. சிறப்பீனும் செல்வமு மீனும் அறத்தின் ஊஉங்கு

ஆக்கமும் எவனோ உயிர்க்கு?                  குறள் 31

கடந்த மூன்று மாதங்களாக "போலி மருந்து' "போலி உணவு', "காலாவதியான மருந்து', "காலாவதியான உணவு', "போலி மருத்துவம்', "இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல்' தொடர்பான பதிவுகள் இல்லாத தினசரிகளையே பார்க்க முடியாது என்கிற அளவுக்கு அன்றாடம் அடிபடும் செய்திகளாக இவை உள்ளன. மற்ற செய்திகளைப் போல் இவற்றையும் படித்து "கலி முத்திடுச்சி' என அங்கலாய்த்துக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்ல முடியாதவாறு நமது உடல் நலனோடு உறவு கொண்டதாய் இச் செய்திகள் இருப்பதே நெடிய பரபரப்புக்குக் காரணம்.

"மீனாட்சி சுந்தரம் வீட்டில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து ஆவணங்கள்', "கேத்தன் தேசாயிடம் ஒன்றரை டன் தங்கம்', "காலாவதி உணவு குடோன் அதிபர் துரைப்பாண்டி கோடிகளில் பதுக்கல்' என்றெல்லாம் வருகிற செய்திகள் கண்டு தெருக்கோடிகளில் வாழும் நாம் பதறிப் போகிறோம். மத்திய மாநில அரசுகளோ சம்பந்தப்பட்ட ஓரிருவரை சிறையிலடைத்து விட்டு எல்லாமும் சரிப்படுத்தப்பட்டு விட்டது போல பம்மாத்து செய்கின்றன. உண்மையில் இது இன்று நேற்றைய பிரச்சனையல்ல. ஒன்றிரண்டு கைதுகளில் அடக்கப்பட்டு விடக் கூடியதுமல்ல.

இதனை இரு வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று அடிப்படைப் பிரச்சினை. மற்றது அன்றாடப் பிரச்சினை. போலி காலாவதி உணவு மற்றும் மருந்துகளின் அடிப்படைப் பிரச்சினையானது நமது அயலக மோகத்திலிருந்து தொடங்குகிறது. வெள்ளைக் காரர்களிடமிருந்து விடுதலை பெற்றதாக சொல்லப்படும் இந்த நாட்டில் அவர்கள் போகும்பொழுது எடுத்துச் செல்லாமலே விட்டவைகளில் ஆங்கில மருத்துவமும் அயலக உணவுப் பண்பாடும் அடங்கும். நமது தாயக மருத்துவத்தையும் தாய் மண்ணின் உணவும் பண்பாட் டையும் எப்போது கைகழுவினோமோ அப்போதே மேற்குறிப்பிட்ட ஊழல்கள் கருக் கொள்ளலாயின.

இன்றைக்கு நமது மக்கள் உட்கொள்ளும் மருந்துகளில் 75% அளவிற்கானது அவர்களுக்கு அவசியமே இல்லாமல் மருத்துவர்கள் மருந்துக்கடைகள் மருந்து உற்பத்தியாளர் கள் நலனுக்காக மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. இப்படி ஒரு புள்ளி விபரத்தைத் தருவது நாமல்ல, உலக நாட்டு அரசுகள் அனைத்துக்கும் வழிகாட்டியாய் இருக்கும் உலக சுகாதார நிறுவனம்தான்.

உணவுத் துறையிலோ 99% அளவிலான இன்றைய பயன்பாட்டுப் பொருட்கள் அவசியமில்லாதவை. இத்துறையில் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளதால் வல்லாதிக்கத்தின் பன்னாட்டு நிறுவனங்களது வேட்டைக் களமாக உள்ளது. உடல் நலனுக்குஊறு விளைவிக்கும் இயற்கைக்கு முரணான குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், தீனி வகைகள், அரைத் தயாரிப்பு உணவுகள்... என யாவும் வெகு நாட்களுக்கு சந்தையில் இருப்பு வைக்கவும் நீண்ட தூரம் பயணிக்கவும் ஏதுவான வகையில் எளிதில் கெட்டுப் போகாதவண்ணம் கடும் வேதிப் பொருட்களைக் கொண்டு செயற்கையான உறைகளில் நிரப்பப்பட்டு தயாரிப்புகள் வெளிவரு கின்றன. இவை காலாவதியாகாமலே உடலைக் கெடுக்கக் கூடியவை. காலாவதியானாலோ? நமது பண்பாட்டைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகள் அனைத்துமே கேடு விளைவிக்கும் போலிதான், அதிலும் போலி என்றால்?

