“ஆ! பீட்டர்! உன்னை இங்கு சந்திப்பேன் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் ஜான் பிளாக்பர்ன் தனது நண்பனை வரவேற்றார்.

“ஆனால் நீ இருப்பதைத் தெரிந்து கொண்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று புன்சிரிப்புடன் பதிலளித்தார் பீட்டர் கிங்.

“உன்னை நான் கடைசியாக லீவர்பூல் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்படும் முன்னால் பார்த்தது. பல வருடங்களுக்குப் பின் இந்த 1837ஆம் ஆண்டில் இந்த மதுரை நகரத்தில் உன் னைப் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை”.

“ஏன் மழுப்புகிறாய் ஜான்! என்னைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்கிறதே என்று உன் உள்ளம் சொல்வதை அப்படியே வெளியே சொல்லேன்”.

“உன்னை நான் இங்கிலாந்தில் பார்த்திருந்தால் நிச்சயமாக அப்படித்தான் சொல்லி இருப்பேன். ஆனால் இவ்வளவு தொலைவு கடந்து இந்த மதுரையில் சந்திக்கும் போது உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. சரி! நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். ஆங்காங்கே மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு கள் பற்றித் தெரிந்து கொண்டு குறிப்பு எழுதி வைக் கிறேன்”.

“அப்படிச் சொல்லிக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். அப்படித்தானே! நீ செய்யும் செயல்களால் யாருக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா? இப்பொழுது என்னைப் பார். நான் இந்த மதுரை மாவட்டத்திற்குக் கலெக்டராக இருக்கிறேன். இந்நகரை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கி இருக்கிறேன். இதன்மூலம் இந்நகரத்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அதனால் ஏற்படும் பொரு ளாதார வளர்ச்சியில் நம் தாய்நாட்டிற்கு அதிகமான செல்வங்களை அனுப்ப முடியும்.”

“அப்படிச் சொல். எதைச் செய்தாவது இங்கிலாந்து நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். அதனால் மற்ற நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டு வதைப் பற்றி உனக்குக் கவலை இல்லை. அதை நீ தேசபக்தி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்.”

“நிச்சயமாக. என் நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்குவதை நான் தேசபக்தி என்றுதான் நினைக் கிறேன்.”

“நான் அப்டி நினைக்கவில்லை. தேசபக்தி என்பதே ஒரு மாயையான உணர்வு. உலக மக்கள் அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கான வழி யைக் காண்பதுதான் உண்மையான மானுடம் என்ற நினைக்கிறேன்.”

“போதும் நண்பனே! உன்னுடைய உபதேசத்தைப் பள்ளி நாட்களிலேயே கேட்டுக் கேட்டு அலுத்து விட்டேன். நீ இப்பொழுது வந்த விஷயம் என்ன? அதைச் சொல்.”

“என்னுடைய ஊர் சுற்றும் வேலையின் ஒரு பகுதியாகவே இங்கு வந்திருக்கிறேன். இங்குவந்த உடன் நீ கலெக்டராக இருப்பதைத் தெரிந்து கொண்டு உன்னைப் பார்க்க வந்தேன். இவ்வூரில் ஒரு வாரமோ இரண்டு வாரங்களோ இருந்து, சுற்றிப்பார்த்து விட்டு வேறு ஊருக்குக் கிளம்பி விடுவேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துக்குப் புறப்பட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.”

“அப்படி என்றால் இரண்டு ஆண்டுகள் பொழுதைப் போக்குவதற்கு உன்னிடம் பணம் இருக்கிறது என்று சொல். சரி! சரி! இவ்வூரைச் சுற்றிப் பார்ப்பதற்குத் துணையாக யாரையாவது அனுப்புகிறேன். நீ வெட்டி யாகச் சேகரிக்கும் விவரங்களைத் தேடவும் அவன் துணையாக இருப்பான்.”

“நன்றி, ஜான்! நான் தமிழ்மொழியை ஓரளவு கற்றுக்கொண்டுவிட்டேன். இருந்தாலும் சரளமாக உரையாட முடியவில்லை. நீ அனுப்பும் ஆணின் துணையுடன் நீ சொல்வது போன்ற வெட்டியான விவரங்களை நன்றாகச் சேகரித்துக் கொள்வேன்.”

