05.01.2020இல் “சிந்தனையாளன் 2020 பொங்கல் மலர்” வெளியீடு

21.6.2020இல்- வே.ஆனைமுத்து எழுதிய “தந்தை பெரியார் வரலாறு”வெளியீடு 

08.09.2019 ஞாயிறு அன்று முற்பகல் 10 மணிக்கு வேலூர் சோலை அரங்கத்தில் பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தலைமையில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தோழர்கள், பெங்களூர்த் தோழர்கள் உட்பட 37 பேர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களுள் கீழ்க்காணும் இருபதின்மர் கருத்துரைத்தனர். முதலில் வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் மோ.சி. சங்கர் அனைவரையும் வரவேற்றார். பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமை உரைக்குப்பின், வேலூர் தோழர் சா. குப்பன் கூட்டத்தின் முதன்மை நோக்கம் பற்றிக் கருத்துக் கூறினார். தொடர்ந்து சென்னைத் தோழர் கலச. இராமலிங்கம் மற்றும் கீழ்ப் பெண்ணாத்தூர் க. ஆதிமூலம், தோழர் இரா. பச்சமலை, கீழ்ப்பெண்ணாத்தூர் பொ. சுப்பிரமணி, வேலூர் லோ. இரத்தினக்குமார், கி. இராமநாதன், மீ. டில்லி பாபு, இரா.மாசேதுங், புதுவைத் தோழர் இரா. திருநாவுக்கரசு, தி.ச. குணசேகரன், காஞ்சி சி. நடராசன், சென்னை துரை. கலையரசு, தாம்பரம் மா. சுப்பிரமணியன், வடக்குமாங்குடி பா. மோகன், வாணியம்பாடி நா. மதனகவி, கு.தொல்காப்பியன், முனைவர் ஆ.முத்தமிழ்ச் செல்வன் ஆகிய 20 பேர் கருத்துரைத்தனர்.

இக் கூட்டத்தில் தோழர்கள் விவாதங்களுக்குப் பின் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 (அ) : தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் உருவாக்கியுள்ள தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு தொகுதிகளாக 1200 (ஆயிரத்து இருநூறு) பக்கங்களில் 2020 இறுதிக்குள் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வெளியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

(ஆ) இதில் கிடைக்கும் வருவாயிலிருந்து நூல் ஆசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் குடும்பத்திற்கு மதிப்பூதியமாக நிலைமைக்கேற்றபடி, குறிப்பிட்ட விழுக்காடு அளிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

பகல் உணவுக்குப் பின் பிற்பகல் 2.30 மணிக்கு கூடிய கூட்டத்தில் பின் காணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 2 : “பெரியார் வரலாற்று நூல்” வெளி யீட்டுக்காகத் தனி வங்கிக் கணக்கு, தி.துரை சித்தார்த் தன் மற்றும் இரா. பச்சமலை ஆகியோரின் பெயரில் தனியே கணக்குத் தொடங்கப்படுவது தேவை என்றும், இவர்களுடன் காஞ்சி சி. நடராசன், இரா. பச்சமலை, மோ.சி. சங்கர், தி. துரைசித்தார்த்தன், ஆ. முத்தமிழ்ச் செல்வன் ஆகிய அய்ந்து பேர் கொண்ட குழு, மொத்தக் கணக்குகளை ஆய்வு செய்வதற்கென அமைப்பது எனவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தீர்மானம் 3 : 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை சிந்தனையாளன் 2020 பொங்கல் மலர் வழக்கம் போல் வெளியிடுவது எனவும் 2020 சூன் மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரியார் வரலாற்று நூல் இரு தொகுதிகளையும் வெளியிடுவது என்றும் இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

2020 பிப்பிரவரி, மார்ச்சு மாதங்களில் நூலுக்கு முன்பதிவு தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4 : ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1000 படிகளுக்குமேல் நூலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், மொத்தத்தில் 10,000 முதல் 12,000 படிகள் அச்சடிக்கவும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 : மா.பெ.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அவர்கள் 30.4.2019 அன்று மறைந்தார். மா.பெ.பொ.க.வின் உயிர்நாடியாக விளங்கிய கவிஞர் தமிழேந்தி அவர்கள் 05.05.2019 அன்று மறைவுற்றார். இந்த இரண்டு இழப்புகளாலும் மா.பெ.பொ.க. பேரிழப்புக்கு ஆளாகி இருக்கிறது. அதுபற்றி இப்பொதுக் குழு அவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் சா.குப்பன் நன்றி கூறலுடன் கூட்டம் மாலை 4.00 மணிக்கு நிறைவு பெற்றது.

பொதுச் செயலாளர்

வே.ஆனைமுத்து

Pin It