இந்த அடிப்படை பிரச்சனைக்கு ஒரே உண்மையான தீர்வு எந்த அரசுகளிடமும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் பாதம் தாங்கிகளான அவர்களது எந்தச் சட்டமும் நடவடிக்கைகளும் இதற்கு தீர்வளித்து விட முடியாது. உண்மையான தீர்வு மக்கள் கையில்தான் உள்ளது. அது வேறொன்றுமல்ல, நமது தாயக மருத்துவத் தையும், தாய் மண்ணின் உணவுப் பண்பாட்டையும் தேவைகளனைத்துக்கும் கைக் கொள்வதென்பதே.

இந்த விடயத்தில் அன்றாடப் பிரச்சினையானது மேலிருந்து கீழ் வரை உள்ளாட்சியிலிருந்து ஒன்றிய அரசுவரை பல நூறு இழைகளால் பின்னப்பட்ட மிகச் சிக்கலான கட்டமைப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள், பல்லாயிரக்கணக்கான முகவர்கள், பல லட்சம் வியாபாரிகளைக் கொண்டது.சட்டமும், சட்ட நடைமுறைகளும், ஒழுங்கு விதிகளும் மட்டுமே இவ்வளவு பெரிய கட்டமைப்பை நெறிப்படுத்தி விட முடியாது. இது பொது நியதியென்றால் எங்கெங்கும் கையூட்டும் ஊழலும் மலிந்த நமது சமூக அமைப்பிலோ சாத்தியமே அற்றது.

மருத்துவத் துறையை எடுத்துக் கொண்டால் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் பெரும்பாலான மருந்துகளை வாங்க முடியாது என்பது சட்ட விதி. போதுமான மருத்துவர்கள் இல்லாததாலும் நான்கில் மூன்று பங்கு மருத்துவம் சார் பணப் புழக்கம் தனியார் மூலம் நடைபெறுவதாலும் மருத்துவர் ஆலோசனை கட்டணம் மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்டதால் பெரும்பாலான நேரங்களில் இல்லாதிருக்கிற காரணத்தி னாலும் மருத்துவர்களும் கமிஷன் தருகிற கம்பெனி களின் தயாரிப்புகளை தயக்கமின்றி பரிந்துரைக்க அவசியமாய் இருக்கிற காரணத்தினாலுமே மீனாட்சி சுந்தரம் போன்ற ஒருவர் உருவாக முடிகிறது. இதில் மீனாட்சி சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் அடைப்பதால் ஊடக பரபரப்புக்கு ஒரு முடிவு வரலாம். இந்த ஊழலுக்கல்ல.

ஏனெனில் இந்த ஊழலில் தரமற்ற மருந்துகளைப் பரிந்துரைத்த மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருந்துத் துறை அலுவலர்கள், இந்த இழிநிலைக்கு மக்களை ஆளாக்கிய அரசமைப்பு ஆகிய யாவருக்கும் சம பங்கு உண்டு. எல்லோரையும் தளைப்படுத்த எங்கே இருக்கிறது சிறைக் கூடம்? யாரிதைச் செய்வது?

