ambedhkar 400அம்பேத்கர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நிரம்பக் கல்வி கற்றவர். பரோடா மன்னரின் நிதியுதவியால் மேல் நாடுகளுக்குச் சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் படித்து, ஆராய்ச்சிகள் பல செய்தவர். தான் சார்ந்த தீண்டப்படாத வகுப்பு மக்களின் உயர்வுக் காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். கல்வியில், வேலை வாய்ப்பில், அரசியல், அதிகாரங்களில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித்தந்தவர். இந்து மதத்தைத் தனது பலம் கொண்டவரையில் எதிர்த்தவர்.

தலித் மக்களின் பிறவி இழிவான தீண்டாமையைப் போக்கிக் கொள்வதற்கு இந்து மதத்திலிருந்து வெளி யேறி புத்த நெறி ஏற்பதுதான் ஒரே தீர்வு என சொல்லி நிறுவியவர். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவியை அலங்கரித்தவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக் காகக் கட்சி ஒன்றைத் தொடங்கியவர். நேரு, காந்தி உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். உலக அறிவாளிகள் பலரால் பெரிதும் போற்றப் பட்டவர். இப்படி தான் சார்ந்த தலித் மக்களாலும், தான் சாராத தலித் அல்லாத மக்களாலும், உணர்ந்தோ, உணராமலோ மேதை அம்பேத்கரைப்பற்றி பேசுகிறார்கள்.

கிருத்துவ மதத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரின் கையாளாக அவர் இருந்தார். அதனால்தான் இந்து மதத்தை எல்லை கடந்து எதிர்த்தார். அவரது நடை, உடை, பாவனைகளில் மேற்கத்திய கலாச்சாரமே வெளிப்பட்டது. ஏகாதிபத்திய ஆங்கில அரசுடன் சமரச போக்கையே கையாண்டார். இந்தியர்கள் வெள்ளை யர்களுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிக் கொண்டி ருந்த காலக்கட்டத்தில் கூட நம் இந்திய அரசியல் தலைவர்களுடன்தான் அவர் தலித் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பாசிச ஆதரவாளர். அவர் ஒரு வலதுசாரி.

இந்தியாவைப் பிரித்து தீண்டப்படாத மக்களுக்குத் தனி நாடு வேண்டும் என கேட்டவர். “கடுங்கோபக்காரர். பேசும்போது கடுமை யான வார்த்தைகளைப் பயன்படுத்துவார். சிடுமூஞ்சிக் காரர், சிரிக்கத் தெரியாதவர் தோழமை உணர்வு இல்லா தவர்”- இப்படி அம்பேத்கரை வெளிப்படையாகப் புறக் கணித்தவர்கள் வேறு கோணத்தில் விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர்.

மேற்சொன்ன இரண்டு சாரார் கூறும் அவரது குணநலன்கள் பலாப்பழத்தின் தோலைப் போன்றது. பலாப்பழம் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இல்லை. இருந்தும் ஏன் வாங்குகிறோம்? தோலை நீக்கி உள்ளி ருக்கும் சுளையின் சுவையை அனுபவித்த அறிவு இருப்பதினால் வாங்குகிறோம். ஆனால் அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் அது போன்று நமது அறிவைப் பயன் படுத்த மறுக்கிறோம். அம்பேத்கரிடம் பலாச்சுளைப் போன்ற கூறு அப்படி என்னதான் இருந்தது? பலாச் சுளையைப் பார்த்தவர்கள் எப்படிச் சொல்லாமல் விட்டார்கள்? இந்தக் கோணத்தில் நாம் அம்பேத்கரைப் பார்த்தால் அவரது ‘இடதுசாரியம்’ பளிச்செனத் தெரியும். வெளிப்பார்வைக்கு வலதுசாரி போல் தெரிந்தாலும், அவர் ஒரு இடதுசாரிதான்.

