தனித்தன்மையான ஆற்றலும் பெரும் புகழும் கொண்டவர்களாகச் சில படைத்தளபதிகள் வரலாற்றில் என்றென்றும் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது, பேட்டன், மாண்ட்கோமரி, ரேமல் (பாலைவன நரி), அய்சனோவர், மெக்ஆர்தர், இவன்டோஜோ, யாமமோடோ, யாமஷிட்டா ஆகியோர் ஒப்பற்ற படைத்தளபதிகளாக விளங்கினர். வரலாற்று அரங்குகளில் இவர்களின் பெயர்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியப் படை வானில் கரியப்பாவின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவர்தான் சுதந்தர இந்தியாவின் முதலாவது படைத்தளபதி. திம்மைய் யாவும், மேனக்ஷாவும் சிறந்த இந்தியப் படைத் தளபதி களாகக் கருதப்படுகின்றனர்.

வரலாற்றின் ஏடுகளில் பெரும் புகழுடன் திகழும் இப்படைத் தளபதிகளைவிட, மிகச்சிறந்த படைத்தளபதி யாக விளங்கியவர் தன் 103ஆம் அகவையில் 2013 அக்டோபர் மாதம் முதல் கிழமையில் மறைந்தார். அவர்தான் வியத்நாமின் ஜெனரல் வோ-நிகுயன்-கியப். வியத்நாமின் ஒப்பற்ற தலைவர் ஹோசிமி னுக்கு அடுத்த நிலையில் வைக்கப்பட்டு மக்களால் மதித்துப் போற்றப்படும் மாபெரும் தளபதி அவர். 1940களில் இந்தோ-சீனா போரிலும், 1960-70களில் அமெரிக்காவுக்கு எதிரான போரிலும் வியத்நாம் வெற்றி வாகை சூடுவதற்கு அச்சாணியாக அவர் திகழ்ந்தார்.

தளபதி கியப் வியத்நாம் வெற்றிக்குப் பாடுபட்டார் என்று ஒரு வரியில் எழுதிவிடுவது எளிது. ஆனால் வியத்நாம் நாடு எந்த நிலையில் இருந்தது, எதிரிகளின் வலிமை என்ன என்பவற்றை ஆராய்ந்து அறியும் போதுதான், தளபதி கியப்பின் ஒப்பற்ற ஆற்றலை நம்மால் உணர முடியும்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே, கொடிய வறுமையும் இயலாமைகளும் மிகுந்த நாடாக வியத்நாம் இருந்தது. சீன அரசவம்ச ஆட்சிகளின் கீழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தது வியத்நாம். 1850களில் பிரான்சு நாட்டின் காலனி நாடாயிற்று. இவ்வாறு அயல்நாட்டு ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோதிலும், அந்நிய ஆட்சியை எதிர்த்து வீரஞ் செறிந்த போராட்டங்களைப் பல தலைவர்கள் நடத்தி னர். இத்தகைய புரட்சியாளர்கள் உருவாக்கிய போர் உத்திகளும் வீர மரபுகளும் ஹோசிமின் தன் காலத் தில் ஒப்பரிய ஒரு புரட்சிப் படையை உருவாக்கிட அடித் தளமாக அமைந்தன. எனவேதான், சிறிய நாடான வியத்நாமிடம் அமெரிக்கா தோற்றதற்குக் காரணம், வியத்நாம் படை என்பது மரபான - வழமையான அரசுப் படை போன்றதாக இல்லாமல், மக்கள் படையாக (Barefoot Army) இருந்ததே ஆகும் என்று அமெரிக்க எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வியத்நாமின் மக்கள் படை, பிரெஞ்சு, சப்பானிய - மீண்டும் பிரெஞ்சு, இறுதியாக மாபெரும் வலிமை வாய்ந்த அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போரிட்டது. பிரான்சின் படைகளுக்கு எதிராக நடந்த போரில், மிகவும் கனமான ஆயுதங்களை மிதிவண்டிகளில் வைத்து நெடிய மலை உச்சிகளுக்கு எடுத்துச்சென்று வியத்நாம் வீரர்கள் பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்ததைக் கண்டு உலகமே வியந்தது.

அமெரிக்கா நீண்டகாலம் (பத்து ஆண்டுகள்) போர் நடத்தியது வியத்நாமில் மட்டுமேயாகும்! அமெரிக்கப் படைகள் தோல்வி கண்டதும் வியத்நாம் மண்ணில் தான்! வியத்நாம் போரில் அமெரிக்கா மனிதத்தன்மை யற்ற முறையில், நேப்பாம் குண்டுகளையும், ஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் குண்டுகளையும் வீசியது. இவை காடுகளை அழித்தன. மக்களின் மரபணுக்களில் கேடான மாற்றங்களை உண்டாக்கியதால் பல்வேறு குறை பாடுகள் கொண்ட குழந்தைகள் பிறந்தன.

