8-5-38, 15-5-38, 22-5-38, 29-5-38 ஆகிய நான்கு வார “குடி அரசு” இதழ்களில், “ஹிந்தி வந்து விட்டது.

இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்” “நெருக்கடி-என்றுமில்லா நெருக்கடி”, “தொண்டர்களே சென்னை செல்க” “போர் மூண்டுவிட்டது-தமிழர் ஒன்று சேர்க” என்னும் தலைப்புகளில் தலைவர் பெரியார் அவர்கள் நான்கு தலையங்கங்களைத் தீட்டினார்.

அந்த எழுத்துகள் தமிழ்நாட்டில் பெருத்த பரபரப்பையும் ஆவேசத்தையும் மூட்டிவிட்டதோடு, கொஞ்சம் அப்படியும் இப்படியுமாய் இருந்த தமிழர்களைக்கூடக் கையைப்பிடித்து இழுத்து வந்து போர்க் களத்தில் நிறுத்திவிட்டன.

இந்திப்போர் - திருச்சி திட்டம் தீட்டுகிறது!

தமிழர் எதிர்ப்பு கண்டு சளைக்காது ஆச்சாரியார் அவர்கள் 21-4-1938-இல் இந்தி கட்டாயப் பாட உத்திரவைப் பிறப்பித்துவிட்டார். எனவே, தமிழ்ப் பெருமக்களும் மொழிப் போருக்கான நடைமுறைத் திட்டங்கள் தீட்ட மந்திராலோசனைக் கூட்டம் கூட்டினர் திருச்சியில் 28-5-38-இல்.

திருச்சிப் பாசறை : 28-5-38 : “நாட்டின் தமிழ் இருதய பீடமாயிருக்கும் திருச்சி நகரில் இந்திப் போருக்கான கொடிமரம் இன்று நாட்டப்பட்டுவிட்டது. பல இடங்களிலும்  நிறுவப்பட்டிருந்த பல்வேறு இந்தி எதிர்ப்பு வாரியங்களின் மந்திராலோசனைக் கூட்டம் இன்று காலை திருச்சி தென்னூர் பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் பங்களாவில் பேராசிரியர் சோம சுந்தர பாரதியார் தலைமையில் கூடியது.

இதற்காகத் தமிழ்நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் பல சேனைத் தலைவர்களும், தளபதிகளும், போர்வீரர்களும், வீராங் கனைகளும் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை ஒவ்வொரு இரயிலில் இருந்தும் இறங்கி வந்த வண்ணமாயிருந்தனர்.”

திரண்டு குழுமி இருந்த வீரர்களை எதற்கும் தயாராய் இருக்கக்கூடிய துள்ளுகாளைகள் என்று சொன்னாலும் தகும். இந்தியை நுழைப்பதில்லை - அதற்குப் பதிலாக நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் உடம்பிலிருந்து ஒருபடி, இரத்தம் எடுத்துத் தரவேண்டு மென்று கேட்டிருந்தால் அதை முகஞ்சுளிக்காமல் செய்து கொடுக்கத்தக்க  வீர உள்ளங் கொண்டவர்களே வந்திருந்த அத்தனைபேரும்.

கூட்ட நடவடிக்கைகளின்போது உண்ணாவிரத வீரர் (இவர் இந்தி ஒழியும்வரை உண்ணேன் என்று 1938 மே திங்கள் முழுவதும் உண்ணாநோன்பிலிருந்து பின்னர் விட்டுவிட்டார்) ஸ்டாலின் ஜெகதீசனைப் பற்றிப் பிரஸ்தா பித்த சமயம் சகலர் முகமும் வேற்றுருப்பட்டுத் தெரிந்தன வென்றே சொல்லவேண்டும்.