தடுக்கப்பட்ட கல்வி நீரோடையில் தாவிக்குதித்து, எதிர்நீச்சல் போட்டுக் கரையைக் கடந்தவர். உலக அறிவியல் அறிஞர்களுடன் விவாதித்து அவர்களின் பாராட்டுகளையும், பட்டங்களையும் பெற்ற அம்பேத்கர், அறிவு நிறை குடத்துடன்தான் இந்தியா திரும்பினார். பெற்றதற்குத் திருப்பித்தரும் பண்புகொண்ட அவர் முதலில் பரோடா மன்னர் சமஸ்தானத்தில்தான் ராணுவச் செயலாளர் என்ற உயர்பதவியில் வேலைக்கு சேர் கிறார். என்னதான் மன்னருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் பெற்றிருந்தாலும், அலுவலகக் கடைநிலை ஊழியர்கள்கூட கோப்புகளை அவர் கையில் தராமல் அவரது மேசை மேல் வீசி எறிவார்கள். அவர் நாற் காலியை விட்டு எழுந்து போனபின் கீழேயுள்ள விரிப்பு துவைக்கப்படும். அலுவலகத்தில் அவருக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைப்பதில்லை.

சமஸ்தானத் தின் உள்ளேயும் சரி! வெளியேயும் சரி! அவர் தங்கு வதற்கு இடம் தர மறுக்கிறார்கள். கடைசியாகப் பெட்டி படுக்கையுடன் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து வாய்விட்டு அழுகிறார். நிரம்பப் படித்த தனக்கே இப்படி ஒரு நிலையென்றால், கல்வியற்ற, உடைமையற்ற கோடிக்கணக்கான தலித் மக்களின் நிலை எப்படி இருக்கும் என்றெண்ணிய அவர், இதுவரை தான் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் எல்லாம் ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்குப் பயன்படுத்துவது என தீர்மானிக்கிறார்.

கடனுதவி பெற்று ‘ஊமைகளின் தலைவன்’ என்ற பத்திரிக்கை தொடங்குகிறார். அப்பத்திரிகையில் “இந்தியர் கள் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற விரும் பினால், அவர்கள் முதலில் தீண்டத்தகாதவர்களுக்கு விடுதலை அளிக்கட்டும்” என்று எழுதினார். இது அவரது போராட்டக்களத்தில் வீசிய முதல் எறிகுண்டு என்று கூடச் சொல்லலாம். சில நாள்களுக்குப் பிறகு மேலும் படிக்கவேண்டி இலண்டன் பயணமாகிறார். அங்கு நான்கு ஆண்டுகள் நிறையப் படித்து ஆய்வுக் கட்டுரைகள் பல சமர்ப்பித்து, முனைவர் பட்டங்கள் பலப் பெற்று, இந்தியா திரும்புகிறார். தமது அறிவைச் சமூகத்திற்குப் பயன்படுத்த எண்ணி ‘சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர் நலச்சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தித் தலைமையேற்று வழிநடத்துகிறார். அவரது அரசியல் நடவடிக்கையில் தீவிரம் தொடங்குகிறது.

“பழங்கால வாழ்க்கை முறைறையே சார்ந்து வாழ்வது நல்லதல்ல. காலம் மாறும்போது கருத்துகளும் கட்டாய மாக மாறித்தான் ஆகவேண்டும்” என்கிறார். மேலும், “தீண்டத்தகாதவர்களும், பார்ப்பனரல்லாதாரும் இணைந்து போராடினால் நாம் நமது அடிமைத் தனத்திலிருந்து தப்பித்து விடலாம்”என்ற சமூக மாற்றத்திற்கான விதையை ஊன்றுகிறார்.

இப்போதிருக்கும் தலித்துகளுக்கான தலைவர்கள் இப்படி பேசுவார்களா? மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி கற்று திரும்பியவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவார்களா? இன் றைக்கிருக்கின்ற தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், எழுச்சித்தமிழர், புரட்சிப்புயல், தமிழ்க்குடிதாங்கி, தமிழின வேங்கை, புலி, நரி... போன்ற பட்டதாரிகளா கட்டும், இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கு ஓயாமல் சுடரேந்தி ஓடிக் கொண்டிருக்கும் வடநாட்டுச் சமூக நீதி வெங்காயப் போராளிகளாகட்டும், பொதுவுடைமை விற்கும் புது வியாபாரிகளாகட்டும், இந்த தலைவர்களைப் கண்முன்னால் நிறுத்திப் பார்த் தால் அம்பேத்கரின் ‘இடதுசாரியம்’ நமக்கு விளங்கும்.

