சூலை 31 அன்று தமிழக காங்கிரசு சார்பில் கக்கன் அவர்களுக்கு மதுரையில் நூற்றாண்டு விழா நடை பெற்றது. அவ்விழாவில் கக்கனுக்கோ அவர் பிறந்த சமூகத்திற்கோ எந்த அறிவிப்பும் செய்யவில்லை. மாறாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே நடத்தப்பட்ட நூற்றாண்டு விழாவாக நடந்து முடிந்தது. கக்கனை குறிப்பிடும் பொழுது எளிமையானவர் என சொல்வார்கள். ஆனால் விழா விற்கு வைத்த வரவேற்பு தட்டிகள் ஆளுங் கட்சியையே விஞ்சும் அளவுக்கு வைக்கப்பட்டது. வரவேற்பு தட்டியில் கூட சாதி அரசியல் பார்த்தனர் காங்கிரசுகாரர்கள்.

kakkanமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எஸ்.கே. ராசேந்திரன் அவருடைய குழுத் தலைவர் வாசனை வரவேற்று வைத்த தட்டியில் "கக்கன் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும்' என்று போடாமல், "மதுரை மாநகருக்கு வருகை தரும் வாசன் அவர்களே' என வரவேற்றிருந்தார். ஒரு வரவேற்பு தட்டியில் கூட தாழ்த்தப்பட்டவர் பெயர் வந்து விடக் கூடாது என கவனமாகப் பார்த்துக் கொள்ளும் காங்கிரசார் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னல்களுக்கு செவிமடுப்பார்கள் என்பது விளங்கவில்லை. இப்பொழுதுதான் கக்கன் நினைவுக்கு வந்தாரா, அரசு மருத்துவமனையிலே படுக்கை கூட இல்லாமல் உயிருக்குப் போராடினாரே அப்பொழுது எங்கே போனார்கள். கக்கன் பிறந்த ஊரின் அருகிலேயே (மேல வளவுக்கும் தும்பைப் பட்டிக்கும் 6 கி.மீட்டர்தான்) மேலவளவில் 6 பேரை படுகொலை செய்தார்களே அப்பொழுது இவர்கள் ஆதிக்க சாதியினரிடம் மண்டியிட்டுக் கிடந்தார்களா?

கக்கன் அதிகாரத்தில் இருக்கும் பொழுது காங்கிரசார் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்ய விடாமல் கட்டிப் போட்டார்கள். இப்பொழுது கூட விழா நடத்துகிற காங்கிரசு காரர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ் நிலை தெரியுமா? எத்தனை படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் சேரியிலே முடங்கிக் கிடக்கிறார்கள். முறையான சுகாதார வசதிகள் இல்லாமல் எவ்வளவு பேர் இறக்கிறார்கள். மேல் படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாமல் எத்தனையோ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி அலைகிறார்கள் என்பது காங்கிர சார்க்குத் தெரியுமா? இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் திருமாவளவன் பேன்ட் சர்ட் போட்டு இன் செய்து காரிலே வலம் வருகிறார் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களும் நல்ல வசதியாகவே உள்ளனர் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை திருமாளவனிடம் கொடுத்து விடுகிறோம். அவர் பார்த்துக் கொள்வார் என முடிவு செய்து கொள்கிறார்கள்.

ஆக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம் என கூறும் திருமாவளவனாக இருந்தாலும் கக்கனை எப்படி இந்த ஆதிக்க முதலாளிய கட்சி அவரின் உழைப்பை சுரண்டி கடைசியில் தூக்கி எறிந்ததோ அதுபோலவே இறுதியில் இவரையும் தூக்கி எறியும். ஆகவே கக்கன் எளிமையானவர், தூய்மையானவர் என கக்கன் விட்டுச் சென்ற வழியைப் பின்பற்ற முடியாது. மாறாக கக்கன் பயணித்த வழிக்கு எதிர் வழியைப் பின்பற்ற வேண்டும். ஆம். எந்த இந்தியாவுக்காக கக்கன் உழைத்தாரோ, அந்த இந்தியாவைஉடைத்து நொறுக்கு வதற்கான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கக்கனின் உழைப்பை சுரண்டிய காங்கிரசு கட்சியை வேரோடு அகற்ற வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கெல்லாம் காங்கிரசின் அயோக்கியத்தனத்தை தன் மூலம் வெளிச்சம்போட்டுக் காட்டிய கக்கன் அவர்களுக்கு நாமும் “கக்கன் புகழ் வெல்லட்டும்'' என போற்றுவோம்.

Pin It