“சத்தியாக்கிரகம் - அதில் வெற்றி கிடைக்காவிடில் சட்ட மறுப்புத் தொடங்க வேண்டியதுதான் என்று தலைவர் பாரதியார் போர்முறைத் தீர்மானம் செய்ததும் சகலரும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினர் என்று சொன் னால் மிகையாகாது. மொத்தத்தில் இன்று செய்யப்பட்ட மந்திராலோசனைத் தீர்மானம் ஒவ்வொன்றும் உயி ருள்ளது என்றால் அது மிக மிகப் பொருந்தும். இன்று நிறைவேறிய தீர்மானங்கள் இவை :

1. சென்னை மாநிலம் முழுதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயலும் அரசியலார் கொடுஞ் செயலை வீரத்துடன் எதிர்த்து உயிர் கொடுக்கவும் துணிந்து இன்றுவரை போராடி வருகின்ற தமிழ் மக்கள் அனைவரையும் இக்கூட்டம் பெரிதும் பாராட்டு கிறது.

2. இந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கப் பெறும் பள்ளிக்கூடங்கள் உள்ள ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்யவும், அந்தந்த ஊர்களில் இந்தி எதிர்ப்பு வாரியம் ((Committee)) அமைக்கவும், எல்லா ஊர்களிலும் பணந் திரட்டவும் செலவு செய்யவும், பொதுவாக இயக்கத்தை நடத்திச் செல்லவும் பின்கண்டவர்கள் அடங்கிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தை The Anti-Hindi High-Committee இக்கூட்டம் அமைக்கிறது :- வாரியத் தலைவர் : பேராசிரியர் பாரதியார், உறுப்பினர்கள் : பெரியார் ஈ.வெ.ரா., த.வே. உமாமகேசுவரனார், உ.பு.அ. சௌந்தர பாண்டியன், கே.எம். பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ. விசுவநாதம்  (செயலாளர்).

3. சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியமானது ஆங்காங்கு துணை வாரியங்களை (Sub-Committee) நிறுவி அடியிற்கண்ட வேலைத் திட்டங்களை அமலுக் குக் கொண்டுவர வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

போர்முறைத் திட்டம் :

அ. ஒரு வழிப்படை திரட்டிப் பல ஊர்களிலும் சென்று தமிழ் மக்களிடையே உணர்ச்சியை வளர்த்தல்.

ஆ. இந்தி கட்டாயப் பாடப் பள்ளிக்கூடங்களில் முதல் மூன்று பாரங்களுக்கு மாணாக்கர்களை அனுப் பாமல் வேறு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும்படி பெற்றோர்களையும் புரப்பவர்களையும் கேட்டுக் கொள்ளுதல்.

இ. இந்தி கட்டாயப் பாடத்தைத் தங்கள் பள்ளிகளில் வைத்து நடத்த வேண்டாமெனப் பள்ளிக்கூட முதல்வர்களைக் கேட்டுக் கொள்ளுதல்.

ஈ. மாணவர்களை இந்தி உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்காமல் மறியல் செய்து தடைப்படுத்தல்.

உ.  இந்தி  ஆசிரியர்களை எல்லா வகையிலும் பகிஷ் காரஞ் செய்ய சமாதான முறையில் தக்க ஏற்பாடு களைச் செய்தல்.

ஊ.  குறிப்பிடுகின்ற ஒரு நாளை இந்தி ஒழிப்பு நாளாக, சென்னை மாநிலம் முழுவதும் கொண்டாடி வர ஏற்பாடு செய்தல்.

எ. வாய்த்த போதெல்லாம் அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி பிடித்தல் முதலிய செயல்களால் கட்டாய இந்தி மீதுள்ள வெறுப்பைக் காட்டுதல்.

ஏ. மேற்கண்ட வேலைத் திட்டங்கள் வெற்றியைத் தராத வரையில் சட்டமறுப்புச் செய்தாவது இந்திக் கட்டாயத்தை ஒழித்தல்.

4. சென்னையில் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தவும், நடத்தும் முறைகளை வகுக்கவும், அப்போதைக்கப் போது ஆவன செய்யவும், தோழர் செ.தெ. நாயகம் அவர்களை முதல் சர்வாதிகாரியாக நியமிக்கிறது.

