நூற்றுக்கு மூன்றுபேராக இருந்த சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் பெரும்பான்மையினரான தமிழர்களை அடக்கி ஆண்டு ஆதிக்கம் செய்த கொடுமைக்கு முடிவு கட்ட வீறுகொண்டு எழுந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்! கல்வி மறுக்கப்பட்ட தற்குறிகளாக்கிப் பட்ட கீழ்ச் சாதி மக்களுக்கு வகுப்புரிமை தந்து மேன்மக்களாக உயர்த்திவிட்ட பெருமைக்குரிய இயக்கம் திராவிடர் இயக்கம். தாழ்த்தப்பட்டவர் என அடிமைத்தளையில் பூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர்களுக்கு, "ஆதிதிராவிடர்கள்' என்று பெயர்சூட்டி, கல்விக் கட்டணத்தை ரத்துச் செய்து, உதவித் தொகை வழங்கி, கல்விச் செல்வத்தை வாரி வழங்கி, தொடர்ந்து வேலை வாய்ப்புக்களையும் வழங்கி சான்றோர்களாக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம்.

"அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?' என்று போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்திய நம் குலப் பெண்களுக்குக் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்துமுதன்முதலாக வாக்குரிமையும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பும் வழங்கி ஆணுக்குப் பெண் இங்கே சமம் என நடைமுறைப்படுத்திக் காட்டிய இயக்கம் திராவிடர் இயக்கம், அறநிலையத் துறை உருவாக்கம், பணியாளர் தேர்வு ஆணையம் உருவாக்கம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மீனவர், மகளிர் நிலை உயர்த்திட தொழிலாளர் ஆணையர் என்னும் சிறப்பு அலுவலரை நியமித்தல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவர்களின் பொருளாதார நிலை உயர்த்துதல், தேவதாசி முறை, குலக்கல்வி திட்டம், இளமை மணம் முதலிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுதல் எனத் திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் தொடர்ந்துகொண்டே வருகின்றன!

இத்தகைய பெருமைகளுக்கும், சிறப்புக்களுக்கும் உரிய திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டியது உரிமை பறிக்கப்பட்ட நம் இனத்தின் வரலாற்றுக் கடமையாகும்! பார்ப்பனர்களின் கொடிய வல்லாதிக்கத்திலிருந்து, தமிழ் மக்களை மீட்டிட களத்தில் நின்று போராடியும், சொத்து சுகங்களை இழந்தும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிடர் இயக்க மாவீரர்களுக்கு நன்றியுடன் வணக்கம் செலுத்துவோம்!

நன்றி விசுவாசம் காட்டுவதும் நய வஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை நினைவூட்டும் வகையில், சில திடீர் தலைவர்கள்' திராவிடர் இயக்கத்தின் மீது சேறுவாரி வீசும் பணியில் ஈடுபடுகிறார்கள். சிரஞ்சீவியாய் உயிர் வாழும் இந்த விபீடணர்களுக்கு அவாளின் அனுசரணையும், ஆதரவும், விளம்பரமும், இன்ன பிறவும் வட்டியின்றிக் கிடைக்கின்றன.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் தோளில் ஏறிச் சவாரி செய்து வந்த பா.ம.க. நிறுவன மருத்துவர் இராமதாசு திராவிடர் கட்சிகளோடு இனி உறவே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். திராவிட மாயை என்ற திரிபுவாதத்தைக் கருத்தரங்கம் மூலம் பரப்புகிறார். இதுகுறித்து நேருக்கு நேராக வாதம் செய்ய, ம.தி.முக. பொதுச் செயலாளர் வை.கோ. தயாரா என்று சீமான் அறைகூவல் விடுகிறார். எல்லாம் தளங்களிலும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்கு எதிராகவே நீதிக்கட்சி ஆட்சி செயல்பட்டு வந்தது என ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கட்டவிழ்த்து விடுகிறார்.

மக்கள் மாநாட்டுக் கட்சி சக்திவேல், பெ. மணியரசன் முதலான தமிழ் தேசிய குழுக்களும் பார்ப்பனர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் திராவிடத்தின் மீது தங்களது தாக்குதலை விடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

நமக்கு இது ஒன்றும் புதிதல்ல! 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் உருவான போதே, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோரிடம் இக்குரல் ஒலித்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே குரலை ம.பொ.சிவஞானம் ஓங்கி ஒலித்தார். திராவிடர் இயக்கத்தை ஒழிப்பதே என்வேலை' எனச் சூளுரைத்து 1952 ஆம் ஆண்டில் தமிழகமெங்கும் திராவிடர் இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் அவர்! தந்தை பெரியார் அவர்கள் வடநாட்டு சுரண்டல் தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, திராவிட வியாபாரிகளின் கடை முன் மறியல் செய்யப் போவதாக சொன்னவர் ம.பொ.சி. இந்தியை எதிர்த்தும், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தும் தந்தை பெரியார் அவர்கள் களத்தில் நின்று போராடிய போதும், ம.பொ.சி. நம்மை எதிர்த்தும் ஆரிய தேச பக்தர்களின் அம்பாகவும் செயலில் இறங்கினார் (பின்னர் அவரே தி.முக. கழகத்தின் உதயசூரின் சின்னத்தில் நின்று வென்றதும், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் மேலவைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பதவிச் சுகத்தில் திளைத்ததும் சுவையான வரலாறு).

ம.பொ.சி. அவர்களைப் போலவே ஈ.வெ.கி. சம்பத் அவர்களும், சி.பா. ஆதித்தனார் அவர்களும், திராவிடர் இயக்க எதிர்ப்பையே தமிழ்த் தேசியம் என்று குறிப்பிட்டுக் களமிறங்கி தோல்வியைத் தழுவி காங்கிரசில் சம்பத்தும், தி.மு.கழகத்தில் ஆதித்தனாரும் கரைந்து போனார்கள். இன்றைக்கு ரவிக்குமார் எழுப்பும் திராவிட இயக்க எதிர்ப்புக் குரலுக்கு முன்னோடியாக பத்தாண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்திலிருந்து குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தம் "திருப்பணியை'த் தொடங்கினார். இவைகளை நினைவுகூரும்போது, இன்றைய தமிழ்த் தேசியக் குழுவினரின் திசை திருப்பும் பணி நமக்கு வியப்பையோ அதிர்ச்சியையோ அளிக்கவில்லை!

"வாழ்க வசவாளர்கள்!' என்று அறிஞர் அண்ணாவின் மொழியில் அவர்களையும் வாழ்த்திவிட்டு வகுப்புரிமை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு முதலான உயிரனைய நம் கொள்கைகளைக் காக்கவும் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்ந்திடவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறவும் நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்திடும் ஆரியர்களின் ஆதிக்கத்தை வேரறுக்கத் திராவிடத்தால் எழுவோம்; தமிழினம் காப்போம்' எனத் திராவிடர் இயக்க நூற்றாண்டில் சூளுரைப்போம்!

Pin It