ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்குமா?

விரைவில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிப்பதும், வெடிக்காமல் போவதும் தலைவர் இருக்கிறாரா, இல்லையா? என்பதை மட்டும் பொறுத்ததன்று, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தக்கட்டம் அந்த வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம் இருந்தால் தலைவர் இல்லா விட்டாலும் அப்படி நடக்கவேண்டும். நடக்கச் செய்ய வேண்டும். போராட்ட வடிவம் அப்படிப்பட்டதாக இருக்கமுடியாதென்றால் தலைவரே இருந்தாலும் அது நடக்காது. அப்படி நடக்கச் செய்ய முயற்சியில் அவரே இறங்க மாட்டார்.

தமிழீழ விடுதலைப் போரின் முதல் நான்கு கட்டங்களிலும் நிலவிய முதன்மைக் காரணிகள் தமிழீழ மக்களின் வாழ்நிலை மற்றும் உணர்வு சார்ந்த அவர்களின் ஆத்ம நிலை, விடுதலை இயக்கத்தின் வலிமை மற்றும் கட்டுக்கோப்பு, நட்பு மற்றும் பகை ஆற்றல்களின் உறவு நிலை – இப்போதும் அடிப்படை மாற்றமின்றித் தொடர்கின்றனவா? என்பதுதான் மய்யக் கேள்வி. தமிழீழ மக்கள் இப்போதுள்ள நிலையில் அவர்களைச் சார்ந்து நின்று மீண்டும் ஒரு மரபுவழிப் போர் அல்லது கரந்தடிப் போர் நடத்துவது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. அமைதிவழிப்பட்ட அறப்போராட்டங்களுக்கான வாய்ப்பே இப்போதைக்கு அரிதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கட்டுக்கோப்புடன் இயங்கி, மக்கள் தந்த செயலூக்கம் மிக்க ஆதரவினாலும், ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஈகத்தினாலும், தலைமையின் உறுதிமிக்க திறமான வழிகாட்டுதலாலும் அரும்பெரும் வெற்றிகளை ஈட்டி, வரலாற்றில் அழியா முத்திரை பதித்து, உலகம் வியக்க ஓங்கித் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென மாயமாய் மறைந்துவிட்டது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

விடுதலைப் புலிகளின் தன்மை

ஏன் இப்படி ஆயிற்று? இதற்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விடை சொல்வதற்குப் போதிய தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், புறக்காரணிகள் – உலகச் சூழல் , இந்தியா முதலான வெளி அரசுகளின் பங்கு – அனைவரும் அறிந்தவையே. காரணம் எதுவானாலும் காரியம் தெளிவாகப் புலப்படுகிறது.

விடுதலைப் பலிகள் இயக்கம் என்பது அரசியல் குறிக்கோளுடன் கூடிய ராணுவ அமைப்பே ஆகும். இங்கே அரசியல் கட்சி ஒன்று ராணுவப் பிரிவை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, இராணுவ அமைப்பு தனக்கோர் அரசியல் பிரிவை ஏற்படுத்திக் கொண்டது. ஏன் இப்படி என்பதற்குச் சிங்களப் பேரினவாதத்தின் மூர்க்கமான இராணுவ அடக்குமுறையே விடையாகும்.

இராணுவப் படை அரசியல் இயக்கம் கட்டுவதா, அரசியல் இயக்கம் இராணுவப் படை கட்டுவதா என்பது அந்தந்த நாட்டின் வரலாற்றுச் சூழலைப் பொறுத்ததே தவிர, தலைமையின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்ததன்று. ருஷ்யப் புரட்சியில் கட்சிதான் முதலில் வந்தது. அரசியல் புரட்சி வென்ற பிறகுதான் செம்படையே அமைக்கப் பெற்றது. சீனத்தில் கோமிங்டாங் படையிலிருந்து ஒரு பிரிவு வெளியேறி வந்துதான் பொதுமை (கம்யூனிஸ்டு) கட்சியைத் தோற்றுவித்தது. அயர்லாந்தில் அயர்லாந்து குடியரசுப் படைதான் சீன் பீன் என்னும் அரசியல் பிரிவைத் தோற்றுவித்தது.