இடதுசாரியம் என்பது கேள்விக்கேட்பது, கலகம் செய்வது, மறுப்பது, எதிர்த்து நிற்பது, போராடுவது, ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பது, ஒடுக்கப்பட்டோர்க்குக் குரல் கொடுப்பது, அழுத்தப்பட்டோர்க்கு நியாயம் கேட்பது, அடக்குமுறைகளுக்கு அடிபணியாதது என்ற வகைகளில் புரிந்து கொண்டால்தான் அம்பேத்கருக்குள் இருக்கும் அந்தப் பலாச்சுளையினைக் கண்டெடுக்க முடியும். பலாச்சுளை, பலாச்சுளை என்பது வேறொன்றுமல்ல. அவர் ஒரு வர்க்கப் போராளி, அவர் ஒரு பெண்ணியப் போராளி. இந்த இரண்டு தன்மைகள் கொண்டதுதான் அந்த பலாச்சுளை, இந்நாள்வரை அதை மறைத்து, ஒளித்து வைத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்களும், எதிர்ப் பாளர்களும்.

“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்றார் மேதை மார்க்சு. வர்க்கப் போராட்டம் பேசியவர்கள், மார்க்சியம் பேசியவர்கள், தம்மை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொண்டவர்களால் இந்நாட்டில் ஒரு கடுகளவு மாற்றத்தையாவது கொண்டு வர முடிந்ததா? என்ற கேள்வியுனூடே அம்பேத்கரை நோக்கினால் அவரது இடதுசாரியம் மேலும் தெளிவாக விளங்கும். ஆயிரம் அடி ஆழத்திருப்பவனை மேலே கொண்டு வந்து, அவனுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைக் கொடுப்பதுதான் அம்பேத்கரின் இடது சாரியம். ஆழத்திவிருப்பவனை அங்கேயே வைத்துக் கொண்டு அவனது உரிமைகள் பற்றி பேசுவது மற்ற வர்களின் இடதுசாரியம். இங்குதான் அம்பேத்கரைக் புரிந்துகொள்ள தவறிவிட்டோம்.

இதன்போக்கு எப்படி இருக்கிறது என்றால், அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் எதிரி என்பது போல் சித்தரிக்கிறார் கள். அப்படியென்றால் அவர் பொதுவுடைமையின் எதிர், “அனைத்துலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!” என்ற மார்க்சின் முழக்கத்திற்கு எதிரான வர் என்கின்றனர். அப்படியானால் பாட்டாளி வர்க்கத் தின் உழைப்பைச் சுரண்டுகிற முதலாளி வர்க்கத்தின் ஆதரவானவர் என்றுதானே பொருள். உண்மையில் இவர்கள் அம்பேத்கரைப் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறார்களா? என்பதுதான் கேள்வி.

அம்பேத்கர் பொதுவுடைமைக்கு எதிரானவரும் இல்லை. மார்க்சியம் படிக்காதவரும் இல்லை. அவர் தொடங்கிய அரசியல் கட்சிக்குச் சுதந்தர தொழிலாளர் கட்சி (Independent Labour Party) என்றுதான் பெயர் சூட்டுகிறார். 11 நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடியைக் கட்சிக்கொடியாக உருவாக்குகிறார். 11 நட்சத்திரம் என்பது அன்றைய மாகாணங்களைக் குறிக்கிறது. “நிலங்கள் சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடப்பதும், நிலத்தை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும்தான்

வறுமைக்குக் காரணம். புதிய, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளமும், பதவி உயர்வு அளித்தல், வேலை செய்யும் நேரம் நிர்ணயித்தல், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தல், சுகாதார மான குடியிருப்புகள் அமைத்துத் தருதல், தொழிற்சாலை களை அரசே ஏற்று நடத்துதல் போன்றவைகள் சட்டங் களாக்கப்படும்” எனத் தேர்தல் அறிக்கையாக அறிவித்தார்.

