ஏறத்தாழ 3000 ஆண்டுக்கால வரலாற்றுச் செய்திக் குறிப்புகள் தமிழகத்திற்கு உண்டு. எழுத்து முறைகளும், எண்கள் வழிப்பட்ட கணக்கு முறைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழிப்பான நிலையில் தமிழில் வளம் பெற்றிருந்தன.

முத்துக்குளிப்பு, அரிய வகை மணிகள் கண்டெ டுத்துப் பல்வகை அணிகலன் உருவாக்கத் தொழில் களும், தேக்கு சந்தனம், மிளகு, ஏலம், மயிற் பீலிகைகள் உள்ளிட்ட இயற்கை வளப் பொருள்களும், கடல் கடந்து வணிகம் செய்யப் பெற்றுள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தமிழர்கள் வண்டிகளும், சிறிய கப்பல்களும், கல்லால் செய்யப் பெற்ற நங்கூரங்களும் உருவாக்கும் அறிவு பெற்றிருந்தனர். வானியலிலும், மருத்துவத் திலும், இசையிலும், கூத்திலும் சிறந்து விளங்கினர். தொல்காப்பியம் மறுக்க இயலாத நிலையில் தமிழுக்குக் கிடைத்த முதல் நூலாக இருக்கிறது.

எனவே, அதற்கும் முன்பான தமிழ் இலக்கியப் பரப்பும், தமிழ் மொழிப் பயன்பாட்டுக் காலப் பரப்பும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியவை என்பதை அறிய முடிகிறது. ஆனால் அவையெல்லாம் வரலாற்றில் வெட்ட வெளிச்சமாகப் பதிவில் இல்லை.

சமசுகிருத, ஆரியப் பார்ப்பனிய, இந்திய வரலாற்று ஆளுமைகளுள் அவை புதைந்து கிடக்கின்றன. எனவே, தமிழகத்திலிருந்து தமிழக வரலாற் றாய்வை நடத்திட வேண்டியிருக்கிறது. மாறாக இந்திய உருவாக்கத்திலிருந்து தமிழக வரலாற்றை ஆய்ந்திட முடியாது.

குமரி முனையின் வரலாற்றுக் கூறுகளை எப்படிச் செங்கல்பட்டிலிருந்து தேடிக் கொண்டிருக்க முடியாதோ அப்படித் தமிழகத்தின் வரலாற்றுக் கூறுகளை வடபுலங்களில் தொடங்கி ஆய்வு செய்ய முடியாது.

கடந்த கால உலக, இந்திய வரலாற்றாய்வாளர் களுள் பெரும்பான்மையினர் அவ்வாறே ஆய்வுகளைச் செய்து விட்டனர்.

மாக்சு முல்லர் முழுக்க முழுக்க ஆரிய, சமசுகிருத சார்பிலேயே இந்திய வரலாற்றை அணுகியிருக்கிறார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதியிருப்பவராகச் சொல்லப்படுகிற டி.டி.கோசாம்பியும் வடக்கிருந்தே ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறார்.

வடக்கிருந்து ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறார் என்பது மட்டுமன்று, தமிழக வரலாற்றைத் தமிழ் மொழி சமூக ஆய்வுகளை முற்றும் முழுமையாகப் புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்.

“இரிக்கு வேதத்தின் பெரும் பகுதி கி.மு. 1500 2000க்கு இடையில் இயற்றப்பட்டிருக்க லாம் என்று சொல்லப்படுவது அறிவு வழிப்பட்டது.''  என்று ஆய்வுக்குட்படுத்தாமலேயே வேதங்களை மிகப் பழமையுடையதாக மெச்சிக் கொள்ளுகிற கோசாம்பி,

“சிந்து வெளி நாகரிகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை முழக்கவும் விலக்கிவிட வேண்டும். ஏதோ சில சான்றுறுதி செய்யப்படாத முத்திரைகளில் பதிந்துள்ள எழுத்துக்களைத் தவிர எல்லாம் தற்போது ஈடு செய்ய முடியாதவாறு அழிந்து போய் விட்டனவாகத் தோன்றுகிறது. அவ்வாறே பண்டையத் தமிழ் இலக்கியத்தையும் இந்த ஆய்விலிருந்து விலக்க வேண்டியிருக்கிறது.'' என்று கூறுகிறார்.

