aanai muthuவிசுவகரும சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்களின் சார்பில் வே. ஆனைமுத்து
ஆச்சாரி தல்லோஜுவுக்கு கணையாழி அணிவித்துப் பாராட்டினார்

தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஆச்சாரி தல்லோஜு அவர்களுக்குப் பாராட்டு விழா, விசுவகருமச் சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்களின் சார்பில் 2020 பிப்ரவரி 9ஆம் நாள் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை விசய மகாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கவிஞர் வேணு. குணசேகரன் தலைமை ஏற்றார்; திருமதி. கலாவதி சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். தி.ஞா.அருள்ஒளி நிகழ்ச்சித் தொகுப்புரை வழங்கினார். வேலூர் ரூபம் ஆர்ட்ஸ் லோ.ர.குமார் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தி னார்.

அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையின் புரவலர்-தலைவர் வே.ஆனைமுத்து அவர்கள் ஆச்சாரி தல்லோஜு அவர்களைப் பாராட்டி தமிழில் உரை நிகழ்த்தினார். 

வே.ஆனைமுத்து தம் உரையில், 2005 பிப்ரவரி 21ஆம் நாள் வேலூரில் லோ.இரத்தினக் குமாரின் மகள் திருமனத்தைத் தம் முன்னிலையில் சீனந்தல் அடிகளார் தமிழில் நடத்திவைத்ததை நினைவு கூர்ந்து பேசினார். அந்நிகழ்வுதான் அடிகளாரும் தானும் சந்தித்துக்கொண்ட முதல் நிகழ்வு என்றும் கூறினார்.

அவர் சென்னை அம்பத்தூரில் பெரியார்-நாகம்மை அறக்கட்டளைக்கான கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்று சென்னையில் இருந்த அடிகளார் எதிர்பாராத நிகழ்வாக அங்கு வந்து வாழ்த்துத் தெரிவித்தார் என்பதையும் பெரியார் ஈ.வெ.ரா. சிந்த னைகள் நூலின் இரண்டாம் பதிப்புக்கு 2010ஆம் ஆண்டில் விசுவகர்ம சமூகத்தின் சார்பில் அடிகளார் 86 படிகளுக்கு உரூபா மூன்று இலட்சத்து ஒரு ஆயிரம் முன்பதிவுத்தொகையை சென்னை யில் அதற்கென ஒரு விழா நடத்தி என்னிடம் வழங்கினார் என்பதையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

கியானி ஜெயில் சிங் அவர்களை நினைவுகூர்ந்து பேசு கையில், பிரதமர் இந்திராகாந்தி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில் சிங்,மண்டல் குழு பரிந்துரை பற்றி விவாதிக்கத் தம்மை 25.1 1982 ஆம் நாள் மாலை 4 மணிக்கு தில்லியில் தம் அலு வலகத்தில் சந்திக்குமாறு மடல் விடுத்து அழைத் ததையும் சென்று சந்தித்தபோது, ‘பிரதமர் பார்ப்பனர்; அவரை நம்பாதீர்கள்; தெருவுக்குச் சென்று போராடுங்கள்.

மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளி யிட்டு சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஆவன செய்கிறேன்’ என்று உறுதி கூறியதையும் கூறியவாறே ஜெயில் சிங் அவர்கள் 30.4.1982ஆம் நாள் மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு ‘அரசு சாதி அடிப்படையில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்’ என்று துணிவுடன் அறிவித்ததையும் நினைவுகூர்ந்து பேசினார்.