உணவுத் துறையைப் பொறுத்தவரை, மாலை நேரங்களில் காய்கறிச்சந்தை நிறைவடைவதற்கு சற்று முன்பாக விற்கப்படும் காயம்பட்ட, கழிக்கப்பட்ட, காய்கறிக் கூறுகளை குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் வாழ்நிலையிலேயே நாட்டின் பெரும் பாலான மக்கள் வெந்ததைத் தின்று விதியை எதிர்நோக்கி யிருக்கிற போது எந்த தர நிர்ணயத்தை இந்த அரசுகளால் வலியுறுத்த முடியும்? துரைப்பாண்டி வழக்கில் கூட காலாவதியான உணவுப் பொருட்களை விற்றவர்கள் ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களைத் தெரிய வருகின்றது. துரைப்பாண்டியை சிறைப்படுத்திய தமிழக அரசு ரிலையன்சை நெருங்க முடியுமா? சாலையோர பிரியாணிக் கடைகளையும், கறி வியாபாரிகளையும் சோதித்துவிட்டு பக்கம் பக்கமாய் பத்திரிகைகளில் செய்தி வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள், நமது சுகாதாரத் துறை அதிகாரிகள். இதுவா நல்வாழ்வுக்கான நடவடிக்கை?

மக்கள் நலனுக்கு உகந்த வகையில் எவ்வளவோ செய்ய வேண்டியது அரசுகளின் கடமையாக உள்ளது. ஆனால் இப்போது நம்மை ஆள்கிற அரசுகளும் அரசமைப்பும் மக்கள் விரோதமானதாக, வல்லாதிக்க பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்கள் நலன் காப்பதாக, ஊழல் மலிந்ததாக உள்ள நிலையில் இதற்கு மேல் எதையும் தானாய்ச் செய்யுமென எதிர்பார்க்க முடியாது. இத்தகையதொரு சூழலில் அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் மக்கள் நலன் பேணும் வகையிலும் பொது சமுதாயம் தன்னார்வ முறையில் முன் வந்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வ தென்பது வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிற வழிகாட்டுதலே ஆகும்.

அந்த வகையில் நாமும் மக்களின் நல்வாழ்வோடு அன்றாடம் தொடர்புடைய உணவு, மருந்து, மருத்துவம்... போன்றவற்றில் அற வணிக நடவடிக்கை களை மேற் கொள்வதும் கண்காணிக்கவுமான பொது ஒழுங்கமைப்பு தொடர்புடைய நுகர்வோர், பொதுநலன் நாடுவோர், மருத்துவர்கள், தயாரிப்பாளர்கள், வணிகர்கள்... என யாவரின் பங்கேற்போடு உருவாக்க லாம். இந்த அமைப்பு அதிகார மையங்களிடையே ஒரு அழுத்தக் குழுவாக இயங்க முடியும். அதுபோல தொடர்புடைய தொழில் மேற்கொள்வோரிடையே அறவணிகத்தை மேற்கொள்ள வலியுறுத்த முடியும். முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அம்பலப் படுத்தவும் பொது விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நேரிய நெறியில் இயங்குவோரை அடையாளப் படுத்தி முன்னிறுத்த இயலும். பொதுமக்களிடையே நலவாழ்வு பற்றிய விழிப்புணர்வையும் உகந்தது எது? ஒவ்வாதது எது? என்கிற வழிகாட்டுதலையும் உருவாக்க முடியும்.

இத்தகைய அமைப்பு அடிப்படையில் ஒரு வல்லாதிக்க எதிர்ப்பு திணை நல இயக்கங்களின் ஒரு பகுதியாகும். இன்றைய உலகமயமாதல் தனியார் மயமாக்கல் தாராளமயமாக்கல் ஒற்றை உலக ஒழுங்கில் நம்மைத் தற்காத்துக் கொள்ள இதுபோன்ற ஏராளமான முயற்சிகள் தேவையாய் இருக்கிறது. இவ்வகையான அமைப்புகள் இப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக உருவாகி வருவது நாம் கவனிக்கத்தக்க நற்செய்தியாகும்.

‘மாற்று நுகர்வோர் கழகம்', ‘மக்கள் தேர்வு கோட்பாடு', ‘அற வணிகவியம்', ‘அற வணிகவில்லை' என்பதெல்லாம் இந்தப் புதிய போக்கின் வெளிப்பாடாக புழக்கத்திலுள்ள சொற் கோவைகள்.இந்த உலகளாவிய போக்கின் போராட்டக் களத்தை நமது தாய் மண்ணிலும் உருவாக்குவதற்கான உரையாடலை துவங்குகிற தருணம் இது.

