ரத்தன் டாடா, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, கலாநிதி மாறன் - இது என்ன பட்டியல்? இந்தியாவில் உள்ள ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடும் பணக்காரர்களின் பட்டியல். திருப்பதி வெங்கடாசலபதி, பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன், பழனி முருகன் இது என்ன பட்டியல்? இது இங்குள்ள கல் முதலாளிகளின் பட்டியல். இந்தப் பட்டியலில் மிகுந்த பரபரப்போடு பணக்கார சாமி இடத்துக்கு முதல் நிலையில் முன்னேறி இருப்பவர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி.

1,70,000 கோடி அலைக்கற்றை ஊழலின் அரசியல் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், 1ஙூ இலட்சம் கோடி பத்மநாபசாமி கோயில் சொத்து மதிப்புப் பர பரப்பு, தொற்றுநோயைப் போல எங்கும் பற்றிக் கொண்டுள்ளது. இந்தச் சொத்து மதிப்பு இன்னும் பல மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசாமி கோயில் இப்போது நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான், படுத்த கோலத்தில் உள்ள பத்மநாபனை எரிக்கும் கண்களோடு ஏறிட்டுப் பார்க்கிறான்? ஏன்? திருப்பதி ஏழுமலையான் சொத்து மதிப்பு வெறும் 42,000 கோடி மட்டும்தான். ஆனால் பத்மநாபனின் சொத்து மதிப்பு, தங்கத்தின் விலையேற்றம் போல் நாளுக்குநாள் தாவிக் கொண்டேயுள்ளது. அக்கோவி லில் இதுவரை 5 நிலவறைகள் மட்டும்தான் திறக்கப் பட்டுள்ளன. தடை விதிக்கப்பட்டிருந்த 6ஆவது நில வறையையும் திறந்து கணக்கெடுக்குமாறு இப்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தங்கம், வைரம், நூற்றுக்கணக்கான கிலோ எடையில் பொற்குவியல்கள், மணிகள் பதித்த தங்கத் தேங்காய் முடிகள், பத்தரை கிலோ எடையில் 18 அடி நீள தங்கச் சங்கிலி, தங்கத் தட்டுகள், வெள்ளைக்காரன் கால, நெப்போலியன் காலத் தங்கக் காசுகள், இப்படி ஏராளம்.... ஏராளம்..... அம்மாடியோவ்... நம்ம முடிகிறதா நம்மால்! ஆனால் பொய்யல்ல. அத்தனையும் உண்மை.

பத்மநாபன் கோயில் திருவனந்தபுரம் நகருக்கு நடுவே ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்த பெரிய கோயில் ஆகும். வைணவர்களில் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோயில் கோபுரத்தின் உயரம் 100 அடி. அது 7 நிலைகளைக் கொண்டது. அதற்கு 1566ஆம் ஆண்டு அடிக்கல் தோண்டப்பட்டது. கருவறையில் படுத்த நிலையிலுள்ள பத்மநாப மூலவர் 18 அடி நீளம் கொண்டவர். கருவறைக்குள் அங்குள்ள மூன்று நடைவழியாய் போனால்தான் கடவுளின் முகம், உடல், கால் பகுதிகளைத் தனித் தனியாய்ப் பார்த்து வழிபட முடியும். இக்கோயிலைக் கட்டிய மன்னன் பெயர் மார்த்தாண்ட வர்மா.

இந்திய விடுதலைக்கு முன் இக்கோயில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமாய் இருந்தது. கோயில் மன்னர்களுக்குச் சொந்தம். ஆனால் அக் கோயிலுக்குள் உள்ள செல்வங்கள் அனைத்தும் உழைக் கும் மக்களுக்குச் சொந்தம். ஆம். பல்வேறு கொடுமை கள் புரிந்து, அந்த மக்களை ஆலைக் கரும்புபோல் சக்கையாய்ப் பிழிந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமே கோயிற் செல்வங்கள். கஜினி முகமது போன்ற இசுலாமிய அரசர்களும், இந்து மன்னர்களும் தாம் கொள்ளை யிட்டது கோயில்களில்தாம். கொள்ளையிட்ட பொருள் களைச் சேர்த்து வைத்ததும் கோயில்களில்தாம்.

குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னனாய் இருந்த மார்த்தாண்ட வர்மா, தன் ஆட்சிப் பரப்புக்கு அருகில் வளங்கொழிக்கும் நாடுகளாய்த் திகழ்ந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி பகுதிகளைக் கொள்ளையடித்த செல்வங்களைப் பத்மநாபன் கோயி லில் கொண்டு வந்து குவித்தான். ஆடு, மாடுகளைப் போல மக்களை அடித்து உதைத்து, அவர்களிடமிருந்து வரியாகப் பிடுங்கிய பணத்தில் ஆண்டவனுக்குப் பொன்னும் மணியும் பூட்டி அழகு பார்த்தான்.

‘மடுப்புனலும் செங்குருதிப் புனலும் பாய

வளவயலில் உழைத்திட்ட உழவன் வீட்டின்

அடுக்களையில் சோறில்லை வேந்தன் வீட்டு

ஆன்நெய்யில் சீரகச்சம்பா மிதக்கும்’

என்று இக்கொடுமை பற்றிப் பின்னாளில் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெறுவ தான சடங்குகள் நடந்து கொண்டிருந்த நேரம். இந்தி யாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் துண்டு துண்டு பகுதிகளில் ஆண்டு கொண்டிருந்த சுதேசி மன்னர்களையெல்லாம் சுதந்தர இந்தியாவுடன் இணைக்க முற்பட்டார். அப்போதைய திருவாங்கூர் மன்னன் பாலராம வர்மாவுடனும் மானியம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. மன்னன் தங்களுக்கு மானியமே வேண்டாம்; பத்மநாபசாமி கோயிலை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் போதும் என்று கோரி, அந்தக் கோரிக்கையில் வெற்றி யும் பெற்றுவிட்டான்.

கோயில்கள் மன்னர்களின் சொத்தாக இருக்கலாம். ஆனால் காலங்காலமாக அங்கே கொள்ளையடிக்கும் பெருங்கும்பலாக இருந்தது பார்ப்பனப் பெருச்சாளிகள் தான். இந்தச் சமூகக்கேட்டை மிகச் சரியாக உணர்ந்த காரணத்தால்தான் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் அனைத்தும் ஓர் அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர சட்டமியற்றப்பட்டது.

1923ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்றது. பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நீதிக்கட்சி ஆட்சி பல மக்கள் நலத் திட்டங்களைச் செயற்படுத்தியது. குறிப்பாக இந்துச் சனாதனப் பார்ப்ப னர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1923 ஏப்பிரலில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தது. இதனைப் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது நீதிக்கட்சியில் இருந்த சில பார்ப்பன அடிவருடிகளும் எதிர்த்தனர். இந்து, சுதேசமித்தரன் போன்ற ஏடுகள் கடுங்கண்டனம் தெரிவித்து ஆசிரியவுரைகள் தீட்டின.

இச்சட்டமுன்வடிவை எதிர்த்துத் ‘தீரர்’ சத்தியமூர்த்தி மாகாண சட்டமன்றத்தில் பேசும்போது ‘நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் இந்த அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவைச் சாதி, மத வேறுபாடின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்க வேண்டும்’ என்றார். இவர் கருத்தை எதிர்த்துப் பேசிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சி.நடேசனார், “வழக்கில் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் எல்லாச் சமயங்களாலும் போற்றப்படுகிற தமிழைப் புறக்கணிக்கிறார்கள்” என்றார்.

எப்படியாவது இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு முதலமைச்சர் பனகல் அரசர் சட்ட முன்வடிவில் சில திருத்தங்கள் செய்து 1925ஆம் ஆண்டு சனவரித் திங்களில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றினார். இச்சட்டத்தின் உள்ளடக்கங்கள் சில பின்வருமாறு :

1.     கோயிலின் தேவைக்கு அதிகமாக வருவாய் உள்ளது என்பதை அறநிலையத் துறை ஆய்ந்து முடிவு செய்யும்.

2.     கோயிலின் அதிக நிதியை அதே கோயிலின் கையிருப்பாக வைக்க வேண்டும்.

3.     அப்படிக் கையிருப்பாக வைத்திருக்கும் தொகையை ஒத்தகருத்தை உருவாக்கிக் கொண்டு பிற செலவினங்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே இன்றளவும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பல்வேறு ஏமாற்றுத்தனங்களைச் செய்து எப்படியோ இச்சட்டத்திலிருந்து விலக்குப் பெற்றுவிடும் சில கோயில்கள்தான் பார்ப்பனர்களின், பழைமைவாதிகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடுகின்றன. அந்தச் சிலவற்றுள் இந்தப் பத்மநாபசாமிக் கோயிலும் அடக்கம்.

