மயிலாடு துறை திருவாரூர் முக்கிய சாலையிலிந்து சன்னாநல்லூரில் நாகப்பட்டினம் நோக்கி பிரிந்த கிளைச் சாலையில் திரும்பியது பேருந்து ஓரளவு குலுக்கலின்றி சென்ற பேருந்து கிராமத்து சாலையின் தரத்திற்கேற்ப பொம்மலாட்டத்துடன் நகர ஆரம்பித்ததும், அதுவரை போட்ட என் குட்டித் தூக்கம் முடிவிற்கு வந்தது. எதிரே வந்த சிறு சிறு வாகனங்களும் வழிகொடுக்க ஒவ்வொரு முறை சாலையை விட்டு இறங்கும் போதும் புழுதி பேருந்தினுள் நுழைந்து தொல்லை செய்தது. எனினும் ஆற்றங்கரையை ஒட்டிச் செல்லும் சாலையும், அதனை ஒட்டிய கிராமத்து காட்சிகளும் கூட ஓரளவு ரசிக்கத்தக்கவையாகத்தான் இருந்தது.

நெருக்கமாக அடுத்தடுத்து சிறு சிறு கிராமங்கள் விதவிதமான பெயர்ப்பலகைகளுடன் தோன்றி மறைந்தன. சிறு வயதில் புகைவண்டிப் பயணத்தின் போது அடுத்தவர்களுடன் போட்டி போட்டு அடுத்து வரும் புகை வண்டி நிலையத்தின் பெயரைப் படிப்பது என்ற சிறு வயது ஞாபகங்கள் என் மனதில் நிழலாடின.

"திருப்புகலூர்'எனும் பெயர்ப்பலகை தோன்றி மறைந்த போது அப்பர் இறைவனடி சேர்ந்த ஊர் இதுவல்லவா என ஞாபகத்திற்கு வந்தது. இறைவன் அப்பரை சிங்க ரூபத்தில் வந்து ஆட்கொண்டதாக கதை. இப்போது திருப்புகலூரில் மருந்துக்கு கூட தோப்புகளோ, துறவுகளோ தென்படவில்லை. எங்கு நோக்கிலும் பச்சை வயல்கள் தான். அந்தக் கால திருப்புகலூரில் காடுகளும் அதற்கு நடுவில் சிங்கங்களின் கர்ஜனையும் எனது கற்பனையில் வந்து போயிற்று. அப்போது தான் சட்டென்று ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. என் பள்ளித் தோழன் ஒருவர் மருத்துவராகி இங்கே ஏதோ ஒரு கிராமத்தில் தங்கி பணிபுரிவதாக தெரியவந்தது. சங்கரன் என்பது அவன் பெயர். எனக்கு நல்ல நண்பன் (பள்ளிக் காலத்தில்) நட்புடன் அவன் படிப்பையும் வளர்த்துக் கொள்ள நான் மற்றவை வளர்க்க அவன் இன்று மருத்துவர். மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கூட பலமுறை அவனை சந்தித்திருக்கிறேன். பின்னர் நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. அவன் தங்கியிருக்கும் கிராமம் மட்டும் நினைவிற்கு வரவில்லை. எனவே ஆவலுடன் ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தவாறே வந்தேன். பேருந்து ஒரே சீராக இன்றி ஆடி ஆடிச் சென்று கொண்டிருந்தது.

திருமருகல் அருகில் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்ற போது பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் டாக்டர் சங்கரன் எம்.எஸ்., அறுவை சிகிச்சை நிபுணர், என்ற விளம்பரப் பலகையைப் பார்த்தேன். சட்டென்று மனம் மகிழ்ச்சியுற்றாலும், ஏதோ இடிப்பது போல இருந்தது. இது நம்ப சங்கரன் தானா? என ஒரு சந்தேகம் எழுந்தது. இறங்கி விடலாமா? என யோசிப்பதற்குள் பேருந்து நகர ஆரம்பித்தது. நாகப்பட்டினம் சென்று திரும்பி வரும்போது கட்டாயம் இறங்கிப் பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