அவரின் மேற்படிக் கூற்று முழுக்க முழுக்க ஆரியச் சார்புப் போக்கைக் காட்டுவதோடு அவரின் வரலாற்றாய்வையே ஐயுறவும் வைக்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தில் என்ன எழுதப்பட்டி ருப்பினும் அவற்றை முழுமையாக விலக்கிவிட வேண்டும் என்கிறார் கோசாம்பி.

"பண்டைய இந்தியா அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு' எனும் ஆய்வு நூலை அவர் எழுதுவதற்கு முன்பு வேண்டுமானால் சிந்து வெளி எழுத்துக்கள் படிக்கப் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அவை படிக்கப் பெறலாம் எனும் முனைப்புக்குக் கூட அவர் இடங் கொடுக்கவில்லை. மேலும் அவர் என்ன காரணம் கொண்டு பண்டைய தமிழ் இலக்கியங்களையும் ஆய்விலிருந்து விலகியிருக்கிறார் என எவ்வகைப் பதிவுமில்லை.

அவர் மட்டுமல்லர், இந்தியாவுக்கு என வரலாறு எழுதப் புகுந்த ஆய்வாளர்கள் அனைவரின் முயற்சியும் அத்தகைய குறைபார்வையுடையதாகவே இருப்பதை ஆழ்ந்து அறிந்தால் உணரலாம்.

இந்தியாவுக்குள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு தேசங்களின் வரலாறுகளை அவையவற் றிலிருந்து ஆய்வு செய்கிற முறைப் படியான ஆய்வின்றி, ஆரிய ஆங்கிலேய உருவாக்க இந்தியா வுக்கென ஒரு வரலாற்றைக் கற்பித்தக் கொண்டு எழுதும் வரலாறுகள் அனைத்தும் பொய்ம்மையும் புனைவும் கொண்டிருப்பதோடு, அந்த அந்தத் தேசிய வரலாற்றாய்வு களுக்கும் முட்டுக் கட்டை யாகவே அமைந்து விடுகின்றன.

இந்திய வரலாறு என்பதற்குள் காசுமீரம், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூரி மட்டுமல்ல, தமிழகம், கேரளம் போன்று பல தேசங்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. நிலை இவ்வாறிருக்க, தமிழகத்திற்கென எழுதப் பட்ட வரலாற்றாய்வுகளும் முழுமைப்பட்டனவாக இல்லை.

ஒன்று, தமிழிய மரபுக் கூறுகளைக் குமுக இயங்கியல் போக்குக்குரிய ஆய்வடிப்படையில் அணுகாமல் மிகைப்படுத்திக் கணிப்பனவாக உள்ளன. அல்லது முற்றிலும் இந்தியச் சார்பு போக்கி லிருந்து தமிழியக் குமுக இயக்கப் போக்கையே புறந்தள்ளுவனவாக இருக்கின்றன.

எனவே இவ்விரு வகைப் போக்குகளிலிருந்தும் விடுபட்டு, தமிழக மக்கள் குமுகத்தின் நீண்ட நெடிய இயங்கியல் வரலாற்றை மீட்டெடுப்பதும் அவ்வரலாற்றியல் போக்குக்கேற்ப தமிழ்த் தேச அரசியலைப் பழக்குவதும் அடிப்படையாகின்றது.

வரலாறு என்பது மன்னர்களின் ஆண்டைகளின் செயல், எழுத்துப் பதிவகள் மட்டுமல்ல. ஏனெனில் மன்னர்களுக்கு மக்களின் மீதிருந்த அக்கறையைக் காட்டிலும், மண்ணின் மீதே அக்கறை அதிகம். தன் ஆட்சிப் பகுதியை எந்த அளவு விரிவுபடுத்த முடியும் என்பதே மன்னர்களுக்கு எண்ணமாய் இருந்திருக்கும்.

