திராவிட நாடு எது? இதற்குமுன் – 1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் "திராவிட நாடு' என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்ட, பிறகு வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பனும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான் பிரிவுகளாக வெட்டிவிட்டார்கள்.

இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை, மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்டம் நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகிவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது "தமிழ்நாடு' என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்துபோய்விட்டார்கள். நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம்.

வெள்ளையர் ஆண்ட காலத்தில் பார்ப்பனரின் அக்கிரமங்களைச் சொல்ல வழி இருந்தது. அவர்களும் நாம் சொல்வதைக் கேட்டுச் சிலவற்றைக் கவனித்து வந்தார்கள். இப்பொழுது நம் நாடு வட நாட்டிற்கு நிபந்தனையில்லா அடிமை நாடாகிவிட்டது. நாங்கள் வெள்ளையரை அப்பொழுதே கேட்டோம்: "நாங்கள், உங்களை யுத்த காலத்தில் ஆதரித்தோம், பார்ப்பனரும் வடநாட்டுக்காரரரும் உங்களை எதிர்த்தார்கள் : எங்கள் இனம் வேறு: அவர்கள் கலை, பழக்க வழக்கங்கள் வேறு' என்று சொன்னோம். அதற்கு வெள்ளைக்காரர்கள், "நீங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைத்த இருந்தோம்.

இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நாங்கள் சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் போய்விடப் போகிறோம்' என்று கூறி, முசுலிம்களுக்கு சிறு இராஜ்யத்தைப் பிரிதுக் கொடுத்துவிட்டு, நம்மை பார்ப்பனருக்கும், வடநாட்டவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர். இப்பொழுதும் நாம் வடநாட்டு ஆட்சியில் இருந்து பிரிந்து தனி நாடு ஆக வேண்டுமென்று கூச்சல் போடுகிறோம்.

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும்பொழுது நாம் மட்டும் இருக்குமுடியாதா? நமக்குப் பொதுவான வசதி இங்கேயே இருக்கிறது.

நமக்கு நாடு கிடைத்து வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த வடநாட்டான் ஓடிவிடுவானே!

(திருவண்ணாமலையில் 19.89.1956இல் சொற்பொழிவு "விடுதலை' 29.8.1956)

Pin It