நமது நாட்டில் நடைபெறும் அர்த்தமற்ற கடங்குகளுக்கோர் எல்லையே கிடையாது. ஏதேனுமொரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அக்காரியங்களை முடிவு செய்யும்போதும் பைத்தியக்கார விதமாக ஏதேதோ சடங்குகள் செய்து வருகிறார்கள். இச் சடங்குகள் எதற்காகச் செய்கிறோம் இதனால் என்ன பலன் உண்டு என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை கேட்டால் “ஏதோ முன்னோர் செய்தது; அதை ஏன் நாம் விடவேண்டும்?'' என்று கூறுவார்கள். எத்தனை கஷ்டப்பட்டாலும் கடன்பட்டாவது பயித்தியக்கார விதமான இச்சடங்குகள் நம்நாட்டு மக்கள் செய்யாமல் விடுவதில்லை.

நம் மக்களின் மூடத்தனமான சடங்குகளின் காரணத்தினால் நம் நாட்டில் அழியும் செல்வங்களுக்கோர் அளவே கிடையாது. கோடிக்கணக்கில் அழிகிறது. இக்கொடிய சடங்கு என்னும் பழக்கத்தினால் ஏழை மக்கள் படும் பாடோ சொல்லத்தரமன்று. கையில் காசு இல்லை; சடங்குகளை வேண்டாம்; என்ற எண்மே உண்டாகிறதில்லை. ஏன்! பழக்க வழக்கமென்னும் இருளால் சூழப்பட்ட இந்தியாவன்றோ? இப்புண்ணியநாடு.

முற்போக்கடைந்த மற்ற நாட்டினர் கேட்டாலும், பார்த்தாலும் பரிகசித்துச் சிரிக்கக்கூடிய சடங்குகளைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம். மக்கள் பிறப்பதற்கு முன்பே, தாயின் கெர்ப்பத்திலிருக்கும் போதெ பொல்லாத சடங்குகள் ஆரம்பமாகி விடுகின்றன. 5 மாத கெர்ப்பத்தில் சடங்கு 7 மாத கெர்ப்பத்தில் சடங்கு, குழந்தை பிறந்த அன்று சடங்கு, பத்தாவது நாள் சடங்கு, 16 ஆம் நாள் சடங்கு அக் குழந்தை பால் குடிக்கச் சடங்கு, குழந்தையை வெளியில் கொண்டு போகச் சடங்குடன் முதல் முதல் கோயிலுக்குத் தான் கொண்டு போக வேண்டும். அப்போதே பிடித்தது சனியன், பிறகு பெயரிடும் சடங்கு குழந்தைக்குப் பல் முளைத்தால் சடங்கு, குழந்தைக்கு ஓர் வயதானால் முடி எடுக்கும் சடங்கு, காது குத்தும் சடங்கு வெகு ஆடம்பரமாக ஆயிரக்கணக்கான பொருள் செலவில் நடைபெறும். தோளில் கயிறணியும் வகுப்பினராய் இருந்தால் ஆண் பிள்ளைகளுக்கு பூணூல் கல்யாணச் சடங்கு நடைபெறும். 5 வயதானால் பள்ளிக்கூடத்திற்கு கனுப்பும் சடங்கு, பெண் குழந்தையாய் இருந்தால் ருது சாந்தி சடங்கு பிரமாதமாய் நடைபெறும். பிறகு கல்யாண நிச்சயச்சடங்கு.

கல்யாணச் சடங்கைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதில்லை இவைகளுக்கெல்லாம் தலைவரான சடங்கு அதுவே. புதுமாப்பிள்ளை சவரம் செய்து கொள்ளும் சடங்கு, வெட்கக்கேடான படுக்கை அறைச் சடங்கை எப்பாடு பட்டாவது வெகு ஆடம்பரமாக நடத்தத் தவறுவதே கிடையாது. நமது இந்தியர்கள் 60 வயதானதும் தம்பதிகளுக்கு அப்போது ஒரு புதுக்கல்யாணம் நடைபெறும் இறந்த பின்னும் இச்சடங்கென்னும் பேய் சும்மாவிடுவதில்லை. இறந்த மூன்றாம் நாள் சடங்கு, எட்டாம் நாள் சடங்கு, 16 ஆம் நாள் சடங்கு மாதச் சடங்கு, வருஷ சடங்கு என்று பிறந்தது முதல், இறந்து மறைந்த பிறகும் அர்த்தமற்ற சடங்கென்னும் வலையில் சிக்கியழும் ஓ! எந்தாய் நாட்டுமக்களே! இவ்விதம் தொட்டதற்கெல்லாம் சடங்கு, சடங்கென்னும் மீளா இழிநிலையுடைய இந்திய மக்களே! நீங்கள் செய்யும் சடங்குகளால் உங்களுக்காவது அல்லது நாட்டிற்காவது ஒரு சிறு நன்மை உண்டா? சடங்குகள் செய்யாவிட்டால் ஏதாவது தீங்குதான் ஏற்படுமா? நன்றாய் பகுத்தறிவை பிரயோசனப்படுத்தி யோசனை செய்து பாருங்கள். இச்சடங்குகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாய் நடைபெறுகிறது. அவைகளை விவரிக்கின் பெருகுமென்றஞ்சி சுருக்கி எழுதுகிறேன்.