(ஏற்கெனவே தில்லை நடராசர் கோயிலும் அப்படித் தான் இருந்த்து. ஆனாலும் அந்நிலை அண்மையில் மாற்றப்பட்டது என்றாலும் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்).

பட்டேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. பத்மநாபா கோயில் பலராம வர்மா கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

1991ஆம் ஆண்டு பலராம வர்மா இறந்தார். அதையடுத்து அவருடைய தம்பியான மார்த்தாண்ட வர்மா கோயில் உரிமையைத் தனக்குக் கோரினார். ஆனால் அதை எதிர்த்து சுந்தரராசன் என்கிற வழக் கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். ஐ.பி.எஸ். முடித்து விட்டு, மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பாதுகாப்புப் படையிலும் பணி யாற்றியவர். தன் பணிஓய்வுக்குப் பின் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த சுந்தரராசன் கடந்த 16.7.2011 அன்று தான் இறந்துவிட்டார் என்பது வருத்தமான செய்தி.

கேரள உயர்நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கை ஏற்று கடந்த 31.01.2011 அன்று இராமச்சந்திர நாயர், சுரேந்திர மோகன் என்னும் இருநீதிபதிகள் அமர்வு, பத்மநாபா கோயில் மார்த்தாண்ட வர்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல எந்தச் சட்ட உரிமையும் இல்லை; கேரள அரசே கோயிலின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தீர்ப்புரைத்துவிட்டது.

அப்போது முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இந்திய மார்க்சிஸ்டு பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அச்சானந்தன் ஆவார். மத விவகாரங்களைப் பொறுத்தவரை மார்க்சிஸ்டுகளும் இந்து மதவெறி அமைப்புகளும் ஒன்று என்கிற தன்மையில்தான் இந்த நாட்டின் வாக்குச்சீட்டு பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் நடந்து கொள்கிறார்கள். கடந்த சனவரி மாதத்தில் மகரசோதியைக் காணப்போன அய்யப்ப பக்தர்கள் அங்கு தோன்றிய ஒரு நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டார்கள். மகரசோதி ஏற்றப்படுவது குறித்து அறிவியல் அடிப்படையான விளக்கம் அரசின் சார்பில் தரப்பட வேண்டும் என்கிற ஒரு கோரிக்கை எழுந்தபோது சூரப்புலியான அச்சுதானந்தன் சுண்டெலியாகப் பதுங்கிக் கொண்டார். பத்மநாபா கோயில் செய்தியிலும் அவர் ஆட்சி வெண்டைக்காய்த்தனமாகவே நடந்து கொண்டது.

பத்மநாபா கோயில் வழக்கில் கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு நல்ல தீர்ப்பை அச்சுதானந்தன் அரசு ஒழுங்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

“பத்மநாபா கோயில் நிர்வாகத்தையும், அதன் சொத்துகளையும் ஏற்கும் மாநில அரசு, அவற்றைக் கவனித்துக் கொள்ள மூன்று மாதங்களுக்குள் ஓர் அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் கண்காணிப்பில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் வைக்கப்பட்டிருக்கும் விலை மதிப்புமிக்க செல்வங்கள் பட்டியலிடப்பட வேண்டும். அதன்பின் கோயில் வளாகத்தில் ஓர் அரங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். விலை மதிப்புமிக்க அந்த செல்வங்கள் அனைத்தும் மக்கள்முன் காட்சிப்படுத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் அச்சுதானந்தன் அரசு ஒரு மரக்கட்டை போலச் செயலற்றுக் கிடந்தது.

