புகுஷிமா அணுஉலை வெடிப்பின் கேடு, இன்னும் நெடுங்காலம் நீடிக்கும். ஏன்?

* 2011 மார்ச்சு 11இல் புகுஷிமா அணுஉலையில் நேரிட்ட கேடுகளைக் காணீர்!

* 9.0 ரிக்டர் அளவு நில அதிர்ச்சியினாலும், 50 அடி உயரம் எழுந்த சுனாமியாலும் நான்காம் உலை வெடித்தது.

* இதன்விளைவாக 1, 2, 3 ஆகிய மூன்று அணு உலைகளும் உருகின. உலை 4இல் பெரிய கேடு நேரவில்லை; ஆனால் பயன்படுத்தப்பட்ட கழிவுகள், மேல்மட்ட இடத்தில் இருந்த கட்டடத்தில் குவிந்து விட்டன.

* கழிவுகள் குவிந்துபோன கட்டடம் பெருங்கேட்டுக்கு உள்ளாகிவிட்டது; அதன் கூரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்வளி வெடிப்பால் தூக்கி எறியப்பட்டது.

* இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டால் அணுஉலைக் கழிவுகளிலிருந்து வீசும் கதிர்வீச்சினால் இரஷ்யா வில் செர்னபைலில் ஏற்பட்ட செசியம் - 137 போலப், பத்து மடங்கு வெப்பம் ஏற்படும்.

* அணு உலைக்கழிவு தீப்பற்றி எரியும்; அதனால் செர்னபைலில் ஏற்பட்ட செசியம்-137 போல, 85 மடங்கு வெப்பம் வீசும்.

* அத்தகைய பேரிடர் நேரிட்டால், ஜப்பான் பாழாகும்; உலகில் பேரழிவு ஏற்படும் என அறிஞர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

* செசியம்-137 எளிதில் தீப்பிடிக்கக் கூடியது; அத்தீ விரைந்து பரவும்.

* அது, அப்படியே, 30இல், பாதி ஆண்டுக்காலம் இருந்தால், ஊடுருவிச் செல்லும் கதிர்வீச்சை உண் டாக்கும்; அதனால் விளையும் கேடு நூற்றுக்கணக் கான ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

* அந்தக் கதிர்வீச்சு, மனித உடம்பில் ஊடுருவினால், மனித இருதயம் உட்பட்ட தசைகளில் அதன் 75 விழுக்காட்டுத் தாக்கம் தங்கிவிடும்.

அமெரிக்காவில் 70 அணுஉலைகளை அமைப்ப தில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட அணுஉலை அறிஞர் ஆர்னி குண்டர்சென் (Arnie Gundersen) மேற்கண்ட ஆய்வுச் செய்திகளை அறிவித்துள்ளார். (“The New Indian Express”, Chennai,, 13.5.2012, Page 10).

இவ்வளவும் தெரிந்த பிறகும், 16.5.2012 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் அணுஉலைகள் பற்றி எழுந்த விவாதத்தின் போது, “கூடுதல் மின்சக்தியாகப் பெற்றுவருகிற அணுமின் சக்தியை விட்டுவிடுவது நாட்டுக்குக் கேடாக முடியும் என்றும்; ஜெர்மனி அணு மின் சக்தி உற்பத்தியை விட்டு விடுவதாக அறிவித் திருந்தாலும் அந்த நாடு தன் மின் தேவைக்காக பிரான்சு நாட்டைச் சார்ந்துள்ளது என்றும்; பிரான்சு நாட்டில் எண்ணற்ற அணுமின் நிலையங்கள் உள்ளன” என்றும் பழைய பல்லவியையே பிரதமர் மன்மோகன் சிங் ஒப்பிக்கிறார்.

அமெரிக்காவும், ஜெர்மனியும், ஜப்பானும், பிரான்சும் அறிவியல் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகள்.

ஆனால் இந்தியா அந்த நிலையில் இல்லை.

சோவியத்தில் ஏற்பட்ட செர்னபைல் அணுஉலை வெடிப்பை அறிவியலில் வல்ல சமதர்ம நாட்டினரால் தடுக்க முடியவில்லை.

11.3.2011இல், ஜப்பானில் நடந்த புகுஷிமா டைச்சி அணுஉலை வெடிப்பின் தீயவிளைவுகளை - அறிவியல் தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்ற ஜப்பானியரால் தடுக்க முடியவில்லை.

அணுஉலை அமைக்கவும், உதிரி உறுப்புகளை வாங்கவும், பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிடம் கையேந்தும் கேடு கெட்ட இந்திய அரசு - வீடுதோறும் சூரியக்கதிர் மின்சாரம் அமைக்கவும்; ஊர்தோறும் சாண எரிவாயுக் குழிகளை அமைக்கவும்; கடலையும் மலையையும் சார்ந்த இடங்களில் காற்றாலை மின் கம்பங்கள் பெருக்கப்படவும் பெருந்தொகைகளைச் செலவழித்தால், ஒரு பத்து ஆண்டுகளில், பாதுகாப்பான முறையில் வேண்டப்பட்ட மின்சாரம் பெறமுடியும்.

இதில், இந்திய அரசுக்கு அறிவு வர வேண்டும்! இந்திய மக்கள், இந்திய அரசை இடித்து உரைக்க வேண்டும்!

Pin It