சிதறிப் போன கட்டளைக் கட்டமைப்பு

இராணுவத் தன்மையுள்ள எந்த அமைப்புக்கும் கட்டளைக் கட்டமைப்பு இன்றியமையாதது. ஒரு விடுதøலப் படைக்கு அதன் அரசியல் கொள்கை மூளை என்றால், கட்டளையமைப்பே இதயமாகும். முந்தைய போர்க் கட்டங்களில் புலிப்படை வென்றாலும் தோற்றாலும் அதன் கட்டளையமைப்புக்குச் சிதைவோ, பெரிய சேதமோ கூட ஏற்பட்டதில்லை. நான்காம் கட்ட ஈழப்போரின் முடிவு மக்களுக்கு முழுப்பேரழிவை ஏற்படுத்தியதோடு, விடுதலைப் படையின் கட்டளைக் கட்டமைப்பை அறவே சிதறடித்து விட்டது என்பதே வேதனைக்குரிய உண்மை. நாம் இப்படித்தான் புரிந்து கொள்கிறோம்.

படையியல் கோணத்தில் மட்டுமல்லாமல், அரசியல் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிங்களப் பேரினவாதம் உள்நாட்டு அளவில் மட்டுமல்லாமல், தெற்காசிய அரங்கிலும், சர்வதேச அளவிலும் கூட வலுமிக்க ஆற்றலாகவே நீடிக்கிறது. தமிழீழ விடுதலை ஆற்றலின் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது. இந்த மெய்நடப்பைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை. இதுவே நிரந்தரமில்லை என்பது மெய்தான். ஆனால் இப்போதைய நிலை இதுதான் என்பதை அறிந்தேற்றுப் புரிந்து உள்வாங்கிக் கொண்டால்தான் மாற்றத்திற்காக நம்மால் போராட முடியும்.

தமிழகத்தின் பொறுப்பு

முள்ளிவாய்கால் இனப் பேரழிப்பைத் தடுக்கமுடியாமல் போனது ஏன்? தமிழீழ மக்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழலில் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் திறனும் தமிழக மக்களுக்கே உரியது. ஆனால் தமிழக மக்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்றோ அல்லது எவ்வளவு முன்றும் இதை செய்ய அவர்களால் இயலாமல் போய்விட்டது என்றோ புரிந்து கொள்ளலாம்.

உலகத் தமிழர்கள் பத்துக்கோடி என்றால் ஈழத்தமிழர்கள் அரைக் கோடிக்கும் குறைவே. தமிழகத் தமிழர்கள் ஆறு கோடிக்கு மேல் தமிழர்களின் முதற்பெரும் தாயகம் தமிழகமே. தமிழீழத்தைத் தமிழகம் காக்கத் தவறினால் வேறு யார் அதைக் காப்பார்? இந்த வகையில் தமிழீழத்தின் தோல்வி தமிழகத்தின் தோல்வியும் ஆகும். தமிழகம் தோற்றது ஏன்? தானே அடிமை நாடாக இருப்பதால் தோற்றது என்பது வரலாற்று நோக்கில் சரியான விடை.

இறைமுறையற்ற தமிழகத்தால் ஈழத் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் தமிழ்த் தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் காட்டுவதற்கு மொழியுரிமை மறுப்பு, ஆற்றுநீர் உரிமை மறுப்பு போன்ற பல காரணிகள் இருப்பினும் ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாத அவலம் போல் நமக்கு நம் அடிமை நிலையை உணர்த்திய காரணி வேறெதுவுமில்லை.

ஏன் தோற்றோம்?

ஆனால், தமிழகம் விடுதலை பெற்ற பிறகுதான் தமிழீழத்திற்குத் துணை செய்ய முடியும் என்று எந்திரத்தனமாக இதற்குப் பொருள் கொண்டு விடக் கூடாது. ஓர் இனம் அடிமைப்பட்டிருந்தாலும் அந்த அடிமைநிலையை உணர்ந்து அதற்கு எதிராகப் போராடுவதன் வாயிலாகத் தன் வலிமையையும் ஆற்றலையும் பெருக்கி உறுதியாக்கிக் கொள்ள முடியும். அரசே சாதிக்க முடியாதவற்றைக் கூட தெளிந்த குறிக்கோளுடன் ஒன்றுபட்டுப் போராடும் ஒரு மக்களினத்தால் சாதிக்க முடியும்.