இது என் நண்பன் சங்கரன் தானா என எனக்குள் சந்தேகம் பிறந்ததற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. சங்கரன் படிக்கும் காலத்திலேயே சற்று மென்மையான இதயம் உள்ளவன். உயிரியல் பாடங்களில் கூட அவனுக்கு தவளை, கரப்பான் பூச்சிகளை அறுத்துப் பார்க்க மனம் வராது. நான் தான் சோதனைச் சாலைகளில் அவைகளை அறுத்துக் கொடுத்து அவனுக்கு உதவுவேன். பிற்காலத்தில் அவன் டாக்டருக்குப் படிக்கும் போது அவனைச் சந்தித்தபோது "எப்படிடா பொணத்தை அறுத்து, அப்புறம் ஆபரேஷன் எல்லாம் செய்ய போற என நான் ஆச்சர்யத்துடன் கேட்டபோது'' "போடா டாக்டர்ன்னா ஆபரேஷன் மட்டும் தானா? நான் மருத்துவம் சார்ந்த படிப்பு மட்டும் நான் படிக்கப்போறேன். அறுவை சிகிச்சைத் துறை எனக்கு ஒத்து வராது'' என கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அப்படிப்பட்டவன் இன்று எம்.எஸ். என பட்ட மேற்படிப்பு அறுவை சிகிச்சை பிரிவிலேயேபெற்றுள்ளான் என்றால் எனக்கு சற்று ஆச்சர்யம் ஏற்படத்தானே செய்யும். ஆட்சியர் அலுவலகத்தின் வேலை முடித்துக் கொண்டு திரும்பும் போது மணி இரண்டிற்கு மேல் ஆகிவிட்டது. அவசர அவசரமாக மதிய உணவினை முடித்துவிட்டு பேருந்து நிலையம் திரும்பினேன். பேருந்து திருமருகலை அடைந்த போது மாலை மூன்று மூன்றரையிருக்கும். மருத்துவப்பணியில் உள்ளவர்கள் சற்று ஓய்வெடுக்கும் நேரம் அது. ஆனால் அதன் பின் பணிமிகும், அதனால் விரிவாக பேச இயலாதே. எனவே தொல்லைப்படுத்துவது என்ற முடிவுடன் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த பணியாளரிடம் நான் யார் என் செய்தியினைச் சொன்னேன். உள்ளே சென்று திரும்பிய பணியாளர் என்னை மருத்துவரின் ஆலோசனை அறையில் அமரச் செய்தார். தாகத்துக்கு அருந்த குளிர்பானமும் கொடுத்தார்.

சிறியதாகவும், கச்சிதமாகவும், அந்த அறை காணப்பட்டது. அறையில் மெலிதாக "டெட்டால்' நெடி அடித்தது. மேசையின் மீது மருத்துவர்களுக்கான உபகரணங்கள் காணப்பட்டது. மேசையின் மீது அழகுப் பொருட்கள் போல ஒன்றிரண்டு காணப்பட்டாலும் அவற்றில் ஒன்று வித்தியாசமானதாக இருந்தது. பூமியிலிருந்து முளைத்து மேலேழும் கை போன்ற ஒரு பித்தளைச் சிற்பம் எடைதாங்கி வடிவில் இருந்தது. சற்று வித்தியாசமான அந்த "கை' வடிவினை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வழவழப்பான பித்தளையில் ரேகைகள் கூட சொர சொரப்பாக செதுக்கப்பட்டிருந்தது. அதனை வியத்து கொண்டிருந்தபோது உட்புறக் கதவொன்றினைத் திறந்து கொண்டு சங்கரன் உள்ளே நுழைந்தான்.

"ஏய் வாடா எப்டிடா இருக்க! இத்தனை வருஷம் கழிச்சுத்தான் என்னை உனக்கு ஞாபகம் வந்துச்சா என்றான் ஆர்வத்துடன் என் கைகளைப்பற்றியவாறே. எனக்கு அவன் என்னை மறக்கவில்லை என்பதுடன் "டா' நெருக்கமும் திரும்ப இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு அரை மணி நேரம் பழைய விஷயங்களை அசை போட்டு அலசிக் கொண்டிருந்தோம்.

