“வெள்ளையன் வெளியேறியவுடனே, வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை தருவோம். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பேராளர்கள் சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்பைச் செய்வார்கள்” என்று, 1922இல் காந்தியார் சொன்னார்; 1935இல் காங்கிரசு அறிவித்தது; 1946இல் இந்தியத் தற்காலிக அரசு அறிவித்தது.

ஆனால் நடந்தது என்ன?

அன்றைக்கு இருந்த 30 கோடி மக்களில், மத்திய சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் போட 4 விழுக்காடு பேர்களுக்கே வாக்குரிமை இருந்தது. அவர்கள் வாக்குப் போட்டு, 1946இல் தேர்ந்தெடுத்த மத்திய சட்டமன்ற உறுப்பினர்களும்; மாகாணச் சட்டமன்றங்களுக்கு 14 விழுக்காடு பேர் வாக்குப் போட்டு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டப் பேரவைகளின் பேராளர்களும் சேர்ந்துதான் - இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி நிறைவேற்றினார்கள். இவ்வரலாற்றுத் தொடக்கமே தவறானது - பொய்யானது அல்லவா? சரி!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு, 29.8.1947இல் பொறுப்பேற்றது. ஆனால், அதற்கு முன்னரே, ஒரு நிபுணர் குழுவினால் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்ட முழு வரைவு, 17.10.1947இல் அம்பேத்கரிடம் தரப்பட்து. அதற்குக் கருவியாகச் செயல்பட்டவர் பெனிகல் நரசிங்கராவ் என்கிற பி.என். ராவ்.

பிரிட்டிஷாரின் எழுதப்படாத அரசமைப்புச் சட்டம், அயர்லாந்தின் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம், அமெரிக்கா வெறும் 16 பக்கங்களில் தந்த அரசமைப்புச் சட்டம் இவற்றில் இருந்த கொள்கைகளையும்; 1935இல் எழுதப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தையும் படித்து அவற்றை முன்வைத்து முழுச் சட்டத்தையும், 1947 அக்டோபருக்கு முன்னரே எழுதிவிட்டார், பி.என்.ராவ்.

பிரிட்டிஷாரின் எழுதப்படாத அரசமைப்பின்படி - பிரிட்டிஷ் பேரரசுக்கு ஓர் அரசன்தான் தலைவன்; அல்லது ஓர் இராணிதான் தலைவி.

அவர்களின் பேராளராக இருந்து ஆளுநர் நாயகம் (Governor-General) என, பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டவர்; அரசப் பேராளராக (Vice-roy) இருந்து சுதேச இந்தியாவை ஆண்டவர் - வாழுவதற்குக் கட்டப்பட்ட மாளிகைதான், புதுதில்லியில் உள்ள இன்றைய குடிஅரசுத் தலைவர் மாளிகை.

புதுதில்லி குடிஅரசுத் தலைவர் மாளிகை ஒரு சிற்றூர் போன்றது. குடிஅரசுத் தலைவரும், அவருடைய குடும்பமும், பணியாளர்கள் 200 பேரும் குடியிருக்கும் - 320 பெரிய அறைகளைக் கொண்டதுதான் குடிஅரசுத் தலைவர் மாளிகை.

அந்த வழியாக - நார்த் அவின்யூவிலிருந்து சவுத் அவின்யூவுக்குப் பல தடவைகள் நான் நடந்து சென்றிருக்கிறேன்.

8.5.1978இல் குடிஅரசுத் தலைவர் என். சஞ்சீவிரெட்டியையும், 1982இல் கியானி ஜெயில் சிங்கையும் அம்மாளிகையில் கண்டு பேசிவிட்டு நான் வெளியே வந்த போதெல்லாம் - குடிசைகளில்-பரிதாபாத்துக்கு (Faridabad) அப்பால் வாழும் - ஒவ்வொரு பேரூரின் - சிற்றூரின் புறப் பகுதிகளில் வாழும் ஏழைகளும் கூலிகளும் குடிசைகளில் வாழும் இந்தியாவில் - ஓர் அவமானச் சின்னமாக உள்ள இந்தக் குடிஅரசு மாளிகையை - விடுதலை பெற்ற இந்நாட்டின் மக்கள் ஏன் இன்னும் இடிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது.

பண்டித நேரு ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார் - ஒற்றை நாடி, குறுந்தாடி, வியட்நாம் விடுதலை வீரர் - வியட்நாம் குடிஅரசுத் தலைவர் ஹோசி மின். நேரு விரும்பியபடி, அவர் நம் குடிஅரசுத் தலைவர் மாளிகையில் விருந்தினராகத் தங்க மறுத்துவிட்டார்; அதை ஓர் அவமானமாக அவர் கருதினார். அவரும் மனிதர்தான்! அந்தக் குடிஅரசு மாளிகையில் 10 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த முதலாவது குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப்பிரசாதும் - சுதந்தரப் போராட்ட வீரர்தான்! ஒரு மனிதர்தான்! அவர் ஏன்-ஹோசி மின்போல், வெட்கமோ, கூச்சமோ படவில்லை?