ஈழத் தமிழர் மீதான போரை நிறுத்து என்று உணர்ச்சி பொங்கப் போராடிய தமிழ்த்தேசிய இனத்தின் உண்மை நிலை என்ன? சமூக நோக்கில் சாதிகளாய்ப் பிரிந்திருப்பது ஒரு மூத்த உண்மை, இதையும் மீறித்தான் தமிழ் மக்கள் 1965 இல் மொழிக்காகப் போராடினார்கள். இப்போது (2008 – 09) ஈழத்திற்காகப் போராடினார்கள். ஆனால் அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடப்பதை அவர்களால் வென்று வெளிப்பட முடியவில்லை. கருணாநிதியின் வஞ்சகமும், ஏமாற்று மோசடியும், இரண்டகமும் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்பட்ட பிறகும் அவருக்கு எதிராகக் கழகத்தில் ஒரு கலகம் இல்லையே! அல்லது தி.மு.கழகம் உடைந்து சிதறவில்லையே, கருணாநிதியால் இன்று வரை ஈழத்தமிழர்களுக்காகப் பாடுபடுகிறவரைப் போல் நாடகமாட முடிகிறதே!

செயலலிதா தமிழக மக்களின் ஈழ ஆதரவு மனநிலையை வாக்குகளாக்கி அறுவடை செய்வதற்காகத் தேர்தல் பரப்புரையில் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்றும், ஈழம் பெற்றுத் தருவேன் என்றும் மேடைக்கு மேடை முழங்கி விட்டு இப்போது வசதியாக வேறு வேலை பார்க்க முடிகிறதே! இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்து குருதிக் கறைபடிந்த கையோடு கைசேர்க்கஆசைப்பட முடிகிறதே! செயலலிதா தன் ஆசைப்படி நாளை காங்கிரசைத் தோளில் தூக்கிக் கொண்டால் அ.இ.அ.தி.மு.க. கலைந்து போய்விடுமா என்ன?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் ஒன்று சேர்ந்த தேர்தல் கட்சிகள் ஈழ ஆதரவு அரசியலுக்குப் பதவி அரசியலை உட்படுத்துவதற்கு மாறாக, ஈழ ஆதரவு அரசியலைப் பதவி அரசியலுக்கு உட்படுத்தின, இன்றளவும் உட்படுத்தி வருகின்றன என்பதே கசப்பான உண்மை. ஈழ மக்களுக்காகப் பதவி இழக்கவோ, தேர்தலைப் புறக்கணிக்கவோ எந்தப் பதவி அரசியல் கட்சியும் அணியமாயில்லை என்பதே நம் பட்டறிவு.

இந்த நிலையில் தமிழக மக்களைப் போர்க்குணத்தோடு அணிதிரட்டிப் பெருந்திரளாய்க் களமிறக்கி இந்திய அரசையே முடங்கச் செய்வது எப்படி? இந்தக் கட்சி வட்டதிற்கு அப்பால் தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர், வழக்கறிஞர் போராட்டங்களும், முத்துக்குமார் முதலானவர்களின் தீக்குளிப்பும், தமிழ்த் தேசிய ஆற்றல்கள் நடத்திய அடையாளப் போராட்டங்களும் தில்லிக்கு உறைக்காமல் போனதில் வியப்பில்லை.

தமிழீழத் தேசியர்களின் புரிதல்

தமிழக மக்கள் வெவ்வேறு அமைப்புகளின் பின்னால் இருந்தாலும் ஒரே தேசிய விடுதலைக் குறிக்கோளுடன் வலுவானதொரு தேசிய இயக்கமாக – இப்போது காசுமீர் மக்கள் திரண்டிருப்பதைப் போல் – திரண்டிருப்பார்களானால், அது இந்திய அரசை ஈழப் படுகொலையிலிருந்து பின்வாங்கச் செய்திருப்பதோடு, உலக அரங்கிலும் ஈழ மக்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தியிருக்கும்,

