தீண்டாமையை ஒழித்தாக வேண்டும். அதற்காக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அந்த முறையிலே என் உயிர் போனால் வேறு ஒருவர் என் போல் உண்ணாவிரதம் தொடங்குவார். அவருக்குப் பிறகு வேறொருவர்! பிறகு ஒருவர்! இம்முறையில் தீண்டாமை ஒழியும்வரையிலே தொடர்ந்து நடத்தப்படும் என்று காந்தியார் கூறுகிறார். தீண்டாமையை ஒழிக்க இவ்வளவு கடுமையான முறை தேவைப்படும் அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

காந்தியாரின் இந்த உண்ணாவிரதத் திட்டம், டாக்டர் அம்பேத்கர் புதிதாக வெளியிட்டுள்ள காந்தீயக் கண்டன நூலுக்கு எதிர் நடவடிக்கையாக இருக்கலாம்.

இனி விரைவிலே நடைபெறப்போகும் தேர்தலுக்குப் பிரசாரப் பண்டமாக்கப்படலாம்.

மதம் மாறும் முயற்சியை மறைந்திருந்து தாக்கும், போர்த் திட்டமாகலாம்!

அந்தராத்மா உத்தரவு கொடுக்கவில்லை. ஆகவே உண்ணா விரதம் இப்போது இல்லை என்று வேறோர் அறிக்கையை வெளியிடக்கூடும். அல்லது ராஜ்கோட் சம்பவத்தின் போது நடந்ததுபோல், அந்தராத்மாவே அடிக்கடி உத்தரவை மாற்றி விடலாம். அதற்கேற்றவிதத்திலே மகாத்மாவும் தமது முறையை மாற்றிவிடலாம். 

உண்ணாவிரதம் தொடங்கியதும் ஊரும் உலகமும் உத்தமரின் உயிர் போக்ககூடாது என்று முறையிட்டு, உண்ணாவிரதத்தை நிறுத்திவிடலாம். தீண்டாமை போய் விட்டது என்றுகாட்ட, எங்காவ தொரு கோயில் திறந்து விடலாம். எது நடப்பினும், தீண்டாமை எனும் நோய் எவ்வளவு அதிகமாகப் பரவி இருக்கிறது என்பதிலே யாருக்கும் அபிப்பிராயபேதம் இருக்கக் காரண மில்லை. எந்தவிலை கொடுத்தேனும், தீண்டாமையைப் போக்கித் தீர வேண்டும்.

ஆனால் பழங்குடிமக்களை, வேறுமதத்திலே சேராதபடி பார்த்துக் கொள்ள "உஷார் சங்கம்' அமைக்கப்பட்டுள்ள இந்த நாளிலே, நெல்லையப்பர் கோயிலிலே சைவமெய்யன்பர்களும் அம்மை யரும் ஆலயத்தினுள்ளே ஆதித்திராவிட மக்கள் நுழைந்துவிடுவார்கள் என்று அஞ்சி, நெல்லையப்பருக்கு அந்தத் தொல்லை வராதபடி தடுக்க, ஆலயவாயிலிலே நின்று தொழுகைக்கு வருபவரைச்சோதித்தபிறகே உள்ளே அனுப்பினராம்! என்னே இவர்தம் அறிவின்பெருக்கும், பக்தியின் சிறப்பும்! இவ்விதமான நடவடிக்கைகளைக் கண்டும் தெரிசிக்கமுடியாத தேவனுடைய “திருவருளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்து மார்க்கத்திலே, ஆதித்திராவிடத் தோழர்கள் இருந்து தீரவேண்டும் என்று வற்புறுத்துவது எவ்வளவு கொடுமையான செயல்!