5. இந்திப் பயிற்சியை நமது மாநிலத்தில் பதவிகளுக்கு இன்றியமையாத தகுதியாக்குவது அமைச்சர்களின் நோக்கமென நன்கு புலப்படுவதால் இந்தி விருப்பப் பாடமாக வருவதையும் ஒழிக்க வேண்டுமென  இக்கூட்டம் முடிவு செய்கின்றது” (விடுதலை 30-5-38).

கட்டாய இந்தியை யாருமே ஆதரிக்கவில்லை. ஜஸ் டிஸ்  கட்சி, சுயமரியாதை இயக்கம், முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் மன்றம் இத்தனையும் அதை வெறுத்தன.

1. காங்கிரஸ் கட்சியிலும் அது கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டுமென இதுவரை எத்தகைய தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, 1938 அக்டோபர் திங்களில் அனைத்திந்திய காங்கிரஸ்  கமிட்டியில் (A.I.C.C..)

அத்தகைய ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டு விட்டது. டாக்டர்  வரதராசலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், பேராசிரியர் பாரதியார், கருமுத்து தியாகராச ரெட்டியார், என்.வி. நடராசன் (இவர் அப்போது சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்), வ.சு. தேவசுந்தரம் (இவர் அப்போது பெத்து நாயக்கன் பேட்டை  காங்கிரஸ் கழகப் பொருளாளர். இந்தியை  எதிர்ப்பதன் பொருட்டு  இருவரும் காங்கிரசை விட்டு 1938-இல் விலகினர்)

ம.பாலசுப்பிரமணியன், பி.ஏ.,  பி.எல்., கோபாலரத் தினம், பி.கே. விநாயக முதலியார் முதலிய பல காங்கிரஸ்காரர்களும், சென்னை  “தமிழ்நாடு” போன்ற காங்கிரஸ் இதழ்களும் இந்தித் திட்டத்தை முழுமனதுடன் வெறுத்தனர்.

2. கல்வியாளர்கள் : கல்கத்தா பல்கலைக்கழகப் பேரா சிரியர் டாக்டர் சுனிதாகுமார் சாட்டர்ஜி (9-4-39-இல் வங்காளத்தில் நடைபெற்ற வங்கமொழி மாநாட்டில் தம் தலைமை உரையில் குறிப்பிட்டது: “ஆங்கிலத்தைத்தவிர வேறு எந்த மொழியை  இந்தியத் தேசியமொழி  ஆக்கினாலும் இந்தியரின் அறிவுக்கும் கலைகளுக்கும் ஆபத்து உண்டாவது உறுதி.

மக்கள் வேண்டாத ஒரு மொழியை அவர் கள் தலைமீது வலுக்கட்டாயமாகச் சுமத்துவது பெரும் கொடுமையாகும். ஆகவே இப்பொழுது எழுந்திருக்கும் இந்த இந்திமொழி ஏகாதிபத்திய வெறியை எதிர்க்க ஒவ்வொருவரும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டியது மிகமிக இன்றியமையாதது. இந்தி அறியாத மக்கள் அத னைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று ஏற்பட்டால் இந்தி பேசுவோர் வேறு ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும். இல்லை யேல் இந்தி பேசுவோர் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்”).

கொச்சி கிராம அபிவிருத்தி அமைச்சர் அம்பட்ராம மேனன், சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் இராமசாமிக் கவுண்டர் எம்.ஏ., எல்.டி., பேராசிரியர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, பி.ஏ., எல்.டி.,  சென்னை பெடரல் சர்வீஸ் கமிஷனின் முன்னாள் உறுப்பினரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்றைய தலைவருமாகிய பேராசிரியர்  இரத்தினசாமி, எம்.ஏ., திருச்சி தேசியக் கல்லூரித் தலைவர் சாரநாத அய்யங்கார், பி.ஏ., எல்.டி., கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரனார், கல்கத்தா பேராசிரியர் முகர்ஜி, “மார்டன் ரிவ்யூ” முன்னாள் ஆசிரியர் இராமாநந்த் சாட்டர்ஜி, தியாசாபிகல் சங்கத் தலைவர் டாக்டர்  அருண்டேல் (டாக்டர் அருண்டேல் கூறியது.