எனவே, மன்னர்களின் ஆட்சிப் பரப்புகள் பெருகு வதும் குறுகுவதுமாக மாற்றமடைந்து கொண்டே இருந்தன. எனவே ஒரு தேச உருவாக்கத்திற்கு மன்னர்களின் ஆட்சிப் பகுதி அடிப்படையானதாக இல்லை. ஆனால், மக்களின் வாழ்வியல் முறைகளும், அவர்களின் மொழியும், பண்பாடும், பிற கூறுகளுமே பிற்கால வளர்ச்சியில் ஒரு தேசமாக உருவெடுக்கலான அடித்தளங்களை உருவாக்கின.

எனவே மக்களின் வாழ்க்கை வளர்ச்சியும் உழைப்பின் வழி ஏற்பட்ட குமுக மாற்றங்களுமே வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கக் கூடியவை.

அந்த வகையில் தமிழக மக்களின் இயங்கியல் வழிப் பட்ட படிப்படியான சமூக வளர்ச்சியும் மாற்றங்களுமே தமிழ்த்தேச வரலாறாக உருக் கொள்ள முடியும். எனவே அத்தகைய வரலாற் றைத் தொகுத்து உருவாக்குகிற பொறுப்பைத் தமிழ்த் தேச மக்கள் விடுதலை அரசியலில் அக்கறை கொண்டவர்களே பெற்றிருக்க முடியும்.

வேதத்தில் சரசுவதி ஆறு என்று ஓர் ஆற்றைப் பற்றிய செய்தி பதிவு பெற்றிருக்கிறது என்பதற்காக இந்திய அரசு பல நூறு கோடிகளைச் செலவழித்து சரசுவதி ஆறு எங்கு ஓடியது என்பதைக் கண்டறியும் முயற்சியை மேற்கொண்டது. இறுதியாக எத்தகைய அறிவியல் ஏற்புக்கும் உடன்படாத வகையில் இதுதான் சரசுவதி ஆறு ஓடிய இடம் எனப் பொய்யாய் ஓர் இடத்தைக் காட்டிக் கணக்கை முடித்து விட்டனர்.

ஆனால் அப்படியாகயல்லாமல், உண்மையில் கண்டறிய வேண்டிய எண்ணற்ற வரலாற்றுச் செய்திகள் தமிழர்களுக்கு உண்டு. ஆனால் அவற்றை யெல்லாம் கண்டறியும் முயற்சியில் இந்திய அரசும் ஈடுபடவில்லை. தமிழக அரசும் முனைப்பு கொள்ளவில்லை.

சமஸ்கிருத மொழிப் பயன்பாட்டுக்கான எத்தகைய வரலாற்றுப் பதிவும் கி.,பி. 150க்கும் முன்பாக இல்லாதபோதும் கி.மு. 2000 களிலேயே வேதங்கள் சம்கிருதத்தின் முந்து மொழியான வேத மொழியில் எழுதப்பட்டு விட்டதாக ஆரியச் சார்பு அரசியலாளர் களும், ஆய்வாளர்களும் புளுகிக் கொள்கின்றனர்.

வேடிக்கை என்னவெனில் இப் பச்சைப் புளுகைக் காட்டிலும், அவ்வேத இலக்கியங்களுக்குப் பின்னரே தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் உருக் கொண்டன என மாக்சு முல்லர் மட்டுமல்லாமல் டாங்கே, கோசாம்பி, நம்பூதிரிபாடு என மார்க்சியர் களும் தலையசைத்ததுதாம்.

வேதங்களையும், அதன் பிரமாணங்களை, உபநிடதங்களை, புராணங்களை அடியொட்டியும், சமண, புத்த கருத்துகளை இணைத்தும் இந்திய மெய்யியல் பரப்பு விரிந்ததாகப் பொய்ம்மை வலையையும் விரித்துக் கொண்டனர் ஆரியச் சார்பினர்.

