திருமண உறவை உறவினர்களும் நண்பர்களும் ‘ஆயிரங்காலத்துப் பந்தம்’ என்பர். திருமணச் சடங்கு களிலேயே உச்சக்கட்ட நிகழ்வு என்பது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவதுதான். ‘முகூர்த்த நேரம்’ என்று சொல்லப்படும் தாலிகட்டும் நேரம் நெருங்க நெருங்க எல்லோரிடத்திலும் ஒரு பரபரப்பு பற்றிக் கொள்ளும். நிகழ்வை (வீடியோ) படம் பிடிப்ப வர், ஒளிப்படம் எடுப்பவர் இங்கும் அங்குமாக அலைபாய்வர். பார்வையாளர்கள் கையில் ‘வாழ்த்து அரிசியுடன்’ கெட்டிமேள ஒலிக்காகக் காதைக் கூர் தீட்டிக் கொண்டு காத்திருப்பார்கள். சரியான நேரத்தில் பார்ப்பனரிடமிருந்து கைச்சைகை பறந்தவுடன் மணப் பந்தலில் இருப்போர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று கூவுவார்கள். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டவும், அதைச் சரியான கோணத்தில் பட மெடுக்கப் படப்பதிவாளர்கள் திணறவும், முட்டிக் கொண்டு நிற்கும் அணுக்க உறவுகள் எட்டித்தள்ளவும், பார்வையாளர்கள் குறிபார்த்து ‘வாழ்த்து அரிசியை’ மணமக்கள் மேல் எறியவும், அது முன்வரிசையில் அமர்ந்துள்ள சில வழுக்கை மண்டைகள் மேல் விழுந்து சரியவும் சரியான நகைச்சுவைக் காட்சிகள் அரங் கேறும் நேரம் அது.

இப்போது தாலி பெண்கள் அணியும் புனிதச் சின்ன மாகப் போற்றப்படுகிறது. நம் பண்டை இலக்கியங் களில் ஆண், பெண்களுக்குத் தாலி கட்டியதாக எங் கும் குறிப்புகள் இல்லை. தொகைநூல்களில் தமிழர் வாழ்வின் மிக இன்றியமையாத நிகழ்வான திருமணம் பற்றி விரிவான தரவுகள் இல்லை. அக்காலத்தில் நிகழ்ந்த திருமணங்கள் குறித்து அகநானூற்றில் 86, 136 ஆகிய இரண்டு பாடல்களில் மட்டும் விளக்கமான பதிவுகள் உள்ளன.

அகம் 86ஆம் பாடலில் உள்ள செய்திகள் (சுருக்கமாக) :

“திருமணத்தில் முதல் நிகழ்வாக விருந்து நடைபெற்றது. மணப்பந்தலின் கீழ் ஒரு பகுதியில் மணலைப் பரப்பி வைத்து அதன்மீது விளக்கை ஏற்றியிருந்தனர். இளங் காலைப் பொழுதில் திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்லோரையில், முதுமகளிர் மணமகளை நீராட்ட நீர்க் குடங்கள் ஏந்தி வந்தனர். அந்தத் தண்ணீர் குடங்களில் மலரும் நெல்லும் தூவிப் பிள்ளை பெற்ற பெருமாட்டி யர் நால்வர் மணமகளைக் கற்பு நெறியினின்றும் வழாஅமல் நலம்பல ஆற்றிக் கணவன் விரும்பத்தக்க மனைவி ஆகுக” என வாழ்த்தி மணிநீராட்டினர். இவற்றுடன் வதுவை நன்மணம் நிறைந்தது.

உழுந்துதலைப் பெய்த கொமுங்களி மிதவை

பெருஞ்சோற்று மலை நிற்ப நிரைகால்

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி

மனை விளக் குறுத்து மாலை தொடரிக்

கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென

உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

கற்பினில் வழாஅ நற்பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையைப் ஆகென

நீரொடு சொரிந்த ஈழிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர

ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்

கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சா துரையென

இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்

செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர

அகமலி உவகையள் ஆகி முகனிகுத்து

ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்

மடங்கொள் மதைஇய நோக்கின் ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே!

