மதத்தின் பெயரால் மானுடத்தையே மடமைக்குள்ளாக்கி, உண்டு கொழுக்கும் மதவாதிகள் ‘உண்மை’ என்ற ஒன்றை மறந்து விடுகிறார்கள். யாகங்கள், ஜெபக்கூட்டங்கள் என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் இந்த வல்லமை மிக்க ‘தேவதூதர்கள்’ தங்களது புரட்டுச் செயல்களாலும், சொற்களாலுமே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ஆனாலும் ‘இவர்களின் அருளாசியால் தங்களின் நிலை மாறிவிடாதா’ என்ற சபலத்தோடு சிறுபிள்ளைத்தனமாய் மண்டியிட்டுக் கிடக்கிறது மனிதக் கூட்டத்தில் பெரும்பகுதி. மக்களை மாக்களாக்கும் இந்த மதவாதிகளை இந்த மண்ணிலிருந்து எங்ஙனம் துரத்தப்போகிறோம்?

பெரியார் என்ற வடிவில் ஈரோட்டிலிருந்து தோன்றிய பேரொளியின் காரணமாய், மனித நேயச் சிந்தனை சற்றே கிளைத்து எங்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. ‘உங்களில் எவனொருவன் யோக்கியவானாய் இருக்கிறானோ அவன் இந்தப் பெண்ணின் மீது முதல் கல்லை எறியக்கடவது’ என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இயேசு என்ற மாமனிதன் மனிதத்திற்கு ஆதரவாய்த் தனது குரலை ஓங்கி ஒலித்தான். ‘உன்னைப் போல் பிறரையும் நேசி’ என்பதற்கும், ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பித்து, சமூக ஒடுக்குமுறைக்கு சட்டமே இயற்றிய இந்து மதத்தின் அடிநாதமான இறைகோட்பாட்டைக் கண்டிக்கின்ற துணிச்சல் பெரியாருக்கு இருந்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாய் தமிழக மண்ணில் வேர்ப்பிடித்த பெரியாரியல், இன்றைக்குப் பல அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் சந்தைப் பொருளாய், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கு சொத்துச் சேர்க்கும் காரணியாய்ப் போய் நிற்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

Jesus christ
போலி நாத்திகர்களுக்கு, பெரியார் வெறும் அறுபதாண்டு கால வரலாற்றிலேயே வியாபாரமாய் மாறிப்போயிருக்கும்போது, போலிக் கிறித்துவ மதவாதிகளுக்கு இரண்டாயிரம் ஆண்டு கால இயேசு மட்டும் எம்மாத்திரம். இயேசு அழைக்கிறாரா? இல்லை... இல்லை... தானும், தனது குடும்பமும் ஏகபோகமாய் வாழ வேண்டும் என்பதற்காக, வினயமற்ற கிறித்துவர்களை தினகரன் அழைக்கிறார். அதுதான் உண்மை. கண் முன்னே விபத்தில் தனது மகளைப் பறிகொடுத்த தினகரன், ‘முடவன் நடக்கிறான்’, ‘குருடன் பார்க்கிறான்’, ‘செவிடன் கேட்கிறான்’, ‘ஊமை பேசுகிறான்’ என்று பொய் சொல்லி இயேசு அழைக்கிறார் என்று தான் அழைக்கும் கூட்டத்திற்கு மக்களை வரவழைத்து மாயாஜாலம் காட்டுகிறார். எப்படிப்பட்ட முரண்பாடு இது. தனது மருத்துவத்திற்காக அமெரிக்கப் புருக்ளீன் மருத்துவமனைக்குச் செல்லும் தினகரனைச் சுகப்படுத்த இயேசு முன் வரவில்லையே ஏன்? நாத்திகம் இராமசாமி தினகரனின் புரட்டுகளைப் புட்டு புட்டு வைக்கிறார். கிறித்துவ மார்க்கத்தில்நம்பிக்கையுள்ள ஒவ்வொரு கிறித்துவனும் படிக்க வேண்டிய நூல் இது.

