சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக எழுதப்படும் இக்கட்டுரையில் எதையும் முடிந்த முடிபாகச் சொல்ல முடியாத இக்கட்டான நிலையுள்ளது. கடந்த 19.7.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமச்சீர் கல்வியைத் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

பேராசிரியர் ச. முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி கடந்த முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசால் ‘சமச்சீர் கல்வி - 2010’ என்கிற புதிய சட்டம் ஒன்று இயற்றப் பட்டது. அச்சட்டப்படி 2010-11இல் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டப்படியான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் கல்வியாண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் அந்தக் கல்வித் திட்டத்தின்படி 200 கோடிக்கும் மேலான செலவில் புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. செயலலிதா தலைமையில் அமைந்த புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் 22.5.2011இல் நடைபெற்றது. அந்த முதல் கூட்டத்திலேயே ‘சமச்சீர் கல்வித்திட்டப் பாடங்கள் தரமற்றவை; அதுபறி ஆராயப் புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும். அதுவரை சமச்சீர் கல்வி முறை நிறுத்தப்பட்டு பழைய முறைப்படியே பாடநூல்கள் வழங்கப்படும்’ என முடிவு செய்தது. தமிழகச் சட்டப் பேரவையிலும் அரசு இதுதொடர்பாகச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

புதிய அரசின் முடிவை எதிர்த்துப் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களால் தொடுக்கப்பட்ட வழக்கை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு இடைக் காலத் தடைவித்தது. தேவையற்ற பகுதிகளை நீக்கி விட்டு இதே கல்வி முறையைத் தொடரலாம் என்று வழி செய்தது. அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. 14.06.2011 அன்று அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘இதுபற்றி ஆராயத் தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கை உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட பிறகு, உயர்நீதிமன்றம் அவ்வறிக்கை மீது முடிவு அறிவிக்க வேண்டும். எல்லாம் மூன்று வாரங்களுக்குள் நடந்தாக வேண்டும்’ என்று கொம்பு சுழற்றியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசால் எல்லாச் சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டுத் தான் அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கை 5.7.2011 அன்று உயர் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அதன்மீது தான் கடந்த 19.7.2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தெளிவானதொரு தீர்ப்பை வழங்கியது.

‘சமச்சீர் கல்வியைத் தடைசெய்து தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லாது. அதனை ரத்து செய்கிறோம். சமச்சீர் கல்வி அடிப்படையிலான பாடநூல்களை 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் அனைத்திற்கும் 22.07.2011க்குள் வழங்கி முடிக்க வேண்டும்’ என ஆணையிட்டது.

81 பக்கங்கள் கொண்ட தமது தீர்ப்பில் நீதிபதிகள் பின்வரும் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர் :

‘சமச்சீர் கல்வியின் தரம் மற்றும் அதை அமல் படுத்தும் முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் வல்லுநர் குழுவுக்கு ஆணை யிட்டிருந்தது. இந்த ஆண்டு அமல்படுத்தலாமா என் றெல்லாம் ஆய்வு செய்ய ஆணையிடவில்லை. ஆனால் அந்த ஆணையை வல்லுநர் குழு தவறாகப் புரிந்து கொண்டு அறிக்கை தயாரித்துள்ளது.

வல்லுநர் குழுவின் இந்த அறிக்கை, தமிழக அரசு இவ்வழக்கில் எடுத்துள்ள நிலைபாட்டைத்தான் எதி ரொலிக்கிறது. அதுமட்டுமல்ல, அறிக்கை தயாரிக்கும் பணியை முற்று முழுதாகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சபீதா ஒருவர் மட்டுமே செய்துள்ளார். மேலும் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு ஏராள மான காரணங்களைத் தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அரசு முன் வைக்கவில்லை.

