“நம்பிக்கைதான் வாழ்க்கை. செயலில் இறங்கி விட்டால் எதையும் எளிதாக முடித்துவிடலாம். பணத்தைப் பற்றிய கவலையை விடுங்க. நம்ம திருவோட்டை நிரப்புவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இறங்கி வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை” என்று என்னிடம் பலமுறை சொல்லி, எப்போதும் தன்னம்பிக் கையோடு பேசிவந்தவர் அறிஞர் சங்கமித்ரா. சிந்தனையாளன் இதழுக்கான பணிகளில் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தித் தட்டிக்கொடுத்தவர் சங்கமித்ரா. ஒருபடி மேலாகவே சென்று ‘வையவன் எங்கள் இயக்கத்தின் சொத்து’ என்றுகூட, சிந்தனையாளன் ஏட்டில் எழுதினார். என்னை இள முனைவர் (எம்ஃபில்) படிக்கச் சொல்லிப் பலமுறை தூண்டியவர் அவர். எனது எம்ஃபில் படிப்பு ஆய்வேடு ‘சிந்தனையாளன் ஒரு பார்வை’ என்ற தலைப்பிலானதாகும். அதை ஒரு நூலாகக் கொண்டு வாருங்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

கடந்த மார்ச்சு மாத இறுதியில் வேலூர் மாவட்ட தோழர்கள் சங்கமித்ராவை திருச்சியில் சென்று பார்த்து விட்டு வந்தனர். நாங்களும் திருவண்ணாமலையில் இருந்து செல்ல மகிழுந்துகளையும் ஏற்பாடு செய்திருந் தோம். திருச்சியில் இருந்து முகிலன் அவர்கள் தொலை பேசி வழியாக நீங்கள் வரவேண்டாம். அவர்கள் துணை வியார் நிறைய பேர்கள் வந்து போவதை விரும்ப வில்லை. ஒரு இரண்டு வாரம் கழித்துச் சென்று பாருங்கள் என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 7-ஆம் நாள் சங்கமித்ரா விடைபெற்றுவிட்டார்.

சிங்கத்திடம் எலி விளையாடுவது போல, நான் சங்கமித்ராவிடம் மிகவும் நகைச்சுவையோடும் உரிமை யோடும் பேசுவேன். அப்படி எனக்கு இடம் கொடுத்தவர் அவர்தான். ஒருமுறை ஆனைமுத்து அய்யாவுடன் திருவண்ணாமலை கூட்டத்திற்கு வந்திருந்தார். மறுநாள் மகிழுந்தில் விழுப்புரம் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக ஆனைமுத்து அய்யாவுக்கு நல்ல வண்டி அமைவதில்லை. முதலில் பஞ்சர் ஆனது. சரிசெய்து கொண்டு புறப்பட்டோம். கண்டாச்சிபுரம் தாண்டி சில கிலோ மீட்டர் சென்றதும், வண்டி நின்றுவிட்டது. இறங்கி தள்ளச்சொன்னார் ஓட்டுநர்.

நீங்கள் வண்டியிலேயே இருங்கள், அய்யா நாங்கள் தள்ளுகிறோம் என்று சொன்னோம். அய்யா கேட்பாரா, ‘நானும் நல்லா தள்ளுவேன்பா’ என்று சொல்லிக் கொண்டு எங்களோடு சேர்ந்து மகிழுந்தைத் தள்ள ஆரம்பித்தார். சங்கமித்ராவுக்கு வந்ததே கோபம். “புத்தி இருக்குதாய்யா உனக்கு. எடுய்யா கைய, ஓட்ட வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டு எங்க உயிர எடுக்கற தில்லாம தள்ள வந்துட்டாரு. பைத்தியக்காரன், பெரிய பலசாலின்னு நெனப்போ. அப்ப நீயே தள்ளு, வையவன் கைய எடுப்பா அவரே தள்ளட்டும்” என்று சொல்லி நடுங்க வைத்தார். நடுங்கியது ஆனைமுத்து அல்ல நான்தான். ஆனைமுத்துதான் எதற்கும் அசர மாட்டாரே! வழியில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர் ஜெயராமன் என்பவரைச் சந்தித்துவிட்டு, எப்படியோ விழுப்புரம் சென்று அடைந்தோம். விடுதியில் அறைக்குச் சென்றதும் “என்னங்க அய்யாவை அப்படிப் பேசிப் புட்டீங்க என்று கேட்டேன்” எங்களுக்கு இதெல்லாம் சகஜம். அவரு இதெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டாரு. ஆனையா இருந்தாலும் அடக்குறதுக்கு அங்குசம் வேணுமில்ல. அவரு ஒரு குழந்தை மாதிரி, விட்டா இஷ்டத்திற்கு ஆடி உடம்பைக் கெடுத்துக்குவாரு. அவரை பத்திரமா பாத்துக்க வேண்டியதும் நம்ம பொறுப்பு வையவன். நீ கூட அவருகிட்ட தைரியமாப் பழகு” என்று எனக்கு அவர் சொன்னதை நான் சங்கமித்ரா விடமே செய்து, பார்த்துக்கொண்டேன் அவ்வளவுதான்.