“கோபித்துக் கொள்ளாதே! பீட்டர். உன்னுடைய அறிவுத்திறனுக்கு நீ மட்டும் இந்தக் கிழக்கு இந்தியக் கம்பெனியில் உழைத்தால் நிச்சயம் என்னைவிடச் சிறப்பான நிலையில் இருந்திருப்பாய். நம் தாய் நாட்டிற்கும் நிறைய செல்வங்கள் சேர்ந்திருக்கும்” என்று கூறிக்கொண்டே தன் உதவியாளர் மைக்கேல் திர்க்கலை அழைத்து “மிஸ்டர் திர்க்கல், இவர்தான் பீட்டர் கிங். பள்ளியில் படிக்கும் நாளிலிருந்து எனக்கு நண்பர். இப்பொழுது இந்நகரத்தைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார். இவர் ஊருக்குத் திரும்பும் வரையில் என்னுடைய வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்யவும். உள்ளூர்க்காரர் யாரையாவது இவருக்கு துணையாக இருக்க ஏற்பாடு செய்யவும்” என்று ஆணையிட்டார். மைக்கல் திர்க்கலும் “வாருங்கள் மிஸ்டர் கிங்” என்று அவரை அழைத்துச் சென்றார்.

வெளியே வந்த உடன் பீட்டர் கிங் உதவியாளரை நோக்கி “மிஸ்டர் திர்க்கல்” என்ற உடன் அந்த உதவியாளர் “என்னை நீங்கள் மைக்கேல் என்றே கூப்பிடலாம்” என்று கூறினார். “ஆனால் நெருக்க மானவர்களைத்தானே இரு பெயரை (ஊhசளைவநநேன சூயஅந) வைத்து அழைக்க முடியும்? இப்பொழுது அறிமுகமான தங்களை நான் குடும்பப் பெயரை (ளுரசயேஅந) வைத்து அழைப்பதுதானே முறை?” என்று பீட்டர் கிங் கூறவும், “நீங்கள் கலெக்டருடன் பேசுவதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நானும் உங்களைப் போல ஊர் சுற்றியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் எங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக... வேண்டாம், வேண்டாம் அப்படிச் சொல்வது பொய்யாகத்தான் இருக்கும். என்னுடைய துணிச்சல் குறைவு காரண மாக அப்படி இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க உங்களை என்னுடைய நெருங்கிய நண்பனாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை உங்கள் நெருங்கிய நண்பனாக ஏற்றுக்கொள்கிறீர்களா மிஸ்டர் கிங்?”

“மைக்கேல்! இனிமேல் நீ என்னை பீட்டர் என்றே அழைக்கலாம். நாம் நெருங்கிய நண்பர்களாகவே இருப்போம்” என்று பீட்டர் கிங் கூறவும் “பீட்டர்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறிய மைக்கேல் திர்க்கல், மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார்; பின் “பீட்டர் நீ எங்கெங்கு செல்ல விரும்புகிறாய், சொல். இவ்வலுவலகத்தில் சங்கர ஐயர் என்று ஒருவர் வேலை செய்கிறார். அவரை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வேறு வாகன வசதி வேண்டுமானால் சொல்” என்று கேட்க, “வாகன வசதி எதுவும் வேண்டாம்; இந்த ஊர் மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்களோ, அதேபோல் பயணம் செய்தால் தான் நான் தேடும் விவரங்கள் கிடைக்கும். நீ சங்கர ஐயரை எனக்குத் துணையாக அனுப்பினால் போதும்” என்று பீட்டர் கிங் பதிலளித்தார்.

மைக்கேல் திர்க்கல் ஏதோ ஞாபகம் வந்தவராக “பீட்டர்! இந்த சங்கர ஐயர் புலால் உணவை வெறுப்பவர். நீ சாப்பிடும் பொழுது அவரிடம் இருந்து சற்று எட்டி இருந்தால் நல்லது” என்று எச்சரிக்கை செய்ய “மைக்கேல் நானும் மரக்கறி உணவை மட்டுமே சாப்பிடுபவன். ஆகவே எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும் இந்நாட்டிற்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆயிற்று. இங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களும் எனக்குத் தெரியும்” என்று கூறி ஆறுதல் படுத்தினார்.

