அடிக்கிறது. அந்த ஒளியென்பது எது?

தூரத்தில் உணவு கொண்டு வரும் மாங்குளத்தை சேர்ந்த கணியன் வழக்கமில்லா நேரத்தில் வந்திருந்தான். அங்கு தூரத்தில் முனிகளுடன் அவன் எதையோ வெகு படபடப்புடன் விவரிப்பது தெரிந்தது. நான் மவுனமாக வானத்தைப் பார்த்தேன். அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. அமாவாசைக்கு அவர்கள் வரக்கூடும். எனக்குள் எந்தச் சலனமுமில்லை சாவைப்பற்றியோ, கழுவேற்றப்படுவதைப்பற்றியோ எந்த பயமுமில்லை.

நான் தீர்மானமாக எழுந்து கொண்டேன் என் உச்சி கொதித்துக்கொண்டிருந்தது. பள்ளியின் உள்ளமர்ந்து நெடுநேரம் தியானித்தேன். சுனையில் தாகமாறினேன் பிறகு நிதானமாக மூலையில் ஒதுங்கிக் கிடந்த என் தோல்பையை எடுத்துக் கொண்டு குன்றம் விட்டு கீழிறங்கினேன்.

நான் இறக்கும் போது நிழல்களற்ற ஒருவனாகவே இறக்க விரும்புகிறேன். நான் பிறந்ததிலிருந்து என்னோடு வரும் நிழலை என்னோடு கூடவே வளர்ந்து வரும் நிழலை கழற்றி எறிவதே என் பிறப்பிற்கான நோக்கம். இந்த ஒரு மண்டலத்தில் அன்று சுனையில் நிகழ்ந்த அனுபவத்திற்கு பிறகு நிழலை உருவி எறிய எத்தனையோ முறை முயன்றிருக்கிறேன். ஒருவேளை அது நிறைவேறாமலேயே நான் மரித்து விடுவேனோ என்ற சலனமும் என்னைக் குடைகிறது.

என் உடலைக் கொண்டு என்னால் வேறு காலத்திலோ இன்னொரு வெளியிலோ ஒரே நேரத்தில் வாழ முடியாது. என் நிழல்களால் கடந்து பரவ முடியும்.

மனதின் நிழல்களை பாறைகளில் பதித்துவிட்டால் ஒருவேளை என் உடலின் நிழல்கள் மறையக்கூடும் நான் மரித்த பின்பும் என் நிழல்கள் வாழும் காலத்தைத் தாண்டி வெளியைக் கடந்து என் மன நிழல்கள் ஒரு கலையாக உறைந்து போய் கிடக்கும் தேவரின் திருமேனி செய்வித்தபின் நான் என் நிழல்களை கவனித்து வருகிறேன். படிப்படியாக அது அடர்த்தியின்றியும், நிறம் மங்கியும், சுருங்கியும் வருகிறது. நான் பக்கத்து ஆனைமலைக்கு நடக்கத் தொடங்கினேன் அமாவாசைக்கு இன்னும் ஒரு நாள் மீதியிருந்தது.

நிழல் : 2

ஒலிக்கு, ஒளிக்கு என தனியாக அறிவியல் இருக்கிறதே நிழல்களின் இயற்பியல் என தனியாக ஏதேனும் இருக்கிறதா என் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசானிடம் கேட்ட போது மிக எளிமையாக ஒரு பதிலைச் சொன்னார். நிழல் என்பது ஒளியற்ற வெளி மற்றபடி நிழல் என்பது ஒன்றுமில்லை. நான் நிழல்களை கவனிக்கத் தொடங்கியது அப்போதிருந்துதான்.

பொருட்களின் அசைவுகள், அசையும் போது ஏற்படும் ஒளி, நிழல் சலனங்கள், சுவரில் தோன்றும் நிழல் உருவம், வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு காலநிலையில் ஒரு வெளியிலும், பல வெளியிலும் அசையும் நிழல்கள் எல்லாம் என் பதிவுகளில் கூடிக்கொண்டேயிருந்தன. என் பத்தாவது வயதின் நிழல்கள் தாடியும், அடர்ந்தத் தலைமுடியும் கொண்ட ஒரு பெரியவரை நினனவுபடுத்தியது. பிறகான என் தேடலின் ஒவ்வொரு படிநிலையிலும் என் நிழல்கள் வெவ்வேறு வடிவம் எடுத்து என்னோடு பேச முயற்சித்தன. தத்துவஞானிகள், ஆன்மீக, அரசியல் குருக்கள் என அவை அவ்வப்போது மாறிக்கொண்டேயிருந்தன.

       மாற்றம் என்பதே மாறாத ஒன்று என்றது

       ஒரு நிழல்

       ஒரு கூழாங்கல்லாக தியானித்து இரு என்றது

       மற்றொன்று

       ஆட்டுக்குட்டிகளையே கொல்ல முடியும்

       அரிமாக்களை அல்ல என்றது இன்னொன்று

என்னால் இந்த உருவங்களின் பேச்சை உள்வாங்க முடியவில்லை. நான் தத்தளித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மத்திம வயது வரும் வரை என்னால் இந்த நிழல்களை உதறிவிட முடியவில்லை. இந்த நீண்ட காலத்தில் என்னால் என்னுடைய நிழலை ஒரு போதும் காணமுடியவில்லை. படிப்படியாக என் தோற்றம் நிழலுருவமாகவும் நான் தரையிலுமாக தலைகீழாக மாறிக்கொண்டிருந்தோம்.

யாரோ ஒருவரின் நிழல் என்மீது ஒரு துயரமாக, இருளாக படிவதை ஒப்புக்கொள்வது சிக்கலாகயிருந்தது. எனக்கென ஒரு நிழல் வேண்டும். எந்த ஒளிக்கலப்புமற்ற ஒரு சுத்தமான நிழல். வெயிலில் அலைக்கழியும் ஒரு யாத்ரீகனைப் போல் நான் நிழல் தேடி அலைக்கழிந்தேன்.

யாருமற்ற பரந்த வெளிகளில் தரையெங்கும் துழாவிக்கொண்டேன். கடற்கரை மணலில் மலையில். பாறைகளில் என் தேடல் தொடர்ந்தது. அந்த மலையை தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ஒரு யானையைப்போல் இருந்தது. என் முப்பதாவது வயதில் அந்த மலையில் ஒரு நாள் முழுதும் கழிக்க நேர்ந்தது. ஒரு குகையின் உள் அமைந்த நீருற்றில் நீர் அருந்தி எழுந்த போது ஒரு மின்னல் போல மேலேயிருந்த பாறையிடுக்கிலிருந்து ஒரு ஒளி பாய்ந்து என் மேல் விழுந்தது. நான் தரையில் பார்க்கையில் என் நிழல் என்னைப் போலவேயிருந்தது.

Pin It