உழவர் தங்கள் வியர்வையைச் சிந்தி விளைவித்த உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட முடியாமல், மூடிய மற்றும் மூடாத கிடங்குகளில் மட்கி வீணாகிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், அவை வீணாவதைக் காட்டிலும் பட்டினியில் கிடக்கும் ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கலாம் அல்லவா என்று மய்ய அரசை நோக்கிப் பரிதாபமாகக் கேட்டது. உச்சநீதிமன்றத்தின் குரலைக் கேட்ட உடன் பல தன்னார்வ நிறுவங்கள் மய்ய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பின. மக்களின் ஆதரவுக் குரலைக் கேட்ட உடன் உச்சநீதிமன்றம் மட்கும் உணவு தானியங்களைப் பட்டினியில் கிடக்கும் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் எனக் கூறியது, வெறும் கருத்து அல்ல என்றும் அது மய்ய அரசுக்கு இடப்பட்ட கட்டளை என்றும் உற்சாகமாகக் கூறியது.

உச்சநீதிமன்றம் பட்டினியில் கிடக்கும் மக்களுக்கு, மட்கிக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கட்டளை இட்டவுடன் தன்னார்வ நிறுவனங்களுக்கும் இத் திசையில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. கடந்த 08.08.2010 அன்று ரூர்கேலாவில் இந்திய உணவுப் பொருள் கழகத்தின் கிடங்குகளுக்கு முன்னால், 1500க்கும் மேற்பட்ட தொண்டர்கள், உச்சநீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நம் மக்களைப் பொறுத்த மட்டில் எந்த ஒரு கோரிக்கையையும் அது நிறைவேறும் வரை போராடும் பழக்கம் கொஞ்சமும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அரசுத் தரப்பில் இருந்து ஒரு உறுதிமொழி மட்டுமே. உறுதிமொழி கிடைத்தால் போதும், உடனே போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள். அவ்வுறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்காக இன்னொரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்வது அவ்வளவு எளிது அல்ல. இச்சிக்கலிலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு உறுதிமொழியை 08.08.2010 அன்று அளித்தார். உச்ச நீதிமன்றம் இலவசமாக விநியோகம் செய்யும்படி கட்டளையிட்ட உணவு தானியத்தை ரூ. 3க்கு 25 கிலோ வீதம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக உறுதிமொழி அளித்ததும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திருப்தி அடைந்து வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அமைதியான பின், மக்களுடைய சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படாத, ஆனால் தாங்கள் அரசியலில் இருப்பதை நினைவுபடுத்தும் கட்டாயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்துக் கொண்டன. சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க) ஹர்சிம்ரத் கவுர் (அகாலி தளம்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் 31.08.2010 அன்று உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று உணவுப் பொருளை இலவசமாக வழங்கும் நடவடிக்கையைப் பற்றி விவரம் கூறுமாறு உணவு அமைச்சர் சரர்பவாரை உலுக்கி எடுத்தார்கள். சரத்பவாரும் உச்ச நீதிமன்ற ஆணையை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.

இச்சிக்கலைப் பற்றி ஆழமாக (! ?) விவாதித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உணவு அமைச்சர் சரத்பவார், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா உள்ளிட்ட அமைச்சர்களின் குழு, மட்கிக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் மக்களுக்கு சலுகை விலையில் அளிக்க முடிவு செய்திருப்பதாக 02.09.2010 அன்று அறிவித்தது.

அதன் பின்தான் உண்மையான விவாதங்கள் செய்யப்பட்டு உண்மையான முடிவுகள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் 06.09.2010 அன்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் 37.1ரூ மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும், உணவுப் பொருள்களை இலவசமாகவோ, சலுகை விலையிலோ அளிப்பது முடியாத செயல் என்று அவர் கூறினார். மேலும் எதையும் இலவசமாகக் கொடுத்தால் உழைக்கும் ஆர்வம் குன்றிவிடும் என்றும், ஆகவே, வேளாண்மையில் இலாபம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தொழில் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின் காலத்தில் மக்களின் பட்டினி ஓலத்தைக் கேட்ட அரசி “ரொட்டிக்கு வெண்ணெய் கிடைக்காவிட்டால் பழக்குழைவு (ஜாம்) வைத்துச் சாப்பிட வேண்டியது தானே?” என்று கேட்டாளாம், மக்கள் ரொட்டியே கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஆதிக்கவாதிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு இருந்தார்கள். நம்ம மன்மோகன்சிங் நிலையும் அது போல்தான் இருக்கிறது. அரசாங்கக் கணக்குப்படி 37% வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள். உண்மையான கணக்குப்படி 75%க்கும் மேல் உள்ள மக்கள்/ வாழ்க்கை என்றால் என்ன வென்றே புரியாமல் ஏதோ உயிருடன் இருக்கிறார்கள். அவ்வளவு தான். இவர்கள் அனைவரும் நல்வாழ்க்கையை வாழக்கூடாது என்று சூளுரைக்கிறார்களா? நல்வாழ்க்கையில் விருப்பம் இல்லாத பிறழ்வு மனம் கொண்ட மனிதர்கள் ஏதோ ஒருவர் அல்லது இருவர் இருக்கலாம். 75%க்கும் (அரசாங்கக் கணக்குப்படியே எடுத்துக் கொண்டாலும் 37%க்கும் மேற்பட்ட மக்கள் நல்வாழ்க்கை வேண்டாம் என்று நினைக்க முடியுமா? அப்படியென்றால் அவர்கள் நல்வாழ்க்கையை வாழ விடாமல் தடுப்பது எது?