முதலாளிகளும் பெருநில உடைமைக்காரர்களும் மேல் சாதிக்காரப் படிப்பாளிகளும் மட்டுமே இருந்து எழுதிய அரசமைப்புச் சட்டப்படி - இன்றுள்ள “122 கோடி மக்களின் சார்பாக - 91 கோடி வாக்காளர்கள் வாக்குப் போட்டு முறையே 2009இல், 2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 790 நாடாளுமன்ற உறுப்பினர்களும்; 4200 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமே 19.7.2012இல் வாக்குப்போட்டுத் தேர்ந்தெடுத்த குடிஅரசுத் தலைவர் - அவருடைய குடும்பம் - பணியாளர்கள் வாழ ஒரு பெரிய, விரிந்த - நவீன வசதிகளோடு கூடிய மாளிகை வேண்டும்.

இங்கே தான், இன்றையக் குடிஅரசுத் தலைவர், மேற்குவங்கத்துக்காரர் - பழந்தின்று கொட்டை போட்ட - பழைய காங்கிரசுவாதி பிரணாப் முகர்ஜி 25.7.2012 முதல் குடியிருக்கப் போகிறார்.

அவருக்கு மாத ஊதியம் ரூபா 1,50,000; தெற்கிலும் வடக்கிலும் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் அவர் வசதியாகத் தங்கியிருக்க சிம்லாவிலும், அய்தராபாத்திலும் பெரிய அரண்மனைகள்; தில்லிக் குடிஅரசு மாளிகையில் பணிசெய்ய 200 பேர்; உலகநாடுகளுக்கு அரசு சார்பாகப் பயணம் போக வசதி - இவை 5 ஆண்டுகளுக்கு உண்டு. இவர் 25.7.2017இல் ஓய்வு பெறுவார். அப்போது முதல் சாகும் வரையில், மாத ஓய்வூதியம் ரூபா 75,000; குடும்பத்தோடு இந்தியா முழுவதிலும் வானூர்தியில் - தொடர்வண்டியில் முதல் வகுப்பில் பயணம்; அரசுச் செலவில் இலவச மருத்துவம்; பணிசெய்ய அதிகாரிகள், ஏவலர்கள் எல்லாம் உண்டு.

குடியிருக்க நல்ல வீடு இல்லாமல் - மலம் கழிக்கும் அறை வசதி இல்லாமல் - குடிநீர்க் குழாய் இல்லாமல் - மின்வசதி இல்லாமல் - மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தரமுடியாத நிலையிலுள்ள தகரக் குடிசைகள், பிளாஸ்டிக் குடிசைகள், ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளில் இன்று வாழ்வோர் 40 கோடி இந்தியக் குடிமக்கள்.

இவற்றையும் நம் நாட்டுக் குடிஅரசுத் தலைவர் மாளிகையையும், அமைச்சர்களுக்கான வளமனைகளையும் கண்டும் இந்திய மக்களுக்கு ஆத்திரமோ, வெட்கமோ, வெறுப்போ ஏன் வரவில்லை? பழக்கத்துக்கு அடிமை ஆகிப்போனதனாலா? இல்லை.

‘சுதந்தரம் என்றால், அது என்ன?’ என்பதை அறிவதற்கான கல்வி மறுக்கப்பட்டவர்கள் இவர்கள். சரி! கல்வி பெற்றவர்களுக்கு ஏன் ஆத்திரம் வரவில்லை?

வெள்ளையன் வகுத்துத்தந்த அடிமை மனப்பான்மையைக் காக்கும் - பழமையைப் பாதுகாக்கும் கல்வி, வயிறு வளர்க்கவும் பண்ணை வேலை செய்யவும் மட்டுமே இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது; அதனால் தான்.

எண்ணற்ற அரசியல் கட்சிகள் இருக்கின்றனவே, இவர்களுக்கு ஏன் ஆத்திரம் வரவில்லை?

எரிகிற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் - ஆற்றில் போகிற தண்ணீரை அம்மா குடி, ஆயா குடி என்று வயிறு முட்டக் குடிக்கலாம் - என்கிற உணர்வுக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆளாகிவிட்டன. எல்லாம் வாக்குவேட்டைக் கட்சிகள் ஆகிவிட்டன.

அடேயப்பா! முன்னர் சொல்லப்பட்ட அவ்வளவு வசதிகளையும் துய்க்கிற நம் குடிஅரசுத் தலைவர் செய்யப் போகிற வேலைகள் யாவை?

1.            அவ்வப்போது ஆளும் அரசு எழுதித் தரும் பேச்சைப் படித்து, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைத் தொடங்கி வைப்பார்;

2.            சுதந்தர நாளில் உரையைப் படிப்பார்;

3.            குடிஅரசு நாளில் உரையைப் படிப்பார்;

4.            நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் அவ்வப்போது இயற்றும் சட்டங்களுக்கு முத்திரையிட்டுக் கையெழுத்துப் போடுவார். எவ்வளவு பெரிய வேலைகள் பார்த்தீர்களா?

