‘எழுந்தாலும் ‘நெற்கதிர்’ போல் எழுதல் வேண்டும்;
எரிந்தாலும் ‘விளக்’கினைப் போல் எரிதல் வேண்டும்;
அழுதாலும் ‘தேனடை’ போல் அழுதல் வேண்டும்;
அசைந்தாலும் ‘தென்ற’லைப்போல் அசைதல் வேண்டும்;
விழுந்தாலும் ‘விதை’யைப்போல் விழுதல் வேண்டும்;
விரைந்தாலும் ‘கார்முகில்’ போல் விரைதல் வேண்டும்;
பழுதில்லா ஆல்மரம்போல் நிழலைத் தந்தே
பலர்க்குதவி வாழ்பவரே ‘வாழ்வோர்’ என்பேன்!

எத்தனையோ மன்னரிங்கே இருந்தார்; போனார்;
எழில் ‘பாரி’ மட்டும் ஏன் நெஞ்சில் நின்றான்?
கத்தரிக்காய்த் தலையிலுள்ள காம்புக் கிரீடம்
கறிக்குழம்பில் வந்திடுமா? அதுபோல் சேர்க்கும்
சொத்திங்கே உயிர்போனால் தொடர்ந்தா ஏகும்?
தொடர்ந்திங்கே சொன்னாலும் செல்வம் தன்னை
வைத்திருப்போர் உணர்வாரோ? நல்ல சொற்கள்
வைக்கின்ற ‘நடுகல்’ தான் மிஞ்சும் சொத்து!

எவ்வளவோ அரசாங்கம் திட்ட மிட்டும்
இன்னுமிங்கே வறுமைப்பேய் ஒழிந்த துண்டா?
எவ்வளவோ அரசாங்கம் உதவி னாலும்
இரந்துண்போர் காட்சிஇன்னும் ஓய்ந்த துண்டா?
எவ்வளவோ சொன்னாலும் எழுதி னாலும்
இந்நாட்டில் சமத்துவமும் மலர்ந்த துண்டா?
எவ்வளவோ அவ்வளவு மட்டும் வைத்தே
இருப்பதனை அறப்பணிக்குத் தந்தால் என்ன?

கோடிகளை இருப்பறையில் ஒளித்து வைத்த,
கொழுத்தவரைப் பழுத்தவரை நினைத்தோ மோநாம்?
ஆடுகின்ற ஆட்டமெலாம் ஆடிச் செல்லும்
ஆர்ப்பாட்டச் ‘சூறை’யினால் ஏது நன்மை?
தேடுகின்ற செல்வத்தைத் தேகந் தன்னைச்
சீர்மணக்கும் சந்தனம்போல் தேய்த்தோர் மட்டும்
ஏடுகளில், எழில்நெஞ்சில் நிலைத்து நின்றார்;
இறந்துமிங்கே வாழ்வோரே ‘வாழ்வோர்’ என்பேன்.

Pin It