உலகளவில் இன்றும் செய்தி ஊடகங்கள் அன்றாட அரசியல் சமூக பொருளாதாரக் கருத்துக்களை முன்மொழி கின்றன. உலகளவில் ஏறக்குறைய 15 ஆயிரம் தொலைக் காட்சி நிறுவனங்கள் ஒளி ஊடகங்களை இயக்கி வருகின்றன. இந்தியாவில் பல இந்திய மொழிகளில் 832 தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன.

இந்தி, மராத்தி, குஜராத்தி, உருது, கன்னடம், தெலுங்கு, தமிழ், வங்கம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாளேடுகள், வாரஏடுகள், மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள் வெளி வருகின்றன. உலகளவிலும் இந்தியாவிலும் அதிக எண்ணிக் கையில் விற்பனையாகும் ஏடு “டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற ஆங்கில நாளேடாகும். ஒளி ஊடகங்களில் பெரும்பாலும் சினிமா, கேளிக்கை, விளையாட்டு நிகழ்ச்சிகள் முதன்மைப்படுத் தப்படுகின்றன. பொது அறிவு, அறிவியல் சார்ந்த கருத்துகள் போன்றவை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையில்தான் உள்ளன. ஒளி ஊடகங்களின் வளர்ச்சியும் மிகப் பெரிய அளவில் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்று வந்தாலும் இந்த ஊடகங்களைப் பெரும்பாலும் கேளிக்கைகளின் கருவியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.

media in indiaஅமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ், டைம்ஸ் வார இதழ் ஆகியன அரசியல் கருத்துக்களை நடுநிலையோடு வெளி யிடுவதில் முதலிடம் வகிக்கின்றன. ஊடக முதலாளிகளுக்கும் ஊடகத்தில் பணியாற்றுகிற செய்தியாசிரியர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஊடக செய்தியாளர்களின் அமைப்பு மேலைநாடுகளில் தனித்த அடையாளங்களுடன் செயல்படுகின்றன. அமெரிக்கா அரசு செய்த வாட்டர் கேட் ஊழல், குடியரசுத் தலைவர் கிளிண்டன் மேற்கொண்ட ஒழுக்கம் தவறிச் செய்த முறைகேடுகள் ஆகியவற்றை வெளிக் கொணர்ந்தனர். அமெரிக்க அரசியலின் கேடுவிளைவிக்கும் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. இதனால் செய்தி ஆசிரியர்களின் செல்வாக்கு அமெரிக்கா நாட்டில் பெருகி வருகிறது. தனித்துவமானதாக இருக்கிறது. இவர்கள் எந்தவித அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல் பணியாற்றுவதிலும் பல ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதிலும் முழு அளவில் சுதந்திரமாக இயங்குகிறார்கள். ஆனால் பெரும் பாலான ஊடகங்கள் முதலாளித்துவ நிறுவனங்களால்தான் நடத்தப்படுகினறன. தமிழ்நாட்டில் தினத்தந்தி 82 இலட்சம் வாசகர்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. மலையாள மனோரமா 88 இலட்சம் வாசகர்களைத் தொடர்ந்து பெற்று வரும் ஏடாக இந்தியாவில் முதல் நிலையில் உள்ளது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்..

காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான் இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!

ஊரினை நாட்ட இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறிவாளர் நெஞ்சிற்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே.

அறிஞர்தம் இதய ஓடை

ஆழநீர் தன்னை மொண்டு

செறிதரும் மக்கள் எண்ணம்

செழித்திட ஊற்றி ஊற்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக்

குவலயம் ஓங்கச் செய்வாய்

நறுமண இதழ்ப்பெண் ணேஉன்

நலம்காணார் ஞாலம் காணார்.

என்று பாடிச் செய்தி ஊடகங்களுக்கு இலக்கணம் வகுத் தார். ஆனால் இந்தியாவில் ஊடகங்கள் முதலாளிகளின் கைகளி லும் ஆசிரியர் பொறுப்பு உயர்சாதியினர் ஆதிக்கத்திலும் இருப் பதினால் ஆதிக்கச் சக்திகளின் செய்திகளும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்படும் கருத்துகளும் முன்னிலைப்படுத்தப்படு கின்றன. மக்களாட்சியில் நான்காவது தூணாகப் போற்றப் படுகிற ஊடகம் உயர்சாதி - ஒரு சார்பு நிலையால் மேலை நாடுகளைப் போல் மக்களின் மதிப்பைப் பெற இயலவில்லை.

