பார்ப்பனரல்லாதோர், கோயிலில் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும் பிரசாதம் செய்தால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்புகள் வழங்குகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 5.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை'' அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பணியிடங்கள் சிலையைத் திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் "புனிதம்' கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை. இந்து அறநிலையத்துறைதான். ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த "லட்டு' செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம் நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையைத் தூண்டுவதாகவும், ஆலயத் தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்தப் பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 7.2.2011 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு "இத்தகைய' பழக்கவழக்கங்களை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 13 அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணி வழங்க மறுப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டது ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது எனத் தடையானை மனுவைத் தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிற நீதிபதி சுகுணா உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகரித்துள்ளார்.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில், மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து நிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போது சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பனப் புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பனர் மற்றும் "கருப்பு' அம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது? "காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்' என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால் பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போலத் தொட்டுவிட்டு மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதிதொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளைக் கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டுப் பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது "அரசியலமைப்புச் சட்டம்.' நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்தமதப் பழக்கவழக்கத்தின்படி, லட்டு, பூந்தி கூட "அவா....' செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.

நன்றி: "வினவு.காம்'

Pin It