“இந்துமதம்” என்று ஒரு மதம் இல்லை, பிராமண மதம், வேதமதம் என்பதே இந்து மதம் என்று சொல்லப்படுகிறது, இந்து மதம் பிறவி வேறுபாட்டை நிலைக்க வைக்கிற வருணாசிரமத்தில் தான் உயிர் வாழ்கிறது, வருணாசிரமத்தின் விளைவு தான் தீண்டாமை.

பார்ப்பன மதத்தின் அடுத்த உயிர்நாடியாக இருப்பது பார்ப்பனியப் புரோகிதம். கடவுள் வணக்கம் தொடங்கி நல்ல நிகழ்ச்சிகள், தீய நிகழ்ச்சிகள் எல்லா வற்றிற்கும் பார்ப்பனரையே குருவாக அழைப்பதாலும், சமற்கிருதத்தையே ஓதுவதாலும் பார்ப்பனியம் உயிர் வாழ்கிறது. சூத்திரர், வைசியர், சத்திரியர் ஆகிய எல்லோரையும் இது ஆட்கொண்டிருக்கிறது. இது, குறைந்தது குப்தர் ஆட்சிக்காலம் முதல் - வடநாட்டிலும், பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முதல் தென்னாட்டிலும் நடைமுறையில் இருக்கிறது.

பார்ப்பன மதத்தின் அடுத்த உயிர்நாடி சிலை வணக்கம் என்பதுதான். இது இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் இருக்கிறது. இதை வெகு மக்களின் தலைவர்கள் உருவாக்கி மக்களிடையே பரப்பினர். சிலை வணக்கம் தவிர்த்த மற்றெல்லா வற்றையும் பார்ப்பனர்களே உருவாக்கினர்.

பார்ப்பனர்களின் சமுதாய, அரசியல், பொருளாதார, வாழ்வியல் கொள்கைகள் மிகவும் தெளிவாக மனுநீதி யிலும், அர்த்த சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளன. பார்ப்பனரல்லாத மக்களுள் பெரும்பலோர் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை; இவற்றைப் படித்ததில்லை; படித்தவர்கள் இவற்றை ஆய்வு செய்வதில்லை. அப்படிச் செய்யாததால்தான் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையானது உண்மையில் தங்களுக்கே உரியது - தங்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என மூடத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

புத்தருக்குப் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மகாத்மா ஜோதிராவ் புலே, பண்டித அயோத்திதாசர், சொக்கமேளா, ஸ்ரீநாராயண குரு, வடலூர் வள்ளலார், அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகர், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் அம்பேத்கர் இவர்கள் 1870 முதல் ஒரு நூற்றாண்டுக் காலம் மேலே கண்ட மூட நம்பிக்கைகளைத் தகர்க்க எல்லாம் செய்தனர். “பார்ப்பன மதம் எப்போது தோன்றியது? அதற்கு மூல கர்த்தா யார்?” என்று கேட்பது மிகப் பெரிய கேள்விகள் என்று எல்லோரும் கருதுகி றார்கள். ‘வேதமதம் அனாதி காலந்தொட்டு இருப்பது’ என்று விடை கூறி, இந்த ஒரு கேள்வியிலிருந்து பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்து மதத்தைப் பின்பற்றுகிற எந்தத் தலைவரை வேண்டுமானாலும் - எந்தக் கர்த் தாவை வேண்டுமானாலும் நீங்கள் பின்பற்றுங்கள்; மனுநீதி சொல்வதைப் புறக்கணியுங்கள்; பார்ப்பனப் புரோகிதம் செய்வதைக் கைவிட்டுவிடுங்கள் ; சிலைகளை உடையுங்கள்; சிலைகளை வணங்குவதை நிறுத்துங்கள்; பார்ப்பானை அவமதியுங்கள்; வருணம் மீறித் திருமணம் செய்துகொள்ளுங்கள். ‘இவற்றை எல்லாம் செய்த பிறகும் நீங்கள் இந்துக்கள் தான்’ என்று கூறியதன் மூலம், பார்ப்பனியத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதைப் பார்ப்பான் தடுத்துவிட்டான். இதைப் பற்றி ஒவ்வொரு வரும் நுμக்கமாகச் சிந்திக்க வேண்டும். இவை இன்றுவரையில் உயிரோடு இருப்பதற்குக் காரணம் இக் கொள்கைகள் உண்மையானவை என்பதால் அல்ல. இவற்றை எல்லாம் அந்தந்தக் காலத்து அரசர் களும் அரசுகளுமே மக்கள் பேரில் சுமத்தின. மக்கள் எல்லோரும் இவற்றை மீறாமல் பின்பற்ற வேண்டும்; மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசுகள் தாம் விதித்தன; அப்படி மீறாமல் தண்டிக்கவும் செய்தன.