நெருப்பிலே நில்! சுட்டால் பொறுத்துக்கொள்! சேற்றிலே புரளு! நாற்றமடித்தால் சகித்துக் கொண்டிரு! என்று கூறுவதற்கும், ஆலயத்திலே நுழையாதே! ஆண்டவனைத் தரிசிக்காதே என்று கூறிக்கொண்டு, ஆனாலும் நீ மட்டும் “இந்த மதத்தைவிட்டு வேறுமதம் புகாதே' என்றும் கூறும் வன்னெஞ்ச வைதிகப்போக்குக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

இந்தக் கொடுமை இங்குமட்டுமல்ல, வைதிக மெனும் விஷநோய் பரவாத இடமே காணோம்!! இதோ ஒருமனதை வேகச்செய்யும் சம்பவம்!!

ராஜ்பூர் என்ற இடத்திலே இதுபோது பழங்குடி மக்கள் 15பேர், வழக்கு மன்றத்திலே நிற்கிறார்கள்! அவர்கள் செய்த குற்றந்தான் என்ன? குளித்தனர் ஒரு ஊற்றில்! அந்த ஊற்றிலே குளித்தால் உடல் அழுக்குமட்டுமல்ல, உள்ளத்தின் அழுக்கும் போகும், பிறவிப்பிணி நீங்கும் பெரும்புண்ணியம் கிட்டும், என்று வைதிகர் கூறினர். கங்கையிலிருந்து இந்த ஊற்றுபெருகுகிறது, இதிலே ஸ்நானம் செய்தவருக்குப் பாவம் போகும் என்று சனாதனிகள் சாற்றினர். வைதிகர்கள் இந்து மார்க்கத்துக்குத் தலைவர்களல்லவா! மார்க்க போதகர்களல்லவா? எனவே அவர்கள் பேச்சைக் கேட்டால், அந்த மதத்தை நம்பிக் கொண்டிருப்பவருக்கு அந்தப் புண்ணிய ஊற்றிலே குளித்துப் பெரும்பயன் அடையவேண்டுமென்று ஆசை ஏற்படாமலிருக்க முடியுமா?

அவ்வளவு அபூர்வமான ஊற்றா? நமது பாவத்தை எல்லாம் போக்கிவிடுமாமே! எப்படியாவது நாம் அந்த ஊற்றிலே குளித்துப் புண்ணியம் பெறவேண்டும், என்று பழங்குடிமக்களிலே 15 பேர் தீர்மானித்தனர். அவர்களின் ஆசைக்கு அரணாக அமைந்தது இரண்டு ஆரியரின் ஆதரவு குளிக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததும், வைதிகக் கூட்டம், எதிர்த்தது, தடை விதித்தது. பழங்குடி மக்கள் அந்த ஊற்றிலே குளித்தால், தீட்டாகிவிடும் என்று ஆர்ப்பரித்தனர். பழங்குடிமக்கள், தடையைமீறினர், குளித்தனர். இப்போது அவர்கள்மீது புண்ணிய ஊற்றைத் தீட்டாக்கி விட்டனரென்றும், அதற்காக நஷ்டஈடுத் தொகை 900 ரூபாய் தரவேண்டுமென்றும், வழக்குக் தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்கள் 5 முக்கிய அர்ச்சகர்கள். இவர்கள் தங்களுக்குக் கங்காபுத்திரர் என்றுபட்டப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளனராம்! உலகமெல்லாம் ஒன்று என்றும், மனிதனை மனிதன் தாழ்வாகக் கருதக்கூடாது என்றும் அறிஞர்கள் கூறிவரும் இந்நாளிலே இந்நாட்டிலே, குளித்த குற்றத்துக்காகக் கோர்ட்டுக்கு இழுக்கும், கங்காபுத்திரர்கள் உள்ள ஒரு மதத்திலே பழங்குடிமக்கள். இன்னும் எத்தனைக் காலம், கொடுமையைச் சகித்துக் கொண்டு இழிவைத் தாங்கிக் கொண்டு, இம்சையை அனுபவித்துக் கொண்டு இருக்கமுடியும்? ஏன் இருக்கவேண்டும்?

– திராவிட நாடு 26.08.1945

நன்றி : இரா. செம்பியன் "அண்ணா பேரவை' தஞ்சை

Pin It