சமச்சீர் கல்விப் பாடங்களில் குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க.வின் கொள்கைகளை வெளிப்படுத்தக் கூடிய பாடங்கள் அதில் ஏறக்குறைய இல்லை. இந்தப் பாடத்திட்டத்தின் வழி மாணவர் மனங்களில் அரசியலை விதைத்திட முடியாது. இந்தப் பாடத்தில் படிக்கும் மாணவர்கள் தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற இயலாது என் பதை மெய்ப்பிப்பதும் கடினம்’ என்றெல்லாம் நீதிபதி கள் தமது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஆட்சி அமைந்த சில நாட்களுக்குள், அரசு பழைய பாடத்திட்டத்தை மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது என்றும், சமச்சீர் கல்வித் திட்டத்தையே கிடப்பில் போட அரசு முயல்கிறது என்றும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்தச் சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்துக்கே முரணனானது என்று நீதிபதி கள் சாடியுள்ளனர்.

சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை எதிர்த்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் சட்டத்திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததானது உயர்நீதிமன்ற ஆணையை மீறும் செயலாகும் என நீதிபதிகள் அரசைக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

சமச்சீர் கல்விப் பாடத்தில் அரசு ஆய்வு நடத்தி உரிய சேர்த்தல் நீக்கங்கள் செய்ய அரசுக்குச் சுதந்தரம் வழங்குகிறோம். பள்ளிக் குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியைச் சிறப்போடு நடைமுறைப்படுத்த அரசு நட வடிக்கை மேற்கொள்ளும் என்பது எங்கள் நம்பிக்கை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப் பட்டு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடிகின்றன. மாணவர்கள் பாடப் புத்தகங்களே இல்லாமல் பள்ளி களுக்குச் சென்றுவரும் அவலம் இன்றுவரை தொடர் கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டுப் பெற் றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பாருமே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இனியேனும் தமிழக அரசின் மனம் இரங்குமா என ஏங்கித் தவிக்கின்றனர். ஆனாலும் தமிழக அரசு விடுவதாய் இல்லை. மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு ஓடியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதிக்க வேண்டுமென்று 20.07.2011 அன்று வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை ஆய்வு எடுத்துக்கொண்ட ஜே.எம். பாஞ்சால், தீபக்வர்மா, பி.எஸ். சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றம் பிறப் பித்த ஆணைக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்ததுடன் பாடநூல்களை ஆகஸ்டு 2ஆம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. 26.07.2011இல் வழக்கு மீண்டும் வரும். தமிழக அரசு, குறிப்பாகத் தமிழக முதல்வர் செயலலிதா இதனைத் தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் என்று நோக்காமல் தனக்கும் கருணாநிதிக்குமான தன்மானப் பிரச்சனை என்பதுபோலப் பார்க்கிறார்.

முந்தைய தி.மு.க. அரசு தானாக முன்வந்த இந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. கல்வியாளர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக் கைகள் போராட்டங்களுக்குப் பிறகே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முன்வந்தது. இன்னும் சரியாகச் சொன்னால் இதுவுங்கூட சமச்சீர் கல்வி அல்ல. எல்லாப் பள்ளிகளுக்கான பொதுப்பாடத் திட்டம் மட்டுந்தான்.

சமச்சீர் கல்வியின் பாடத்திட்டங்கள் உலகத்தரத் துக்கு இல்லை என்ற ஒரே பொய்யைத்தான் தமிழக அரசு எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறது. இதனை 19.07.2011 அன்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு மறுத்துள்ளது. “அவசர கதியில் தரமற்ற கல்வித் திட்டத்தை முந்தைய அரசு கொண்டுவந்ததாகக் கூறு வதை ஏற்க முடியாது. தனித்தனியே குழுக்கள் அமைத்து, நான்கு ஆண்டுகளாக அனைத்துக் கோணத்திலும் அவற்றை ஆராய்ந்து, பல மாநிலங்களுக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்ட பிறகு தான் கடந்த அரசு சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தது” என்று தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிமுக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக் கையில், ‘சமச்சீர் பாடத் திட்டங்கள் கல்விக்கான தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.) 2005இல் வடிவமைத்த தேசியப் பாடத் திட்டத்தின் வடிவமைப்புக்கு ஏற்பத் தரமானதாக இல்லை. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழிப் பாடத்தில் இலக்கணப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன’ எனத் தோண்டித் தோண்டி சொத்தையான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறது. இது மருமகள் உடைத்தால் பொன்குடம்; மாமியார் உடைத்தால் மண்குடம் என்கிற கதைதான்.

