மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான இந்த ஜனநாயக முறையை விளக்க, 1942ஆம் ஆண்டில் ஒரு சூத்திரம் வகுத்தோம். - “ஒற்றுமை - விமர்சனம் - ஒற்றுமை”என்பதே அந்தச் சூத்திரம். விரிவாகச் சொன்னால், ஒன்றுபட வேண்டும் என்ற ஆவலோடு துவங்கி, விமர்சனம் அல்லது போராட்டம் மூலமாக முரண்பாடுகளைத் தீர்த்து, புதியதோர் அடிப்படையில் புதியதான ஒற்றுமையை நிறுவுவது என்று அர்த்தம். மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க இது ஒரு சரியான முறை என்பதை நமக்கு அனுபவம் காட்டியுள்ளது. 1942இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்த முரண்பாடுகளைத் தீர்க்க இந்த முறையை நாம் பயன்படுத்தினோம். அந்த முரண்பாடுகள் வரட்டுத் தத்துவவாதிகளுக்கும் சாதாரண அங்கத்தினர்களுக்குமிடையே இருந்த முரண்பாடுகளாகும் - வறட்டுத் தத்துவத்திற்கும் மார்க்ஸிஸத்திற்குமிடையே இருந்த முரண்பாடுகளாகும்.

ஒரு காலத்தில் உள்கட்சி போராட்டத்திலே “தயவு தாட்சண்யமற்ற போராட்டம், ஈவிரக்கமற்ற உதைகள்” என்ற முறையை இடதுசாரி வறட்டுத் தத்துவவாதிகள் கடைப்பிடித்தனர். இது தவறான முறை. இதற்குப் பதிலாக, “இடதுசாரி” வறட்டுத் தத்துவத்தை விமர்சிப்பதில், நாம் ஒரு புதிய முறையை அனுஷ்டித்தோம். ஒன்றுபடவேண்டும் என்ற ஆசையுடன் துவங்கி, எது சரி எது தப்பு என்பதை விமர்சனம் அல்லது விவாதத்தின் மூலமாகத் தீர்த்து, புதியதொரு அடிப்படையில் புதிய ஒற்றுமையைக் காட்டுவது என்பதுதான் அந்தப் புதிய முறை. இந்த முறையானது 1942இல் நடந்த ‘சீர்செய் இயக்கத்தில்’ கையாளப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, 1945இல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஏழாவது தேசீயக் காங்கிரஸைக் கூட்டிய காலத்தில் இந்தவிதமாக கட்சி முழுவதிலும் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மக்கள் புரட்சி மகத்தான வெற்றி பெறுவதற்கான சாத்தியப்பாடு உறுதி செய்யப்பட்டது.

அடிப்படையான விஷயமென்னவெனில், ஒற்றுமை வேண்டும் என்ற ஆசையுடன் துவங்குவதுதான். ஒற்றுமைக்கான இந்தத் தன்வயமான ஆசை இல்லாவிடில், போராட்டம் ஆரம்பித்ததும் அது பிடி தவறி தற்கெட்டுப் போவது சாத்தியமே. அதற்கும் “தயவு தாட்சண்யமற்ற போராட்டம், ஈவிரக்கமற்ற உதைகள்” என்பதற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? கட்சி ஒற்றுமை என்று பேசுவதற்கு அப்புறம் ஏதாவது இருக்குமா? இந்த அனுபவம்தான், “ஒற்றுமை - விமர்சனம் - ஒற்றுமை” என்ற சூத்திரத்தை நாம் வகுக்க உதவியது: வேறு விதமாகச் சொன்னால், “எதிர்காலத்தில் அதிஜாக்கிரதையாக இருப்பதற்கு, கடந்த காலத்தின் எச்சரிக்கையிலிருந்த பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.” “வியாதிஸ்தனைக் குணப்படுத்த வியாதிக்குப் பரிகாரம் தேட வேண்டும்.” இந்த முறையைக் கட்சிக்கு வெளியிலும் அனுஷ்டிக்கத் தொடங்கினோம். யுத்த காலத்தில், ஜப்பானிய எதிர்ப்புத் தளங்களிலே, தலைமைப் பதவியிலிருந்தவர்களுக்கும் மக்களுக்குமிடையே இருந்த உறவுகளில் இந்த முறையை வெற்றிகரமாகக் கையாண்டோம்.

(மக்களிடையே உள்ள முரண்பாடுகள்)

மாசேதுங் சிந்தனைத் துளிகள்

*              சில அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தேர்வது போதுமானதே; ஆனால் நாம் மார்க்சைக் கடந்துவிடவில்லையா?

*              கோட்பாடுகள் நடைமுறையின் மூலம் உருவாக்கப்படுகின்றன... எப்போது புரட்சிகர நடைமுறையானது கருத்தியலில் பிரதிபலிக்கிறதோ, அப்போது அது கோட்பாடாகிறது.

*              சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு பற்றிய புத்தகத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் பக்கமே சிறியதானது பெரியதாகும் என்ற வளர்ச்சியை விவாதிக்கும் இயங்கியல் உடையதாக இருக்கிறது. சோவியத் கம்யூனிஸ்டுகள் சிலரைக் கொண்டிருந்த ஒரு சிறிய செல் அமைப்பிலிருந்து மாபெரும் கட்சியாக வளர்ந்து நாட்டை வழிநடத்தினார்கள். அவ்வாறு தொடங்கும் போது அவர்களிடம் ஒரு துப்பாக்கிக் கூட இருந்ததில்லை.

*              நாம் கட்சியில் உருவாகும் தொல்லைகளான பிளவுகளுக்கு தயாரிப்பாக இருக்க வேண்டும். நாம் சரியான அணுகுமுறை பெற்றிருந்தால் பிளவுகள் தவிர்க்கப்படக் கூடியதுதான். ஆனால் இது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் எல்லைக் கோட்டை உடையதாக உள்ளது. எனவே பிளவை தவிர்க்க முடியாது என்று ஒருவர் வலியுறுத்திக் கூறமுடியவில்லை.

- மாவோ எட்டாவது தொகுப்பிலிருந்து

Pin It