"ஓய்வுநாள் மனிதனுக்காகத்தானே தவிர மனிதன் ஓய்வுநாளுக்காக அல்ல. சட்டமும், சடங்கும், சம்பிரதாயங்களும் மனிதர்களுக்காகத்தானே தவிர மனிதர்கள் சட்டம், சடங்கு, சம்பிரதாயத்துக்காக அல்ல. ஓய்வு நாட்களில் எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று இயேசுவின் காலத்தில் சட்டம் இருந்தது. இயேசு அதை எதிர்த்தார். உங்களில் ஒருவருடைய ஆடு ஒன்று கிணற்றில் விழுந்துவிட்டால் அது ஓய்வுநாள் என்பதற்காக அந்த ஆட்டை காப்பாற்றாமல் இருப்பீர்களா?' என்று இயேசு எதிர் கேள்விக்கேட்டு பரிசேயர்களையும், சதுசேயர்களையும், மதகுருக்களையும் மடக்கினார். நாமே நினைத்துப் பார்ப்போம். கடற்கரையில் இருக்கும் கட்டுமரத்தையோ, கரமடி வள்ளத்தையோ கடல் அலைவந்து இழுத்துச் சென்றால் அது ஞாயிற்றுக்கிழமை அல்லது ஓய்வுநாள் என்பதற்காக அதை அப்படியே கடலில் விட்டுவிடுவோமா?++

சாமியார் ஆசேமாக பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இந்த சாமியார் பிரசங்கம் சொல்றதுல மன்னன். ரண்டு கதை சொல்லுவாரு, நாலஞ்சி கவிதை சொல்லுவாரு, இடையில் தமாசா பேசி சிரிக்க வைப்பாரு. கடைசியல ஏதாவது ஒரு கவிதைய சொல்லி முடிச்சிருவார். இன்னும் கொஞ்சம்நேரம்கூட சாமியார் பிரசங்கம் சொல்லியிருக்கலாமேண்ணு மனசு ஏங்கும்+ மக்களுக்கு. ஆனால் இன்று சாமியார் பிரசங்கம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட பிராங்ளினுக்கு இவரு செணமணி பிரசங்கத்த முடிச்சமாட்டாரா+ என்று இருந்தது.

கடற்கரையைத் தொட்டு அந்த கோயில் இருந்ததால பிராங்ளினைப்போல உள்ள நடுத்தர பிராயக்காரர்கள் கோயிலுக்க உள்ளேபோய் மூச்சுமுட்டாமல் கோயிலுக்கு வெளியிலேயே காத்தாட நிற்பார்கள். நடுபூசை நேரத்தில் முழங்காலில் இருப்பதும் உட்காருவதும் கோயிலின் முன்னுள்ள அந்த வெள்ளைவெளேர் என்ற கடற்கரை மணலில்தான்.

பிராங்ளின் எப்போது கோயிலுக்கு வந்தாலும் அவன் கைகள் கோயிலைப்பார்த்து கும்பிட்டுக் கொண்டிருக்கும். அவன் கண்கள் கடலையே பார்த்துக் கொண்டிருக்கும். அவனுடைய கடவுள் கடலில் இருப்பதாகவே அவன் நினைப்பான்.

சாமியாரு சீக்கிரம் பிரசங்கத்த முடிக்கமாட்டாரா என்று பிராங்ளின் நினைப்பதற்குக் காரணம் இருந்தது. அவன் கண்கள் கடலில் அந்த காட்சியைக் கண்டது. கடலில் அதிகமான மீன் கூட்டம் ஒருசேர வந்துக் கொண்டிருந்தது.