மைக்கேல் திர்க்கலும் சங்கர ஐயரை அழைத்து, பீட்டர் கிங்கை அறிமுகம் செய்து வைத்து அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்குத் துணையாக இருக்கும்படி கூறி னார். சில நாட்கள் சங்கர ஐயருடன் நடந்தே மதுரை நகரைச் சுற்றிப் பார்த்தார் பீட்டர் கிங்.

ஒரு நாள் ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்யுமாறு பீட்டர் கிங் கூற, வேறு வாகனம் ஏதாவது என்று கூற முற்பட்ட சங்கர ஐயர், தன் சொற்களை வாயிலேயே புதைத்துக் கொண்டு சரி என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். மறுநாள் மாட்டு வண்டியுடன் சங்கர ஐயர் வந்தார். பீட்டர் கிங்கும், சங்கர ஐயரும் வண்டியில் ஏறியதும் வண்டியைத் திருவாதவூருக்கு ஓட்டும்படி பீட்டர் கிங் கூற வண்டியும் புறப்பட்டது.

வண்டி போய்க் கொண்டு இருக்கும் பொழுது “ஏண்டா! சுடலைமுத்து! ஒவ்வொரு தடவையும் வண்டியிலே ஏறும்போது, முன்னால் வரச்சொல்லி அழும்பு பண்ணுவியே! இன்னைக்கு துரையப் பார்த்த உடனே பயந்துட்டியா? அமைதியா ஓட்றே?” என்று வண்டிக்காரனைப் பார்த்து சங்கர ஐயர் கேட்டார்.

அதற்குச் சுடலைமுத்துவும் “சாமி! நீங்களும் துரையும் ஒல்லியா இருக்கீங்க. அதனாலே மாடு பாரம் தாங்கிக்கிது. உங்க சம்சாரம் கொஞ்சம் கனம்மா இருப்பாங்களா, அவங்களோட வர்ரப்போ நீங்க கொஞ்சம் முன்னாலே வந்தாத்தான் மாட்டாலே சுளுவா இழுக்க முடியும்” என்று பதில் கூறவும் “அடி, செருப்பாலே! என் சம்சாரம் கனமா ஒல்லியான்னு கேட்டேனா? இருந்தாலும் உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்திடா” என்று சங்கர ஐயர் சீறி விழுந்தார். சுடலைமுத்துவும் மௌனமாகி, வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.

வண்டி திருவாதவூரை அடைந்ததும் அங்குள்ள சிவன் கோவிலைச் சுற்றிப்பார்த்த பின் அங்குள்ள மக்கள் வாழும் முறையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார் பீட்டர் கிங். பின் திரும்பி வரும் பொழுது திருமோகூரில் ஒரு கோயிலைப் பார்த்தவுடன் அதைப்பற்றி சங்கர ஐயரிடம் பீட்டர் கிங் விசாரித்தார். அது விஷ்ணு கோயில் என்று சங்கர ஐயர் கூற, பீட்டர் கிங் வண்டியை நிறுத்திவிட்டு அக்கோயிலைப் பார்த்தும், அங்கு இருந்த மக்களிடம் பேசிவிட்டும் வந்தார்.

மீண்டும் வண்டி புறப்பட்டு வரும் பொழுது தொ லைவில் யானை வடிவில் ஒரு மலை இருப்பதைப் பார்த்து அதைப்பற்றிய விவரங்களை விசாரித்தார். சங்கர ஐயரும் சமண மதத்தவர்கள் இவ்வளவு பெரிய யானையை உருவாக்கி மதுரை நகரை அழிக்க ஏவிவிட்டதாகவும், சிவபெருமான் நரசிங்க அஸ்திரத் தைச் செலுத்தி அதைக் கொன்றுவிட்டார் என்றும், அந்த யானை தான், யானை மலையாகக் கிடக்கிறது என்றும் கூறினார். சிவபெருமான் எய்த நரசிங்க அஸ்திரம் அந்த யானையின் வயிற்றில் தைக்க அந்த இடத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் கொண்டு இருப்பதாகவும் கூறிய சங்கர ஐயர், அது பெருமாள் கோயில் என்பதால் சைவர்கள் அங்கு செல்வதில்லை என்றும் இக்கோயிலை ஏற்றுக்கொண்டால், சிவன் கைக்குள் அடக்கமானவர் தான் நரசிங்கம் என்று, அதாவது விஷ்ணுவை விட சிவன் பெரியவர் என்று ஒப்புக் கொண்டதுபோல் ஆகிவிடும் என்று நினைத்து வைணவர்களும் இக்கோயிலுக்குச் செல்வதில்லை என்றும் கூறினார். இருப்பினும் தங்களைப் பிராம்ம ணர்கள் என்று கூறிக்கொள்ளும் நெசவாளர்களான ஸெளராஷ்ட்ரர்கள் மட்டுமே இக்கோயிலுக்குச் செல்வ தாகவும் அவர் கூறினார்.