இந்து அரசர்கள், இசுலாமியப் பேரரசர்கள், வெள்ளை யர்கள், இந்தியர்கள் என்கிற எல்லா ஆட்சிக்காலங் களிலும் இதுவே பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். இன்றும் மனுநீதி, பராசரஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் இவற்றின் பெயரால் - பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் என்கிற பெயரால் - இந்திய அரசமைப்புச் சட்டம் இவற்றைக் காப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவற்றை எதிர்த்து இந்தியாவில் தோன்றிய எல்லா இயக்கங்களும் 1870க்குப் பிறகே தங்களுக்குச் சொந்தமான கிழமை ஏடுகள் மாத ஏடுகள் மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்தன. ஆனால், வெகு மக்களுக்குப் படிப்பறிவு மறுக்கப்பட்டு வந்ததால் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே பரவவேண்டிய அளவுக்குப் பரவவில்லை. அத்துடன் இந்திய அளவிலான ஓர் அமைப்பைக் கட்டுவதை ஆதித் திராவிடர் இயக்கத் தலைவர்களோ, திராவிடர் இயக்கத் தலைவர்களோ வட இந்தியாவிலோ - தென்னிந்தியாவிலோ எப்போதும் செய்யவில்லை.

தென்னிந்தியாவில் ஆதித்திராவிடர் இயக்கம் 1890களிலேயே மூர்க்கமாக எழுந்தது; திராவிடர் இயக்கம் 1912 முதலே நல்ல புரிதலோடு எழுந்தது. இவர்கள் வைத்த முதலாவது கோரிக்கை ஆட்சியில் வகுப்புவாரியாகப் பங்கு வேண்டும் என்பதுதான். திராவிட இயக்கம் வைத்த அடுத்த கோரிக்கை தென்னாட்டுத் திராவிட மக்கள் தில்லிக்காரர் ஆதிக்கத்திலிருந்தும் - பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட - பிரிட்டிஷ் ஆட்சியால் நேரடியாக ஆளப்படுகிற ஒரு தனிநாடு வேண்டும் என்பதுதான். 1917இல் டாக்டர் டி.எம். நாயர் முன்வைத்த திராவிட நாடு கோரிக்கை 1926இலும், 1931லும் தில்லி மாநிலங்கள் அவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் - பெரியாரால் 1939இல் வைக்கப்பட்ட அதே கோரிக்கை எல்லாம் மேலே கண்ட உள்ளடக்கத்தோடுதான், 1945 ஆகஸ்டு வரையில் இருந்தன.

அப்படி அவர்கள் கோரியது தனிச் சுதந்திர நாடு ஆகாது. “பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் அடங்கியிருப்பதைவிட, நேரடியாக வெள்ளையனுக்கு அடங்கியிருக்கிறோம்” என்பதையே அவை குறிக் கோளாகக் கொண்டவை. “வெள்ளையன் ஆதிக்கம், வடநாட்டான் ஆதிக்கம், பார்ப்பான் ஆதிக்கம் இவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட தனிச் சுதந்திர திராவிட நாடு வேண்டும்” என்கிற கோரிக்கை 1945 செப்டம்பர் 30ஆம் நாளில்தான் பெரியார் அவர்களால் முன் வைக்கப்பட்டது. இதுவே சரியான ஒன்று. “திராவிட நாடு” என்று பெரியார் கருதிய தென் மாநிலங்கள், 1-11-1956இல் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதற்கு இடையில் முன்வைக்கப்பட்ட தட்சிணப் பிரதேச ஏற்பாட்டை எதிர்த்து ஒழித்த பெரியார் - மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையை மனமார வரவேற்றார். அதன் சரியான விளைவாக “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தனிச் சுதந்தரத் தமிழ்நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார். அதற்கான சில போராட்டங்களையும் அவர் நடத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1957இல் முதன் முதலில் தேர்தலில் ஈடுபட்டது. 1962 வரையில் திராவிட நாடு கோரிக்கையை ஏற்றிருந்த அக்கட்சி, பின்னர் - “தேர்தலா? கட்சியா?” என்பதை முன்வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் - திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அதிகாரப் பூர்வமாக 1963இல் கைவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், 1968இல், “சுய மரியாதைத் திருமணம் செல்லும்” எனும் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டம் இந்துச் சட்டப்படி ஏற்கப்பட்டுள்ள திருமண வடிவங்களுள் ஒன்றாக ஆகும் தகுதியை மட்டுமே பெற்றது. அது இந்தியா முழுவதற்குமான சட்டமாக ஆக முடியாது. ‘அந்த வடிவம் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய திருமண முறை’ என்னும் தகுதி அச்சட்டத்திற்கு இல்லை.