- அகம் 86 (நல்லாவூர் கிழார்)

அகம் 136ஆம் பாடலின் கருத்து (சுருக்கமாக) :

இறைச்சி கலந்து ஆக்கப்பெற்ற வெண்சோற்று விருந்து நடைபெற்றது. திங்கள் உரோகிணியைக் கூடிய நல்லோரையில் மணம் நிகழ்ந்த இல்லம் அழகுசெய்யப் பெற்று இறைவழிபாடு நடைபெற்றது. மணமுழவும் முரசும் முழங்கின. தலைவிக்கு மணிநீராட்டு நிகழ்ந்தது. வாழை இலை, அறுகில் கிழங்கிலிருந்து அரும்புக ளோடு சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்நூல் தலைவிக் குக் காப்பாக சூட்டப்பெற்றது. சுற்றத்தவர் தலைவிக்குத் தூய உடைகளை அணிவித்தனர். அங்ஙனம் அணி வித்ததால் அவளுக்கு உண்டான வியர்வையை ஆற்றினர்.

மைப்பறப் புமுக்கின் நெய்க்கனி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்

புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி

அங்கண் இருவிசும்பி விளங்கத் திங்கள்

சகட மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்

படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ

வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டலை

பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்

தழங்குகுரல் வானின் தலைப் பெயர்குஈன்ற

மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்

தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டித்

தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி

மழைபட் டன்ன மணல்மலி பந்தர்

இழைஅணி சிறப்பின் பெயர்வியப்பு ஆற்றித்

தமர்நமக் கீந்த தலைநாள் இரவின்

உவர்நீங்கு கற்பின்எம் உயிருடம்பு அடுவி

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்

பெரும்புகழ் உற்றநின் பிறைநுதல் பொறிவயர்

உறுவளி ஆற்றச் சிறுவரை திறவென

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்

உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப

மறைதிறன் அறியா ளாகி ஒய்யென

நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்

பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச்

சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே

- அகம் 136 (விற்றூற்று மூதெயினனார்)

இவ்விரண்டு திருமணங்களையும் ஆய்வு செய்த பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் பின்வருமாறு தம் குறிப்பைப் பதிவு செய்துள்ளார்.

“இவற்றுள் 1. எரிவளர்த்தல் இல்லை, 2. தீவலம் வருதல் இல்லை, 3. தட்சிணை பெறும் புரோகிதர் இல்லை. இவை முற்றும் தமிழர்க்கே உரிய திருமணங்களாம்” (தமிழர் வரலாறு-பி.டி. சீனிவாச அய்யங்கார், பக்.80)

சங்க நூல்களும் தாலியும் :

கணவனை இழந்த மனைவி அல்லது மனைவியர் பற்றி ‘இழை களைந்தனர்’, ‘தொடி களைந்தனர்’, ‘தொடி தகர்த்தாள்’ என்பன போன்ற குறிப்புகள் வருகின்றன. ஆயின் ‘தாலி களைந்தனர்’ என்று எங்கும் சுட்டப் பெறவில்லை.

‘தாலி’ என்ற சொல் இடம்பெற்றிருந்தாலும் அஃது தலைவிக்கு மணநாள் அன்று அணிவிக்கப் பெறும் ‘மங்கல நாண்’ என்ற பொருளில் சுட்டப்பெறவில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் சேர சோழரையும் அவர்களுக்குத் துணையாய் வந்த வேளிர் ஐவரையும் தனியனாய் வென்று மீண்ட போது இடைக் குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் தாலி களைந்தன்றும் இலனே (புறம்-77) என்கிற அடி இடம் பெற்றுள்ளது. இந்தத் தாலியை வீரத்திற்கு அடையாள மாக அணிந்த அணி என்று கொள்ளலாம். அல்லது கண்ணேறு போன்றன தாக்காமல் இருக்கக் கட்டப் பட்ட ‘காப்பணி’ என்றும் பொருள் கொள்ளலாம்.