இக்கணக்கற்ற சடங்குகளுக்குள் பெண்கள் பருவமடைந்தால் ருது சாந்தி என்னும் சடங்கு நடத்துகிறார்களே. அச்சடங்கு எவ்வளவு வெட்கக்கேடானதும், முட்டாள் செய்கையானதும், அவமானமானதும், பரிகசிப்புக் கிடமானதும் பெண்களை இழிவுபடுத்தும் விதமானதுமான சடங்கு என்பதைச் சற்று ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள், வெட்கம்! வெட்கம்!! அன்று அவ்வீட்டில் மேளதாளத்துடன் நடைபெறும் பெண்களின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் வழியோடு போகிறவர்கள் கூட இவ்வீட்டில் பெண் ருதுவாகி இருக்கிறது என்பதை சொல்லாமலே அறிந்து கொள்ளலாம். ருதுவான நாள் முதல் 5 நாள் வரை பலவிதமாய் அப்பெண்ணுக்கு வேஷங்கள் போடுவார்கள், விளம்பர அழைப்புத்தாள் வழங்குவார்கள், வீடு வீடாய்ச் சென்று அழைப்பார்கள். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடுவார்கள், மத்தியில் மரம், செடி, படுதா, வர்ணக்காகிதம் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 7 மணிவரையில் மகாலட்சுமி வேஷத்துடன் தாமரைப் பூவில் நின்று கொண்டிருக்க வேண்டும்.

சரஸ்வதி வேஷம், ருதுவான பெண்களுக்கு கிருஷ்ண வேஷமும் வேறு இரு பெண்களுக்கு சத்தியபாமா, ருக்மணி வேஷமும் போடுதல், ராமர் லட்சுமணன் சீதை வேஷம் போடுதல், மோகினி, வேடன், மணதம்பதிகள் வேஷம், ரெங்கநாதர் பள்ளி கொண்டிருப்பது போல் வேஷம், குறவன் – குறத்தி வேஷம், பாரசீகதாவி வேஷம், இவ்வாறெல்லாம் பல வேஷங்கள் போட்டு மேடையில் நிறுத்தி மேளக்கச் சேரியும், தாசி நடனமும் நடத்தி வந்திருக்கும் ஜனங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் விதமான பலகாரங்களும், பழங்களும், வழங்குகிறார்கள். பெரியோர்களே, நாடகங்களைப் பழிப்பீர்கள், கெடுதல் என்று கூறுவீர்கள், ஆனால் உங்கள் வீட்டு ருதுவான பெண்களை ஆயிரக்கணக்கான ஆண்களின் முன்னிலையில் பலவிதமான பயித்தியக்கார வேஷத்துடன் பதுமையைப் போல் வீற்றிருக்கச் செய்கிறீர்கள்.

இந்த ருதுச்சடங்கு செய்வது எதற்கு? எங்கள் வீட்டில் பெண் பக்குவமடைந்திருக்கிறது பாருங்கள். "வேண்டுவோர் கேட்கலாம்' என்று விளம்பரம் செய்வது பொலல்லவா தோன்றுகிறது. அதற்கு இப்படிப்பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும் எதற்கு? இச்சடங்கு உங்களுக்கு இழிவாய்த் தோன்றவில்லையா?

ஆண்கள் ஒருவாறு இருந்தாலும் இந்தச் சடங்கு விஷயத்தில் பெண்கள் கொஞ்சமும் தவறுவதில்லை. இந்திய மக்களின் அறியாமையை விளக்குவதற்கு இந்த ஒரு பயித்தியக்காரச் சடங்கே போதுமானது.

சகோதரிகளே! பெண் சமூகத்திற்கு எவ்வளவு இழிவும், வெட்கமும் நிறைந்தது, ருது சடங்கு என்பதை நன்றாய் யோசனை செய்து பாருங்கள். பருவமடைந்த ஒரு மங்கைக்கு வேஷத்தைப் போட்டு ஆயிரக்கணக்கான ஆண்களின் முன் நிறுத்திவிட்டு அதிக வெட்கம் நிறைந்தவர்களாய் ஒரு அறைக்குள் கும்பலாய் புகுந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது எதற்கு? அதுவும் ஓர் பெண் அல்லவா?

பொருள்களை வியாபாரத்திற்காக விளம்பரம் செய்வதுபோல் நம் நாட்டில் மங்கைப் பருவமடைந்தப் பெண்களை விளம்பரம் செய்வது போன்ற இச்சடங்கைப் பற்றி கொஞ்சமாவது அறிவீர்களானால் பெண்களைப் பொருளெனக் கருதி நடத்தும் இச்சடங்கை நடத்துவீர்களா? சகோதரிகளே! தாய்மார்களே! தன்கையே தனக்குதவி என்ற பழமொழியைப் போல் நம்நாட்டு பெண்கள் சமத்துவம், விடுதலை, பெற வேண்டுமானால் நமக்குள்ளிருக்கும் உதவியற்ற, பொருத்தமற்ற, நன்மையற்ற, அநேக மூடப்பழக்கவழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் தற்போதிருக்கும், இழிநிலையிலிருந்து விடுபட முடியும். பகுத்தறிவுக்கும், மக்கள் சமூகத்திற்கும் பொருத்தமற்ற பயித்தியக்காரத் தனமான சடங்குகளை அறவே ஒழியுங்கள், அப்போதுதான் நாம் நாடும் நன்னிலை பெறும், நாமும் நன்னிலை பெறுவோம்.

– குடிஅரசு 5.6.1932

Pin It