ஆளுங்கட்சி அளிக்கும் விளம்பரத்திற்காகவும் மற்ற சலுகை களுக்காகவும் நடுநிலையோடு ஊடகங்கள் இயங்கவில்லை என்ற கருத்து நாள்தோறும் உறுதிப்படுத்தப்படுகிறது. டைம்ஸ் நௌ என்ற (Times Now) ஒளி ஊடகத்தில் தலைமை ஆசிரிய ராகப் பணியாற்றிய அர்னாப் கோசுவாமி பல ஊழல்களையும் அன்றாட அரசியல் தொடர்பான செய்திகளையும் தனது உரத்த குரலில் நாள்தோறும் ஒலித்தவர். அண்மையில் அந்த ஊடகத்திலிருந்து வெளியேறி ஒரு முதன்மையான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங் களும் நடுநிலையோடு நேர்மை யோடு செயல்படவில்லை என்று உறுதிபடக் கூறுகிறேன் என்று கோசுவாமிக் கூறி யுள்ளார். தான் தொடங்கும் புதிய ஒளி ஊடகம் உறுதியாக நேர்மையுடனும் நடுநிலையுடனும் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஊடகங்களின் ஒரு சார்பு நிலைப்பற்றி ஒரு மூத்த ஊடக ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கில ஒளி ஊடகங்கள் பெரும்பாலும் வடநாட்டுச் செய்திகளையே பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. இந்தியாவில் தென்னாடு என்ற ஒன்று இருப்பதாகவே அவர்கள் கருது வதில்லை. பெரும்பான்மையான மக்களின் சமூக, பொரு ளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தொடர்ந்து இருட் டடிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக இடஒதுக்கீடு பிரச்சினை, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, தலித் இன மக்கள் மீது நடத்தப் படும் கொடுந்தாக்குதல்கள் கார்ப்பரேட் சாமியார்களின் அட்டகாசங்கள் பற்றிய செய்திகளை மறைத்தும் அவைகளை முதன்மைச் செய்திகளாக வெளியிடாமலும் விவாதிக்காமலும் தவிர்த்து விடுகின்றன. அச்சு ஊடகங்களும் இதே போக்கினைத் தான் பின்பற்றி வருகின்றன. அம்பானி-நியூஸ் 18 தொலைக் காட்சி நிறுவனத்தை வாங்கி இந்தி உட்பட பல மொழிகளில் ஒளிபரப்பில் அம்பானிக் குழுமம் தனது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகிறது.

வணிகம் வளருவதற்காக தொடக்கக் காலக் கட்டத்தில் சிறந்த ஆசிரியர்களை வைத்து ஊடகத்தை வளர்த்தெடுப்பதும் பின்பு அவர்களைத் துரத்திவிடுவதும் முதலாளிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஏற்கெனவே தொழில் குழுமங்களில் தலைமைப் பதவிகளிலும் உயர் அலுவலர்களை நினைத்த நேரத்தில் வேலையை விட்டு நீக்குகிற போக்கினை நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட முதலாளிகள் செய்தி ஊடகங் களினுள் நுழைந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் தற்போது நடைபெற்று வரும் பல நிகழ்வுகள் மெய்ப்பித்து வருகின்றன. அரசியலில் இருப்பவர்கள் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களைப் பகைத்துக் கொள்வதற்கு பயப்படுகிறார்கள். இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 20 ஆண்டு களாக செய்தி ஊடகங்கள் எப்படி செயல்பட்டுள்ளன என்பதை எல்டுமென் (Eldmen Trust) அறக்கட்டளையால் 38 நாடுகளில் நடத்தப்பட்ட கள ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. 2017இல் உலக பொருளாதார மையம் (World Econimic Forum Survey of Indian Media) அந்தக் கள ஆய்வினை-ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில், “மக்களின் நம்பிக்கையை இந்திய ஊடகங்கள் இழந்து வருகின்றன. உலகிலேயே நம்பகத் தன்மையை இழந்த ஊடகங்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை இந்திய ஊடகங்கள் பெற்றுள்ளன. பொய்யான கதைகளைப் பரப்புவது, தவறான கருத்துகளைத் திணிப்பது போன்ற காரணங்களால் இந்த நிலையை ஊடகங்கள் எட்டியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வந்த பிறகு முழுமையாக ஒளி அச்சு  ஊடகங்கள் கடைபிடிக்கும் இரட்டை நிலைப்போக்குத் தோலுரிக்கப்பட்டுள்ளது. தங்களை ஊடகச் செய்தியார்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள் சில நன்மைகளைப் பெறுவதற்காகச் சில அரசியல் கட்சிகளின் தொடர்பாளராகவே மாறிவிட்டனர் என்றும் இந்த ஆய்வறிக்கையில் வெளி வந்துள்ளது.

