* கதை உலகிற்கு கிடைத்த வரம். உலகத்தில் கதை பிறந்த முதல் கணத்திலிருந்து, கதைகள் கோடானகோடி உலகங்களை உருவாக்கிய வண்ணம் உள்ளன. உலகின் ஒவ்வொரு அசைவிலும் கதையின் சாயல் கவிழ்ந்த சொல்லுதல் உள்ளது. ஒரு கதையை சொல்லும் போதும், கேட்கும் போதும் முகம் மலர்கிறது. அகம் தனது துருவை உதிர்த்துக் கொண்டு இன்னும் சில மடிப்புகள் விரிந்து கொடுக்கிறது.

* பல திசைகளிலிருந்து சேகரிக்கப்பட்டு பின்பு குழந்தைகள் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கதைகள் இவை. குழந்தைகளின் மொழி, மன உலகம், சொல்லுதல் இவற்றை சிரத்தையுடன் அறிந்து உருவாக்கப்பட்டவை. அவர்களுடன் அமர்ந்து மீண்டும் மீண்டும் வாசித்து, திருத்தி மெருகேற்றபட்டவை. இவை குழந்தைகள் வாசிப்புக்காக, கூடவே உங்களுக்காகவும்.....

* அசட்டுத்தனங்களை மூளைகளில் நிரப்பும் அபாயங்களுக்கு எதிராக குழந்தைகளின் கற்பனை உலகங்களை வளர்த்தெடுக்க நாம் கட்டும் சிறு பாத்தி.

* உலகம் முழுவதும் கதை சொல்லும் மரபு என்னும் தேன்பாகின் கோடானகோடி துளிகளின் ஒரு சொட்டு உங்களுக்காக..... பாருங்கள் ஒரு கதையை நீங்கள் வாசித்து முடிக்கும் போது உங்களுக்குள் ஒரு பூ மலரும். ஒவ்வொரு இதழிலும் இனி தேன்பாகின் சொட்டுக்கள்.....


ஒரு பூனை இருந்தது. அது எலி வேட்டையில் கெட்டிக்காரப் பூனை. தினமும் பூனைக்கு எலிகள் கிடைத்தன. வயிறு முட்டத் தின்றது.

பாவம் எலிகள்!

“சர், நம் இடத்தை மாத்தலாம்” என்று முடிவு செய்தன. வீட்டுக்கூரை விட்டங்களில் ஏறின. அங்கே தங்கள் மாட மாளிகையைக் கட்டின. அது மட்டுமா! பூனை எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்று கண் முழித்து காவல் காத்தன.

‘மியாவ்’ என்று சத்தம் வரும். கண் சிமிட்டு நேரம்தான். எலிகள் சிட்டாகப் பறந்து விடும். ஐய்யோ பாவம்! பூனைக்கு எலிகள் கிடைக்கவில்லை.

பூனை என்ன பண்ணும்?

பூனை புல் திங்காதே.

பட்டினி கிடந்தது. இப்படி எத்தனை நாள் பட்டினி கிடப்பது?

பூனை ஒரு தந்திரம் செய்தது. செத்ததுபோல படுத்துக் கிடந்தது.

எலிகள் கூட்டத்தில் ஒரு கிழட்டு எலி. அது நல்ல அனுபவசாலி. அந்த கிழட்டு எலியிடம் குட்டி எலிகள் ஓடி வந்தன.

“பூனை செத்து விட்டது. இனி ஜாலிதான்” என்று குசியாகக் கத்தின.

பப்பர பப்பர பப்பா...
ஊ... ஊ... ஒய்...
டும்டும்டும் என்று பாட்டுப் பாடின.

அங்கும் இங்கும் ஓடின. செத்த பூனையைத் தொட்டுப் பார்க்க துடித்தன.

கிழட்டு எலி எட்டிப் பார்த்தது. பூனை மல்லாக்க கிடந்தது. கண்கள் மூடி சவமாகக் கிடந்தது. கிழட்டு எலிக்கு சந்தேகம்.

“பிள்ளைகளே இதில் ஏதோ சூது இருக்கு” என்று குட்டி எலிகளை தடுத்து நிப்பாட்டியது. கிழட்டு எலி ஒரு அடி எடுத்து வைத்தது. பின்பு நின்றது. அடுத்து ஒரு அடி. நின்றது. எலிகள் கூட்டம் சிரித்தது.

“பெரிய தொடை நடுங்கி. பயந்தே செத்து விடும். ஏ புல்தடுக்கி பயில்வான்” என்று எலிகள் கூப்பாடு போட்டன.

பூனை மெல்ல ஒரு கண்ணை திறந்து பார்த்தது. பக்கத்தில் எலிகள் கூட்டம். நாவில் எச்சில் ஊறியது.

கிழட்டு எலி ஒரு தந்திரம் செய்தது. “செத்த பூனையின் கண்கள் திறந்துதான் இருக்கும்”

கிழட்டு எலி சத்தமாகச் சொன்னது. இது பூனை காதில் விழுந்தது.

அய்யே! கண்ணை மூடுவதா! திறப்பதா! பூனை குழம்பி விட்டது. ‘படக்’ என்று இரண்டு கண்ணையும் திறந்தது. அவ்வளவுதான். பூனையின் சூழ்ச்சி புரிந்து விட்டது. எலிகள் உசார் ஆகிவிட்டன. ஒரே பாய்ச்சல்தான். விட்டத்தில் இருந்தன.

கிழட்டு எலி சிரித்தது. பூனை ஏமாந்தது. கண்ணை உருட்டி முறைத்தது.

“ஏய் முட்டக் கண்ணு
உன் வாயில மண்ணு...
டுமுக்கு டப்பா... டுமுக்கு டப்பா...”

எலிகள் தாளம் தட்டின.
Pin It