இதைக்கேட்ட பீட்டர் கிங் அக்கோயிலைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, வண்டியும் அக்கோயிலை நோக்கிச் செலுத்தப்பட்டது. கோயிலை அடைவதற்குச் சற்றுதொலைவு இருக்கும் போது அந்த யானை மலையில் படிக்கட்டுகள் போன்றும் அதற்கு மேல் குகைகள் போன்றும் இருப்பதைப் பார்த்து பீட்டர் கிங் வண்டியை நிறுத்தச் சொல்லி, அந்த மலையின் மேலும் ஏறிப்பார்த்தார். அக்குகைகளில் பழைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. அந்த அளவிற்கு மழையாலும் வெயிலாலும் பாதிக்காதபடியும், கூடவே ஓரளவு காற்றோட்டமாகவும் அக்குகைகள் இருந்தன. அவற் றைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்குகையில் பீட்டர் கிங் கால்தடம் தவறி விழுந்து, அவருடைய இடது கையில் கூர்மையான சிறு கல் ஒன்று தைத்துவிட்டது. இரத்தம் வழிவதைக் கண்ட சங்கர ஐயர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கையில், வண்டிக்காரன் சற்றுத் தொலைவில் மருத்துவர் (சவரம் செய்பவர்) இருப்பதாகக் கூறி அனைவரும் அங்கு சென்றனர். அந்த மருத்துவரும் தன்னிடம் இருந்த கத்தியால் கீறி அந்தக் கூர்மையான கல்லை வெளியில் எடுத்துவிட்டார். பின் ஏதோ பச்சிலைகளை அரைத்து காயத்தில் தடவி கட்டுப்போட்டார். வலியும் எரிச்சலும் பொறுக்க முடியாததாக இருந்தாலும் பீட்டர் கிங் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டு காயம் எப்பொழுது ஆறும் என்று கேட்டார். எரிச்சலும் வலியும் ஒரு நாளில் குறைந்துவிடும் என்றும், புண் முழுமையாக ஆற 5 நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் கூறியதைக் கேட்டு மூவரும் வண்டியில் புறப்பட்டனர். வலியுடன் கோயிலுக்குப் போக வேண்டாம் என்றும் தேவையானால் இன்னொரு நாள் வரலாம் என்றும் சங்கர ஐயர் கூறிய யோசனை யை ஒப்புக் கொண்டு மதுரைக்குத் திரும்பினர்.

திரும்பும் வழியில் முடிதிருத்தம் செய்பவர் தான் வைத்தியராக இருக்க முடியுமா என்றும் வேறு வைத்தியர்கள் இல்லையா என்றும் பீட்டர் கிங் கேட்க இதுபோன்று கத்தி எடுத்துச் செய்ய வேண்டிய சிகிச்சைகள் முடிதிருத்தம் செய்பவர்களின் பொறுப்பில் தான் உள்ளது என்றும் மற்ற சிகிச்சைகளைச் செய்ய வேறு வைத்தியர்கள் உள்ளனர் என்றும் சங்கர ஐயர் பதிலளித்தார். வைத்தியக் கல்வி எப்படி அளிக்கப்படு கிறது என்று கேட்ட பொழுது அது பரம்பரையாகவும் குரு-சிஷ்ய முறையிலும் தொடருவதாகவும் பதி லளித்தார். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி உள்ளதுபோல் வைத்தியம் செய்வதற்கு என்று தனியாக சாதி உள்ளதா? என்று பீட்டர் கிங் கேட்க, அதுதான் மருத்துவர் சாதி (முடிதிருத்துபவர்கள் சாதி) என்றும், எனினும் வைத்தியத் தொழில் செய்பவர்கள் அனைத்து வகுப்பு மக்களிலும் உண்டு என்றும் சங்கர ஐயர் கூறினார். பேச்சு அப்படியே கிழக்கிந்திய கம்பெனியில் நிர்வாக வேலை செய்யும் இந்தியர்கள் அனைவருமே பிராமணர்களாகவே இருப்பதைப் பற்றி மையம் கொண்டது. சங்கர ஐயரும் பிராமணர் கள் மட்டுமே நிர்வாக வேலை செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்கள் என்றும், மேலும் கீழ்ச்சாதியில் உள்ள வர்களால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தி வேலை வாங்க முடியாது என்றும் விளக்கினார்.