மேலும் ஜெயில் சிங் பற்றிய தன்னுடைய ஆங்கில நூலை, தில்லியிலுள்ள முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.சி.பதஞ்சலி அவர்கள் இந்தியில் மொழி பெயர்த்துக் கொடுத்ததையும் இப்போது தம்முடைய இன்றைய தயாரிக்கபட்ட உரையை இங்கே மேடை யிலே அமர்ந் துள்ள இராம்பாபு அவர்கள் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளதையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், மண்டல் குழு அமைக்கப்படு வதற்கும் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளி யிடப்படவும் அது நடைமுறைப்படுத்தப்படவும் ஒடுக்கப் பட்டோர் பேரவை எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவருடைய தமிழ் உரை முன்னதாகவே தயாரிக்கப்பட்டு இராம்பாபு அவர்களால் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னதாகவே சிறப்பு விருந்தினர் ஆச்சாரி தல்லோஜு அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மின்வாரிய ஓய்வூதியர் களின் சங்கத்தின் செயலாளர் மா. ஞானப்பிரகாசம், ஒடுக்கப்பட்டோர் பேரவையின் திருச்சி மாவட்டத் தோழர் இரூர் ச. இராதா கிருட்டிணன், காஞ்சிபுரம் முற்போக்கு சமூக நீதிப் பேரவையின் நிறுவுநர் டாக்டர் விமுனாமூர்த்தி, மறைமலைநகர் சமூக நீதிப் பேரவை யின் பொருளாளர் மு.அரங்கநாதன், இராணிப்பேட்டை பெல் சமூக நீதிப் பேரவையின் செயலாளர் வே. இராசேந்திரன், புதுக்கோட்டை முத்தரையர் ஆய்வு மய்யத்தின் நிறுவுநர் கு.மா. சுப்பிரமணியன், சென்னையிலுள்ள சென்னபுரி தெலுங்கு விசுவகர்மச் சங்கத் தலைவர் இராம்பாபு, ஆகியோர் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு மய்ய அரசில் விகிதாசாரம் பங்கீடு கோரியும் தமிழக அரசில் பிரதிநிதித்துவம் பெறாதுள்ள விசுவகர்மா, யாதவர், முத்தரையர் சமூகங் களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலிலும் வண்ணார், மருத்துவர், மீனவர், குறும்பர், அம்பலக்காரர், போயர், வலையர், குலாலர் ஆகிய சமூகங் களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலி லும் உள்ஒதுக்கீடு கோரியும் உரையாற்றினர். பஞ்ச சக்தி ஆசிரியர் கோ. விசுவநாதன் நன்றி கூறினார்.

சிறப்பு விருந்தினர் ஆச்சாரி தல்லோஜு ஆணையத்தின் அவசரப் பணியாக உறுப்பினர் அனைவரும் தில்லியில் இருக்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் கட்டளை இட்டிருப்பதால், நிகழ்ச்சிக்கு வர இயலாமை தெரிவித்தும் தெலுங்கில் வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன் விரைவில் சென்னை வந்து ஒடுக்கப் பட்டோர் பேரவையின் புரவலர் - தலைவர் வே. ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நேரில் வாழ்த்துக் களைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஆச்சாரி தல் லோஜு அவர்களுக்குக் கலசம் ஏற்பாட்டில் விசுவமலர் செ.நா. சனார்த்தனன் முயற்சியில் விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்களின் ஒத்துழைப்பில் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக் காவலர் மாமனிதர் கியானி ஜெயில்சிங் அவர்களின் முகத்தோற்றம் பதித்த 8 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் தோழர் வே. ஆனைமுத்து அவர்களைக் கொண்டு அணிவித்துச் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அவர் நிகழ்ச்சிக்கு வர இயலாமை நேரிட்டதால் வே.ஆனை முத்து தம் உரையில் ‘தல்லோஜு அவர்கள் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர இயலாமையைத் தெரிவித்துள்ளார். அது அரச கட்டளை. இந்தக் கணையாழி அவருக்கு உரியது. அடுத்து அவர் சென்னைக்கு வரும்போது அவருக்கு இக்கணையாழி அணிவித்துச் சிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

ஆச்சாரி தல்லோஜு அவர்கள் 29.2.2020 இரவு 10.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதிக்கு வந்தார். அங்கே அவரை கலசம், கோ. விசுவநாதன் இருவரும் சந்தித்த போது, தாம் மறுநாள் காலை வே.ஆனைமுத்து அவர்களைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். மறுநாள் கலை கோ. விசுவநாதன் முன்னதாகவே அம்பத்தூர் சென்று ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து ஆச்சாரி தல்லோஜு அவர்கள் ஆனைமுத்துவைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தார்.

திட்டமிட்டபடி 1.3.2020 ஞாயிறு முற்பகல் 9 மணிக்கு ஆச்சாரி தல்லோஜு அம்பத்தூரில் உள்ள பெரியார் - நாகம்மை அறக்கட்டளை வளாகத்தில் வே. ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து சால்வை அணி வித்து மரியாதை செலுத்தினார். விசுவகரும சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் தம்மிடம் கொடுத்த ஜெயில் சிங் முகத்தோற்றம் பதித்த 8 கிராம் எடையுள்ள கணை யாழியை வே.ஆனைமுத்து அவர்கள் ஆச்சாரி தல்லோஜு அவர்களின் விரலில் அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். “மதம், சாதி, மொழி முதலான எந்தப் பாகுபாடும் பார்க்காமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்க! பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு விகிதாசாரப் பங்கு கிடைக்க பாடுபடுக! என்று தல்லோஜு அவர்களை வே.ஆனைமுத்து கேட்டுக் கொண்டார்.

- செய்தி:கலசம்

Pin It