பிறகு மெல்ல என் சந்தேகத்தைக் கேட்க ஆரம்பித்தேன். சரி உனக்குத் தான் "ஆபரேஷன்' துறையில் ஆர்வமே இல்லன்று சொன்னியே. இப்ப எப்டி திடீர்னு "எம்.எஸ்'ன்னு படிச்சிருக்கே. முதல்ல பாத்தப்போ எனக்கே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு இது நம்ம சங்கரன் தானான்னு.

அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான் மேசையின் மீது இருந்த அந்த பித்தளைக் கை சிற்பத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சற்று பெருமூச்சுடன் "எனக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு'' என்றான். மனைவி, குடும்பம், பணம் இப்படி ஏதாவது நெருக்குதலால் இந்த மாற்றம் ஏற்பட்டதா? என்றேன் அவன் இல்லை என்று தலையசைத்தான்.

இப்போது அவன் கைகள் அந்த பித்தளைக் கை சிற்பத்தை எடுத்து தடவ ஆரம்பித்து "அது ஒரு பெரிய கத கேக்குறியா?'' “உனக்குத்தான் கதை, இலக்கியம், எழுதுறதுல ரொம்ப ஆர்வமாச்சே. உனக்கு கூட இதுல ஒரு கரு கிடைக்கலாம்''.

நான் ஏதும் பேசாமல் பொறுமையுடன் காத்திருந்தேன்.

என் வீட்டுக்கு பின்னாடி ஆறு இருக்கு, அதுக்கு பின்னாடி பார்த்தா நிறைய குடிசை வீடுகள் தெரியும்.

தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்பு அது. அந்த ஊர் மக்கள் ரொம்ப நல்லவங்க. எனக்கு எல்லா உதவியும், வேலையும் செஞ்சு கொடுக்கறவங்க. நான் இந்த வீட்டையும், கிளினிக்கையும் கட்டுறதுக்கு அவங்க ரொம்ப உதவியா இருந்தாங்க.

அங்கே கோவிந்தன்னு ஒரு தாத்தா இருந்தாரு. அவருக்கு குரங்கு கோவிந்தன்னு பட்டப்பேரு. ஏன் தெரியுமா சின்ன வயசுலே அனாயாசமா தென்ன மரத்துல ஏறி தேங்கா பறிப்பாராம். பாவம் ரொம்ப வயசானவரு. கட்டிக்க வேட்டியும், கைல இருக்குற கம்பையும் தவிர அவருக்கு ஏதும் கிடையாது. அவரோட முதல் பெண்டாட்டி சின்ன வயசுல செத்துப் போயிருச்சாம். இவரு இரண்டாம் தாரமா ஒரு புள்ளையோட இருந்த ஒரு விதவையை சேர்த்துக்கிட்டாராம். அந்தம்மா இவர விட கொஞ்சம் இளமை. அதனால வயசானப்புறம் இவர அவ்வளவா கவனிக்கிறது இல்ல. பழைய முதலாளிகளை தேடி தினமும் காலைல கிளம்பறது. எந்த முதலாளி வீட்ல கால் நிக்குதோ அங்கத்தான் அன்னிக்கு சாப்பாடு. அது பழையதோ, பதுசோ அவருக்கு கவலையில்லை. அவரு மகன்னு இருக்கிறவன் அவரப்பற்றி சுத்தமா கவலப்படுறதும் இல்ல காசு பணம் கொடுக்கறதும் இல்ல.

நான் எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு முதல்ல இங்க வந்து கிளினிக் ஆரம்பிச்சேன். எனக்கு எப்படியோ இவர் பழக்கம் ஆயிட்டாரு. அப்புறமா அடிக்கடி அவரு இங்க வந்துடுவாறு சாப்பாட்டுக்கு. திருமணத்திற்குப் பிறகு என் மனைவியிடமும் ஒட்டிக் கொண்டார். பாவங்க கொரங்கு கோவிந்தன் என அவருக்கு தனியே சாப்பாடு ஒதுக்கி விடுவார். அவருக்கு பசிக்கும் போதெல்லாம் சந்து வழியாக நுழைந்து ஜன்னலில் முகம் காட்டி குரல் கொடுப்பார்.