வேளா கருவாப்பு சங்கெல்லாம் வருது. கடலுமுழுக்க மீன் மண்டலா இருக்கு. மீனு எல்லாம் என்னை கைக்காட்டி உளுச்சுது. நான் என்ன செய்ய... என்னால் வள்ளத்த எளக்கிண்டு போய் மீனு கருவாப்ப சுத்தி வளச்சு மடியைப் போட்டு கரையில கம்பால கொண்டு வந்து ரண்டு பக்கமிருந்து ஆளுவள வச்சு மடியை இழுத்து எல்லா மீனையும் மடிநெறைய புடுச்ச முடியும். ஆனா இண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமையாப் போச்சே. மெனக்கெடு நாளுல தொழிலுக்குப் போவ முடியாதே

பிராங்ளின் மனசுக்குள் நினைத்தான். அந்த நேரம் பார்த்து சாமியார் பிரசங்கத்தில் ஓய்வுநாள் மனிதனுக்காதானே தவிர மனிதன் ஓய்வுநாளுக்காக அல்ல என்று பிரசங்கம் சொல்கிறார். இன்று கடலில் போய் மீன் பிடித்தால் ஊர்விலக்குண்ணு அவர்தான் தீர்ப்புச் சொல்வார்.

"வர்க்கீசு கடல்ல பாத்தையா வேளா மீனு கருவாப்பு சங்கில்லாம வருது. வாவா வந்து என்ன புடிபுடிண்ணு சொல்லுது என்ன செய்ய...'

"என்ன செய்ய,,, அது நம்ம கண்ணுமுன்ன வந்து ஏச்சம் காட்டினாலும் நம்மளால மடி எளக்கியோ, வல எளக்கியோ அந்த மீன் புடுச்சமுடியாது. என்னண்ணா இன்னைக்கும் ஞாயிற்றுக்கிழமை ஊரு மெனக்கெடு. பாத்துட்டு நின்னு ஏங்கி சாவத்தான் முடியும்.'

"அப்பசாமி இப்பிடி பிரசங்கம் செய்யுதாரே'

அது பீடத்துல நிண்ணு சொல்லுததுக்கு மட்டும்தான் பள்ளியல பறஞ்சாமதிண்ணு மலையாளத்துல ஒரு பழமொழி சொல்லுவாவு தெரியுமா? அவரு பிரசங்கம் சொல்லுததக் கேட்டுட்டு நமக்கு இண்ணைக்கு தொழிலுக்கு போனா என்ன நடக்கும் தெரியுமா?

என்ன நடக்கும்?

எங்க போத்திக காலத்துல இப்டி ஒரு சம்பவம் நடந்திருக்கு. பெருவாதி சூரமீனு இப்பிடிதான் கடல்ல கருவாப்பா வந்திருக்கு. கடலுமுழுக்க சூர. அது கரையில வந்து வந்து ஒரு கட்டத்துல அலை வெட்டுல வந்து துடிச்சு துடுச்சிண்ணு கெடந்திருக்கு. இதப்பாத்திண் டிருந்த எங்க போத்தியும், ஆளுவளும் கோயில்ல பூசை நடந்திண்டிருக்கும்பலே பாதியில எழும்பி ஓடி மடியை எடுத்து வளச்சிருக்காவு. மடி தரிச்சாம சூர கரையில் இழுக்க முடியாம ஆணும், பெண்ணும் பக்கத்து ஊருல உள்ள ஆளுவளும் மடியச் சுத்தி கம்பா கட்டி இழுத்திருக்காவு. அப்படியும் மடி பௌந்து பாதி மீனு கடல்ல போயிருக்கு. அண்ணைக்கு ஊருலையும், பக்கத்து ஊருவள்லயும் ஓசியில சூரமீனு கொழம்பு மணத்தாம். நான் சொல்தது ஐம்பது வருசத்துக்க முன்னால. அப்பவே அந்த மீனு 32000 ரூபாய்க்கு வித்திருக்கு. இப்ப அதுக்க மதிப்பு 50 லட்சத்துக்கு மேல. அதுக்க பொறவு என்ன நடந்தது தெரியுமா?

என்ன நடந்தது?

மெற்றாணி ஆண்டவரு பங்குசாமியார கோயில பூட்டி சாவிய எடுத்துண்டு ஊரை உட்டுண்டு அரமனைக்கு போவச் சொல்லிட்டாரு. ஒரு மாசமா கோயிலும் திறக்கல.... நல்லது கெட்டதுக்கு பூசையும் நடக்கேல. ஒண்ணும் நடக்கேல.

அந்த நேரத்துல ஆளு ஒண்ணும் சாவேலியா?