1940ஆம் ஆண்டு கோவிந்த ரானடேவின் 101ஆவது பிறந்தநாள் விழாவில் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்ட உரையை 1943ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் வெளியிட்டார். அவ்வுரையில் ரானடே காந்தி ஜின்னா ஆகிய தலைவர்களை ஒப்பிட்டு சிறந்த ஆய்வுரையை வழங்கி யுள்ளார். காந்தியாக இருந்தாலும் ஜின்னாவாக இருந்தாலும் தனி மனித வழிபாடு மிகவும் ஆபத்தானது. நாட்டை நேசிப்பவன்தான் உண்மையான தேசியவாதி. தலைவர்களை விட நாடு பெரிது என்று ஒரு நாள் மக்கள் உணரும் காலம் வரும். காந்தி ஜின்னா போன்றவர்களை வழிபடும் போக்கும் நிற்கும் என்றும் அவ்வுரையின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந் தார். குறிப்பாக ஊடகங்களைப் பற்றி மிகத் தெளிவான பார்வையை அறிஞர் அம்பேத்கர் வைத்திருந்தார். அவ்வுரையில் இதழியல் இந்தியாவில் ஒரு காலத்தில் தொழிலாகப் போற்றப்பட்டது. இன்று அது வணிகமயமாக மாறிவிட்டது. அதற்கு அறநெறி கிடையாது. மக்களுக்கு அறிவுரை வழங்கும் பொறுப்பும் கிடையாது.

எவ்வளவு உயர் பதவியில் இருந்தவராக இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் சமுதாயத்தின் பொது நோக்கோடு செய்திகளை வெளியிடுவதுதான் உண்மையான இதழியலின் கடமையாகும். ஒரு கதாநாயகரை ஏற்றுக்கொண்டு அவரை வழிபடும் நோக்குதான் தங்களது முதன்மையான கடமையாக எடுத்துக் கொள்கிறது. அதனடிப்படையில் வரும் செய்திகள் உணர்வைத் தூண்டுகின்றன. செயல்நோக்கம் இல்லாதவர்களின் ஆசைகளுக்குத் தீனி போட்டுச் செயல்நோக்கக் கருத்துகளைப் புறக்கணிப்பது பொறுப்பற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டி, பொறுப்புள்ள மக்களின் எண்ணங்களுக்கு முறையீடு செய்யத் தவறுவதுமே ஊடகங்களின் செயலாக உள்ளது. (Journalism in India was once a profession. It has now become a trade- Baba Sahib Ambdkar writing and speeches, Vol.1 Page 227).

லார்ட் செல்சுபரி என்பவர் இங்கிலாந்தில் உள்ள இதழியல் துறை பற்றிக் கூறும்போது, அலுவலகச் சிறுவர்களுக்காக அலுவலகச் சிறுவர்கள் எழுதும் கருத்துதான் என்று குறிப்பிட்டார். இந்திய இதழியலோ இதைவிடத் தரந்தாழ்ந்தது என்றே அழைக்கலாம். தாங்கள் வழிபடும் கதாநாயகர்களைத் தூக்கி பிடிக்கத்தான் முரசு கொட்டுகிறார்கள். சில பேர் விதிவிலக்காக இருக்கலாம். அவர்கள் மிகச் சிலரே. அவர்களின் கருத்துக்கள் ஒருபோதும் கேட்கப்படுவதில்லை. தங்களுடைய செல்வாக்கினை உயர்த்திப் பிடிப்பதற்காகப் பெரும் முதலாளிகளிடமிருந்தும் பெரும் வணிகர்களிடமிருந்தும் உதவி பெறுகிறார்கள். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ரூஸ்வெல்ட் அமெரிக்க மக்களைப் பார்த்துக் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை காண வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். நம்மை யார் ஆட்சி செய்வது செல்வமா? மனிதனா? நம்மை வழி நடத்துவது பணமா? அறிவா? பொது அவைகளில் படித்தவர்களும் நாட்டுப் பற்றுள்ளவர்களும் இருக்க வேண்டுமா? அடிமைத்தனத்தை வலியுறுத்தும் முதலாளித்துவ நிறுவனங்கள் இருக்க வேண்டுமா?