இந்த வாய்ப்பை மார்த்தாண்ட வர்மா நன்கு பயன்படுத்திக் கொண்டார். உச்சநீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கின்படி ஆர்.வி. ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் என்கிற இருநீதிபதிகள் அமர்வு கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதனால் கோயில் நிர்வாகம் இப்போது மார்த்தாண்ட வர்மாவின் கைகளில் உள்ளது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் அச்சுதானந்தன் தலைமையிலான அரசு தோல்வியைத் தழுவி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசும் கோயிலைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முனைப்புக் காட்டவில்லை. ஆனால் அரசின் சார்பில் கோயிலுக்குத் தேவைப்படும் அனைத்துப் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று கேரள சட்டப்பேரவையின் அமைச்சர் மானி என்பவர் அறிவிக்கிறார். இக்கோயில் பாதுகாப்புக்காக மாதம் ஒரு கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் பாழடிக்கப்படுகிறது. எல்லோரையும் கடவுள் காப்பாற்றி வருவதாக பக்தர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் ஏராளமான சொத்துகளைத் தன் பொறுப்பில் வைத்துள்ள எல்லாம்வல்ல இறைவனுக்கு இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வக்கில்லையா? இந்த நிலையில் கோயிலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போதுமான தல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அழுது வடிகிறார் கள். நகருக்கு நடுவில் கோயில் அமைந்திருப்பதும் செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலவறை களுக்கு அருகில் ஒரு சுரங்கப்பாதை அமைந்துள்ளதும் அவர்களை அச்சப்படுத்துகிறது. ஆனால் ‘அனந்தசயன பத்மநாபர்’ எந்தக் கவலையும் அற்றவராய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அது வெறுங்கல். வேறென்ன செய்யும்?

கேரள உயர்நீதிமன்றம் மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பில் நிலவறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற செல்வங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்று கருத்துச் சொன்னது. அரசுக்குச் சொந்தம் என்பதன் பொருள் மக்களுக்குச் சொந்தம் என்பதுதானே? ஆனால் காஞ்சி புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசங்க ராச்சாரி கோயில் சொத்துக்கள் அனைத்தும் மன்னர் குடும்பத்துக்குச் சொந்தம் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் இதே கருத்தைத்தான் சொல்கின்றன.

நாடு முழுவதும் கோயில்களிலும் மடங்களிலும் குவிந்துள்ள கோடிக்கணக்கான செல்வங்கள் அனைத் தும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்டவையாகும். அவற் றில் சிறுபகுதி அறியாமை இருளில் தவிக்கும் அப்பாவி கள் காணிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாய் அளித்தவை என்பதும் உண்மை.

கோயில் சொத்துக்கள் அனைத்தும் நாடு முழுவதும் அன்றாடம் கொள்ளையடிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பார்ப்பனர்கள் ஆண்டவனுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு, அதே தோற்ற முடைய போலி நகைகளைக் கொண்டுபோய்ப் பொருத்தி விடுகிறார்கள். இந்தக் கொடுமை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் அதிக அளவில் நடப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அண்மையில் செத்துப்போன - கடவுளின் அவதாரம் என்று சொல்லப்பட்ட சாய்பாபா அறையில் இருந்து பணமாக ரூ.11 கோடியும், தங்கமாக 98 கிலோவும் கைப்பற்றப்பட்டதாக 18.06.2011, தினமணி ஏட்டில் செய்தி வெளியானது. இத்தனைக்கும் தினமணி ஏடு சாய்பாபா சாவுக்கு அழுதுபுலம்பிய ஏடு ஆகும். ஆனால் அதே தினமணி ஏட்டில் 16.07.2011 அன்று சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தின் சார்பில் கடைசி பக்கத்தில் முழுபக்க விளம்பரம் தரப்பட்டிருந்த- தினமணி ஏட்டில் மட்டுமல்ல ஏராளமான ஆங்கில ஏடுகளிலும் தரப்பட்ட அந்த விளம்பரம், ‘சாய்பாபா பெயரில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்’ என்று ஓலமிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகும் சாய்பாபா அறைகளில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்படுவதாக அன்றாடம் செய்தித்தாள்களில் செய்தி வருகிறது. ‘குளிர் அறைகள் பக்கம்; குட்டிகள் சொர்க்கம்’ என்று கும்மாள மிடும் நித்தியானந்தாக்களின் திருவிளையாடல்கள், ‘லோககுரு’ எனச்சொல்லி ஊர் உலகத்தை ஏய்க்கும் சங்கராச்சாரிகளின் திருட்டுக் கொலைகள் ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கற்சிலைகளாக உள்ள பத்மநாபசாமிகள் வேண்டு மானால் படுத்துறங்கிக் கொண்டே இருக்கலாம். பாடு பட்டு அல்லலுறும் பாட்டாளி மக்கள் அப்படி ஒருக்காலும் உறங்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். பொங்கி எழுவார் கள். கடவுட் கதைகளின் பொய்மை உணர்வார்கள். போலிச் சாமியார்களைத் தெருவில் இழுத்து வந்து போட்டு, உதைத்துத் துவைப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

Pin It