சந்தைப் பொருளாதாரம் (அதாவது முதலாளித்துவப் பொருளாதாரம்) நடமுறையில் உள்ள சமுதாயத்தில் சீரான வளர்ச்சிக்கு வழியே இல்லை என்று பேராசான் கார்ல்மார்க்ஸ் தெளிவுபட நிறுவி இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமன்று. அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும். ஆதிக்கத்தின் உச்சியிலும் செல்வச் செழிப்பின் உச்சியிலும் உள்ள அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டில் 3.98 கோடி மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருந்ததாகவும், 2009ஆம் ஆண்டில் அது 4.36 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் 17.09.2010 அன்று அமெரிக்க அரசின் கணக்கெடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில் இது இன்னும் அதிகமாகும் என்று தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளது.

இப்படி இருக்கையில் உழவர்கள் வேளாண்மையை விட்டு விட்டுத் தொழில் துறையில் ஈடுபட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் என்று மன்மோகன்சிங் ஏன் கூறுகிறார்? அவர் மட்டுமல்லர் முதலாளித்துவ அறிஞர்கள் அனைவரும் சிந்தனைக்கு எல்லை வகுத்துக் கொண்ட கைதிகள். இலாபத்தைக் கணக்கில் கொள்ளாமல், மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு உற்பத்தியைச் செய்ய முடியும் என்பதைக் கற்பனையும் செய்ய முடியாதவர்கள், இலாபம் மற்றும் போட்டி இல்லாவிட்டால் மக்கள் உழைக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தைக் கொண்டவர்கள். ஆனால் சமதரும அமைப்பில் உழைக்காத மக்களுக்குத் தண்டனை அளிப்பதைச் சுதந்திரம் பறிபோகிறது என்று கூக்குரலிடுபவர்கள். உழைக்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்ற நடைமுறைக்கு ஒத்துவராத கருத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, சோஷலிச அமைப்பை நடைமுறைக்கு ஒத்துவராத அமைப்பு என்று கூக்குரலிடுபவர்கள்.

சரி! இவர்கள் வக்காலத்து வாங்கும் சந்தைப் பொருளாதார அமைப்பில் மனித இனம் என்றாவது வளமாக இருந்திருக்கின்றதா? இதுவரையிலும் இல்லை. இனியும் முடியாது என்பதை அறிவியல் சார்ந்த முடிவு. அப்படியென்றால் இவர்கள் ஏன் இந்த அமைப்பைக் கட்டிக் காக்கத் துடிக்கிறார்கள்? ஏனெனில் இவ்வமைப்பில் உழைக்கும் மனிதர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியும். மனிதர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளும் மகிழ்வை அனுபவித்த இவர்களால் அவர்களுக்குச் சுதந்திரம் கிடைப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

இப்பின்னணியில்தான் உச்ச நீதிமன்றம் மக்கள் வியர்வை சிந்தி விளைவித்த உணவு தானியங்கள் வீணாவதைப் பற்றிக் கவலை தெரிவித்த போதிலும், மன்மோகன் சிங் அவர்களால் பொய்யாகக் கூட அழ முடியாமல் தவிக்கிறார். தன் வரம்பை மீறி இட ஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு விதித்த பொழுது அமைதியாக இருந்தவர்கள் இப்பொழுது உச்ச நீதிமன்றம் தன் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

சரி! இவ்வளவு நிகழ்ச்சிகள் நடக்கின்றனவே! உழைக்கும் மக்களும், நல்லறிஞர்களும் என்ன செய்யப் போகிறார்கள்?

Pin It