ரெண்டு மூணு ஆளுவ செத்தாவாம் செத்தவங்கள அப்படியே போட்டு வச்ச முடியுமா? நாறிப்போவாத? அதுநால முடுதம் வந்து மந்திரம் ஓதி சிமித்தேரியில அடக்கம் பண்ணியிருக்காவு

அதுக்க பெறவு

அதுக்க பெறவு ஊருல உள்ள ஆணும் பெண்ணும் கொழந்த குட்டிவளோட மெற்றாணியாருக்க அரண்மனையிலப் போய் இனிமே ஞாயிற்றுக்கிழமையிலேயும், கடன்திருநாட்களுலயும் மெனக்கெடு இருப்போம். தொழிலுக்கு போவமாண்டோம்ண்ணு சொல்லி மன்னிப்பு கேட்ட பொறவுதான் அந்த நேரத்துல மீனுவித்த பணம் 32000த்தையும் சாமியார ஊருக்கு அனுப்பி இருக்காவு.

அப்படியா சங்கதி

ஆமா இது நடந்தது. எங்க போத்தி சொல்லுச்சு

எனக்கு தெரிருஞ்சி ஒரு சம்பவம் நடந்தது. கெழக்க ஒரு ஊருல மெற்றாணி ஆண்டவரு எங்களுக்கு இந்த காரியத்த செஞ்சி தரேலேண்ணா இந்து மதத்துல மாறுவோம். ஞாயிற்றுக்கிழமையில கடல்ல தொழிலுக்குப் போவோம். அப்படிண்ணு காரியம் சாதிச்சதா சொல்லியாவே

உண்மைதான் அவங்க இந்து மதத்துலயும் மாறுனாவு. ஞாயிற்றுக்கிழமை மடியும், வலையும் தள்ளுனாவு. ஒரு இந்துச்சிலையைக் கொண்டு வச்சு சாமியே சரணமுண்ணு சாமி கும்பிடும்ப ஒரு ஆளு கல்லுதட்டி கீழே உழுந்தவரு இயேசுவே எங்கள ரட்சியும்ணு சொன்ன சம்பவமும் நடந்தது.

அப்படியா அதுக்க பொறவு?

அதுக்குப்பெறவு என்ன... மேட்ராசனத்துல இருந்து மூணு சாமியாருக வந்து மக்களோட பேசி அவங்க பிரச்சனைய தீர்த்து வச்சாவுளாம்.

அப்ப நாமளும் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு போவோமுண்ணு சொல்லி மிரட்டலாமே

மிரட்டலாம் ஆனா அப்படி இந்து மதத்துக்குப் போவுண்டு திரும்பவும் கத்தோலிக்கரா மாறுனவங்கள இண்ணைக்கும் புளுக்கையன்மாரு, பத்தாம் நம்பர் கொறஞ்சசாதியிண்ணு சொல்லி சொல்லி ஒதுக்கி வச்சுதாவு தெரியுமா?

ஓ... அந்த புளுக்கையன் மாரெல்லாம் அப்டி வந்ததுதானோ? அந்த குடும்பங்களுல இருந்து சம்மந்தம் எடுத்தா நம்மளையும் ஒரு மாதியாவல்ல பாக்குதாவு

நேருதான்

எனக்கொரு சந்தேகம்

என்னா

வெளி இடங்களுல வேலைக்குப் போறவங்களும், கேரளாவுலயும், பேர்சியாவுலயும் கடல் தொழிலுக்குப் போறாவுளே அவுங்கள இந்த சட்டம் என்ன செய்யுது?

அது தெரியாதப்பா... அதக்கேட்டா பரம ரகசியமண்ணு சொல்லுவாவு

பிராங்ளினும் வர்கீசும் கடலில் குதிச்சு விளையாடி ஏச்சம் காட்டும் வேளாமீனைப் பார்த்துக் கொண்டே பேசிக்கொண்டனர்.

அவர் ஆண்டார் இவர் ஆண்டார்

எல்லோரும் ஆண்டார்

அனைவரின் ஆட்சியிலும்

ஜனங்களே மாண்டார்

ஆட்சியை மாற்றிப்பார்ப்பதில் லாபமில்லை

அடிப்படையே மாறவேண்டும். ஆமென்

சாமியார் ஒரு கவிதையைச் சொல்லி பிரசங்கத்தை முடித்தார்.