‘மதங்களால் மனித சமுதாயம் பிளவு பட்டு, பேதப்பட்டு மனிதனை மனிதன் வெறுத்தொதுக்கி வாழ்ந்ததே தவிர, மனித ஒற்றுமைக்கு மதம் எதுவுமே செய்யவில்லை - பகையாகவே இருக்கிறது! மதங்கள் தான் மனித குலத்துக்குப் பகையாக உள்ளனவே தவிர, அந்த மதங்கள் சொன்ன சில பேருருவாளர்களும், அவர்கள் சொன்ன பல கருத்துக்களும் ஏற்புடையதும், பின்பற்றத்தக்கதுமே ஆகும்’ எனச் சொல்கின்ற துணிச்சல் பெரியாரியல்வாதிகளுக்கே உரித்தது. அதுவும் நாத்திகம் இராமசாமி போன்ற பழுத்த நாத்திகர்களுக்கே உரித்ததாகும்.

தினகரன் குடும்பமே நிகழ்த்தும் மோடி வித்தைகளால்தானா தமிழகத்தில் கிறித்துவம் வளர்ந்தது? ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடம் கிறித்துவ மிஷனரிகள் காட்டிய கனிவு, மனித நேய அணுகுமுறை, பசியையும், அறியாமையையும் அகற்றிய மாண்பிற்குரிய செயல்களால்தானே சமதர்மத்தைப் போதித்த கிறித்துவம் வளர்ந்தது.

புளுகைப் போதிக்கும் வைதீக நெறியை எதிர்த்து புத்தம் தோன்றியது. காலப்போக்கில் அதையும் இந்து மதம் உள்வாங்கிக் கொண்டு தன்னுள் செரித்துக் கொண்டு நிற்கிறது என்பது வரலாற்று உண்மை. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதவிக்கு வந்த போப் ஆண்டவரின் பணம் பறிக்கும் மோசடியை அறிந்து மார்ட்டின் லூதர் என்ற பாதிரியால் தோற்றுவிக்கப்பட்ட புராட்டசுடண்ட் (எதிர்ப்பாளர்) என்ற அமைப்பும், தற்போது கிறித்துவத்தின் ஒரு பகுதியாகத் தோற்றமளிக்கிறது. மதத்தைக் காசு பார்க்கும் காரணியாக ஆக்கி, தினகரன் போன்ற கும்பல்கள் சொத்துச் சேர்க்க வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்தாந்தமான கிறித்துவம் காரணமாய் நிற்கிறதே எனும்போது, வருத்தம் மேலிடாமலில்லை.

மனித குலத்தை உய்விக்க வந்த பெரும் மகான் இயேசுவின் பெயரால் நடக்கும் இந்தச் செயல்களுக்கு மத்தேயு 23 முதல் 26 வரையுள்ள வேத வசனங்களே மிகப் பெரும் பதிலாக இருக்கும். கிறித்துவர்களே வேதத்தின் பொருளறிந்து படியுங்கள், இயேசுவைக் காட்டி பணம் பண்ணும் கும்பலை விரட்டுங்கள். இல்லாவிடில் தெருவோரத்தில் ஜாலவித்தை காட்டும் மந்திரக்காரர்களை உள்ளடக்கிய மதமாக தினகரன் போன்ற ஆட்கள் கிறித்துவத்தை மாற்றிவிடுவார்கள் என்று அற்புதமாய் எச்சரிக்கிறார் நூலாசிரியர்.

‘மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜயத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்’ (மத்தேயு 19-24)

இயேசு என்ற புனிதர் சாமானியர்களுக்காகப் பாடுபட்டார், அவர்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தார், ஏழைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் தினகரன் போன்ற மோசடிப்பேர்வழிகள் அதே மக்களின் உழைப்புப் பொருளை பிரசங்கம் என்ற பெயரில் களவாடுகிறார்கள்.

இயேசுவின் நற்போதனைகளைப் பிரச்சாரம் செய்து, அவர்களை நல்ல மனிதர்களாக்குவதை விட்டு, மேலும் மேலும் அவர்களை அறியாமை இருளில் வீழ்த்த, அற்புதங்களைச் சொல்லி, தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு வகை செய்து கொண்டிருக்கும் மோசக்காரர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் இறை நம்பிக்கையுள்ள, நம்பிக்கையற்ற அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

நூல் : இயேசு அழைக்கிறார்
பக்கங்கள் : 96 விலை: ரூ.20
ஆசிரியர் : நாத்திகம் பி.இராமசாமி
97/55, என்.எஸ்.கிருஷ்ணன் சாலை,
கோடம்பாக்கம், சென்னை- 24
Pin It