ஓமந்தூர் கிராமம் திண்டிவனத்தில் இருந்து புதுவை செல்லும் திசையில், ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தினசரி கூலி வேலைக்குச் சென்றுதான் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதே கிராமத்தில் உள்ள வன்னியர் இனத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டியும், இடையர் இனத்தைச் சேர்ந்த குமாரும், அவ்வப்போது 50, 100 என இருளர்களுக்கு முன் பணம் கொடுத்து அவர்களைக் கடனாளியாக்கி, அடிமைகளைப் போன்று வைத்துள்ளனர்.

குமாரிடம் பணம் பெற்றவர்கள், மண்ணாங்கட்டியிடமோ, மண்ணாங்கட்டியிடம் வேலை செய்பவர்கள் குமாரிடமோ வேலைக்குப் போக முடியாது. மீறிப் போனால் அடி, உதை மட்டுமில்லாமல் தொகுப்பு வீடுகளையும் இழுத்துப் பூட்டி விடுவார்கள். தென் சுருளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற இருளர், ஓமந்தூர் கிராமத்தில் தங்கி, மண்ணாங்கட்டியிடம் வேலை செய்துள்ளார். அவரிடம் வேலை இல்லாத ஒரு நாள் குமாரிடம் வேலைக்குச் சென்றுள்ளார். இதனையறிந்த மண்ணாங்கட்டி, ஆறுமுகம் வீட்டிற்குச் சென்று, தனக்கு வரவேண்டிய ரூபாயைக் கேட்டு, சவுக்குக் கட்டையால் ஆறுமுகத்தை அடித்துள்ளார். அதைத் தடுத்த அவர் தம்பி பாலுவையும் அடித்துள்ளார். இதுகுறித்து, சம்பவம் நடந்த 19.9.2005 அன்றே கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல, மல்லிகா - தேவராஜ் குடும்பத்தினருக்கு குமார் அவ்வப்போது ரூ. 100, 200 என முன் பணமாகத் தந்து ரூ. 4000 வரை கொடுத்துள்ளார். இத்தொகையை உடனடியாகக் கொடுக்கும்படி கேட்டு, மிரட்டி, மல்லிகா குடும்பத்தினரை வெளியேற்றி தொகுப்பு வீட்டைப் பூட்டி விட்டார். பின்பு, வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டும் அல்லது பணத்திற்கு 10 வட்டி போட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆறு மாதம் கழித்து வீட்டைத் திறந்து விட்டுள்ளார். தொகுப்பு வீடு ஒன்றில் 3 ஆண், 3 பெண் குழந்தைகளுடன் குடியிருந்த குப்பன் என்ற இருளரை, குடும்பத்துடன் அடித்துத் துரத்திவிட்டு, அவருடைய தொகுப்பு வீட்டில் இன்றுவரை குமார் குடியிருந்து வருகிறார்.

Pavunu in front of the closed house

பூட்டிய தொகுப்பு வீட்டின் முன்பு பவுனு

மல்லிகாவின் பெரியப்பா மகள் பவுனு, அவர் கணவர் காத்தவராயன் ஆகியோர் மல்லிகாவின் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார்கள். காத்தவராயன் குமாரிடம் வேலை பார்த்த வகையில் ரூ. 750 கடன் பட்டுள்ளார். ஒரு நாள் காத்தவராயன் மண்ணாங்கட்டியிடம் வேலைக்குச் சென்றுள்ளார். இதனையறிந்த குமார், அவர் மனைவி இந்திரா, மகன்கள் சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் மல்லிகா வீட்டிற்குச் சென்று, மல்லிகா, பவுனு, காத்தவராயன் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளனர். பவுனுவை அடித்துள்ளார்கள். மல்லிகா தரவேண்டிய ரூ. 4000 பணத்தையும் சேர்த்து ரூ. 10 வட்டி போட்டு உடனே கொடுங்கள் எனக் கேட்டு, மல்லிகாவின் வீட்டை மீண்டும் பூட்டி உள்ளார்கள். இச்சம்பவம் நடந்த 1.10.2005 அன்று காவல் நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், குமார், மண்ணாங்கட்டி மீது நடவடிக்கை எடுத்து, இருளர்களின் தொகுப்பு வீடுகளை சாதி இந்துக்களிடமிருந்து மீட்டுத் தரக்கோரி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 3.10.2005 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு குமார், மண்ணாங்கட்டி இருவரும் கைது செய்யப்பட்டு, மல்லிகா வீட்டை போலிசார் திறந்து விட்டனர். மொத்தம் உள்ள 24 தொகுப்பு வீடுகளில், 12 வீடுகள் குமார் உள்ளிட்ட சாதி இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் குமார் தன் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளை, அதே ஊரைச் சேர்ந்த சாதி இந்துக்களுக்கு விற்றுள்ளார். கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள மண்ணாங்கட்டி, குமார் இருவரும் மீண்டும் இருளர் குடியிருப்பிலேயே இருந்து வருகிறார்கள்.

தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட வீடு, மனைகளை அவர்கள் விற்கவும் முடியாது; யாரும் வாங்கவும் முடியாது. பழங்குடியினர் மற்றும் தலித் நிலவுரிமை கோரிக்கை எழுந்து வரும் இந்நேரத்தில் அரசு அளித்த தொகுப்பு வீடு, மனைகள் இருக்குமா? சாதி இந்துக்களால் அது பறிபோகுமா?

Pin It