விடுதலை, உண்மை ஏடுகளில் எழுதிய காலத்தில் நான் சங்கமித்ராவை அறிய வாய்ப்பில்லை. எனக்கு முதலில் சிந்தனiயாளன் மூலமாகத்தான் அவரைத் தெரியும். அவர் எவ்வளவோ எழுதியுள்ளார். அவர் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அவரது எழுத்துக்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை. எல்லா வற்றையும்விட நான் அவரிடம் நேசித்த எழுத்துகள், ‘முதுமை-தனிமை-வறுமை-கொடுமை’ என்ற தலைப் பிலும், ‘பெண் பக்கம் பேசுகிறேன்’ என்ற தலைப்பிலு மாக சிந்தனையாளனில் எழுதிய கட்டுரைகள்தான் இவ்விரண்டையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டுமெனப் பேசிக் கொண்டிருந்தோம். நடுவே பேச்சு திசைமாறிப் போனது. அதாவது அவரே வரைந்த அவரது கருத்துப்படங்கள், அந்த வகையில் நான் அவரது இரசிகன். ஓவியத்திற்கான எந்தக் கூறுகளுமே இல்லாமல் எப்படி அவர் வரைகிறார் என்பதே எனக்கு வியப்பு. சரி ஒரு 100 படங்களைத் தேர்ந்தெடுத்து மதன் கார்ட்டூன், அடடே மதி போல ‘சங்கமித்ரா கார்ட் டூன்ஸ்’ என்று நூல் வெளியிடுவது குறித்துத்தான் நாங்கள் இறுதியாகப் பலமுறை பேசிக்கொண்டோம்.

எனக்கு இரவில் 10.00 மணிக்குமேல் 11.00 மணிக்குமேல் ஒரு தொலைபேசி வருகிறதென்றால், அது உறுதியாக சங்கமித்ராவாகத்தான் இருக்கும். மணி ஒலிக்கும் போதே என் துணைவியார் சொல்லி விடுவார்கள். சங்கமித்ராதான் வேறயாரு. அவர் உடல் நலமின்றிப் படுக்கையாவதற்கு முன் ஒரு இரவில் 10.45 மணிக்கு அழைப்பு வந்தது. என்ன வையவன் தூக்கமா? ஏன்யா நாங்க எல்லாம் ராவெல்லாம் முழிச்சி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கீங்களா? சரி. கார்ட்டூன் வேலைய தொடங்கலாமா என்று நினைக்கிறேன். என் படத்தை நல்லா இருக்குதுன்னு பாராட்டி, அதைப் புத்தகமாகவும் போடச் சொல்ற ஒரே ஆள் நீங்கதான். ஆர்ட் பேப்பர் லயே போட்டு ஜமாச்சிடுவோம். மருது, வீரசந்தனம் என நம்ம ஆளுங்க இருக்காங்க விழாவை சிறப்பாப் பண்ணிடுவோம். வையவனையே தலைமையா போட்டுடறேன் என்று சொன்னார். சரி முன் வெளியீடு அறிவிச்சிடுங்க. திருவோட்ட தூக்குங்க. முதல் போணி ஆயிரம் கொடுத்திடறேன் என்று நான் சொன்னேன். பணத்துக்கெல்லாம் பிரச்சினையே இல்லை வையவன். நமக்குன்னு மாமூல் கஸ்டமர்ங்க நிறைய இருக்காங்க. போன்லயே ஒரு லட்சம் வசூல் பண்ணலாம். அது ஒரு பிரச்சினையே இல்லை. வேலைய தொடங்கணும் அவ்வளவுதான். சரி நீங்க படுங்க. எனக்குக் கொஞ்சம் எழுதுற வேலை இருக்கு. நான் படுக்க ரொம்ப நேர மாகும் என்று பேச்சை நிறுத்தினார். ஆனால் இவ்வளவு விரைவில் அவர் படுத்து பேச்சை நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