இன்னும் பாதி பூசை இருக்குதே இந்த மீன் மண்டலு வேற நம்ம கண்ணுமுன்ன வந்து காச்சக்காட்டுதே இந்த மீனெல்லாம் நாளைக்கு வந்திருக்கப்படாதா. மெனக்கெடு நாளு பாத்து வந்து கெடக்கே. ஆண்டவனா பாத்து அனுப்பி வச்ச மீன புடுச்சமுடியா இந்த மெனக்கெடு நம்மள கட்டுப்போட்டுட்டதே இது நாளைக்கு வரப்பிடாதா? எனக்க மடி நாளைக்கு முப்பாடுதானே எல்லா வேளாவும் எனக்க மடியில பட்டிருக்குமே வேளா பட்ட கடலு வெறுங்கடலுண்ணு சொல்லுவாவே நாளைக்கு நாங்க முப்பாடு மடி வளச்சும்ப ஒரு மீனும் படாதே

கைக்கெட்டும் தூரத்துல வந்து கிடக்கும் மீனை பிடிக்க முடியாமல் பிராங்ளின் ஏங்கித்தவித்தான். கோயிலில் பூசைக்கு வந்த அத்தனை ஆண்களும் கடலைப்பார்த்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்றனர்.

இன்னா புடி ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் என்று ஆண்டவரு நீட்டுதாரு. எனக்கு மெனக்கெடுதான் முக்கியம். இந்த பணத்த நான் வாங்கவே மாட்டேன் இப்புடி வீம்பு புடிச்சிண்டுதான் நாம நிக்குதோம்.

மடிக்கட்டி மியல்பிள்ளை கிண்டல் செய்தார்.

ஊருக்கு மேலா பக்கம் நொழயன்மார்கள்ஒரு மடியை நுழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நுழையர்களும் மீனவர்கள்தான். சவேரியார் வந்து கடலோர மக்களை மதம் மாற்றியபோது ஒட்டுமொத்த மதம் மாற்றம் நடந்தது. அதில் மதம் மாறாமல் இந்துக்களாக இருந்தவர்கள்தான் இந்த நுழையர்கள். அதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த சிறுபான்மை நுழையர்களை ஊரின் ஒரு பகுதியில் ஒதுக்கிவைத்தனர். தங்களோடு தொழிலுக்கும் அழைத்துச் செல்லவில்லை. கடலோர கிராமங்களில் பெரிய பெரிய கிறிஸ்தவ கோவில்கள் தோன்றியபின் நுழையர்கள் ஒதுக்குப்புறமாக ஓரங்கட்டப்பட்டார்கள். அவர்கள் தேங்காய் கதம்பையைத் தண்ணீரில் ஊறப்போட்டு அந்தச் சவுரியை கயிறாகத்திரித்து விற்பனைச் செய்துவந்தனர். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் ஆனதால் போனால் போகட்டும் என்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர்கள் மடிவளைக்க அனுமதிக்கப்பட்டனர்.

நொழையன்மாரு மடியில இன்னைக்கு செமத்தியா மீனு கெடைக்கும்

என்னத்த செமத்தியா கெடச்சும். அவனுவளுகு அம்பது மாறு நூறுமாறுக்குமேல கம்பா கெடையாது. மாலும் பஞ்சுநூலுமாலு. இம்புடு தூரத்துல எம்புடு மீனத்தான் புடுச்சமுடியும்? இதுவே நம்ம மடியா இருந்தா ஐநூறு ஆயிரம் மாறு கம்பாலக் கொண்டு பட்டுநூலு மடிய வளச்சா கடல்ல கெடக்க அம்புடு மீனும் மடிக்குள்ள மாட்டும்

போ...போ... மடிதான் பௌந்துபோவும். கடல்ல கெடக்க மீனுக்கு நம்மண்ட இருக்குத நூறு மடி இருந்தாலும் தாங்காது. நொளையன் மாருவளுவ மடி நெறைய மீனு பட்டாலே காணும். ஒரு வரியம் இருந்து சாப்புடுவானுக

நுழையர்கள் மடி வளைப்பதைப்பார்த்து பிராங்ளினும், வர்கீசும் பேசினார்கள்.