ஒரு முறை வேளாங்கண்ணி திருவிழாவுக்கு கோவிந்தனின் மனைவியும், மகனும் சென்று வந்துள்ளனர். கோவிந்தனுக்கு அதெல்லாம் ஆர்வமும் இல்லை. உடலில் அதற்கான வலுவும் இல்லை. ஒரு முறை ஜன்னல் வழியே அய்யா, அம்மா என கேட்ட அவரது குரலியே ஒரு சந்தோசம் ஒளிந்திருந்ததை எண்ணி நானும் என் மனைவியும் எட்டிப்பார்க்க, கையில் கம்புடன் ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த கோவிந்தனின் கம்பைப் பிடித்திருந்த கை விரலில் பளபளப்புடன் மின்னியது ஒரு மோதிரம். என் மனைவி கிண்டல் செய்யும் முகமாக " என்ன கோவிந்தா கையில மோதிரமெல்லாம் போட்ருக்க, யார் வாங்கி கொடுத்தாங்க?''

கோவிந்தனுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. "ஐய்யய்யோ போங் கம்மா எம் பொண்டாட்டியும் மவனும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு போயிருக்காங்க. அங்க எனக்காக இந்த மோதிரத்த வாங்கிட்டு வந்துருக்காங்க'' என்றார். நீண்ட நாட்கள் கழித்து மகனும், மனைவியும் தன் உறவை அங்கீகரித்து விட்ட மகிழ்ச்சியில் கோவிந்து அந்த மோதிரத்தை அணிந்திதிருப்பதாக எனக்குப்பட்டது. ஆனால் கூடிய விரைவில் அந்த மோதிரமே அவரது உயிருக்கு எமனாகப் போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. =

ஓரிராண்டு நாட்களுக்குப் பின்னர் ஜன்னலருகே அய்யா அம்மா என்ற கோவிந்தனின் அழைப்புக்குரல் கேட்டது. ஆனால் அந்தக் குரலில் முன்னர் இருந்த மகிழ்ச்சி இழை தென்படவில்லை. மாறாக வேதனையின் கீற்று தென்பட்டது.

ஜன்னலை எட்டிப்பார்த்த போது வேதனை நிறைந்த முகத்துடன் கோவிந்தன் நின்றிருந்தார். "என்னை ஆச்சு கோவிந்தன்'' என்றேன். அப்போது தான் கையை கவனித்தேன். வலது கைக்கு பதிலாக இடது கையால் கம்பினைப் பற்றி நின்று கொண்டிருந்தார். வலது கை சற்று வீங்கிக் காணப்பட்டது. கோவிந்தன் வேதனையுடன் “ஐயா கீத்து மொடையறப்ப ஈர்க்குச்சு மோதிர விரல்ல ஏறிருச்சு அதாங்க வீங்கி வலிக்குதுங்க''. கோவிந்தன் முன்னாடி வாங்க கிளினிக்கில் வைத்து ஊசி போட்டு மருந்து தருகிறேன் என்றேன்.

"கிளினிக்கில் வைத்து கையைப் பரிசோதித்த போது குச்சி குத்தி மூன்று நான்கு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். மோதிரம் அணிந்த விரல் வீங்கி புரையோட ஆரம்பித்திருந்தது. கை முழுவதுமே சற்று வீங்கியிருந்தது.''

டி.டி. ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து "கோவிந்தா உங்க மோதிர விரல் ரொம்ப வீங்கியிருக்கு, மோதிரம் வேற விரல்ல இருக்குது, அத கழட்டிப் பார்த்தேன் கழட்ட முடியல. முதல்ல அத கழட்டியாகனும். என்னால முடியல'' நீங்க போய் அதாவது நகை செய்யுற ஆசாரிகிட்ட போய் மோதிரத்தை வெட்டி, எடுத்துக்குங்க இல்லைன்னா விரல் அழுக ஆரம்பிச்சுடும்.