அத்தகைய வலை விரிப்புகளைக் கொஞ்சமும் மறுத்துரைக்காமல் இந்திய மார்க்சியங்களும் அவற்றுக்கு இசைந்து தலையசைக்கிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து தமிழ்ச் சமூகம் நீண்ட வரலாற்றை, இலக்கியங்களை, மெய்யியல் பரப்பைக் கொண்ட நிலையில் வளர்ந்து வந்திருக் கிறது என்பதற்கான இயங்கியல் வழிபட்ட ஆய்வுகளை அவர்கள் நோக்க மறுக்கின்றனர்.

இதற்கிடையில், தமிழை ஆரியத்தினின்று விடுவிக்க வேண்டுமென முனைப்பு தோன்றிய காலம் முதல் தமிழருக் கென நிலவிய வரலாற்று, இலக்கிய, மெய்யியல்களின் தனித் தன்மைகள் குறித்த ஆய்வுக் கருத்துக்கள் மேலெழத் தொடங்கின. ஆனால் அவற்றையெல்லாம் இந்திய மார்க்சியர்கள் எள்ளி நகையாடினர்.

பின்னர் ஆரிய இந்திய மாயை மறுத்துத் தமிழியப் பார்வையோடு மார்க்சியம் பழகியவர்களே இந்தியத்தில் மூழ்காத தமிழருக்கான அத் தனித்தன்மைகளை இயங்கியல் நோக்கில் எடுத்து வெளிக்காட்டலாயினர். அம் முயற்சிகள் தமிழக வரலாற்றாய்வின் தொடர் ஆய்வு முயற்சிகளாக நடைபெற்று வருகின்றனவே யன்றி முற்றுப் பெற்றிடவில்லை.

அவ் ஆய்வு முயற்சிகளை மேலும் செழுமையாக வளர்க்க வேண்டிய பொறுப்புகள் தமிழ்த் தேச மக்கள் விடுதலையில் அக்கறை கொண்ட இயக்கங்கள், அறிஞர்களிடமே உள்ளன. இந்நிலை இவ்வாறு இருக்க, அவ் வரலாற்று மெய்யியல் ஆய்வுகளுள் தமிழ்த் தேச அடையாளப் படுத்தங்களில் ஏற்படுகிற சில பிழையான அரசியல் அணுகுமுறைகள் அத்தகைய ஆய்வு முறைகளையும் ஐயுற வைக்கின்றன.

தமிழக வரலாற்றை ஆய்வு செய்து உருப்படுத்துவது எந்த அளவு இன்றியமையானதோ, அந்த அளவு வரலாற்றடிப்படையில் தமிழ்த் தேசத்தை இன்றைய தமிழ்த் தேச விடுதலையை எழுச்சிக்குரிய தேவை யடிப்படையில் அடையாளப்படுத்துவதும் இன்றி யமையானது.

அதாவது தமிழ்த் தேசம் என்பது இயங்கியல் வழிப்பட்ட வரலாற்றடிப்படையானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே அதை அடையாளப்படுத்துவதிலும் அத்தகைய வரலாற்றடிப்படையான இயங்கியல் போக்கு இருக்க வேண்டும்.

ஒரு தேசம் பொதுவாக மொழி சார்ந்தது மட்டுமன்று, பொதுவான நில ஆட்சிப் பகுதி, பொருளியல் வாழ்வு, மன இயல்புகள் கொண்டு வரலாற்றடிப்படையிலான நிலையான மக்கள் குமுகுமாகவும் இருக்கிறது. இன்னும் அதன் அடை யாளப்படுத்தங்களை இயங்கி யல் போக்கிற்கு ஏற்ப விரிவாகக் கூட உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அதேபோது ஒரு தேசத்தை, ஒரு மொழி சார்ந்த தாகவோ, அல்லது வேறு ஏதே னும் ஒரே ஒரு கூறினை மட்டு மே சார்ந்ததாகவோ கணித்துவிட முடியாது, கூடாது.