தமிழினத்திற்கு இறைமையும் இல்லை. இறைமை நோக்கிய தேசியப் பேரியக்கமாக அது அணி திரட்டப்படவும் இல்லை என்பதே ஈழ மக்கள் இன அழிப்பைத் தமிழகம் தடுக்க இயலாமல் போனதற்கு முதன்மைக் காரணமாகும். இந்த உண்மையைத் தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஈழ மக்களின் குருதியால் வரலாற்றுச் சுவர்களில் எழுதப்பட்ட இந்தப் பாடத்தைப் படிக்காமலும், படிப்பிக்காமலும் ஈழக் கனவை ஒரு போதும் நனவாக்க முடியாது. இவ்வகையில் தொடக்கம் முதலே தெளிவாக இருப்பவை தமிழகத்தின் தமிழ்த்தேசிய அமைப்புகளே. தமிழீழத்தின் தமிழ்த் தேசிய அமைப்புகள் குறித்து அட்டியின்றி இப்படிச் சொல்வதற்கில்லை. 1972 இல் தந்தை பெரியார் தம்மைப் பார்க்க வந்த தமிழீழத் தந்தை செல்வநாயகத்திடம் “உங்களை அடிமையாக்கி விட்டதாகவா சொல்லுகிறீர்கள்? தமிழர்களாகிய நாங்கள் ஏற்கெனவே இந்தியாவில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவி செய்ய முடியும்?'' என்று கேட்ட போதே தமிழகத்தின் உண்மை நிலையைத் தமிழீழத் தேசியர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் புரிந்து கொண்டார்களா? புரிந்து கொண்டாலும் அந்த அடிப்படையில் தம் அணுகுமுறையை வகுத்துக் கொண்டார்களா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழீழத் தலைவர்களாயினும், பொது மக்களாயினும், தமிழகத்தை இந்தியாவாகவும், தமிழர்களை இந்தியர்களாகவும் பார்ப்பதுதான் வழக்கமாக இருந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்குச் சிங்கள ஒடுக்குமுறை என்பது போல் தமிழகத் தமிழர்களுக்கு இந்திய ஒடுக்குமுறை என்பதாக ஒன்று இருப்பதையே பொதுவாகத் தமிழீழத்தின் படிப்பாளிகள் கூட அறிந்தேற்பதில்லை.

தமிழகத்தின் தமிழ்த்தேசியம்

தமிழகத்தின் தமிழ்த் தேசியம் தமிழீழத்தின் தமிழ்த் தேசியத்தைக் காட்டிலும் அகவையில் மூத்தது. 1925 இல் தந்தை பெரியார் தன்மான இயக்கம் கண்டார். 1938 இல் தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கம் தந்தார். பாரதியார், வ.உ.சிதம்பரனார், திரு.வி. கலியாண சுந்தரனார் போன்றவர்கள் அடிப்படையில் இந்தியத் தேசியர்களே என்றாலும், அவர்களது பேச்சிலும், எழுத்திலும் முனைப்பாகத் தமிழ்த்தேசியக் கூறுகளும் இருந்தன. சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஈ.வெ.கி. சம்பத்தின் தமிழ்த்தேசிய கட்சி ஆகிய அமைப்புகள் குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட அளவுக்குத் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்குப் பங்களித்தன. திராவிட இயக்கமே கூட பதவி அரசியலால் சீரழிவதற்கு முன், உருத்திரிந்த திராவிட வடிவத்திலேயே என்றாலும் உள்ளடக்கத்தில் ஏறத்தாழத் தமிழ்த்தேசியத்தையே முன்னெடுத்தன.

தமிழகத்தின் தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு இப்படியொரு நீண்ட வரலாறு இருப்பதைத் தமிழீழத்தின் தமிழ்த்தேசிய இயக்கம் அறிந்துணர்ந்து செயற்பட்டதற்கான பெரிய அறிகுறி ஏதும் இல்லை. கவிஞர் காசி ஆனந்தன் போன்ற ஒரு சிலர் அங்கும் இங்கும் நேரடியாகவே தமிழ்த் தேசிய இயக்கங்களில் பங்காற்றியவர்கள் என்பதால், தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான இடையுறவைப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் விதி விலக்கானவர்கள்.

புலிகளின் நிலை

இந்திய வல்லாதிக்கத்தையும், தமிழீழத்தை மலரவிடாமல் தடுப்பதில் அதற்கிருந்த அக்கறையையும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தலைவர் பிரபாகரனும் சரியாக உள்வாங்கிக் கொண்டதால்தான் அதன் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் விரித்த சூழ்ச்சிவலையில் சிக்காமல் அதனை அறுத்தெறிந்து கொண்டு வெளியே வரவும் முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, கருணாநிதி – எம்.ஜி.ஆர். குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கையில் பிரபாகரன் இப்படிச் சொன்னார் : “தமிழக அரசுக்கு இறைமை கிடையாது என்பதை அறிவோம். முதலமைச்சர் தாமாக எங்களுக்குத் துணை செய்ய அதிகாரமில்லை என்பதையும் நன்கு உணர்ந்துள்ளோம் என்றாலும் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாகவே நம்புகிறோம்.'' இது சரியான பார்வை.