இதுபற்றிச் சமச்சீர் கல்வி பாடநூல் உருவாக்கத்தில் பங்கேற்ற பேராசிரியர் கருணானந்தம் கீழ்வருமாறு கருத்துச் சொல்கிறார் :

“ஏறக்குறைய 100 பக்கங்களைக் கொண்ட 80 புத்தகங்களை, அதாவது 8000 பக்கங்களை விடிய விடியப் படித்தால்கூட, மூன்று அமர்வில் படிக்க முடியாது. அப்படி இருக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி அமைக்கப்பட்ட குழு - எப்படிச் சமச்சீர் கல்வி தர மற்றது என்று கூறி, 500 பக்கங்களுக்கு அறிக்கை வழங்கி இருக்கிறது என்பது பெரிய கேள்வி. இந்த அறிக்கையை இந்தக் குழுவினர் யாரிடம் வாங்கி னார்கள்?

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆய்வு செய்த வர்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பாடங் களை ஆய்வு செய்தார்களா? அவற்றை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றால், அவை தரமானது என்பதற்கு என்ன அளவுகோல்? தரம் என்பது தனியாக இல்லை. வேறொன்றோடு ஒப்பிடும் போதுதான் தரமானதா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். ஆனால் இவர்கள் எதனோடும் ஒப்பிடாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை இங்கே அறிக்கையாகக் கொடுக் கிறார்கள். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, இவர்கள் எடுத்த முன் முடிவிற்குப் பயன்படுத்திக் கொண்டுள் ளனர். அதேபோல ஒரு குழு ஆய்வு செய்யும் போது, பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். ஆனால் இவர்கள் சாதி, வர்க்க, கொள்ளை அரசியலுக்குச் சமச்சீர் கல்வியைப் பலியாக்கிவிட்டனர். (தலித் முரசு, சூன் 2011, பக்கம் 7).

இராமகோபாலன் போன்ற இந்துத்துவ அமைப் பினரும் துக்ளக் சோ போன்ற பார்ப்பன ஊதுகுழல் களும் பாடத்திட்டத்தில் திராவிட இயக்கக் கருத்துகளும், பெரியார் உள்ளிட்டோரின் கருத்துகளும் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன என்பது குறித்துக் கருணானந்தம் குறிப்பிடும்போது, “சங்கரர், மத்துவாச்சாரி, விவே கானந்தர், காந்தி என யாரையும் விலக்கி வைக்காமல் தான் சமச்சீர் பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக்கி னோம். ஆனால் இவர்களால் இருட்டடிப்புச் செய்யப் பட்ட பெரியார் உள்ளிட்டவர்களைப் பாடத்திட்டத்தில் கொண்டுவந்ததைத் தான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் சமச்சீர் கல்வியை ஒதுக்கிவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார். இவர்களுக்குக் கருணாநிதி ஆகாதவராய் இருக்கலாம். ஆனால் கோவை உலகத்தமிழ் செம் மொழி மாநாட்டில் இடம்பெற்ற திருவள்ளுவரின் படம் இவர்களை என்ன செய்தது? அதையும் ஓட்டிகள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டே மறைக்கச் செய்யும் வெட்டி வேலை ஏன்?

ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் எனப் பல தரப்பாரையும் கொண்டு, விவாதித்துத் தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாகக் கொண்டுவரப் பட்ட தரமான பாடத்திட்டம் இது. இதில் குறைகள் உள்ளதாக இன்றைய அரசு கருதினால் இதனினும் சிறந்த கல்வியாளர்களை - வல்லுநர்களைக் கொண்டு, மேலும் நன்கு ஆராய்ந்து அடுத்த ஆண்டு மாற்றிக் கொள்ளலாமே! அதற்குள் என்ன அவசரம்? வங்கக் கடல் உடனே பொங்கித் தமிழ்நாட்டையே காவுகொள் ளுமா என்ன?