இத்தாக்குதலால் வியத்நாம் மக்கள் படை கட்டாயம் தோல்வி அடையும் என்று அப்போது அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த நிக்சனும், அயல்உறவு அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சரும் நம்பினர். வியத்நாம் போர் குறித்து அமெரிக்க அரசின் மன நிலையை, நெய்ல் ஷிஹன் என்பவர் எழுதியுள்ள நூலில் பதிவு செய்துள்ளார். அமெரிக்கப் படையில் லெஃப்டினன்ட் கர்னலாக இருந்த ஜான் பால் வான், “வியத்நாம் மக்கள் பிறப்பாலேயே தாழ்ந்தவர்கள். எனவே அவர்கள் அமெரிக்காவின் தலைமையை ஏற்பதே இயற்கை நியதியாகும். அமெரிக்கர்கள் எப்போதும் நியாயவான் களாக இருப்பார்கள். எல்லாக் கம்யூனிஸ்டுகளும் அமெரிக் காவின் எதிரிகள். எனவே கம்யூனிஸ்டுகள் சட்டம் ஒழுங்குக்கும் முன்னேற்றத்திற்கும் எதிரிகள்” என்ற கருத்தை அழுத்தமாகக் கொண்டிருந்தார் என்று அந்நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய ஆதிக்க மனப்போக் குத்தான் வியத்நாமில் தோற்றதற்கான மூலகாரண மாகும். மேலும் தற்போது, ஈராக், ஆப்கானிஸ் தான், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் அமெரிக்கா தோல்வி கண்டு வருவதற்கும் இந்த மேலாதிக்க மனப்பான் மையே காரணமாகும்.

வியத்நாமின் தளபதி கியப் ஒருபோதும் எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டதில்லை. ஹோசிமி னைப் போலவே, கியப்பும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்தவரல்லர். இருவருமே பணக்காரக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள். ஹோசிமினைப் போலவே கியப்பும் தொடக்கத்தில் தேசியவாதியாக இருந்து, பிறகு கம்யூனிஸ்டாக மாறியவர். கியப் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் கொண்டவர். 1975இல் கியப், ‘மறக்கமுடியாத நாள்கள்’ என்ற நூலை எழுதினார். இந்நூல் 1945-46ஆம் ஆண்டுகளில் பிரான்சும், சியாங்கே ஷேக் ஆட்சியின் கீழ் இருந்த சீனாவும் வியத்நாம் நாட்டைக் கைப்பற்று வதற்கு எவ்வாறு போட்டியிட்டன என்பதை விளக்கு கின்ற சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

கியப்பின் மாபெரும் ஆற்றல் குறுகிய காலத்தில் பெரும் மக்கள் படையைக் கட்டியமைத்ததாகும். தொடக் கத்தில் 5,000 கொரில்லாப்படை வீரர்கள் மட்டுமே இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சம் பேர் கொண்டதாக இப்படையை உருவாக்கினார். சிற்றூர்களில் இருந்த உழவர்களைத் தேவைப்படும் போது, சிறந்த போர் வீரராகச் செயல்படும் வகையில் பயிற்சி அளித்தார். பிரெஞ்சு மற்றும் சப்பான் படைகள் தோற்றபின் விட்டுச்சென்ற ஆயுதங்களைத் திரட்டி அவற்றைப் புதுப்பித்துப் பயன்படுத்தினர். இதேபோன்று கடலில் மூழ்கிய சப்பான் நாட்டின் சரக்குக் கப்பலி லிருந்து பொருட்களை எடுத்து அவற்றை ஆயுதங்களாக மாற்றினர். இவ்வாறாக, தளபதி கியப்பும், வியத்நாம் மக்களும் விடாமுயற்சியுடனும், உள்ள உரனுடனும், புதுப்புது உத்திகளையும் போர் முறைகளையும் கை யாண்டதால்தான் அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய முடிந்தது.

புகழ்பெற்ற மற்ற படைத்தளபதிகளைக் காட்டிலும், வியத்நாம் தளபதி வோ நிகுயன் கியப் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டார். அதனால் மற்ற தளபதி களின் வெற்றிகளைவிட கியப்பின் வெற்றி பெருஞ் சிறப்பு வாய்ந்ததாகும். தளபதிகளின் தளபதியாகக் கியப் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

ஆங்கில மூலம் : டி.ஜெ.எஸ். ஜார்ஜ்

தமிழில் : க.முகிலன்

(நன்றி : ‘தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ்’, 13-10-2013)

Pin It