படிச்சு படிச்சு சொல்லியும் புண்ணியமில்ல. அழைத்துச்செல்ல ஆள் இல்லாமல் மேலும் இரண்டு நாட்கள்,வீட்டிலேயே கிடந்த மீண்டும் பலவீனமான குரலில் ஜன்னலருகே தோன்றினார் கோவிந்தன்.

கை நிலமை மேலும் மோசமா கியிருந்தது. விரலும் கறுத்தப் போக ஆரம்பித்திருந்தது. கேங்கிரியன் ஆரம்பமாகிவிட்டது. இனி தாமதித்தால் உயிருக்கே ஆபத்து என்பதால் என் னுடன் துணைக்கு இருக்கும் பையனை அனுப்பி நகை செய்யும் பத்தர் வீட்டில் கொண்டு போய் மோதிரத்தை வெட்டி எடுத்து விடும்படி கூறினேன்.

சற்றைக்கெல்லாம் திரும்பிய பையன், "நம்ப பத்தர் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டார் சார்,கோவிந்தனோட மோதிரத்தை கழட்ட முடியல. கை ரொம்ப வீங்கிடுச்சுங்க, அதனால வீட்டு கொண்டு விட்டுட்டு வந்தேன்''.

மேலும் இரண்டு நாட்கள் கழித்து ஜன்னல் ஒம் தீனமாய் கோவிந்தனின் குரல். "ஐயா என் கைய பாருங்கய்யா'' இப்போது விரல் ரத்த ஓட்டம் இழந்து அழுகி விரல் நுனித் திசுக்கள் இழந்து எலும்பு வெளியே தெரிந்தது. அதிர்ந்து போனேன். இனி அறுவை மருத்துவம் தான் ஒரே வழி. அழுகிய மோதிர விரலை ஆபரேசன் செய்து (வெட்டி எடுக்க வேண்டும்) விட வேண்டியது தான். அதனைச் செய்ய வேண்டுமெனில் எப்படியும் கோவிந்தன் திருவாரூரோ, நாகப்பட்டினமோ செல்ல வேண்டியது அவசியம். நான் கோவிந்தனின் மனைவிகளையும், மகனையும் அழைத்துப் பேசினேன். அவர்கள் இனி செலவு செய்ய தங்களால் இயலாது என்றனர். எதுக்கும் பாக்குறோம். என்றவாறு ஐயா, ஐயா என அழைத்த கோவிந்தனை அதட்டிக் கொண்டே அழைத்துச் சென்றனர்.

இரண்டு நாட்கள் கழித்து கொல்லைப்புறத்தில் பறையோசை கேட்டது மனதில் பெரும் பாரம் ஏறியது. எதற்கும் சேப்பானை அழைத்துக் கேட்டேன். "நம்ம கோவிந்தன் தாங்க.., கைல மோதிரத்த வாங்கி என்னிக்கு போட்டானோ அன்னிக்கு அவனச்சனி பிடிச்சது. கையெல்லாம் வீங்கி அழுகி ஜன்னிக்கண்டு நேத்து ராத்திரி உயிரை உட்டுட்டாருங்க'' என்றான் வெற்றிலை பாக்கை குதப்பியவாறே.

அன்றிலிருந்து பல நாட்கள் தூக்கத்தில் எனக்கு எலும்புகள் வெளித் தெரியும் கை ஒன்று வந்து வந்து மிரட்டியது. எனது மருத்துவ இயலாமை என்னை மிகவும் சிறுமைப்படுத்தியது. கனவில் வந்த கோவிந்தனின் கை என் வாழ்வில் முக்கிய முடிவு எடுக்க காரணமாயிற்று.

சங்கரன் அந்த கை சிற்பத்தின் மீது கைகளை தடவியவாறே தன் கதையை முடித்தான். அவன் கதையில் ஒரு கரு அல்ல ஓராயிரம் கருக்கள் இருப்பதாக எனக்குப் பட்டது
Pin It