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கல்விக் கடை நடத்தும் தனியார்ப் பள்ளிக் கொள்ளையர்கள் வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதிக அளவிலான கல்விக் கட்டணக் கொள்கையைத் தடுக்கும் நோக்குடன் முந்தைய அரசால் நியமிக்கப் பட்ட நீதிபதி கோவிந்தராசன் குழு, நீதிபதி இரவிராச பாண்டியன் குழு போன்ற எந்த குழுவின் பரிந்து ரையையும் இவர்கள் துரும்புக்கும் மதிப்பதில்லை. கோடிகோடியாய்ப் பணம் சுருட்டுவதையே கொள்கை யாய்க் கொண்ட இரும்பு நெஞ்சம் கொண்ட ‘இனியவர் கள்’ இவர்கள். ஆம் இன்றைய அரசுக்கு இவர்கள் மிகவும் அணுக்கமானவர்கள். அதனால்தான் பல இலட்சம் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் எவரையும் உச்சநீதிமன்றம் பணித்த வல்லுநர் குழுவில் தமிழக அரசு உள்விடவில்லை. மாறாகத் தமிழே தெரியாத, தமிழ்மண் பற்றிய சுவடே அறியாத மேட்டுக்குடிவாசிகள் போட்டிப் போட்டுக் கொண்டு அந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

இவர்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொள்ளும் தன்னல நோக்கர்கள் என்றபோதிலும், “சமூக யதார்த்தம் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள்”. பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் படிப்பது வேலைக்குப் போவதற்காக; வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிப்பதற்காக என்ற ‘பிராக்டிக்கல்’ கோணத்தில் மட்டுமே சிந்திக்கிறார்கள். அதை முற்றிலும் நியாய மற்றது என ஒதுக்கிவிட முடியாது. இன்றைய அரசு பெற்றோர்களின் பக்கம் நிற்க நினைக்கிறது. தங்கள் குழந்தைகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுத் தொழிற்கல்விக்குப் போவதை விரும்பும் பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற் காகத் தங்கள் சக்திக்கு மீறிச் செலவிட நேர்ந்தாலும் அவர்கள் கடன் வாங்கிக்கூட அந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அந்தப் பள்ளி களில் பயின்றவர்களுக்குத்தான் மருத்துவ, பொறியி யல் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கின்றது என்ற யதார்த்தம் தான் இதற்குக் காரணம்” என்று சொல்லி முழுப்பூசணிக் காயைப் ‘பதார்த்தத்தில்’ மறைத்து பாவப்பட்ட ஏழை மக்கள் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுகிறார்கள்.

உலகமயச் சூழலில் தனியார்மயம் என்பது தவிர்க்க முடியாதது என இவர்கள் தத்துவமழை பொழிகிறார்கள். அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல் பட்டால் பெற்றோர்கள் தாங்களாகவே அவற்றை நாடிச் செல்வார்கள். தனியார்ப் பள்ளிகள் தரைமட்டமாகி விடும். அரசு மருத்துவமனைகள் சரியாய் இல்லை என்பதால் தானே மக்கள் தனியார் மருத்துவமனை யைத் தேடுகிறார்கள். தனியார் தொலைக்காட்சி, தனியார்ப் பேருந்து என எல்லாவற்றுக்கும் தரச்சான்று முத்திரையைக் குத்தத் தயாராய் உள்ள இவர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி முதலான ரத்தங் குடிக்கும் காட்டேரிகள் அரசாங்கச் சொத்தைத் திருடி பணக்காரர்கள் ஆகும் தரங்கெட்டத் தனத்தைப் பேச முன்வருவார்களா? நாட்டுடைமை வங்கிகளில் கோடிக் கணக்கில் வந்த மக்கள் வரிப்பணத்தை வாங்கிச் சுருட்டி ஏப்பம் விடும் வன்னெஞ்சர்கள் யார்? தரங்கெட்டுப் போன தனியார் முதலாளிகள் தானே? துக்ளக் சோ பார்ப்பான், சுப்பிரமணியசாமி போன்ற இந்தத் தரங்கெட்டவர்கள், அந்தத் தரகு முதலாளிகளுக்குத் தானே மாமா வேலை பார்த்து மகிழ்ந்து திரிகிறார்கள்?

