மலர்க்கொடி செங்கொடி மறைந்தார்! இந்த
நிலத்தவர் வெடித்தார் நெஞ்சம்! வீரச்
செயலினைப் புரிந்தவர் சின்னவர் ஆயினும்
உயர்ந்தார் பெரியோர் உள்ளம் எங்கிலும்
யார்க்கிது தோன்றும்? யார் இதைச் செய்வார்?
ஊர்க்கொரு துன்பம்? யார் இதைச் செய்வார்?
ஊர்க்கொரு துன்பம் நேர்த்திடக் கண்டால்
தன்னுயிர் தந்தே இன்னுயிர் காப்பார்
என்னும் கருத்தினை இவரே காத்தார்!
இளமையின் மடியில் இருந்த இவரோ
கொடுமையை முரித்திடக் கொதிதெழுந்தாரே!
வாயினால் சொன்னால் புரியுமா என்றே
தீயினில் தன்னைச் செலுத்திக் கொண்டார்!
காஞ்சி மாநகர் கலங்கி அழுதது
பூஞ்சிட்டு மடிந்தது புயலில்! அந்தோ!
தமிழ்ப்பெண் என்பதால் தாங்க முடியாத்
தமிழர் துயரால் தணலைத் தழுவினாள்!
முருகனும் சாந்தனும் மூச்சு விடவே
தருகிறார் உயிரை! தலைவணங்குகின்றோம்!
பேரறி வாளன் பேசும் வாழ்க்கையை
ஊரினில் காணவே உயிர்தந்தாரே!
மூவர் தண்டனை ஏவல் செய்தவர்
காவல் நீக்கிடக் கண்களை மூடினாள்!
பெண்ணாய்ப் பிறந்ததால் பிறர்துயர் புரிந்தது!
மண்ணில் உயர்ந்த மகளார் இவரே!
இனிமேல் ஆகிலும் எண்ணுவீர்!
புனைந்த தண்டனை போக்குவீர்! போக்குவீர்!
தூக்குத் தண்டனை தூக்கி எறிவீர்!
தீக்குளித்த திட்ட செங்கொடி மகிழவே!

- முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Pin It