டாக்டர் டி.எம்.நாயர் வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகள்

ஒரு நாள் ஜஸ்டிஸ் பத்திரிகையில், பார்ப்பனரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது அவசிய மென்பதற்குண்டான காரணங்களை விளக்கித் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மெயில் பத்திரிக்கை கண்டித்து எழுதியதோடு, "A political Nair does well' அதாவது ஓர் அரசியல் நாயர் நன்றாக செயல்படுகிறார்'' என எழுதி இருந்தது.

இந்த கண்டனத்தைப் பார்த்ததும் டாக்டர் நாயர் ஜஸ்டிஸ் பத்திரிக்கையில் "Borken Reed'' அதாவது துணிந்து போன நாணல் தட்டையெனத் தலையங்கமிட்டுக் கண்டித்து எழுதினார். அதோடு அத்தலையங்கத்தில் இங்கிலாந்து நாட்டில் தெருவில் பத்திரிகை விற்க கூவித்திரியும். ஆட்களெல்லாம் இந்தியாவில் பத்திரிகை ஆசிரியர்களாக வந்து விடுகின்றனர். ஆதலால் இவர்கட்குப் பத்திரிகை தர்மம் அதாவது நடத்தும் முறையே தெரிவதில்லை என்றும் ஓர் பத்திரிகையை மற்றொரு பத்திரிகை கண்டித்து எழுதுவதானால் பத்திரிகையின் பெயரை மட்டும் குறிப்பிட்டு எழுதவேண்டுமே ஒழிய அதை எழுதிய ஆசிரியரைக் குறிப்பிடலாகாதெனக் கூறி, "இந்த மெயில் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஜஸ்டீஸ் பத்திரிகையின் ஆசிரியரின் கால் செருப்பிலுள்ள கயிற்றைக் கூட அவிழ்க்க யோக்கியதை கிடையாது'' எனத் தலையங்கமிட்டு எழுதினார். மெயில் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அரசியல்வாதி

சர். லயோனெல் கர்டிஸ் என்ற ஓர் ஆங்கிலேயர், இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமையைக் கண்டறிந்து கொள்ள தானாகவே இங்கு வந்து டில்லி, கல்கத்தா, பாட்னா, அலகாபாத், நாகபுரி, பம்பாய் முதலிய நகரங்களுக்குச் சென்று அங்கிருந்த முக்கிய தலைவர்களைக் கண்டு பேசி அவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு சென்னை வந்து கன்னிமாரா ஹோட்டலில் தங்கினார்.

அவர் டி.எம்.நாயர் அவர்களை, தான் பார்த்துப் பேச வேண்டுமெனக் கருதுவதால், தன்னை வந்து சந்திக்குமாறு வேண்டி ஒரு கடிதம் அனுப்பினார். அதற்கு நாயர் அவர்கள் (Mountain will not go to Mohammed, Mohammed should go to the mountain) முகம்மது அவர்களிடம் மலை போகாது முகம்மதுதான் மலையிடம் போகவேண்டுமென்ற பழமொழியைச் சுட்டிக் காட்டி, தாங்கள் எவ்வளவு பெரிய மனிதராயினும், என்னைச் சந்திக்க வேண்டுமானால் நீங்கள்தான் என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று பதில் எழுதினார். இந்தப் பதிலைப் பார்த்ததும் சர் லயோனெல் கர்டின், தன் தவறை உணர்ந்து உடனே டாக்டர் டி.எம். நாயர் அவர்கட்கு, தன்னை வந்து சந்திக்குமாறு எழுதினது, தவறுதான் எனவும், அதற்காகத் தன்னை மன்னிக்க வேண்டுமெனக் கோரியும், நாயர் அவர்களை அவரது வீட்டிலேயே வந்து சந்திப்பதாகவும் பதில் எழுதிவிட்டு அதுபோன்றே டாக்டர் நாயர் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

 (நன்றி விடுதலை 10-3-1963)

Pin It