தமிழகத்தில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வோர் மீது(உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்) கடுமையான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அடியாட்கள் ஆட்டோவில் உருட்டுக் கட்டைகளுடன் வந்து தாக்கும் சம்பவங்கள் ஜெயலலிதா ஆட்சியில் மட்டுமல்ல, திமுக ஆட்சியிலும் அரங்கேறும் என்பதை தமிழக மக்களுக்கு பறைசாற்றும் வகையில் பழ. கருப்பையா மீதான தாக்குதல் அரங்கேறியுள்ளது!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை ஜெயா டி.வி. பேட்டியில் பழ. கருப்பையா வெளிப்படுத்தியதை தொடர்ந்துதான் இந்தத் தாக்குதல்! அதேபோன்று, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய முயன்ற பலரும் பல விதங்களில் மிரட்டப்பட்டனர். பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

ஈழ படுகொலைகளைக் கண்டித்து மாநாடு தொடர்பான மாற்றுக் கருத்துக்களுடன் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தோர், மொபைலில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியோர் என பலரும் பல விதங்களில் அரசின் அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளாயினர்.

முதல்வர் கலைஞர் அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகை ஒன்றில் விமர்சனம் செய்து கட்டுரை எழுதிய காரணத்தால் தமிழருவி மணியன் குடியிருந்த அரசு குடியிருப்பு வீட்டை காலி செய்யச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்.

மதுரையில் கல்குவாரிகளில் நடைபெறும் ஊழல்களை சட்ட விரோதக் காரியங்களை பத்திரிகை செய்தியாக வெளியிட்ட காரணத்தால் தினபூமி நாளிதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு மிரட்டலுக்குள்ளானார்.

இலங்கையில் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும், சிங்கள ராணுவமும், கடற்படையும் தொடர்ந்து நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, இது போன்ற நிலைமை தொடர்ந்தால் தமிழர்களும் பதிலடி கொடுக்க நேரிடும் எனப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் பங்கேற்ற நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே முதல்வர் கலைஞர், நீதிபதிகள் கண் முன்னாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடும் நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயத்திற்குள்ளாயினர்.

தமிழகத்தில் 'கேபிள் டிவி' மூலம் மாதாமாதம் பல ஆயிரம் கோடியை குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. அந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசால் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் அதன் இயக்குனராக இருந்தார். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கேபிள் டிவி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற காரணத்தால் அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

'சவுக்கு' என்ற இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபலமான சிலரின் தவறான நடவடிக்கைகள் குறித்தும், அரசின் பாரபட்சம் குறித்தும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக அரங்கேறும் சம்பவங்கள் 'கருத்துரிமை' குறித்த கேள்வியை தமிழக சிந்தனையாளர்களிடம் எழுப்பியுள்ளது.

பத்திரிகையாளர்கள், சமூக நீதிப் போராளிகள், வழக்கறிஞர்கள், ஈழ ஆதரவாளர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் என பலரும் ஆளும் திமுக அரசினால் பழி வாங்கப்படுவதும் தொடர்கதையாக அரங்கேறுவதை இனியும் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக கருத்துரிமைக்கான போராளிகள் அணி திரண்டு வருகின்றனர்.'கருத்துரிமையை மறுக்காதே', 'போர்க் குற்றத்தை மறைக்காதே' என்ற முழக்கத்தை முன் வைத்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் கடந்த 06-08-2010 அன்று பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வை.கோ., பழ. கருப்பையா, தமிழருவி மணியன், கொள‌த்தூர் மணி, பேராசிரியை சரஸ்வதி, வழக்கறிஞர் அஜிதா, தோழர் தியாகு ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது என பலரும் பங்கேற்று தமிழக அரசு அரங்கேற்றி வரும் கருத்துரிமைக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்து உரையாற்றினர்.

இதேபோன்று 07.08.2010 அன்று சென்னை கேரள சமாஜத்தில் கருத்துரிமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் அரச வன்முறையில் பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைந்து நடத்திய கருத்தரங்கம் கருத்துரிமைக்கு எதிராக தமிழக அரசு அரங்கேற்றி வரும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டு கண்டித்துள்ளது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1977ல் "அவசர நிலை" பிரகடனப்படுத்தப்பட்டு, அரசுக்கு எதிராக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் திமுக தலைவர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் மீது 'மிசா' சட்டத்தில் வழக்குப் போடப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'ரௌலட்' சட்டத்தை ஒத்த 'மிசா' சட்டத்தினால் 'கருத்துரிமை' மறுக்கப்பட்டது. அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில் தற்போது கருணாநிதி அரசு செயல்படுகிறது என கருத்தரங்கில் அன‌ல் தெறித்தது.

அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. தமிழக அரசு குறித்து எந்த விமர்சனமும் எவரும் செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் விமர்சனம் செய்வோர் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. 'ம்' என்றாலே சிறைவாசம்! என்ற நிலை தொடர்ந்தால், திமுக ஆட்சி தொடர தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்தக் குமுறல்களை ஆளும் வர்க்கம் புரிந்து கொள்வது நல்லது என்று கருத்தரங்கில் பேசிய பலரும் குறிப்பிட்டனர்!

ஜனநாயகத்தின் மீதும், மாற்றுக் கருத்து கொள்வோர் மீதும் அதிக அக்கறை கொண்ட கலைஞர் ஆட்சியில் கருத்துரிமைக்கு இந்த நிலையா? என்ற கேள்வி பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

- பாபா

Pin It