ஆனால், இந்தப் பார்வையும் இதிலிருந்து பெறப்படும் முடிவுகளும் இயக்கத்தின் எல்லா நிலைகளுக்கும் போய்ச் சேர்ந்தனவா? குறிப்பாக இயக்கத்தின் அரசியல் கட்டுரையாளர்களுக்குப் போய்ச் சேர்ந்தனவா? என்று தெரியவில்லை. தமிழீழப் பொதுமக்களும் இந்தியா பற்றி மயக்கங்களிலேயே வளர்க்கப்பட்டார்கள். தமிழக அரசியல் என்றாலே கருணாநிதி அல்லது எம்.ஜி.ஆர். என்ற குறுகிய புரிதல்தான் நிலவியது. தமிழகத்தின் தமிழ்த் தேசியத் தலைவர்களில் ஒரு சிலர் அறியப்பட்டிருந்தாலும் தமிழ்த் தேசியர்கள் என்பதைக் காட்டிலும், தமிழீழ நண்பர்கள் என்ற அடையாளத்துடனேயே அறியப்பட்டிருந்தார்கள்.

1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையொட்டி அமைதிப்படை என்ற பெயரில் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பும், அது புரிந்த கொடுமைகளும் ஈழ மக்களின் இந்திய மயக்கத்திற்கு வலுத்த அடி கொடுத்தன. திலீபனின் ஈகமும், புலேந்திரன் – குமரப்பா உள்ளிட்ட பன்னிருவரின் குப்பிச்சாவும், அன்னை பூபதியின் பட்டினிப் போராட்ட உயிரிழப்பும் ஈழ மக்களுக்கு இந்தியப் பகையைத் தெளிவாக அடையாளம் காட்டின.

இந்தியாவின் பகைமைச் செயற்பாடு இந்திய படையின் வெளியேற்றத்தோடு முடிந்துவிடவில்லை. அது சிங்கள அரசுக்குத் தெடர்ந்தது. படைக்கலன்களும், படைப் பயிற்சியும் வழங்கி வந்தது. ஆனால், அப்போதும் இந்தியாவிடம் கெஞ்சிக் கொஞ்சுவதான அணுகுமுறை தொடரவே செய்தது. இந்தியாவை நாம் பகை நாடாகக் கருதுகிறோம் என்று சொல்லத் தேவையில்லைதான். ஆனால் இந்திய அரசு தமிழர்களைப் பகையினமாகக் கருதிச் செயல்படுகிறது என்ற உண்மையை சொல்ல தயங்கியிருக்கத் தேவையில்லை.

இசுரேலும் ஈழமும்

இந்தியா ஈழத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று சொல்வது வேறு. இந்தியாவின் நடவடிக்கைகளும் ஈழம் துணை நிற்கும் என்று உறுதியளிப்பது வேறு. இந்த இரண்டு அணுகுமுறைகளையும் பிரிக்கும் கோடு மெல்லியதென்றாலும் தெளிவானது.

ஈழத்தை இந்திய அரசின் நோக்கங்களுக்கு ஒப்புக் கொடுக்கும் அணுகுமுறையின் ஒரு விபரீத வெளிப்பாடுதான் “அமெரிக்காவிற்கு இஸ்ரேல் போல் இந்தியாவிற்கு ஈழம் பயன்படும்'' என்ற உறுதிமொழி. அமெரிக்காவிற்கு இஸ்ரேல் எதற்கெல்லாம் பயன்பட்டது. பயன்பட்டும் வருகிறது என்பதை நாமறிவோம். எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்கும், இன்னும் கூட முக்கியமாகப் பாலத்தீன விடுதலையை மறுப்பதற்கும் இஸ்ரேல் அமெரிக்காவிற்குப் பயன்பட்டதை நாமறிவோம். சுருங்கச் சொன்னால், இஸ்ரேல் அமெரிக்காவின் மேற்காசிய அடியாள்.

இதே போலத்தான் ஈழமும் இந்தியாவிற்குப் பயன்படப் போகிறதென்றால் அது இந்தியாவின் தெற்காசிய அடியாளாகச் செயல்படும் என்று பொருள். இந்தியாவிற்கு எதிரானவர்களை ஒடுக்க ஈழம் பயன்படுமென்றால், காசுமீரத்தையும், வடகிழக்குத் தேசிய இனங்களையும், தண்டகாரண்யப் பழங்குடிகளையும் ஒடுக்குவதற்குப் பயன்படும் என்று பொருள்.

இந்த ஏரணத்தை இறுதிவரை நீட்டிப் பார்த்தால் தமிழகத்தின் தேசிய விடுதலையைத் தடுப்பதற்குப் பயன்படும் என்று பொருள் இப்படித்தான் ஈழம் பயன்படுமென்றால், அதை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் கேட்க மாட்டார்களா?

– தொடரும்

Pin It