கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

நாடெங்கிலும்       வகுப்புக் கலவரங்கள் நிகழ்த்தப்படுகின்றபோது அதனால் பாதிக்கப்படுவது சிறுபான்மையினர்தான். கலவரங்களின்போது உயிரிழப்புகளுக்கும், பெரும் பொருள் இழப்புகளுக்கும் ஆளாவதும் சிறு பான்மையினர்தான்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிவினையை பிரச்சினையாக்கி நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெரும் இழப்புகளுக்கும், இன்னல்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்ட போதும் கலவரத்தை நிகழ்த்திய சங்பரிவாரத்தினர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

பாபர் மஸ்ஜித் பிரச்சினையை மையப்படுத்தி மீரட், பாகல்பூர், பீவாண்டி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சங்பரிவாரங்கள் நிகழ்த்திக் காட்டிய அநீதிகள் யாராலும் மறுக்க முடியாதவை; மறைக்க முடியாதவை.

பாபர் மஸ்ஜிதை சங்பரிவாரங்கள் தகர்க்க செய்த முயற்சிதான் கரசேவை நிகழ்ச்சி என்பதை தெளிவாக கண்ட றிந்து முஸ்லிம்கள் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

உச்ச நீதிமன்றம் தகுந்த நெறிமுறைகளை கூறியபோதும், மத்திய அரசு தன்னுடைய துணை இராணுவத்தை அனுப்பி வைத்தபோதும், உத்திரப் பிரதேசத்தை ஆண்ட பாஜக அரசு ஒரு சார்பாக சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பாபர் மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் உயிர் இழப்புகளுக்கும், பொருள் இழப்புகளுக்கும் உள்ளாகினர். அநீதியை தலைமை தாங்கி நடத்திய சங்பரிவாரத்தினரும், துணை நின்ற அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் இன்றுவரையில் நீதியின் கரங்களினால் தண்டிக்கப்படவில்லை.

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்தை மதக் கலவரமாக மாற்றி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பூரண ஆதரவோடு சங்பரிவாரத்தினரின் வழிகாட்டுதல்களோடு, காவல்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரிழப்புகள், பொருள் இழப்புகள் மட்டுமல்லாது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் என்னுடைய முகத்தை காட்ட முடியவில்லை என்று பிரதமர் பதவி வகித்த பாஜக தலைவர் வாஜ்பாய் சொல்லுமளவிற்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் தவறுகளுக்கு காரணமானவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை.

இந்த அநீதிகள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்றில்லை. 1984ம் ஆண்டு முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய சீக்கியப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டபோது டெல்லி மாநகர் முழுவதும் சீக்கியர்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரிசா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மீது கலவரம் நிகழ்த்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நீடித்த கலவரத்தில் 300 கிராமங்களில் 5600 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார் கள்.

2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை ஐந்தாண்டுகளில் மட்டும் 3800 கலவரங்கள் நாட்டில் நிகழ்ந்திருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

இந்தக் கலவரங்களில் நேரடியாக பங்கேற்றவர்களும், பின்னாலிருந்து இதனை தூண்டிவிட்டவர்களும், இன்று வரையில் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை. கலவரத்தின்போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் கூட எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படவில்லை.

இம்மாதிரி வகுப்புக் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு வகுப்புக் கலவர தடுப்புச் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

2005ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட சட்ட முன் வரையில் குறிப்பிடப்பட்ட குறைகளில் ஒரு சிலவற்றை நிவர்த்தி செய்து இந்தச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் மத நல்லிணக்கம் காக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும், இழப்பீடும் வழங்கிடவும் ஆணையம் உருவாக்கப்படும்.

மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்புக் கலவரங்களை தடுக்க வேண்டிய நடைமுறைகளையும், மறுவாழ்வு திட்டங்களை உருவாக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும். மேலும் கலவரத்தின்போது அதனை தடுப்பதற்கான அரசின்அத்தனை துறைகளும், நீதித்துறையும் கவனத்துடன் இருக்கின்றனவா என்பதை இந்த ஆணையம் கண்காணிக்கும் என்று சட்ட மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்பதை அறிவித்த பிறகு சங்பரிவாரக் கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தமிழக முதல்வர் மட்டும் பாஜகவின் ஊதுகுழலாக மாறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1992ம் ஆண்டு டெல்லியில் கூட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பங்கேற்று, பாஜக முதல்வர்கள் எல்லாம் அமைதி காத்திருந்த வேளையிலும் கரசேவைக்கு ஆதரவாக பேசி தனது இந்துத்துவா சார்பை வெளிப்படுத்தியதை யாரும் மறந்து விட முடி யாது.

1992ம் ஆண்டு ஜெயலலிதா எடுத்த முடிவு அவரைத் தோல்விக்கு தள்ளியது மட்டுமல்ல, அவரை அரசியல் அநாதையாக்கியது. இதனை உணர்ந்த ஜெயலலிதா 1999ம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் “நான் தவறு இழைத்து விட்டேன். இப்போது உணர்ந்து கொண்டேன். நான் செய்த தவறுக்கு பரிகாரமாக அந்த ஆட்சியையே கலைத்து விட்டேன்...'' எனறு மன்னிப்பு கேட்ட பிறகுதான் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

1997ம் ஆண்டு அனுபவத்தில் தெரிந்து கொண்ட பாடத்தை பாவம் ஜெயலலிதா 2011லே மீண்டும் மறந்து விட்டு பாஜக மாநில ஆட்சியின் ஊதுகுழலாக மாறியுள்ளார்.

மாநில சுயாட்சி வேஷம் போட்டு கள்ள உறவுகளை புனிதப்படுத்தினாலும் திராவிட பூமியில் மதவாத கட்சிகள் தலை தூக்காது. தென்னகத்தில் இருந்த ஒரே ஒரு பாஜக மாநில அரசின் வண்ட வாளம் சந்திசிரிக்க ஆரம்பித்து விட்டதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தோழியுடன் மீண்டும் வனவாசம் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.