சுயமரியாதை இயக்கம் போன்ற ஓர் இயக்கம் மற்ற மாநிலங்களில் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் எந்த எதிர்ப்புமின்றி அச்சட்டத்தை நிறைவேற்றியதுபோல, வேறு எந்தச் சட்டமன்றமும் இப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற முடியாது. இதற்கான இணக்கமான முயற்சியை இந்திய அளவில் செய்வதற்குத் திராவிட முன்னேற்றக் கழகமோ, மற்ற திராவிட இயக்கங்களோ இன்றுவரை முன்வரவில்லை. இது பற்றிய சரியான புரிதலும் இவர்களுக்கு இல்லை.


சுயமரியாதை இயக்கம் அனைத்திந்திய இயக்க மாக ஆக வேண்டும் என, 1937இலேயே பெரியார் ஈ.வெ.ரா. அறிவுறுத்தினார். திராவிடர் இயக்கம் அல்லது பார்ப்பனரல்லாதார் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டுமென்று 1971லேயே தெளி வானதொரு கோரிக்கையைப் பெரியார் முன்வைத்தார். அனைத்திந்திய இயக்கமாக உருவாக்குவதற்கு ஏற்ற வலிமையான ஒரு செய்தி ஊடகம் வேண்டும் என்பதை அவர் தெளிவுபட உணர்ந்திருந்தார். சென்னையில் இருந்து வெளிவரும் The hindu ஆங்கில ஏட்டின் தரத்திற்கு ஒப்ப - திராவிட இயக்கத்தினருக்கு ஒரு ஆங்கில நாளேடு வேண்டும் எனத் திட்டவட்டமாக அவர் அறிவித்தார். இது மிகவும் தொலைநோக்கான பார்வை கொண்டது. ஏன்? எப்படி?

திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோதே - அனைத்திந்திய ஆட்சிமொழி, படிப்பு மொழியான ஆங்கிலத்தில், 1917இல் “Justice” என்கிற நாளேட்டைத் தொடங்கினர்; “திராவிடன்” என்கிற தமிழ்நாளேட்டையும், “திராவிடப் பிரகா சிகா” என்கிற தெலுங்கு நாளேட்டையும் தொடங்கினர். “Justice” ஆங்கில ஏடு வெள்ளையருக்கு உண்மையை உரைப்பதாகவும் பார்ப்பனருக்குப் பதில் கூறுவதாகவும் திறமையாக வெளியிடப்பட்டது.

இன்று நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை கைவிடப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட பன்மொழிச் செய்தி ஊடகங்கள் திராவிட இயக்கத்தாருக்கு இல்லாமலிருப்பது மிகப் பெருங்குறையாகும். இன்றுள்ள திராவிட இயக்க நாளேடுகள்”, “விடுதலை”யும், “முரசொலி”யும் மட்டுமே ஆகும். இவை தமிழர்களுக்கு மட்டுமே செய்திகளைத் தருகின்றன.

ஒரு நாளேட்டைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, இந்தியிலோ மற்ற மொழிகளிலோ நடத்துவதில் உள்ள துன்பங்கள் பார்ப்பனரல்லாதாருக்கும், பார்ப்பனருக்கும் ஒரே மாதிரியில் உள்ளவை யாகும். ஆயினும், இவ்வளவையும் தாண்டி, பார்ப்பனர் மற்றும் வடநாட்டினர் தங்களின் சமுதாய ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் இவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் தொலை நோக்கத்துடன் 190 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில நாளிதழ் களை வெளியிட்டு வருகின்றனர். 120 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிற அப்படிப்பட்ட ஆங்கில, இந்தி நாளேடுகள் 40க்கு மேல் உள்ளன.