 இப்போதே மாணவர்கள் படிக்க வேண்டிய பாட புத்தகங்களின் எண்ணிக் கைக்குக் குறைவில்லை. அவர்கள் சுமந்து செல்ல வேண்டிய நோட்டுப் புத்தகங்களுக்கும் கணக்கில்லை. இவ்வளவும் போதாதென்று பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தில் கட்டாயம் இந்தியையும் சேர்ப்பது எவ்வாறு பொருந்தும்? எப்படிச் சிறுவர்களால் கற்க முடியும்? கட்டாய இந்தி சிறிதும் தேவையில்லாதது சிறுவர்களால் தாங்க முடியாதது) இத்தனை பேர்க்கும் கட்டாய இந்தி உடன்பாடில்லை.

3. பொதுவுடைமையாளர்கள் : எம். சிங்காரவேலு, பி.ஏ., பி.எல்., போன்றவர்கள், இவர்கட்கும் இந்தி உடன்பாடில்லை.

4.கிறிஸ்தவர்கள் : சர்.பன்னீர்செல்வம், க.ப.மகிழ்நன், பி.ஏ., எல்.டி., ரெவரண்ட் அருள்தங்கையா, அனைத்து இந்தியக் கிறிஸ்துவப் பெருமன்றத் தலைவர் எம். இரத்தினசாமி முதலியோர் இவர்களெல்லோரும் இந்தி வேண்டாம் என்றனர்.

5.தாழ்த்தப்பட்டோர் : இராவ்சாகிப் என். சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், திவான்பகதூர் இரட்டை மலை சீனிவாசன், திவான்பகதூர் எம்.சி. ராஜா, இன்னபிறர் - இவர்கட்கும் இந்தி பிடிப்பில்லை.

6. முஸ்லிம்கள் : முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா (காங்கிரஸ்காரர்கள் பள்ளிக்கூடங்களில்  இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்துவன் இரகசியமெல்லாம் முஸ்லிம் ஆண், பெண் குழந் தைகள் உள்ளத்தில் ஆரிய மத தத்துவத்தைக் கட்டாயமாகப் புகுத்துவதே ஆகும் என்று இவர் அப்போது அறிக்கை விடுத்தார்),  கான்பகதூர் கலிபுல்லா, எம்.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., திருச்சி சுல்தான் பாக்தாதி, அப்துல் அமீத்கான், அல்ஹாஜ் பா. தாவுத்ஷா, பி.ஏ.,  கான்சாகிப் கஜாமியான் ராவுத்தர், சென்னை மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஜமால் முகமது, காலஞ்சென்ற கொடைவள்ளல் நவாப் அப்துல் அகீம், இந்திய அரசின் வர்த்தக உறுப்பினர் சர். மகமது  யாகூப் (சர். மகமது யாகூப் 22-7-38-இல் கூறியது : இந்தியாவுக்கு இந்தி ஒருநாளும் பொதுமொழி ஆகாது.

ஒரு மொழி பேசப்படும் மாகாணத்தில் மற்றொரு மொழி கட்டாயப் பாடமானால் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும். என் மாகாணத்தில் தமிழோ, தெலுங்கோ கட்டாயப் பாடமானால் இந்தி எதிர்ப்பாளர் கருதுவது போல் தான் நானும் கருதுவேன், நானும் எதிர்ப்பேன்) இத்தனைப் பேரும் இந்தி தேவையில்லை என் கின்றனர்.

7. ஆந்திரர்கள் : ஆந்திர ரத்தின கோபால கிருஷ்ணய்யா, முன்னாள் சென்னை கவர்னர் சர். கே.வி. ரெட்டி நாயுடு போன்ற பலர். இவர்கள் உள்ளமும் இந்தி தேவையில்லை என்றே சொல்லிற்று.

8. மலையாளிகள் : முன்னாள் சட்ட அமைச்சர் சர்.எம். கிருஷ்ணநாயர் முதலியோர். இவர்களெல்லோரும் இந்தி எதற்கு என்றே கேட்கின்றனர்.