குழந்தைகளுக்குச் சூட்டப்பெறும் ஒருவகை அணியா கவும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

‘பொன்னுடைத்தாலி என்மகன்’ - அகம் 54

‘புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்’ - புறம் 374

வீரன் ஒருவன் தான்கொன்ற புலியின் பற்களைக் கழுத்து மாலையில் கோத்தணியும் நகை தாலி வடிவில் அமைந்திருந்தது. .. பொன்னாடு

புலிப்பல் கோத்த புலம்புமணித்தால் - அகம்-7

வரிவெண்தாலி வகைசெத்து வெரூஉம் - ஐங்குறுநூறு 166

சிலம்பு காட்டும் கண்ணகியின் திருமணம் :

பூம்புகாரில் வாழ்ந்த ‘ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசத்துவான் மகன்’ கோவலன், மாநாய்க் கன் மகள் கண்ணகி. இவர்கள் மணவிழா பற்றி விரித் துப் பேசும் சிலப்பதிகாரத்தில் மணச்சடங்குகள் பற்றிய சுருக்கமான பதிவு கீழ்வருமாறு :

திருமணப் பந்தலில் (சந்திரனும், உரோகிணியும் கூடிய நல்லோரையில்) மாமுது பார்ப்பான் வேதநூல் வழிப்படி கோவலன் கண்ணகி இணையரைத் தீவலம் வரச் செய்தான். பெண்டிர் பலர் மணப் பொருள்களை ஏந்தி நின்றனர். சிலர் உரையால் வாழ்த்தச் சிலர் பாடலால் வாழ்த்தினர். சிலர் பலவகைச் சாந்துகளை ஏந்தி நின்றனர். மற்றும் சிலர் மாலைகளை ஏந்தி நின்றனர். சிலர் விளக்குகளையும், வேறு சிலர் முளைப் பாலிகையையும் ஏந்தி நின்றனர். கொடி போலும் மகளிர் ‘இக்கண்ணகி தன் தலைவனைப் பிரியாதவள் ஆகுக! இவள் காதலன் இவளைத் தழுவிய கைநெகி ழாமல் சேர்ந்திருப்பானாக! இருவரும் அன்புடன் தீதற்று விளங்குக’ என்று தம் வழிபடு கடவுளை வணங்கி னர். சிலர் மலர்களைத் தூவி வணங்கினர்.

இங்குப் பார்ப்பனர் இடம்பெற்றுள்ளார். அவர் வேத முறைப்படி திருமணம் நடத்துகிறார். மணமக்கள் தீவலம் வருகிறார்கள். ஆனால் தாலி இடம்பெறவில்லை.

மறுவில் மங்கல அணியே அன்றியும்

பிறதணி அணியப் பெற்றதை எவன்கொல்

- மனையறம் படுத்த காதை

மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்

- அந்திமாலைச் சிறப்புசெய் காதை

போன்ற குறிப்புகளைக் கொண்டு கண்ணகியும் தாலி அணியும் வழக்கத்தைக் கைக்கொண்டாள் இல்லை என்று அறிகிறோம்.

திருமணம் என்று சொல்லப்படுவது கொள்வதற்கு உரிய மரபில் தலைவன் தலைவியைக் கொடைக்குரி மரபினோர் கொடுக்கக் கொள்வது எனத் தொல்காப்பி யர் கணவன், மனைவி இருவரும் இணையும் இல்ல றம் பற்றி இலக்கணம் வகுத்தார்.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே!’

- தொல்காப்பியம் கற்பியல்-1

பொய்யும் தவறுகளும் ஏற்பட்ட பிறகுதான் மேலோர் இல்லற ஏற்பில் பல சடங்குகளை ஏற்படுத்தினர் என் றும் தொல்காப்பியம் கூறும். அங்கும் தாலி பற்றிய குறிப்பு இல்லை.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

அய்யர் யாத்தனர் கரணம் என்ப’

- கற்பியல்-4

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக் குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் இடம்பெறாத தாலி, பெரியபுராணம், கம்பராமாயணம் முதலிய பிந்தைய கால இலக்கியங்களில் தான் இடம்பெற்றது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக் கம் பரந்துபட்ட அளவில் பார்ப்பன மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு என்பவற்றுடன் தாலி மறுப்புத் திருமணங்களையும் ஏற்படுத்திச் சமூகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இடதுசாரி இயக்கங்களும் உழைப்பாளி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பெரியார் தாலி அணியும் திருமணங்களையும் தலைமை ஏற்று நடத்தி வைத் துள்ளார். பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பிற்போக்கு அடிமைக் கருத்தியலை அடித்து நொறுக்கு வதற்குத்தான் அவர் அதிக முதன்மை தந்தார்.

“இப்போது இங்குப் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது. ‘இந்தப் பெண், இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து’ என்கிற அறிகுறிக்காகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கலியாணம் நடந்த போதிலும் மணப்பெண் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1-3 (சமுதாயம்), பக்கம் 249).

Pin It