இறுகத் தைப்போம்

பாட்டியின் அன்பை நிகர்த்துக் கனியும்
முதிய நாளின் மடியில் அமர்ந்து
தினமும் கதைகள் பேசினோம்.

கோடி இசைகளின் விதைகளை
பொதிந்த
ஆதி இசைத் தட்டெனும் பறையைப் பற்றி
இசைப்பவனின் உடலாய் இசையும்
அதன் துள்ளலைப் பற்றி
நாம் பேசினோம்

உடலைக் காதல் செய்யத் தைத்த
தோல் ஆடைகள் குறித்து
காலணிகள் குறித்து
பயிர்கள் அருந்தி வளர
மண்ணின் நெஞ்சுக்குள்ளிருந்து
நீரன்பை அள்ளித் தருவதற்குச் செய்த
தோல் கைகளைக் குறித்து
எண்ணிக் கழித்தோம்

பாம்பென
பின்னிப் பின்னி செய்த காதலை
ஊண் தேன் சொட்டச் சொட்ட
தின்றச் சோற்றினை
சொல்லிச் சொல்லி வென்ற சமரினை...

நம் உரையாடலின் நடுவே
நான் நீ என்று சொற்கள் விழுந்ததும்
இருட்டு தனது வேட்டை வலை வீசி
நம்மைப் பிடித்தது.

புறக்கணிக்கப்பட்ட நமது
அன்பின் சொற்கள்
மனதின் வாசலருகே
கால் வலிக்க நிற்கின்றன.

தடைகளை மீறி
உட்பிரிவுகளை கடந்து
நீயும் நானும் நாமென்று
மீண்டும் எப்போது உணர்வோம்?

பிளவுற்றிருக்கும் நமது காயத்தில்
புரையோடும் படி.

கசடுகள் சேர்கின்றன
அழுகி நாறுவதற்குள்
அன்பின் பசை பூசி
தோல் தைக்கும் ஊசியால்
நம்மை இறுகத் தைப்போம் வா...


விடுதலை

அடைபட்ட தொட்டிகள் மீது
அத்தனை பெருமையுடன்
பச்சை அடர்ந்து பச்சை தணிந்து
வண்ணங்களைப் புனைந்து கொள்கின்றன.
சூரியன் தொடாமல்
கான்கிரீட் கூடுகளுக்குள் குரோட்டான்கள்.

கிளைகள் கலைக்கும் காற்றில்
சுதந்திரம் அலையும்
நேசக்கை குலுக்க நீளும் தளிர்கள்
வேர்களுக்கு மட்டம்
விலங்கிட்டு
தொட்டிசிறைகள்

எருக்குழி மேட்டிலும் கரம்பு வெளிகளிலும்
சில குப்பைச் செடிகள்
ஒருத்தி
கிள்ளிப் போகிறாள்
கீரையாய்
மூலிகையாயும் ஆகும்.

இல்லையென்றாலுமென்ன
வெயில் பட்டு
காற்றில் அலைந்து
வண்ணத்துப் பூச்சிகளுக்காய் பூத்துக்
காய்ந்து உதிர்ந்தும் போகும்
மக்கி எருவும் ஆகும்.
Pin It