தொல்காப்பியம் அடையாளப்படுத்துகிற "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்க் கூறும் நல்லுலகம்' என அன்றைய தமிழ் நில அடையாளப்படுத்தத்திற்கான தமிழ்க் கூறும் பகுதிகளுக்கு அந்த அளவீடு போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். எனவேதான், தமிழ் மொழி வழக்காற்றிலிருந்து பெயர்ந்த பகுதிகளை மொழிப் பெயர்த் தேயங்கள் எனத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டி அடையாளப் படுத்தியிருக்கிறது.

ஆனால், அத்தகைய அடையாளப்படுத்தத்தை அப்படியே இன்றைக்குத் தமிழ்த் தேச அடையாளப் படுத்தக் கூறாக எண்ணிட இயலாது. எப்படிப் பழந் தமிழிலக்கியப் பதிவுகளில் நாவலந் தீவாகப் பதியப் பெற்ற இந்தியப் பெருநிலப்பரப்பு தமிழர்கள்தம் பரவலில் இருந்த காரணத்தால் இந்தியப் பரப்பு முழுமையையும் இன்றைக்குத் தமிழ்த் தேசம் எனும் அடையாளப்படுத்தத்திற்கு ஆட்படுத்த இயலாதோ அப்படி, இன்றைக்குத் தமிழ் மொழி வழக்காற்றிலுள்ள இலங்கையையோ, அல்லது தமிழகத்தை யொட்டி பிற பகுதிகளையோ இணைத்து அவற்றை யெல்லாம் தமிழ்த் தேசம் எனக் கூறிக் கொள்ள இயலாது.

இவற்றுள் நடைமுறைச் சிக்கல் உண்டு என்பது மட்டுமல்ல, அது அரசியல் பிழையுடையதாகவும் அமைகிறது.

தமிழ் மொழியின் மக்களைக் கொண்டதாக மட்டுமே தமிழ்த் தேசத்தை அளவீடு செய்தால், தமிழகம் என்பதைத் தமிழீழத்தையும் சேர்த்தே விரித்துக் காட்ட வேண்டியிருக்கும். எனவே, இதன் மூலம் ஒரு தேசத்திற்கு மொழி மட்டுமே அடையாளக் கூறாக இல்லை என்பதை அறிய வேண்டும்.

மொழியோடு, அரசியல், பொருளியல், வரலாற்றியல் அளவீடுகளையெல்லாம் எண்ண வேண்டியிருக்கிறது. ஆக, அத்தகைய அளவீடுகளோடு பார்க்கும்போது தமிழீழம் தனித் தேசமாகவும், தமிழகம் தனித் தேசமாகவும் இருப்பதை உணரமுடியும். எனவே, தமிழீழத் தேசத்திற்கான விடுதலை உரிமைகளுக்காக அத்தேசம் போராடுவது என்பது தமிழகத் தேசத்திற்கான விடுதலையை தேடித் தந்து விடாது.

ஒன்றுக்கொன்று துணையாக இருந்திடலாம், ஆனால் ஒன்றின் உரிமையால் மற்றது நிறைவு கொள்ள முடியாது. ஆக, தமிழீழத்திற்கான தேச அடையாளப்படுத்த அரசியல் வேறு போலவே, தமிழகத்திற்கான தேச அடையாளப்படுத்த அரசியலும் வேறானது.