அதற்குள் மதுரை வந்துவிடவே அவர்களுடைய உரையாடலும் முடிவுக்கு வந்துவிட்டது. சில நாள்கள் கழித்து பீட்டர் கிங் மதுரையை விட்டுப் புறப்பட ஆயத்தமானார். போகுமுன் தன் நண்பன், மதுரை கலெக்டர், ஜான் பிளாக்பர்ன்னைச் சந்தித்து விடை பெற வந்தார். இருவரும் உரையாடுகையில் பீட்டர் கிங் தன் அனுபவங்கள் சிலவற்றை விளக்கினார்.

“ஜான்! ஒன்றைக் கவனித்துப் பார்த்தாயா? கம்பெனி யில் வேலை பார்க்கும் இந்தியர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.”

“ஆம் பீட்டர். அவர்கள் தான் ஆங்கிலம் படித்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள்தான் புத்திசாலிகளா கவும் இருக்கிறார்கள்.”

“ஜான்! எல்லா வேலைகளுக்கும் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்கமாட்டார்கள் என்று நீ எப்படி முடிவு செய்தாய்? நீ இரண்டாவதாகக் கூறியது மிகப் பெரிய அபத்தம். புத்திசாலித்தனம் என்பது அனைவருக்கும் பொது. ஒரு உதாரணத்தைத் சொல் கிறேன். உன்னிடம் வேலை பார்க்கும் சங்கர ஐயரை விட அவரிடம் மாட்டு வண்டி ஓட்டும் சுடலைமுத்து புத்திசாலி.”

“எப்படி?” வியப்புடன் வினவினார் ஜான் பிளாக்பர்ன்.

“சங்கர ஐயரும் அவருடைய மனைவியும் மாட்டு வண்டியில் ஏறும்போது அவருடைய மனைவி குண்டாக இருப்பதால் வண்டி பாரத்தைச் சமன்செய்ய ஐயரை முன்னுக்கு வரும்படி சுடலைமுத்து கூறுவா னாம். நானும் ஐயரும் சென்ற போது இருவருமே ஒல்லியாக இருப்பதால் வண்டி பாரத்தைச் சமன் செய்யும் பிரச்சினை ஏற்படாமல் போகவே அவன் ஏதும் சொல்லாமல் வண்டியை ஓட்டினான். ஆனால் ஐயரோ எனக்குப் பயந்து கொண்டு வண்டிக்காரன் அமைதியாக ஓட்டியதாக நினைத்து அதை அவரிடம் கேட்டும் விட்டார். வண்டிக்காரன் பாரம் சமன் செய்யும் பிரச்சினை ஏற்படவில்லை என்று விளக்கம் கூறியதை ஐயரால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

“இந்த நிகழ்வை மட்டும் வைத்துக் கொண்டு சங்கர ஐயரை விட வண்டிக்காரன் புத்திசாலி என்று எப்படி முடிவு செய்கிறாய்?”

“ஜான்! ஒரு சங்கர ஐயரையும், ஒரு சுடலைமுத்து வையும் மட்டும் வைத்துக் கொண்டு நான் எந்த முடிவிற்கும் வரவில்லை.” என்னுடைய பயணத்தில் புத்தியுள்ளவர்களையும், புத்திக் குறைவானவர்களையும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் கண்டிருக்கிறேன். மேலும் மருத்துவம், விவசாயம், கால்நடை வளர்த்தல், பராமரித்தல் இன்னும் மனிதர்களுக்குத் தேவையான தொழில்கள் அனைத்தையும் பிராமணர்கள் அல்லா தவர்களே செய்கிறார்கள். அவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கும் அவர்களுடைய அறிவாற்றலே காரணமாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் இதுபோல் மனித இனத்திற்குத் தேவையான எந்த வேலை யையும் செய்ததாகத் தெரியவில்லை.

