உலக மானிடத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகைகளிலும் இன்றியமையாது வேண்டப்படுவது மின் ஆற்றல். நீரைப்போல - காற்றைப் போல இன்றியமையாதது மின் ஆற்றல்.

ஆனால் மாசுபட்ட - அழுக்குச் சேர்ந்த நீர் மானிடத்துக்குக் கேடு தருவது. அதேபோல் நஞ்சு கலந்த - அழுக்குப்படுத்தப்பட்ட காற்று உயிருக்கு உலை வைப்பது.

அணுமின் ஆற்றல் அத்தகையது தான்.

அணுமின் உலை வெடித்தால் எவ்வளவு கேடு நேரும் என்பதை 1986இல், சோவியத்து நாட்டில், செர்னொபைல் அணுஉலை வெடித்த போது ஏற்பட்ட பேரழிவுகளைக் கொண்டு உலகம் பாடம் கற்றிருக்க வேண்டும்.

இன்று சோவியத் நாடு இல்லை - இரஷ்யா இருக்கிறது. இரஷ்யா முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இன்று அமெரிக்காவுடனும் சீனாவுடனும் போட்டி போட முயன்று, அதில் இரஷ்யா திசை தவறிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று பெரிய நாடுகளுடனும் தொழிலிலும் - தொழில்நுட்பத்திலும் போட்டி போடுவது ஜப்பான்.

ஜப்பான் நாட்டின் மின் ஆற்றல் ஆக்கத்துக்காக, 54 அணுஉலைகள் உள்ளன. அவற்றின் வழியாக ஜப்பான் நாட்டின் மின்தேவையில் 30 விழுக்காடு மின் ஆற்றல் உருவாக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று ஃபுகுஷிமா தலிச்சி (Fukushima Dalichi) அணுஉலை. அது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலிருந்து 240 கிலோ மீட்டர் வடகிழக்கில் உள்ளது.

அங்குள்ள அணுஉலை 11.3.2011இல் வெடித்தது.

அதன் உடனடி விளைவாக அங்கு 19,000 மக்கள் இறந்தனர்; 1,60,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்; 20 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் குடியிருக்க முடியாமல் ஆகிவிட்டது; இன்று 12 மாத காலம் ஆனபிறகும் அப் பகுதியில் 3,40,000 மக்கள் தற்காலிகக் குடிசைகளில் வாழ வேண்டியவர்களாகிவிட்டார்கள். எனவே உட னடியாக, 54 அணுஉலைகளுள் 52இன் இயக்கம் நிறுத்தப்பட்டு, அவை பழுதுபார்க்கப்படுகின்றன. மீத முள்ள 2 உலைகள் மட்டுமே இன்று இயக்கப்படு கின்றன.

அதனால் மின்தட்டுப்பாடு அதிகமாகி வருகிறது. வருகிற கோடைகால மின்தேவையில் 10 விழுக்காடு தட்டுப்பாடு ஏற்படும் என்று ஜப்பான் கவலைப்படுகிறது.

இப்போது பழுது பார்ப்பதற்காக மூடப்பட்ட மின் அணு உலைகளை மீண்டும் தொடங்கப்படுவதைப், பெரும் பான்மையான ஜப்பானிய மக்கள் எதிர்க்கிறார்கள்.

இதுபற்றிய ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை, 13.4.2012 அன்றைய, அசாஹி (Asahi) என்கிற ஜப்பானிய செய்தித்தாள் வெளியிட்டது.

சென்ற கிழமையில் எடுக்கப்பட்ட அந்த வாக்கெடுப்பில் 100க்கு 57 பேர் “அணுஉலை வேண்டாம்” என்ற கருத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 100க்கு 80 மக்கள் - அணுஉலைக்கு அரசினர் செய்யப்போகும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டனர்.

இப்போது ஜப்பானில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை ஈடுகட்ட வேண்டி, அரசினர் டீசலையும், இயற்கை எரிவளியையும் (Liquified Natural Gas) இறக்குமதி செய்கின்றனர். (“The Statesman”, New Delhi, 14.3.12).

தொழில் வளர்ச்சியிலும், தொழில்நுட்ப அறிவி யலிலும், எழுத்தறிவு வளர்ச்சியிலும், பன்மொழி அறிவுத் திறத்திலும் இந்தியாவைவிடப் பல மடங்கு முன்னேறிய நாடு ஜப்பான்.

ஜப்பானே தட்டுத்தடுமாறித் தத்தளிக்கிற நிலை யிலுள்ள போது, மானங்கெட்ட இந்திய அரசு - அறிவு நுட்பத்தையும், தொழில்நுட்பத்தையும் பதப்படுத்தப் பட்ட யுரேனியத்தையும், அணுஉலைக்கான கருவி களையும், உதிரி உறுப்புகளையும்; இவற்றைப் பொருத்தவும், இயக்கவும், பழுதுபார்க்கவும் வேண்டப்பட்ட இரஷ்யப் பொறியாளர்களையும் இறக்குமதி செய்து, 21ஆவது அணு மின் உலையைக் கூடங் குளத்தில் எதற்காக இயக்க வேண்டும்? ஏன் இயக்க வேண்டும்?

தென்குமரி நாட்டையும், அங்கு அதிகமாக வாழும் மீனவர்களையும், சிறு-குறு வேளாண் மக்களையும்; சிறு-குறு தொழில் நிறுவனங்களையும்; திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களையும், ஆடு, மாடு களையும், காடுகளையும், மீன் வளத்தையும் அழித்து ஒழிக்கவா - கூடங்குளம்?

வேண்டாம் கூடங்குளம் அணுஉலை! வேண்டாம் அணுமின் ஆக்க உலை!

Pin It