எடுத்துக்காட்டாக “The Statesman” நாளேடு 1818இல் நிறுவப்பட்டது - இன்றுவரை வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து வெளிவரும் “The Hindu” ஏடு 1878இல் நிறுவப்பட்டு, இன்று வரை வெளியிடப்பட்டு வருகிறது. “The Times of India” நாளேடு 1838இல் தொடங்கப்பட்டு 172 ஆண்டுகளாக வெளியிடப் பட்டு வருகின்றது. “Central Chronicle” 52 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இவையன்னியில் The Indian Express, The Asian Age, The Patriot மற்றும் கேரளாவி லிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் ஆங்கில நாளேடுகள் வெளிவருகின்றன. கேரளாவிலுள்ள மலையாள மனோரமா, மாத்ருபூமி நிறுவனம் என்னும் பெயரில் ஆங்கில, மலையாள நாளிதழ்களை 126 ஆண்டுகளாக வெளி யிடுகிறது. ‘தினமணி’ தமிழ் நாளேடு 1934 முதல் வெளிவருகிறது.

இந்தி மொழியில் Banaras Akbar (1845), Praja Hitaishi (1861), Hindustan (1883), Bharat Bharat (1887), Rajasthan Kesri (1920), மேலும், Dainik Jagaran, Dainik Bhaskar, Amar ujala, ஆகிய ஏடுகளும் வெளியிடப்படுகின்றன. தமிழர், திராவிடர், பார்ப்பனரல்லாதார், ஆரியர் “தமிழ்நாடு தமிருக்கே” - “திராவிடநாடு திராவிடருக்கே” என்னும் கோட்பாடுகளை அடியோடு இவை எதிர்ப்பவையாகும். ஈழ விடுதலை யையும் இவர்கள் எல்லோரும் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மேலே கண்ட எல்லா ஏடுகளும், தமிழ் நாட்டிலிருந்தும் பிறமொழி மாநிலங்களிலிருந்தும் வெளிவருகிற தாய்மொழி ஏடுகளும் இந்தி, இந்தியா, இந்து ஆதிக்கக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவையாகும். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு, இச் சூழலில் இந்தியாவை உடைப்பது என்றால் என்ன? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

(I) இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி. நீதிமன்ற மொழி. அலுவல் மொழி என்று கூறுகிற அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள விதிகள் 343, 344, 345, 346, 347 முதலான பிரிவுகள் அடியோடு நீக்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். அத்துடன் இரயில்வே, அஞ்சல், வங்கி உள்ளிட்ட எல்லா நடுவண் அரசுத் துறைகளின்கீழ் - எல்லா மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்களிலும் அன்றாட அலுவல்களை நடத்தும் நிருவாக மொழி யாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குசராத்தி, பஞ்சாபி, வங்காளம், அசாமி என அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக வந்து சேர இணக்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இத்துடன் இந்திய நாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசிடவும், வினாக்கள் எழுப்பவும் உரிமை வேண்டும். உச்சநீதி மன்றத்தில் அவரவர் தாய்மொழியில் முறையீடு செய்ய உரிமை வேண்டும். மய்ய அரசுக்கு, மாநில அரசுகள் விடுக்கும் மடல்கள் அவரவர் மாநில மொழியில் விடுக்கப்பட உரிமை வேண்டும். கணினியிலும் இணையத் தளத்திலும் இப்போது மொழிபெயர்ப்புப் பணிகள் திறமையாக நடைபெறு கின்றன. மய்ய அரசு சீர்மைகருதி ஒரே நேரத்தில் எந்த இந்திய மொழியில் உள்ள செய்தியையும் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்த்துக் கொள்ள முடியும்.

(II) இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய அயலகப்பணி என்கின்ற “அனைத் திந்தியப் பணிகள் தேர்வு ஆணையத்தை” அடியோடு அகற்ற வேண்டும். இந்திய உயர் அதிகார வர்க்கம் தான் உயர் ஆங்கிலக் கல்வி காரணமாகவும் - மேல் சாதியில் பிறந்த செல்வாக்கின் காரணமாகவும் - பெரிய சொத்துடைமை காரணமாகவும் இன்றுவரை ஆளும் ஆதிக்க வர்க்கமாக விளங்குகிறது. இந்த அதிகார வர்க்கத்தைத் தெரிவுசெய்து எடுக்கின்ற களமாக உள்ள இந்த அமைப்பு உடைக்கப்பட்டு, அந்தந்த மாநிலத்தவரே அவரவர்களுக்கான ஆட்சி அலுவலர் களைத் தெரிவு செய்துகொள்ளும் அதிகாரம் 9 வேண்டும். அந்த அதிகாரம் என்பது எல்லா மத, சாதி மக்களிடையே விகிதாசாரம் பிரித்துத் தரப்பட ஏற்ற வகையில் சட்டம் செய்யப்பட வேண்டும்.