இவ்வித அறிவுபூர்வமான உரையாடல்களை இணைத்து ஒப்பீடு செய்வது ஆகியன குறித்து இந்திய ஊடகங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் அம்பேத்கர் சுட்டியுள் ளார். அன்று அம்பேத்கர் குறிப்பிட்டதைத்தான் இன்று அர்னாப் கோசுவாமி வெளிப்படுத்துகிறார். அறிஞர் அம்பேத்கர் குறிப் பிடும் காலத்திலாவது அரசியலில் நாயகர்கள் இருந்தார்கள். இன்றோ எழுதிக் கொடுத்தால் பேசும்-இயக்கினால் இயங்கும்-அழச் சொன்னால் அழும்-உடனே சிரிக்கச் சொன்னால் சிரிக்கும் அரசியல் பொம்மைகளைத்தான் நாம் காண்கிறோம். மேலும் அறிவற்ற பண்பாடற்ற திறமையற்ற போலிகளை நடிகர்-நடிகைகளை உயர்த்திப் பிடிக்க ஊடகங்கள் செய்து வரும் சாகசங்களைப் பார்க்கும்போது இந்த ஊடகங்கள்தான் மக்களாட்சி முறையைக் காப்பாற்றும் நான்காவது தூண் என்று நம்பவேண்டுமோ?

தமிழ் ஊடகங்களில் அறிவியல் வலியுறுத்தும் கருத்துகள் ஒரு புறம். அறியாமையை வளர்த்தெடுக்கும் சோதிட நட்சத்திரக் கணிப்புகள் ஒரு பக்கம். அறிஞர்களின் கருத்துகள் ஒரு பக்கம்; நாட்டை இருளில் ஆழ்த்தும் சாமியார்களின் அறிவுரை ஒரு பக்கம் என எல்லாவற்றிலும் ஒரு வணிக நோக்கே மேலோங்கி நிற்கிறது. குறிப்பாகப் பள்ளிகளில் அறிவியல் பயிலும் மாண வர்கள் வானியலைப் பற்றி படிக்கிறார்கள். சூரியக் குடும்பத் தைச் சுற்றித்தான் மற்ற கோள்கள் வலம் வருகின்றன என்று படிக்கிறார்கள். பூமியும் ஒரு கோள் என்று தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் சூரியனை ஒரு கோளாக வானியல் கருத வில்லை. சந்திரன் பூமியின் ஒரு துணைக்கோள். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ராசியைக் குறிக்கிறார்கள். இது அறிவியலுக்கு முழுவதும் புறம்பானது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு செய்தி ஊடகங்களையும் ஒளி ஊடகங்களையும் கண்ணுற்றால் இவர்கள் திட்டமிட்டுக் காசுக்காகத் திணிக்கும் மூடநம்பிக்கை என்பதை உணர்வார்கள். இவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் கருத்துகளைத் திணிப்பது எவ்வளவு காலம் நீடிக்குமோ? இதுதான் ஊடக விபச்சாரமோ?

500 ரூபாய் 1000 ரூபாய் உயர் மதிப்புப் பண நீக்கம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் நடுநிலையோடும் நேர்மையோடும் கருத்துக்களை வெளியிட்டன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் படும் அல்லல்களை அரசு அறிவிப்புகளால் ஏற்பட்டு வரும் குழப்பங்களையும் சுட்டி, நடுவண் ஒன்றிய அரசு இந்நடவடிக்கையில் முழுத்தோல்வியை அடைந்துவிட்டது என்று கூறுவதற்குப் பெரும்பான்மையான ஒளி அச்சு ஊடகங்கள் முன்வரவில்லை. பட்டிமன்றம் போன்று ஒட்டியும் வெட்டியும் பேசுவதற்குப் பேச்சாளர்களை அழைத்து மக்களைத் திசை திருப்பும் பணியிலேயே முன்னிற்கின்றன. மதவாத சக்திகள் போடும் ஆட்டங்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றன. ஊடக நெறி என்பதே இல்லாமல் செய்து விட்டனர்.

ஆனால் சமூக வலைத்தளங்கள் இன்று கருத்து பரி மாற்றத்தில் பெரும் தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தி வரு கின்றன. ஒளி அச்சு ஊடகங்களை மீறி விஞ்சி வலைத்தளங் கள் வழியாகக் கருத்துகள் பரவுகின்றன. முதன்மையான சமூக வலைத்தளங்களின் கருத்துகளை ஒளிஅச்சு ஊடகங்கள் தினமும் வெளியிட்டு தங்களின் இலாப வேட்டையைத் தொடரு கின்றன.

இவ்வித நெறியற்ற, முறையற்ற ஊடக நடவடிக்கைகளைக் கண்டுதான் அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் நரேந்திர மோடியிடம் இந்திய ஊடகங்கள் தாய்ப்பால் குடிப்பதைப் போல கேலிச் சித்திரத்தை வெளியிட்டது. இந்திய ஊடகங்களின் மிக மோசமான இழிநிலையைச் சுட்டிடும் கருத்துப்படம் வெளியிட்ட பின்பும் இனிமேலாவது இந்த முதலாளித்துவ அச்சு ஒளி ஊடகங்கள் தன்மானத்தைப் பெறுமா?