பெரியார் தமிழ்ப் பேரவை என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலமாகப் பல பேருக்குச் சாதனையாளர் விருதுகளை வழங்கி வந்தார். பெரிய ஊடகங்கள் விளம்பரமானவர்களைப் பாராட்டுகின்றன. நம்மைப் போன்ற கொள்கை வாதிகளுக்கு. இயக்கத் தொண்டர் களுக்கு. நல்ல தமிழ் அறிஞர்களுக்கு, கலைஞர்களுக்கு நாம்தான் சிறப்புச் செய்தாக வேண்டும் என்பார். அதனால்தான் மூத்த கலைஞர்களை, அறிஞர்களைத் தேடித்தேடி விருது வழங்கிச் சிறப்பித்து வந்தார். சென்னை தொடர்வண்டியில் பிச்சை எடுத்துவந்த ஒரு பார்வையற்ற ஒற்றைக் கம்பி யாழ் இசைக்கும் கலை ஞரை அழைத்து வந்து ஒரு மேடையில் வைத்துச் சிறப்பு செய்ததை அனைவரும் அறிவர். (அந்த இசைக் கலைஞரை மேடைக்கு அழைத்து வர அவர் பட்ட பாட்டை என்னிடம் ஒரு பெரிய கதையாகக் கூறினார்). என் விருதுப் பட்டியலில் உங்கள் பெயரும் உண்டு என்று கூறினார்.

உங்கள் சர்க்கஸ் கம்பெனி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? என்று கேட்பேன். அதெல்லாம் சாதாரணமாக நடக்குது, பழகிப்போச்சுல்ல என்பார். நான் சர்க்கஸ் கம்பெனி என்று குறிப்பிடுவது அவரது மூன்று இதழ்களைத்தான். சிந்தனையாளன் ஒரு இதழ் நடத்துவதற்கே நாங்கள் படாதபாடு படுகிறோம். மூன்று இதழ்கள் எப்படி? “ஒரு பந்தையே மேலே தூக்கிப்போட்டு பிடிக்க முடியவில்லை. மூன்று பந்தை வைத்து விளையாடுகிறீர்களே” என்று கேட்பேன். ஏதோ என் கஷ்டம் தெரிஞ்ச நீ எனக்கும் கொஞ்சம் சந்தா சேர்த்துக் கொடுங்கள் வையவன். சிந்தனையாள னுக்கு செய்யறமாதிரி எனக்குச் செய்யறதில்லை. என் பத்திரிகைக்கு எதுவும் எழுதுறதில்லை என்பார். அய்யா அந்த வகையில் நான் ‘ஏக பத்திரிகை விரதன்’ நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்; அவர் ஆனைமுத்து. நான் கண்டதும் கொண்டதும் ஒரே பத்திரிகை; அது சிந்தனையாளன் என்பேன். ‘சரி, அது போகட்டும் என் இதழ்களில் ஒரு மாதச் செலவை ஒருமுறை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த மாதத்திற்கு என்று பிறகு சொல்கிறேன்’ என்றார். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமலேயே போய்விட்டது.

சிற்றிதிழ்களைச் சிற்றிதழ் என்று சொல்லக் கூடாது. அதில் ஏதோ இழிவு இருப்பதாகத் தெரி கிறது. ‘சீரிதழ்’ என்றே சொல்ல வேண்டும் என்ற கருத்தை அவர்தான் முதலில் பதிவு செய்தார். சீரிதழ் களின் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடர்பான ஒரு கூட்டத்தை திருவண்ணாமலை டேனிஷ் பள்ளியில் நடத்திக் கொடுத்தேன். தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை, குறைந்த முதலீட்டில் சிறந்த தொழில்கள், அடுத்த படிப்பு எதைப் படிக்கலாம்? என்பனவற்றில் அவருக் கிருக்கும் படிப்பறிவு அபாரமானது. எது குறித்தும் அவருடன் பேச முடியும் என்ற அளவில் எல்லாத் துறை அறிவையும் ஒருங்கே பெற்றவர் அவர்.

அவரது அறிவு, ஆற்றல், உழைப்பு, போராட்டம் மிகப்பெரியது; பரந்தது. கொள்கை வழுவாத அவர் மன உறுதி எம் போன்றோர்க்கு நல்ல உரம். நிறைய சிந்தித்து எழுதக் காத்திருந்த உள்ளத்தை நோய் கொண்டு போனது வேதனையே. ஆனைமுத்துவின் பலம் சங்கமித்ரா. இவர் தோள் மீது ஏறி நின்று தான் ஆனைமுத்து கூவியிருக்கிறார். அந்த கூக்குரல் இந்தியா முழுவதும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் வழியில் நாமும் குரல் கொடுப்போம். கொள்கையை வென்றெடுப்போம்.

Pin It