தாயக மருத்துவம் என்பதென்ன?

உலகின் முதல் மருத்துவமான சித்த மருத்துவமே தமிழர்களின் தாயக மருத்துவம். இது இன்றைக்கு இந்திய மருத்துவங்களில் ஒன்று என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தபோது உருக் கொண்டது.

உலகிலேயே அதிக வகையான பயிர்கள் விளைய ஏதுவான நில நடுக்கோடு தட்ப வெப்ப நிலை நமக்குச் சொந்தமானது. இங்கு விளையக் கூடிய பல்லாயிரக்கணக்கான பயிர்கள் மற்றும் உயிர்களின் மருத்துவ குண பாடத்தை தனது நெடிய வரலாற்றாலும் கூரி நுண்ணறிவாலும், சேகரமாய்க் கொண்டிருக்கிற மாபெரும் அறிவுக் களஞ்சியம் சித்த மருத்துவம்.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களென முழு நலம் வழங்கும் மருத்துவமிது. உணவு சிகிச்சை, ஓகப் பயிற்சி, வர்மம்... போன்றவை இதன் வேர்கள். நமது உடல் தட்ப வெப்ப நிலைக்கும் மரபினத் தன்மைக்கும் ஏற்புடைய மருத்துவம் இது.

தாயக உணவுப் பண்பாடு என்பதென்ன?

தாயக உணவுப் பண்பாடு என்பது நாம் வாழக் கூடிய பகுதியில் நமது தட்ப வெப்ப சூழலுக்கேற்ப நமது மண்ணிலேயே விளைந்த உணவுப் பொருட்களை நமது வட்டார உழைப்புக்கு தேவையான ஆற்றலைத் தரும் வண்ணம் காலம் காலமாக சோதித்து அறியப்பட்ட முறையில் பக்குவப்படுத்தி பயன்படுத்துவதாகும்.

தமிழகச் சூழலில் பெரும்பாலோரின் உடலமைப்பு பித்த தன்மை கொண்டதாகவும் நமது உழைப் பனைத்தும் வெயில் முகமாகவும் இருக்கும் நிலையில் நமது உணவு முறை பயன்பாட்டிலுள்ள பொருட்கள் குளிர்ச்சித் தன்மையும் நீர்ச் சத்தும் கொண்டதாய் இருக்க வேண்டும். இதனையே ஒத்திசைவு உணவுப் பண்பாடு என்போம்.

நமது பண்பாட்டு உணவில் உள்ள சிறு தானியங்கள், கஞ்சி, கூழ், வெந்தயம், சீரகம் போன்றவை இந்த ஒத்திசைவுத் தன்மை கொண்டவை.

அற வணிகம் என்பதென்ன?

*             தொழிலாளரை வதையாமை.

*             மனித உரிமை மீறலின்மை.

*             சுற்றுச் சூழலுக்கு கேடு விளையாமை.

*             மூலாதாரத்தை அபகரியாமை.

*             உள்ளூர் நலம் பேணல்.

எனும் முறையில் தயாரிப்பை மேற்கொள்வதும் இயற்கை நீதிக்கு உட்பட்டு வணிகம் செய்வதும் அனைத்து செயல்பாடுகளிலும் தகவல் திறவைத் தன்மையை கடைப்பிடிப்பதும் எல்லா நிலைகளிலும் நுகர்வோர் நலம் தொழிலாளர் நலன் மனித உரிமையை பாதுகாப்பதும் அறவணிகமெனப்படுகிறது.

(கட்டுரையாளர் இயற்கை மருத்துவம், தாயக மருத்துவம், ஓமியோபதி மற்றும் உணவு மருத்துவத்தில் தேர்ந்த மருத்துவர். நலம் பேரமைப்பின் தேசியத் தலைவர். மருத்துவ அரசியல் செயல்பாட்டாளர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளார்)

Pin It