விவசாயிகள், தொழிலாளர்களின் போராட்டங்களுக்குத் தலைமையேற்று வழி நடத்தியிருக்கிறார். ‘உலகி லுள்ள கம்யூனிஸ்டுத் தலைவர்கள் அனைவரும் படித்துள்ள புத்தகங்களைவிட தான் அதிகமான அளவில் அதுபற்றிய நூல்களைப் படித்திருப்பதாகவும், கம்யூனிஸ்டுகள் பிரச்சனைகளின் நடைமுறை தன் மையை ஒருபோதும் காண்பதில்லை” என்றும், உடைமை உடையவர்; உடைமை இல்லாதவர்; பணக்காரர்-ஏழை; சுரண்டுவோர்-சுரண்டப்படுவோர் என உலகில் இரண்டே வகுப்புகள்தான் உள்ளன” என்றும், “சுரண்டுவோரின் செல்வச் செழிப்பில்தான் சுரண்டப்படுவோரின் உழைப்பு அடங்கி இருக்கிறது என்றும் சாதி, இன, வேறுபாடு கருதாமல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஓரணியில் நின்று போராடுவதே வறுமையிலிருந்து விடுபடுவதற்கு வழியாகும்” என்றும், “தொழிலாளர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமானால் உங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனியத்தை அடியோடு கிள்ளி எறியுங்கள்’ என்றும், ‘சுதந்தரம் பெற்ற உடனேயே முதலாளித் துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராடு வதற்காகத் தொழிலாளர்கள் தமக்கெனத் தனியாக அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்” என்றும் சொன்ன அம்பேத்கர், ஒரு கட்டத்தில் தொழிலாளர், விவசாயிகள் என்ற

உழைக்கும் வர்க்கத்தினர் பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஒரு அய்க்கிய முன்னணியாகச் செயல்பட்டிருக்கிறார். அப்படி யென்றால் உழைக்கும் வர்க்கத்தின் மீது கம்யூனிஸ்டு களைவிட கூடுதலான அக்கறையுடன்தான் இருந்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுடன் ஒன்றாக இணைந்து களப்பணியாற்றுகிறார். பின் அவர்களைக் குறை சொல்கிறார் என்றால் கம்யூனிசக் கொள்கையைவிட அதை வழிநடத்திய தலைவர்கள் மீது அவர் வைக்கும் விமர்சனமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

வைஸ்ராய் அரசில் அமைச்சராகப் பங்கெடுத்த அம்பேத்கர், தொழிலாளர் நலத்துறையையே கேட்டுப் பெற்றார். அமைச்சர் என்ற முறையில் இந்தியா முழுக்கச் சுற்றுப்பயணம் செய்தார். இன்றைய அமைச்சர்கள் அதிகாரப் போதையில் தள்ளாடுவதுபோல் அல்லாமல், பல தொழிற்சங்கங்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தொழிலாளர்கள், இந்தியாவில் தொழிலாளர்களின் அரசை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடவேண்டும். இதுதான் என் நோக்கமாகும். இந்தியா சுதந்தரம் அடைவது மட்டும் போதாது; அதைவிட மிக முக்கியமானது, அந்தச் சுதந்தரம் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்பதேயாகும்” என்று குறிப்பிடுகிறார். நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை என்றிருந்ததை 8 மணி நேரமாகக் குறைத்துச் சட்டமியற்றினார். பல்வேறு நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தினர் போராடி, எண்ணற்ற உயிர்களை இழந்து அதன்மூலம் வென்றெடுத்த 8 மணிநேர உழைப்பு என்பது, இந்தியச் சமூகத்தில் இரத்தம் சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் அம்பேத்கர் சட்டமாக்கியது, அவரைப் பாட்டாளிகளின் தலைவர் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? உலகச் சட்டங்கள் படிக்காமல், மார்க்சியம் படிக்காமல் இதைச் செய்திருக்க முடியுமா? தான் தொடங்கிய கட்சிக்குக் சுதந்தரத் தொழிலாளர் கட்சி’ என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்!

இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகிறார் அம்பேத்கர். இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இரவு பகலாகத் தனது உடலை வருத்திக் கொண்டு அரசமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா தயாரித்து முடிக்கிறார். இதற்கு முன்பே நேருவின் அறிவுறுத்தலின்படி சர்.பி.என்.ராவ் என்பவரால் இச் சட்டம் தயாரித்துக் கொடுக்கப்படுகிறது. பின் அவர் இந்துக்களுக்கான சட்டத் தொகுப்பு மசோதா தயாரிக்கும் பணியில் மூழ்குகிறார். அம்மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்கிறார். அவர் எழுதிக் கொடுத்த இந்துச்சட்டச் சீர்திருத்தம் பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கியது. இந்துப் பார்ப்பனக் கும்பலால் இந்துச்சட்ட மசோதா நிறைவேறாமலிருப் பதற்கான பல்வேறு முயற்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கின்றன. இந்துச் சட்டத்தொகுப்பபு விவாதத்திற்கு விடப்படுகிறது.

மூன்று நாள்கள் நடந்த இவ்விவாதத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பார்ப்பனர்களின் சதி வேலைக்கு நேரு உடன்படுகிறார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அம்பேத்கர், பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெறியேறு கிறார். மேதை அம்பேத்கர் பதவி விலகியது தான் சார்ந்த தலித் மக்களுக்காக இல்லை. பார்ப்பனப் பெண்களையும் சேர்த்து ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் உரிமைக் காகத்தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அம்பேத்கர் எழுதிய புரட்சிகரமான சட்டத்தின் குறிக்கோள்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவை :

1. பெண்களுக்குச் சொத்துரிமை; 2.ஒருதார மணம்; 3. மணவிலக்கு உரிமை; 4. சாதி மறுப்பு திருமண அங்கீகாரம்; 5. சடங்கு மறுப்பு திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்; 6. ஜீவனாம்சம்; 7.மறுமணம்; 8.குழந்தை மரணத்தடை; 9.வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிரான தண்டனை; 10.பெண்கள் மீதான வன்கொடு மைகளுக்கு எதிரான தண்டனை போன்றவைகளாகும்.

பெண்ணுரிக்கைகாகத் தனது அமைச்சர் பதவியையே துறந்த மாமேதைதான் அம்பேத்கர். ஆனால் எல்லாத்துறைகளிலும் முதல் இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் எத்தனைப் பெண்களுக்கு இவ்வரலாறு தெரியும், பெண்ணின் விடுதலைக்கு இந்தியாவில் தொண்டாற்றியவர்கள் இவரை விடவா ஒருவர் இருக்க முடியும்? பார்ப்பனப் பெண்கள் வேண்டுமானால் தெரியாதது போல் நடிக்கலாம்; பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நசுக்கப்பட்ட பெண்களே! நீங்களுமா?

அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளை, மார்க்சியத்தை ஏதேதோ விமர்சித்திருக்கலாம். அது வெறுப்பின் பாற்பட்டதல்ல. அக்கறையின் பாற்பட்டது. மார்க்சியத்தின் முன்னோடி பவுத்தம் என்பதினால்தான் அவர் புத்த மதத்தைத் தழுவினார். அவர் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய-சப்பான் பண்பாட்டு விழாவில் வரும் தலைமுறையினர் புத்தர் அல்லது காரல் மார்க்ஸ் இருவரில் ஒருவரைத்தான் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்” என்று பேசியிருக்கிறார் என்றால், இருவரையும் ஒன்றுபோல் பாவித் திருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். அதேபோல் அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்னதாக அவர் மூன்று முக்கிய நூல்கள் எழுதினார்.

அதில் ஒன்றுதான் “புத்தரும், காரல்மார்க்சும்” என்ற நூல், இறுதிகாலத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதைக் கணக்கில் கொண்டு தொடர்ந்து எப்படி இருந் திருப்பார் என எண்ணுவதும் பகுத்தறிவின் பாற்பட்டது தான். இடதுசாரியான, தொழிலாளர்களின் தலைவரான, பெண்ணுரிமை பேணுபவரான அம்பேத்கர் ஒரு உண்மையான கம்யூனிஸ்டாகவும், உண்மையான மார்க்சியவாதியாகவும் இருந்திருப்பார்.

Pin It