* தாய்த் தமிழின் ஒளி கீற்றாக,
 தமிழ்ப் பண்பாட்டின் உளி வடிவாக,
 நாட்டு விடுதலையின் உயிர் மூச்சாக,
 நலம் பயக்கும் தொண்டின் வாழ்வாக,
 வாழ்ந்திட்ட எங்கள் பாவலரேறு அய்யாவே!

* கேடர்கள் கையில் ஆட்சி அதிகாரம்!
 கேடுசூழ் இனமாய் நம் தமிழினம்!

* ஈழத்திற்கு செய்த வரலாற்றுக் கொடுமையை
 இளித்தவாய் தமிழர் மறந்து போக,
 கோவையில் மாநாடு கொடிகட்டிப் பறந்தது!

* ஒருநாள் பகிர்தானியில் சென்றபொழுது,
 தமிழில் பேசிய எனைப் பார்த்து,
 தமிழாசிரியரா நீங்கள்?' எனக் கேட்ட
 ஒரு பொறியியல் கல்லூரி மாணவரிடம்,

* "தமிழாசிரியர் மட்டும்தான் தமிழில் பேசுவார்களா?'
 என்ற என்னுடைய வினாவிற்கு, விடையாக,
 செம்மொழி மாநாடு நடந்த பின்பும்
 இப்படிக் கேட்பது சரியா?' என
 மாணவரிடம் கேட்ட ஓட்டுநரின் வினாவிற்கு,

* "கருணாநிதி பேசும் செம்மொழி வேறு!
 நான் பேசும் செம்மொழி வேறு!
 கருணாநிதி பேசுவது தமிழரை ஏமாற்ற!
 நான் பேசுவது தமிழரை மீட்க!' என்ற
 என்னுடைய விடைக்கு, ஓட்டுநர் கூறினார்
 எனைப் பார்த்து, "நீங்கள்தான்
 நல்ல டீச்சர்' என்று.

* கோவை மாநாட்டின் எதிரொலியைப் பார்த்தீர்களா?
 "முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர்'
 கருணாநிதியைத் தவிர, இந்த அளவிற்கு
 தமிழரை ஏமாற்ற, வேறு ஒருவருக்கு
 அரசியல் கரடவம் தெரியுமா என்ன?

* தமிழரை ஏமாற்ற "திராவிட முகமூடி'
 அணிந்து வந்தனர் நேற்று! "தமிழ்
 முகமூடி' அணிந்து வருகின்றனர் இன்று!

* தமிழ் அரிமாவே! எங்கள் பெருஞ்சித்திரரே!
 உமதுவழி நாற்றங் காலில், நாம்
 செய்த பயிர், அறுவடை ஆகிறது
 திருடர்களின் பொருள் களஞ்சியத்தை நிரப்ப!

* எங்களால்
 நொடிப் பொழுதும் நினைக்க முடியவில்லை,
 ஈழத்தில் நடந்த கொடுங் கொடுமையினை!

* அடுத்து வரும் தமிழகத் தேர்தல்,
 எங்கே இவர்களை அடையாளம் தெரியாமல்
 அழித்து விடுமோ என்கிற அச்சத்தில்
 கோவையில் கொண்டாடினர்
 செம்மொழி மாநாட்டினை!

* தமிழ்த்தாயின் பிள்ளைகளை, கதற கதற
 கொடுங்கொலை செய்து விட்டு,
 பிள்ளைகள் பேசிய மொழிக்கு மாநாடு!

* வரலாறு இவர்களைப் பொறுத்துக் கொள்ளாது!
 வரலாறு இவர்களை ஏற்காது! தெரியும்!
 இதனால் அமைதி கிடைக்குமா தமிழருக்கு?
 இறந்த நம் தமிழ் மக்களை
 யாரால் திருப்பி கொடுக்க முடியும்?

* நாட்டு விடுதலையை உயிர்த் துடிப்பாக
 எண்ணி, எமை உரமேற்றிய அய்யாவே!
 நீர் கூறியது போல், நாம்
 ஏழு கோடி தமிழராய் இருந்தாலும்
 நமக்கென்று ஒரு நாடு இலையே!
 இருந்திருந்தால் இந்திய நடுவணரசு இப்படி
 கேட்க கேள்வி இலாமல், நம்
 தமிழரை கொலை செய துணியுமா?

* இனம், மொழி, நாடு காக்க
 எமை எழுப்பிய எங்கள் சித்திரரே!
 உமது நினைவு நாளில் உரைக்கின்றோம்!
 "இனியும் நாங்கள் உறங்க மாட்டோம்!
 நீர் விதைத்த விதைகள் நாங்கள்!'

(பாவலரேறு நினைவேந்தல் பா)

Pin It