அந்நாள் பார்ப்பனர்  அல்லா தார்க்குச்
"சென்னை  திராவிடர் சங்கம்'  கண்டவர்
நல்லார்  நடேச னார் என்ற  வள்ளல்!
வல்லார்  நாயர், வண்தியாக ராயர்
எல்லாம்  சேரப்  புதுப்பெயர் ஏற்றுத்
"தென்னிந் தியநல  உரிமைச்  சங்கமாய்; அது
பன்னரும்  பயன்கள்  இங்குப்  பயந்தது

மக்கள்  நலனை  மதியாத  காங்கிரசு
மிக்கவே  பார்ப்பன  மேலாண்  மையினால்
அக்கிர  காரக்  காங்கிரசு  ஆனதால்
நீதிக் கட்சி  தேர்தலில்  வென்றது  ஆட்சி  அமைக்க  வருமாறு  ஆளுநர்
தியாக  ராயரை  அழைத்தும்  அந்தக்
தியாக  சீலரோ  பதவி  மறுத்தார்;
இருமுறை  அத்தகு  வாய்ப்பு  ஏற்பட்டும்;
பதவி  நாடாப்  பண்பினர்  அவரே!

நீதிக்  கட்சி ஆட்சி இங்கே
நிகழ்த்திக்  காட்டிய சாதனை பலப்பல
பார்ப்பனர்  அல்லார் அரசுப்  பணிகளில்
ஏற்றம்  பெற்றது இவர்ஆட் சியில்தான்
தாழ்த்தப் பட்ட மக்கள்  தமக்கும்
ஆக்கம்  பல, இவ்  ஆட்சி செய்தது
தேவ தாசி  ஒழிப்புச்  சட்டம்  
கலப்பு  மணத்திற்குக்  காப்புச்  சட்டம்
வகுப்பு வாரி ஒதுக்கீட்டுச்  சட்டம்
தொழிலா ளர்க்குக்  கடனுதவிச் சட்டம்
கூட்டுற வுத்துறை  வளர்ச்சிச்  சட்டம்
கோயிலில்  பார்ப்பனக்  கொள்ளை  தடுக்க
இந்து  அறநிலையப்  பாதுகாப்புச்  சட்டம்
இப்படி  யாய்ப்பல சட்டங்கள்  இயற்றப்
பக்கத்  துணையார்  இருந்த  பெருமகன்,
வெள்ளுடை வேந்தர்  தியாக ராயரே!
வரலாறுப்  பெருமை  வாய்ந்த இவரின்
"பிராமணர்  அல்லார்  உரிமைச்  சாசனம்'
அதுவரை அடங்கிக்  கிடந்த மக்கட்கு
முதுகெலும் பே போல்  முட்டுக்  கொடுத்தது
எல்லார் பங்கையும்  எடுத்து விழுங்கிய
பொல்லாப்  பார்ப்பனப்  போக்கைத்  தடுத்தது

"திராவிடன்' "ஜஸ்டிஸ்' "ஆந்திர பிரகாசிகா'
தமிழுடன் ஆங்கிலம்  தெலுங்கில் வந்த
மூன்று  இதழ்களும்  முப்படை  அணியாய்ப்
பகை அரண் களைப் போய்ப் பாய்ந்து தாக்கின

அந்நாள்  சென்னை நகராட்சித்  தலைவராய்
எண்ணிலாப்  பயன்கள்  ஏழையர்க்கு விளைத்தார்
கோடி  கோடியாய்  வணிகத்தில்  குவித்தும்
தேடிய  எல்லாம்  மக்கட்கு அளித்தார்
வாடினார்  இறுதியில்  வறுமையில்;  எனினும்
பீடும்  பெருமையும் பிழைத்தார்  இல்லை

கட்டுட  லோடு சிலையாய்  "ரிப்பன்
கட்டத்  தின்'முன் காட்சி தருகின்ற
தியாக  ராய  செம்மல் தன்னையே
தியாகம்  செய்த  திராவிட  விளக்கே!

Pin It