‘பெரியார் பேருரையாளர்’ என்று தமிழகம் அறிந்த மாமனிதர் பேராசிரியர் கோவை கு.வெ.கி. ஆசான் (எ) கு.வெ. கிருட்டிணசாமி ஆசான் அவர்கள் சென்னையில் 22-10-2010 வெள்ளி மாலை 6.30 மணி அளவில் மாரடைப்புக்கு ஆளாகி மறைவுற்றார்.

அன்னார் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வழக்குரைஞர்; தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை உருவாக்கி வெளியிட்டவர்; பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்; பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவராகவும், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தவர்.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம் குருவப்ப நாயக்கனூரில் 1935 திசம்பர் 23 இல் பிறந்தவர். அன்னார் தம் 75ஆம் அகவையில் மறைவுற்றது திராவிடர் இயக்கத்துக்கும், அன்னாரின் குடும்பத்தார்க்கும், தமிழகத்துக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் துணைவியார் மற்றும் மக்களுக்கு மா.பெ.பொ.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

வட கோவையில் அவர்தம் இல்லத்தின் ஒரு பகுதியில் தனிப்பயிற்சிக் கல்லூரியினை அவரும் அவருடைய துணைவியாரும் நடத்தி வந்தனர். அக்கட்டடத்தில், 1980இல் நான் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல், இயக்க வேறுபாடு கருதாமல், மாறாத அன்புடன் என்பால் பழகிய பண்பாளர் அவர். உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் இரா. குசேலர் அவர்களும் நானும் மார்க்சியம் - பெரியாரியம் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வழி அமைத்தவர்.

2009இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் ஆய்வுத் துறையில் அவர் பணியாற்றியபோது, அத்துறைக்கு என்னை அழைத்துச் சென்று, தம் பணிகளைப் பற்றிக் கூறிப் பெருமைப்பட்டார். 2010 செப்டம்பரில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடக்கம் செய்த விழாவில், பெரியார் திடலில், வரவேற்புரையாற்றிய அவரின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தேன். அதுவே அவரை நான் பார்த்த கடைசி நிகழ்ச்சி ஆகிவிட்டது; மிகவும் வருந்துகிறேன்.

கு.வெ.கி. ஆசான் மறைந்த செய்தியை 22 இரவே அறிந்த மா.பெ.பொ.க. தோழர்கள் வே. ஆனைமுத்து, இரா. பச்சமலை, கலச. இராமலிங்கம், வாலாசா வல்லவன் ஆகியோர் பெரியார் திடலுக்குச் சென்று, அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

வளர்க கு.வெ.கி. ஆசான் புகழ்!

- வே.ஆனைமுத்து

Pin It