9.  தமிழ்ப் புலவர்கள் :  பேரறிஞர் மறைமலை அடிக ளார், பேராசிரியர் பாரதியார், தாகூர் சட்ட விரிவு ரையாளர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எல்.எல்., வித்துவான் மறை திருநாவுக்கரசு, காமக்கூர் வித்துவான் சுந்தர முதலியார், திருவத்திபுரம் வித்துவான் கோவிந்தன், கரந்தைத் தமிழ்ச்  சங்கம் சிவ. குப்புசாமிப் பிள்ளை, திருவையாற்று அரசர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை, மேற்படி கல் லூரிப் பேராசிரியர்கள்  இ. கோவிந்தசாமிப் பிள்ளை, ஜி. சோமசுந்தர தேசிகர், தமிழாசிரியர் மயிலை முத்துக்குமாரசாமி முதலியார், புலவர் செல்வராஜ் இன்ன பிறர்.

இந்தியால் தமிழ் கெடுமா? கெடாதா? என்பதைப் பற்றித் தீர்ப்பளிக்க வேண்டிய இவர்கள் அத்தனைப் பேரும் ஒரு முகமாகச் சொல்லி விட்டனர்  இந்தியால் தமிழ் கெடும் என்று.

10. துறவிகள் : ஈழத்தடிகள், பி.ஏ., சாமி விபுலானந்தர், பி.எஸ்.சி.,  (லண்டன்), சாமி விமலானந்தர், சாமி அற்புதானந்தர், சாமி சண்முகாநந்தர், வள்ளல் சிவஞான தேசிகர், வண்ணாரப்பேட்டை சாது நாராயண தேசிகர், மடாலயம்-சாமி  அருணகிரிநாதர், ஸ்ரீதரசுவாமிகள், சாமி கைவல்யம், இன்னும் பலர்: இவர்களும் இந்தி மொழியை வாழ்த்த வில்லை!

11. வியாபாரிகள் : காஞ்சி அ.க. தங்கவேலர், பி.எஸ். கந்தசாமி சா, திருச்சி விசுவநாதம், குடந்தை நீலமேகம் முதலிய பலர். இவர்களுக்கும் இந்தி வேம்பு.

12. பெண்கள் :  தமிழறிஞர் நீலாம்பிகை அம்மையார், டாக்டர் தருமாம்பாள் அம்மையார், பண்டிதை அ. நாராயணி அம்மையார், சென்னை ஆர். நாராயணி அம்மையார், ஞானம் அம்மையார் (வித்துவான் மறை திருநாவுக்கரசின் துணைவியார்), சரோசினி  அம்மையார் (மறைமாணிக்க  வாசகத்தின் துணை வியார்), வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார்; மற்றும் பலர்-இவர்கட்கெல்லாம் கட்டாய இந்தி தொலையவேண்டும் என்பதே ஆசை.

13.  ஜஸ்டிஸ் கட்சி : இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று. கட்சித் தலைவர் பொப்பிலி அரசர்,  துணைத் தலைவர்கள் சர். பி.டி. இராசன், சர். செல்வம், சர். பாத்ரோ, குமாரராஜா, சர். முத்தையா செட்டியார், இராவ்பகதூர் என்.ஆர். சாமியப்பா, இராவ் சாகிப், வி.வி. ராமசாமி, மேடைதளவாய் குமாரசாமி முதலியார், திவான் பகதூர் அப்பாதுரை, எம்.எல்.ஏ., - இந்தி வேண்டாம் என்பதே இவர்கள் உரை.

14.  ஜனநாயகக் கட்சி : எஸ்.முத்தையா முதலியார், கே.எம். பாலசுப்பிரமணியம் இன்னும் பலர். இவர் கள் கருத்தும் அதுவே.

15. சுயமரியாதைக்காரர்கள் : இந்திப்போர் வெற்றி பெற்றதற்குக் காரணமே இவர்கள் தாம்.

மா.இளஞ்செழியனின் ‘தமிழன் தொடுத்த போர்’ (பக்கம் 43-49)

- தொடரும்

Pin It