“சரி பீட்டர்! அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

“கிழக்கு இந்தியக் கம்பெனியில் பிராமணர்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை மாற்றி மற்ற சாதியினரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யலாமே? அதனால் இந்தியாவில் பிராமணர் அல்லாதார் முன்னேற வழி ஏற்படும் அல்லவா?”

“உன் யோசனையைக் குப்பையில் கொண்டு போய் போடு. இந்திய மக்களின் சாதி அமைப்பைப் பற்றியோ வேறு எதைப் பற்றியுமோ எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் என் தாய் நாட்டின் செல்வ வளம் பெருக வேண்டும் அவ்வளவு தான்.”

“அவசரப்படாதே, ஜான்! இப்பொழுது ஐயர் போன்ற அறிவுத்திறன் குறைந்தவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, புத்திசாலிகளாக உள்ள மற்ற சாதியினரை வேலைக்கு வைத்துக் கொண்டால் நிர்வாகத் திறனும், அதனால் உற்பத்தித் திறனும் அதிகமாகும் அல்லவா? அப்படி உற்பத்தித் திறன் அதிகமானால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கிலாந் திற்கு அனுப்பும் செல்வத்தின் அளவு அதிகமாக இருக்கும் அல்லவா?”

பீட்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உடன் மதுரை கலெக்டரின் எல்லா சிந்தனை ஓட்டங்களும் சிறிது நேரம் நின்றுவிட்டன.

“நீ என்ன சொல்கிறாய் பீட்டர்?”

“ஜான்! இப்பொழுது பிராமணர்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக்கொள்ளும் முறை இருப்பதால் அவர்களில் உள்ள திறமை குறைவானவர்கள் மற்ற சாதிகளில் உள்ள திறமைசாலிகளைப் புறந்தள்ளி விட்டு, கம்பெனியில் வேலையைப் பெற முடிகிறது. கம்பெனியும் இந்தத் திறமைக் குறைவானவர்களை வைத்து மாரடிக்க வேண்டியுள்ளது. அப்படி அல்லாமல் அனைத்து சாதிகளிலும் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால் பிராமணர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்காது. மற்ற சாதிகளில் உள்ள திறமைசாலிகளை வேலைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் நிர்வாகத் திறனும் உற்பத்தித் திறனும் கூடும். நீ ஆசைப்படுவது போல் இங்கிலாந்திற்கு இப்பொழுது அனுப்புவதை விட அதிகமான செல்வங்களை அனுப்ப முடியும்.”

“பீட்டர்! உன் வாழ்நாளிலேயே இப்பொழுதுதான் உருப்படியான ஒரு யோசனையைச் சொல்லி இருக் கிறாய்” என்று கூறிக் கொண்டே ஜான் பிளாக்பர்ன் தன் உதவியாளரை அழைத்தார். அவரிடம் பீட்டர் கிங் கூறிய யோசனையை விளக்கிக் கூறிவிட்டு அதன் அடிப்படையில் கவர்னருக்கு உடனடியாக ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தார். அவரும் சரியென்று கூறிப் போய்விட்டார்.

சிறிதுநேரம் கழித்து பீட்டர் கிங் வெளியே வந்த உடன் “பீட்டர்! ஊர் சுற்றியான உனக்கு இங்கிலாந் திற்கு அதிக செல்வங்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது?” வியப்புடன் கேட்டார் மைக்கேல் திர்க்கல்.

“மைக்கேல்! இந்தியாவில் சாதி என்பது தொழில் அடிப்படையில் பிரிந்து உள்ளது. எல்லாத் தொழில் களையும் எல்லாச் சாதியினரும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்தான் சாதி அமைப்பின் அடிப்படை தகரும். அதுவும் குறிப்பாக நிர்வாக வேலைகளில் பிராமணர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக களையப்பட் டால் ஒழிய, சாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட படிப்பினை இதுதான். உலகம் முழுமைக்கும் சகோதரத்துவத்தைக் கொண்டு வந்தாலும் இந்தியாவில் சாதிக் கொடுமைகள் இருக்கும் வரை சகோதரத்துவம் வேர்கொள்ள முடியாது. ஆகவே எப்படியும் நிர்வாக வேலைகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் களைய மற்ற சாதியினருக்கும் வேலை தர வேண்டும் என்று நினைத்தேன். என் நண்பன் அதாவது உன் கலெக்டர் இதை நேரடியாகச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான். ஆகவே அவனுடைய வழியில் சென்று சொன்னேன்; அவ்வளவுதான். மைக்கேல்! இவ்விஷ யத்தை நீ மிக முக்கியமானதாக நினைத்து கவனம் செலுத்து. இதில் வெற்றி பெற்றால் இந்திய சமூகத்திற்கு ஏதோ ஒரு சிறு உதவி செய்த மனநிறைவு இருக்கும்” என்று பீட்டர் கிங் சொன்னதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் கலெக்டரின் உதவியாளர் மைக்கேல் திர்க்கல்.