பிரிட்டிஷ் பேரரசன் (அ) அரசன்; பேரரசி (அ) அரசி இப்படித்தான் பணி செய்கிறார். அதைப் பார்த்து நாம் செய்த அரசமைப்புச் சட்டப்படி, இந்தியக் குடிஅரசுத் தலைவராக எவர் வந்தாலும் அதைத்தான் செய்ய முடியும். எப்போதாவது, ஏதோ ஒரு குடிஅரசுத் தலைவர், கருணை காட்டி, கைதிகளின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைப்பார்; நீண்டகாலத் தண்டனையைக் குறுகிய காலத் தண்டனையாகக் குறைப்பார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ.1,00,000 ஊதியம்; தொகுதிப் பயணப்படி; நாடாளுமன்றக் கூட்ட நாள் வேலைக்குப் படிப் பணம்; குறைந்த வாடகையில் புதுதில்லியில் ஒரு மாளிகை வீடு; தொலைபேசிகள்; ஓராண்டில் பல தடவைகள் வானூர்தியில் குடும்பத்துடன் பயணம் போகவசதி. இவ்வளவும் உண்டு.

இவை மட்டுமா? ஆண்டு ஒன்றுக்கு தொகுதி மேம்பாட்டுப் பணிக்கு ரூபா 5 கோடி தனி ஒதுக்கீடு. இதில் வேலைகளை எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள், அரசு அதிகாரிகள், சொந்தக் கட்சியின் பொறுப்பாளர்களுக்குப் பங்கு - நாடாளுமன்ற உறுப்பினருக்கு நல்ல ஒதுக்கீடு எல்லாம் உண்டு. இவர்கள் ஒரு தடவையோ, இரண்டொரு ஆண்டுகளோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் போதும் - சாகும் வரை முழு ஓய்வூதியம் உண்டு; உறுப்பினராக இருந்தவர் இறந்துவிட்டால் மனைவிக்குப் பாதி ஓய்வூதியம் உண்டு.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? அவரவர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு உரிய சில பணிகளைச் செய்வார்கள். அரசு அதிகாரிகள் - சொந்தக்கட்சிக்காரர்கள் - உடனிருக்கும் கட்சி - சாதிப் பாதுகாவலர்கள் நல்ல பணப்பயன் பெறுவார்கள். போதாதா நமக்கு வந்திருக்கிற சுதந்தர நாட்டுப் பயன்?

இந்தியா முழுவதிலும் உள்ள மாநில ஆளுநர்கள் என்பவர்கள் ‘குட்டிக் குடிஅரசுத் தலைவர்கள்’. இவர்கள், மத்தியில் ஆட்சி செய்கிறவர்களின் ஏவலர்கள் - காவலர்கள் - உளவாளிகள்! அவ்வளவுதான். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர். 

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 4200 சட்டமன்ற உறுப்பினர்கள்; அவர்களால் கட்சிச் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 30 முதலமைச்சர்கள் என இருக்கும் போது, அதற்குமேல் ஓர் ஆளுநர் - 30 ஆளுநர்கள் எதற்கு என்கிற மக்கள் நாயகச் சிந்தனை, நம்மில் பலருக்கும் வரவில்லையே, ஏன்?

நம் நாட்டுச் சட்டம், பிரிட்டானிய - அமெரிக்க அரசமைப்புச் சட்டங்களைப் பார்த்து, அதிலுள்ள பல கூறுகளை - பழமையைக் காக்கும் பல கூறுகளை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு எதிரான சட்டம்.

அதனால் தான், எல்லா நிருவாக அதிகாரங்களையும் பெற்ற இந்தியத் தலைமை அமைச்சருக்கு மேல் - ஒரு குடிஅரசுத் தலைவர் இங்கே இருக்கிறார் - எந்த அதிகாரமும் இல்லாத தலையாட்டி-தஞ்சாவூர் பொம்மையாக! இது, மக்கள் நாயக நாடா என்று எல்லோரும் சிந்தியுங்கள்.

எல்லா நிருவாக அதிகாரங்களையும் கொண்ட ஒரு மாநில முதலமைச்சருக்கு மேல் - ஒரு மாநில ஆளுநர், துணை ஆளுநர் எதற்காக?

மத்திய அரசின் அய்ந்தாண்டுத் திட்டங்களும், மாநில அரசுகளின் அய்ந்தாண்டுத் திட்டங்களும்; ஆண்டு வரவு-செலவுத் திட்டங்களும் இருக்கும் போது, 790 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தலைக்கு ஆண்டுக்கு ரூபா 5 கோடி வீதம் தொகுதி மேம்பாட்டு நிதி ஏன்? 4200 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக 2 கோடி (அல்லது) ரூபா, 5 கோடி ரூபா தொகுதி மேம்பாட்டு நிதி ஏன்?

இது மக்களுக்கு எதிரான - கொள்ளையர் ஆட்சியா, அல்லவா என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்போம், வாரீர்!

- வே.ஆனைமுத்து

Pin It