(III) இந்தியா முழுவதிலும், தரையின்கீழ் உள்ள கனிமங்கள் இந்திய அரசுக்குச் சொந்தம் என்பதால், இந்தியப் பெரும் பணக்காரர்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் அந்நிய நாட்டுப் பெருங்குழும முதலாளிகளும் இவற்றைக்கொள்ளையடித்து இந்தியாவை அடிமைநாடாக ஆக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்த உரிமை இந்திய அரசிடமிருந்து அடியோடு பறிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் பாதுகாப்பு, நாணயம் அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகளைத் தவிர்த்த மற்றெல்லா அதிகாரங்களும், முற்றாக அந்தந்த மாநிலங்களுக்கு வந்து சேரவேண்டும். இன்று படையையும் காவல்துறையையும் பயன்படுத்தி நாசமாக்கப்படும் ஜம்மு - காசுமீர், நாகாலாந்து, மணிப்பூர், அசாம் முதலான எல்லா மொழி மாநிலங்களுக்கும், தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களுக்கும் -“பகிர்வு செய்யப்பட்ட தன்னாதிக்கம் என்கிற அடிப்படையில் தன்னாட்சி உரிமை வந்து சேர நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து வழிகாண வேண்டும்.

இந்த ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக்கொடி என்கிற உரிமையும் வேண்டும். இதையே இந்தியாவுக்குள் தன்னுரிமை என்கிறோம்.

“இந்தியாவை உடைத்தல்” என்பதும் இதுதான். இந்தி, இந்தியா, இந்து ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் இதன்வழியாகவே நிறைவேறும்.

தமிழ்நாட்டில் மட்டும் - தமிழரிடையே மட்டும் செயல்பட்டுக்கொண்டு எவ்வளவு காலத்துக்கு நாம் இயங்கினாலும் நாம் கோரிய பலன் விளையாது. இந்தியா முழுவதிலும் சென்று நாம் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட வேண்டும். இக்கோரிக்கைகளைப் பரப்புகிற வலிமையான ஊடகங்களாக, நாளேடுகள் தமிழிலும், நாள் மற்றும் வார, நாள் ஏடுகளாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட வேண்டும். இவற்றைச் செய்வதை விடுத்து, ஆயுதம் தாங்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. ஆனால், தத்தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய பல இலட்சக்கணக்கானோர் இப்படிப்பட்ட பணிகளுக்குத் தேவை. தனித்தனிக் குழுக்களாக இயங்குவோர் எல்லோரும் அடிக்கடி கூடுவதும், மனம்விட்டுக் கலந்துபேசுவதும் - நோக்கங்களிலும், கருத்துகளிலும், ஹிμம்முறைகளிலும் உள்ள வேறுபாடுகள் இவற்றைப் பையப் பைய நீக்கிக்கொண்டு, ஒரே குறிக்கோளை வரித்துக்கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதவை யாகும்.

அமைப்புகள் பலவாக இருப்பினும், குறிக்கோள் ஒன்றாக இருந்தால், அதன் வலிமை பெரிதாக இருக்கும். எத்தனைக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் பார்ப்பனர்களைப் பார்த்துச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கருத்துகளைக்கொண்ட பார்ப்பனர்கள் தங்களின் சமுதாய ஆதிக்கம், இன நலன், பண்பாட்டு ஆதிக்கம் இவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஒன்றுபட்டு இயங்குவதைப் பார்த்துத் தமிழர்களாகிய நாமும் நல்ல படிப்பினை களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒருவரையருவர் காலை வாரிவிடுவதை விட்டு விட்டு, முடிந்தவரையில் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றுபட்ட கருத்துள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். இதுகருதி எத்தகைய பங்களிப்பை ஆற்றவும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி ஆயத்தமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட தன்மையில் ஒரு தலைமுறைக் காலத்துக்கேனும் பாடுபட்டால் அன்றி, நம் தலைவர்கள் ஒரு நூற்றாண்டுக் காலம் உழைத்து நம் விடுதலைக்கென உருவாக்கித்தந்த கொள்கைகளை எந்த ஒரு துறையிலும் நாம் வென்றெடுக்க முடியாது. இவைபற்றித் தனித்தனியாகவும் கூட்டாகவும் சிந்திப்போம்; வாருங்கள்!

(சிந்தனையாளன் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

Pin It