“பீட்டர் நம் கவர்னர் ஜான் எல்ஃபின்ஸ்டனும் கலெக்டரைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்தான். நானும் உன் அடிச்சுவட்டைப் பின்பற்றியே தாய் நாட்டிற்கு அதிக செல்வம் என்ற மந்திரச் சொற்களைப் பிரயோகித்து உன்னுடைய யோசனை வெற்றி பெற முழு மூச்சுடன் பாடுபடுகிறேன். நீ மதுரையை விட்டுப் போனாலும் என்னை மறந்து விடாதே”, மைக்கேல் திர்க்கல் உற்சாகத்துடனும் நண்பரைப் பிரியப் போகிறோமே என்ற வருத்தத்துடனும் கூறினார்.

பீட்டர் கிங், “மைக்கேல் நீயும் என்னைப் போன்ற குணாதிசயம் கொண்டவன். ஒரே குணாதிசயம் கொண்டவர்களின் நட்பு என்றுமே மறக்க முடியாதது. இது சிறு வயது நட்பைவிட வலுவானது. இதோ பாரேன்! என்னுடைய யோசனை வெற்றி பெறுவதற் கென்று, சிறுவயது நண்பனான உன் கலெக்டரைவிட, இப்பொழுது நட்பு கொண்டுள்ள உன்னைத்தான் அதிகமாக நம்புகிறேன். ஆமாம்! நீ இலண்டனில் எங்கு இருக்கிறாய்?” என்ற வினாவுடன் தன் பேச்சை முடித்தார்.

மைக்கேல் திர்க்கலோ தன் சொந்த ஊர் நாட்டிங் ஹாம் என்றும் இலண்டன் அல்ல என்றும் கூற, தான் லீவர்பூலைச் சேர்ந்தவன் என்றும், எப்படியும் கடைசி காலத்தில் இலண்டனில் குடியிருக்க எண்ணி உள்ள தாகவும் கூறிய பீட்டர் கிங், அப்படி இலண்டனில் குடியேறும் போது ரீஜன்ட் பூங்கா பகுதியில் தான் குடியிருக்கப் போவதாகவும், எதிர்காலத்தில் அங்கே சந்தித்துக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறிய பீட்டர் கிங் நண்பரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். பீட்டர் கிங் காட்டிய அதே உற்சாகத்துடன் மைக்கேல் திர்க்கலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டார். இங்கிலாந்திற்கு அதிக செல்வம் என்ற மந்திரச் சொற்களை அடிக்கடி கலெக்டரிடம் ஓதினார். சென்னைக்குச் சென்ற போதெல்லாம் கவர்னரின் அலுவலகத்தில் அனைத்து சாதியினருக்கும் வேலை அளிப்பது பற்றிய கோப்புகளை நகர்த்தத் தனி அக்கறை எடுத்துக் கொண்டார்.

இங்கிலாந்திற்கு அதிக செல்வங்களைக் கொண்டு செல்லும் கனவுடன் இருந்த மதுரை கலெக்டர் ஜான் பிளாக்பர்னின் முழு ஆதரவுடன் மைக்கேல் திர்க்கல் இந்தியாவின் சாதிக் கட்டுமானத்தில் சிறு கீரலை யாவது ஏற்படுத்திவிட வேண்டும் என்ற தனது உள் ளார்ந்த ஆசையில் முழு வீச்சுடன் செயல்பட்டாலும் அவரால் 1840இல் தான் வெற்றி காண முடிந்தது. 1840ஆம் ஆண்டில் சென்னை வருவாய்க் கழக ஆணை எண்.125 (க்ஷ.ளு.டீ. சூடி.125 டிக 1840) பிறப் பிக்கப்பட்டது. இவ்வாணை ஒரே சாதியினரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் பலப்பல சாதியினரையும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் சென்னை ராஜதானியில் இருந்த அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்தியது.

Pin It