கைப்பேசி உற்பத்தியில் உலகில் முதல் நிலை நிறுவனமாக விளங்கிய நோக்கியாவின், மிகப் பெரிய தயாரிப்புக் கிளையாகத் திகழ்ந்த திருப்பெரும்புதூர் தொழிற்சாலை 1-11-2014 அன்று மூடப்படும் என்று நோக்கியா நிறுவனத்தின் தலைமையே அறிவித் துள்ளது. இதனால். திருப்பெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலையில் நேரடியாகப் பணிபுரிந்த 8000 தொழிலாளர்களும் திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளி யல் மண்டலத்தில் நோக்கியாவுக்குத் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுத்த நிறு வனங்களில் வேலை செய்த 12,000 தொழிலாளர் களும் வேலை இழக்கின்றனர்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து, தொழில்களைத் தொடங்குவதால், தொழில் வளர்ச்சி பெருகும்; வேலை வாய்ப்புகள் அதிகமாகும்; நாட்டின் பொருளாதாரம் வளரும் என்று கடந்த 25 ஆண்டுகளாக ஆளும்வர்க்கத்தால் ஆரவார மாகக் கூறப்பட்டு வருவது எவ்வளவு பெரிய பொய் - மோசடி என்பதைத் திருப்பெரும்புதூர் நோக்கியா ஆலையின் மூடல் பறைசாற்றுகிறது. இந்தியாவின் இயற்கை வளங்களையும் குறைந்த கூலிக்கான மக்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பது ஒன்றே இந்தியப் பெருமுதலாளிகளின், பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்களின் ஒரே நோக்கம் என்பதை நோக்கியா ஆலையின் மூடல் மெய்ப்பிக் கிறது.

நோக்கியா, குட்டி நாடான பின்லாந்து நாட்டின் பன்னாட்டு நிறுவனமாகும். இந்தியாவில் கைப்பேசி யின் பயன்பாடு பரவத் தொடங்கிய சூழலைத் தனது இலாப வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ள நோக்கியா முடிவு செய்தது. 2005 ஏப்பிரல் 6 அன்று திருப் பெரும்புதூரில் கைப்பேசி தயாரிப்புத் தொழிற்சாலை யை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தமிழ்நாட்டு அரசுடன் செய்துகொண்டது.

தமிழ்நாடு அரசு ஒரு ஏக்கர் நிலத்தை ரூபா 8 இலட்சத்துக்கு வாங்கி ரூபா 4.5 இலட்சம் விலையில் நோக்கியா நிறுவனத்துக்குக் கொடுத்தது. இவ்வாறு 210 ஏக்கர் நிலம் தரப்பட்டது. பத்திரப் பதிவுக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 விழுக்காடு வரி விலக்கு, நடுவண் அரசின் விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும் நோக்கியா நிறுவனம் ‘பொதுப் பயன்பாட்டு நிறுவனம்’ என்றும் அரசு அறிவித்தது.

2006 சனவரி மாதம் திருப்பெரும்புதூர் நோக்கியா வின் கைப்பேசிகள் விற்பனைக்கு வெளிவந்தன. உற்பத்தி வேகமாக உயர்ந்தது. உலகச் சந்தையில் 32 விழுக்காட்டையும் இந்தியக் கைப்பேசி சந்தையில் 52 விழுக்காட்டையும் கைப்பற்றியது. ஒரு மாதத்தில் 1.5 கோடிக் கைப்பேசிகளைத் தயாரித்தது. நோக்கியா வுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கு, ஃபாக்ஸ் கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் இயங்கின. இத்தகைய துணை நிறுவனங்கள் மற்றும் நோக்கியா நிறுவனம் ஆகியவற்றில் 20,000க்கு மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்தனர். திருப்பெரும்புதூரி லிருந்து நூறு கிலோ மீட்டர் சுற்றுப் பகுதிகளிலிருந்து குறைந்த கூலிக்கான தொழிலாளர்களை அழைத்து வரவும் கொண்டு சென்றுவிடவும், நூற்றுக்கணக்கான வோல்வா சொகுசுப் பேருந்துகள் பார்ப்பவர்கள் மயங்கும் வகையில் இயங்கின.

பலவகையான விதி மீறல்கள், வரி ஏய்ப்புகள் செய்து நோக்கியா நிறுவனம் கொள்ளையடிப்பது அப்பட்டமாகத் தெரியவந்தது. தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நோக்கியா தயாரிக்கும் கைப்பேசி எண்ணிக்கைகளின் அடிப்படையில் ‘கமிஷன்’ ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

2013 சனவரியில் நடுவண் அரசின் வருமான வரித்துறை, திருப்பெரும்புதூர் நோக்கியா நிறுவனத் தைத் திடீர் ஆய்வு செய்தது. வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறி, ரூபா 3500 கோடி வருமான வரி விதித்தது. பின்லாந்தும் இந்தியாவும் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதால், இந்த வரியைக் கட்ட வேண்டியதில்லை என்று நோக்கியா வாதிட்டது. வருமான வரித்துறை வழக்குத் தொடுத்தது. 2013 திசம்பரில் தில்லி உயர்நீதிமன்றம் நோக்கியா மீது விதிக்கப்பட்ட ரூபா 3500 கோடி வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்றும், நோக்கியாவின் சொத்துகளை முடக்கி வைப்பதாகவும் தீர்ப்பளித்தது. மேலும் கைப்பேசிக்காக வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்த மென்பொருள்களுக்காக நடுவண் அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூபா 21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப்போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைப்பேசிகளையும் ஏற்றுமதி செய்த தாகக் கணக்குக்காட்டி தமிழ்நாட்டு அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூபா 2,400 கோடியை ஏமாற்றியிருக் கிறது.

இச்சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகத் திருப்பெரும்பு தூரில் உள்ள கிளையைத் தவிர்த்து, உலகம் முழு வதும் உள்ள கிளை நிறுவனங்களை அமெரிக்காவின் பில்கேட்சின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்கு நோக்கியா விற்றுவிட்டது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், திருப் பெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கைப்பேசிகளைத் தயாரித்துத் தர ஒப்புக் கொண்டது. இந்தப் பின்னணியில் நோக்கியா நிறுவனம் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்ததில் 5000 தொழிலாளர்கள் நோக்கியா கொடுத்த பணத் தைப் பெற்றுக் கொண்டு வேலையிலிருந்து நின்று விட்டனர். கிளை நிறுவனங்களும் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தன. நோக்கியாவில் தற்போது உள்ள 1,100 நிரந்தரத் தொழிலாளர்கள் தம் வேலை யைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராடி வருகின்றனர். கைப்பேசி உற்பத்தி ஒரு மாதத்தில் 10 இலட்சம் என்று சுருங்கிவிட்டது.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1-11-14 முதல் திருப் பெரும்புதூர் நோக்கியாவுடன் செய்துகொண்ட தயாரிப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக 10-7-14 அன்று அறிவித்தது.

ஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் தங்குதடை யின்றி கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுவதற்கும், அவை விரும்பும்போது மூடிவிட்டுச் செல்வதற்கும், இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் தவிப்ப தற்கும் காரணமாக உள்ள தாராளமயம், தனியார் மயம் கொள்கைகளையும், அவற்றைச் செயல்படுத்தும் அரசுகளையும் எதிர்த்துப் போராடுவது ஒன்றே தீர்வாகும்.

-    செங்கதிர்

Pin It