மடி நெறைய மீனுபட்டா என்ன செய்வானுவ கம்பாலுக்கு பத்துபேரு நிண்ணு இழுக்குதானுவ. வேளா மீனு நெனச்சா இவனுவ இருபதுபேரையும் கடலுக்குள்ள இழுத்துண்டு போவுடும்போல இருக்கே

இதோ இறைவனின் செம்மறி சடங்கு சம்பிரதாயங்களையும், சாத்திரங்களையும் கேள்விக்குள்ளாக்கியவர். மக்களுக்கு தீமை செய்யும் சட்டங்களை உடைத்தெறிந்தவர். இந்த செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்ட நாம் அனைவரும் பேறுபெற்றவர்கள்.

ஆண்டவரே தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்.

எல்லோரும் நன்மையெடுக்க வரிசையில் செல்கின்றனர். பார்வையிலிருந்து கடல் மறைந்தாலும் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே செல்கின்றனர். பிராங்ளினுக்கு நன்மையெடுக்கச் செல்ல மனமில்லை தக்கித்தக்கி நின்று கடலைப் பார்த்துக் கொண்டே சென்றான்.

கோலப்பனுக கௌப்புல போமா? வர்க்கீஸ் பிராங்ளினை அழைத்தான்.

அல இத உட்டுண்டி எப்பிடி போவ... அங்க பாரு... என்ன அழகா கெடந்து மண்டியடிச்சு வெளயாடுது மீனு. இதுக்கு முன்ன கடல்ல கருவாப்பு வந்தா அஞ்சு நிமிசமோ இல்லைண்ணா பத்து நிமிசமோ கெடக்கும். அதுக்குப்பெறவு அத வேற எடத்துக்குப் போவுடும். இங்கபாரு ஒரு மணி நேரமா ஒரே எடத்துல நிக்குதத பாரு

பிராங்ளின் மனம் பொறுக்காமல் சொன்னான்.

நுழையர்கள் வளைக்கும் மடி இஞ்ச இஞ்சாக கரைக்கு வந்தது. கம்பா அறுந்துபோகுமோ, மடி கிழிந்து போகுமோ என்ற அச்சத்தில் அவர்கள் மடியை இழுத்தார்கள். அவர்கள் மடி வளைக்கும் இடத்திற்கு கிழக்குப்பக்கம் முக்குவர்கள் கூட்டமாக கடற்கரையில் நிற்பது தெரிகிறது. அவர்களும் வந்து கம்பாலை ஒரு கைபிடித்து இழுத்தால் மடி சீக்கிரம் கரைக்குவரும். ஞாயிற்றுக்கிழமையானதால் அவர்கள் வரமாட்டார்கள் என்ற ஏக்கத்தில் பலம் கூட்டி மடியை இழுத்தனர் நுழையர்கள்.

ஓ...வேலா...கரவேலா...

ஓ...வேலா...கரவேலா...

ஏலோ போட்டு மடியை இழுத்தனர். எப்படித்தான் இழுத்தாலும் ஒரு இஞ்சுக்குமேல் மடி கரைக்கு வரவே இல்லை.

அவுங்க மடியில பெருவாதி மீனுபட்டா நாமளெல்லாம் போய் வலிச்சி குடுத்து கறிக்கு மீனு வாங்கிட்டு போவோம். இப்ப நம்ம மடிய வலிச்ச முடியல்லையே அவுங்களவிளிப்போம். மடிக்காரன் நாராயணன் சொன்னதும் கம்பாவை பிடித்து இழுத்தவர்களெல்லாம் இடுப்பில் கட்டியிருந்த தொவர்த்தை உருவி சீலைபோட்டு கட்டினார்கள்.