ஒன்றின் போராட்டத் தேவைகளும், போராட்ட வழிமுறைகளும், உத்திகளும் மற்றதின் போராட்டத் தேவைகளிலிருந்து, போராட்ட வழிமுறைகளிலிருந்து, உத்திகளிலிருந்து வேறுபட்டவையே. ஆக இவ்விரு தேச உருவாக்க, போராட்ட, விடுதலைத் தேவைகளையும் பகுத்து ஆய்ந்து அறிகிற அரசியல் தெளிவு அந்த அந்தத் தேசப் போராட்ட இயக்கங்களுக்குத் தேவை. எனவே அத் தேசங்களின் உருவாக்க, போராட்ட விடுதலைத் தேவைகளைத் தமிழ் மொழி அல்லது தமிழர் என்கிற இன அடையாளப்படுத்தக் கூறுகளி லிருந்து மட்டுமே தொடங்கவோ, போராடவோ இயலாது.

தமிழ் மொழி, தமிழர் என்கிற இன அடையாளக் கூறுகளோடு, தமிழ்த் தேச அல்லது தமிழீழத் தேச அரசியல் அடையாளக் கூறுகளையும், அல்லல் தேசங்களுக்குரிய பொருளியல் வழிப்பட்ட, பண்பாட்டு வழிப்பட்ட, வரலாற்று வழிப்பட்ட கூறுகளையும் இணைத்து முழுமையாக அடையாளப்படுத்தி மக்களுக்கு விளங்க வைத்தாக வேண்டும்.

ஒரு தேசத்தின் அடையாளப்படுத்தங்கள் முறைப் படி முழுமைப்படவில்லையானால், அத் தேசத்தின் விடுதலைப் போராட்டமும் முழுமைப்படாமல் போகும்; அரைகுறையாகவே தொக்கி நிற்கும்.

இதை இன்னும் விளக்கிச் சொல்வதானால், தமிழ்த் தேசத்திற்குரிய விடுதலைத் தேவையை மொழி வழி, அரசியல் வழி, பொருளியல் வழி, வரலாற்று வழி, பண்பாட்டு வழி உள்ளிட்ட அனைத்துக் கூறுகளிலும் விளங்க வைக்கவும், போராட வைக்கவுமான வகையில் தமிழகம் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மாறாக, தமிழகத்தை மொழி வழி மட்டுமோ, தமிழர் எழுச்சி கொள்ள வேண்டும் என இன வழி மட்டுமோ அடையாளப்படுத்தி எழுச்சி கொள்ள வைப்போமானால், அவ் வெழுச்சிகள் தமிழ்த் தேச விடுதலையை நோக்கி முழுமையாகச் செல்லாமல் அரைகுறையாகவே தேங்கிப் போகும். அது மட்டுமல்லாமல், தேசிய வழி முழுமையான அடையாளப்படுத்தங்கள் இல்லாமல் போனால், தேசத்திற்கான முழுமையான எதிர்மையாற்றல்களை அடையாளம் கண்டு எதிர்க்கிற போக்கும் மாறிப் போகும்.

குறிப்பாகச் சொல்வோமானால் தமிழ்த் தேசத்தின் மீதான முற்றும் முழுமையான இந்திய, வல்லரசிய எதிர்ப்பு ஆற்றல்களை நோக்கி எதிர்மைப்படாமல் அண்டைத் தேச முரண்களையே முதன்மை முரண் போல் உணர்ந்து திசைத் திரும்பல்கள் ஏற்படும். அதனால் தமிழ்த் தேச விடுதலை இலக்கு திசை மாறி தமிழ்த் தேச உருவாக்கத்தையே உள்ளரிப்பு செய்து அழித்து விடும்.

எனவே இந்நிலைகளைக் கூர்ந்து கவனிப்பது மட்டும் அல்லாமல் அக்கறையோடு கவனம் செலுத்தி இயங்க வேண்டுவதே தமிழ்த் தேச விடுதலைக்கான இயக்கங்களுக்குரிய கடமையாக இருக்கிறது. ஆனால் இன்றைக்குத் தமிழகத்தில் நிலவுகிற தமிழ்த் தேச விடுதலை இயக்கங்கள் அத்தகு முகா மைக் கடமைகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதுவரை உணராமல் போயினும், இனியேனும் உணர்ந்தாக வேண்டும் என்பதே நம் வலியுறுத்தும்.

Pin It