உலகில் போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்கப் பாடத் திட்டங்கள் கடினமாவதைத் தடுக்க முடியாது என்பது இவர்களின் வாதம். எனவே சமச்சீர் கல்வி என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குடும்பச் சூழல், சமூகச் சூழல் போன்ற புறச்சூழல்கள் சமமாக இல்லாத போது பொதுப் பாடத்திட்டத்தின் மூலம் மாத்திரமே சமத்துவம் ஏற்பட்டுவிட முடியாது என்று இவர்கள் சத்தியமடித்துப் பேசுகிறார்கள். தன் குழந்தைக்கு எந்தக் கல்வி வேண்டும் என்பது பெற்றோர்களின் உரிமையாம். அதில் எந்த அரசும் தலையிடக் கூடாது என்கிறார்கள்.

பிறவியில் தீண்டாமை காண்பது மனுதருமம். கல்வியில் தீண்டாமை காண்பது இவர்களின் புது தருமம். அதனால் பொதுப் பாடத்திட்டம் என்ற பெயரைக் கேட்டாலே இவர்களின் மலக்குடல் புரட்டிக் கொண்டு நாறுகிறது. சுப்பனுக்கும் குப்பனுக்கும் வேண்டுமானால் சுடுகாட்டில் போய்ப் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொள்ளுங்கள். எங்களிடம் காசிருக்கிறது. எங்களை நம்பும் ஏழைகளிடம் ‘இங்கிலீஷ் படிப்பே உயர்ந்தது’ என்று நம்பும் மூடத்தனம் இருக்கிறது. கல்வியில் சமத்துவம் கொண்டுவரப் போவதாய்ச் சொல்லி எங் களிடம் காது குத்தாதீர்கள் என்று கறாராகப் பேசுகிறார் கள். இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம், ஆட்சி, நீதித்துறை போன்றவற்றின் கையாலாகாத் தனத்தை அவர்கள் சரியாகவே புரிந்து கொண்டுள் ளார்கள்.

‘கல்விக் கொள்ளைக்குக் கால் விலங்கு இடுங்கள் அய்யா’ என்று நாம் ஓடிப்போய் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினால் அவர்கள் திருடன் கையிலேயே திறவுகோலைக் கொடுத்துத் திருப்பி அனுப்புகிறார்கள். நம்மிடம் கொஞ்சநஞ்சமாய் இருந்த கல்வி உரிமை யை ஏற்கெனவே பறித்துக் கொண்ட தில்லி எசமானர் கள் நவோதயாப் பள்ளி, நடுவண் பல்கலைக்கழகம் என்றெல்லாம் சொல்லி நம் தலையில் கால்வைத்து அழுத்துகிறார்கள். இங்குள்ள திராவிடக் கட்சி அரசு களும் தமிழ் வழிப் பள்ளி நடத்த ஏற்பிசைவு கேட்டால் ஆயிரம் சொத்தைக் காரணங்களைச் சொல்லி முடக்கு வார்கள். எசமான தில்லியில் கட்டளைக்கு எடுபிடி களைப் போல பணிவார்கள்.

ஏழைகளின் தலையில் மிளகாய் அரைக்க இங் குள்ள கல்வி முதலாளிகள் சமச்சீர் கல்வியின் வருகை யைத் தடுக்கிறார்கள். எல்லோர் தலையிலும் சேர்த்து மிளகாய் அரைக்க விரைவில் பன்னாட்டுக் கல்வி வர உள்ளதை எப்படித் தடுப்பார்கள்?

சமச்சீர் கல்வியைத் தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் பரவலாக எதிர்ப்புகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. இவை கல்வி உரிமைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல் கடைக்கோடி மனிதர்க்கும் உரிய வாழ்வுரி மைப் போராட்டமாக பற்றிக் கொள்ள கனன்றெழு வோம்! கல்வி வணிகக் கொள்ளையோடு எல்லா வகைக் கொள்ளையையும் முற்றிலுமாக எரித்திடுவோம்.

Pin It