அவர்கள் எல்லோரும் துணியைத் தூக்கி ஆட்டி அசைத்துக் கூப்பிடுவது எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் சாகப்போகிறோம். எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறுவது போல இவர்களுக்குத் தெரிந்தது. இருந்தாலும் நாம் போய் மடி இழுக்க அது வராவிட்டால் கடலில் குதித்து கம்பா கட்ட ஞாயிற்றுக்கிழமை மெனக்கெடை மீறிவிட்டதாக ஊரு ஒதுக்கி வச்சிட்டா என்ன செய்றதுண்ணு பலரும் பல்லை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பார்க்காததுபோல் நிற்கிறார்கள்.

பிராங்ளினுக்கு மனம் பொறுக்கவில்லை. =உங்கள் ஆடு ஒன்று கிணற்றில் விழுந்துவிட்டால் ஓய்வுநாளென்று அதை அப்படியே விட்டுவிடுவீர்களா? உங்கள் கட்டுமரமோ கரமடி வள்ளமோ கடல் அலை இழுத்துச் சென்றால் ஞாயிற்றுக்கிழமையென்று அதை அப்படியே விட்டுவிடுவீர்களா என்ற பிரசங்கம் பிராங்ளினை தட்டிக்கொண்டே இருந்தது.

லேய்... வாங்க போவோம்... என்ன வந்தாலும் வரட்டும். வெட்டுல நிக்குத மடியை எப்படியாவது பத்திரமா கரை சேக்கணும். வாங்க... வாங்க தனக்கு நெருக்கமானவர்களை அழைத்துக்கொண்டு வேஷ்டியைத் தூக்கி வளைத்துக் கொண்டிருந்த நுழையர்களின் முகங்களில் அப்படி ஒரு பூரிப்பு.

மடி ஏறட்டே...மீன்படட்டே...

மடிக்காரன் பெண்டாட்டி தாழ வரட்டே

ஒரு சேரப்பாடி மடியை இழுத்தார்கள். அலை அடிக்கும் இடத்தில் மடி வருகிறது. மடி புளுக்க தண்ணி காச்சுத வேரு பானையப்போல மடி வீங்கிக்கிக்கிறது. ஒரு அலை வந்து மடியின் மேல் ஓங்கி அடிக்கவும் மடி இரண்டாக பிளந்தது.

போச்சு ...எல்லாம் போச்சு... இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு

மடிக்காரன் நாராயணன் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

பிராங்ளின் எதையுமே பார்க்கவில்லை. தான் கட்டியிருப்பது வெள்ளை வேஷ்டி போட்டிருப்பது கோடி சட்டை, சட்டை பாக்கெட்டில் 50 ரூபா நோட்டு, கையில் பாரின் வாச்சு என்று எதையும் பார்க்காமல் கடலில் குதித்தான்

பிளந்து மீனெல்லாம் வெளியேறிக்கொண்டிருக்கும் மடியை இரண்டு கையாலும் இலுத்துப் பிடித்துக் கட்டினான். பிளந்து கிடந்த மற்ற பகுதிகளை கையால் இழுத்துச் சேர்த்துப் மீனோடு மீனாக கரையைத் தொட்டான்.

மடி கரையேறியதும் மடிக்காரன் நாராயணன் ஓடிப்போய் பிராங்ளினை கட்டி அணைத்து, கையைப்பிடித்து முத்தம் கொடுத்து

நீ மட்டும் இல்லைண்ணா வெறும் மடிதான் கரைக்கு வந்திருக்கும். பெரிய பீத்த வழியா எல்லா மீனும் கடலுக்குள்ள போயிருக்கும்

செள்ளும் எச்சியும், சேறும் பட்ட சட்டையையும் வேஷ்டியையும் அணிந்துகொண்டே ஊரைப் பார்த்து நடந்தான். மெனக்கெடு மீறப்பட்டுவிட்டது. ஊர் முடிவு என்னவாக இருக்குமோ என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

 வட்டார வழக்குச் சொற்கள்

செணமணி     -      சீக்கிரம்

வேளாகருவாப்பு    -  வேளாமீன் கூட்டம்

சங்கெல்லாம    -      கணக்கில்லாமல்

மெனக்கெடு   -       ஓய்வுநாள்

முப்பாடு        -     முதல்பாடு

நன்மை   -    நற்கருணை

Pin It