இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பிறகு அய்க்கிய நாடுகள் மன்றம் 1945ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. போரில் கோடிக்கணக்கில் உயிர்சேதங்களும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டதைக் கண்ணுற்ற பல உலகத் தலைவர்கள் இதுபோன்ற மானிடப் பேரழிவு மீண்டும் ஏற்படக் கூடாது என்று எண்ணினர்.

உலகில் பெருகி வருகிற மக்கள் தொகை, ஏழ்மை, கல்லாமை, நோய்களின் பெருக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்குக் களப்பணிகளை மேற்கொள்வதற்குத் தொழில்நுட்பம், நிதியுதவிகள் வழங்கிடும் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பல துணை அமைப்புகளை வடிவமைத்தனர். இதன் காரணமாக, உலக சுகாதார மையம், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குழுமம், குழந் தைகள் நிதியம், கல்வி, அறிவியல், கலாச்சார, பண் பாட்டு அமைப்பு, உணவு, வேளாண் வளர்ச்சிக் கழகம், தொழில் வளர்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஆகியன முகிழ்த்தன.

மூன்றாம் உலக நாடுகளின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும் போதிய வளர்ச்சியடையாத துறைகளில் தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்காகவும் இவ்வமைப்புகள் அரசியல் சார்பற்ற முறையில் பணி களைத் தொடங்கின. இன்றளவும் இவ்வமைப்புகள் சீரிய முறையில் மக்களுக்குத் தங்களது கடமைகளை யும், தொண்டினையும் ஆற்றி வருகின்றன.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் நேரத் தில் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து 1944இல் இரண்டு நிதி அமைப்புகளை அமெரிக்கா வின் பிரிட்டன் உட்ஸ் நகரில் உருவாக்கின. இம்மா நாட்டில் பொருளியல் அறிஞர் ஜே.எம். கீன்சு கலந்து கொண்டு சிறந்த அறிவுரைகளை மேலை நாடுகளுக்கு வழங்கினார். இன்றும் நினைவுச் சின்னமாகப் போற் றப்படும் அம்மாநாட்டு அரங்கினை இக்கட்டுரை ஆசிரியர் 1995இல் பிரிட்டன் உட்ஸ் நகருக்கு நேரில் சென்று பார்த்தார். இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப் பட்டு, பெரும் நிதிச்சிக்கல்களில் உள்ள ஏழை நாடு களின் நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் தகுதியைப் பெறுவதற்கும் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் பாடுபட வேண்டும் என்று அறிஞர் கீன்சு வலியுறுத்திய கருத்துகள் அவ்வரங்கில் இன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், கீன்சு கருத்துகளுக்கு எதிராகத்தான் ஏகாதி பத்திய நாடுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வளர்கின்ற நாடுகள் தங்களின் பேராதிக்கத்திற்குக் கட்டுப்பட்ட நாடு களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இரு நிதி அமைப்புகளையும் பயன்படுத்தி வருகின்றன.

அய்க்கிய நாடுகள் மன்றத்தில் முதலில் இடம் பெறாத இந்த இரு நிதி அமைப்புகள் 1947இல் அய்.நா. மன்றத்தின் பொதுச் சபையின் ஒரு தீர்மானம் வழி யாக அங்கீகாரத்தைப் பெற்றன. அதன்பிறகு கடன் உதவி என்ற பெயரில் மெல்ல மெல்ல ஊடுருவி அய்.நா. மன்றத்தின் தொழில்-வர்த்தக செயல்பாடு களில் குறுக்கிட்டன. ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் பெருமளவிற்குத் தங்களின் மூலதனத்தை நிதிப்பங்காக வைத்துள்ளதால், இந்த நிதி அமைப்புகளில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தையும் பெற்றுவிட்டன.

1975ஆம் ஆண்டு தொடங்கி, 2010 வரையில் கிடைக்கின்ற புள்ளிவிவரங்களின்படி பல இலட்சங் கோடி ரூபாயை இந்த அமைப்புகள் நிதியாகப் பெற்றி ருந்தாலும், 4 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காட்டு அளவிற்குத்தான் வளர்க்கின்ற நாடுகளுக்குக் கடன் உதவியை அளித்துள்ளன. இந்த நிதியமைப்புகளி லிருந்து கடனைப் பெறுவதற்குத் தாராளமய சந்தை அமைப்புப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும் என்கிற அறிவிக்கப்படாத ஒரு கட்டளை யை வளர்கின்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. பன்னாட்டு முதலாளித் துவ நிறுவனங்கள், வளர்கின்ற நாடுகளில் தங்க ளுடைய முதலீடுகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் வரிச்சட்டங்கள் உட்பட உள்நாட்டுச் சட்டங்களை மாற்றியமைப்பதற்கும் இந்த இரு அமைப்புகள் வலி யுறுத்துகின்றன. இதன் காரணமாகத்தான் வளர்கின்ற நாடுகள் பொருளாதாரச் சுயசார்புக் கொள்கையைக் கைவிட்டு வருகின்றன. அரசாளுகின்ற முற்றுரிமையையும் (Sovereignity) இழந்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் உள்நாட்டு மக்களின் இன, மொழி உரிமைகளை நசுக்குவதற்குத்தான் இந்த அரசுரிமை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகின் பெரிய பொருளாதாரச் செல்வாக்கினைப் பெற்றுள்ள அய்ந்து நாடுகள் 45.47 விழுக்காடு அளவிற்கு இந்த அமைப்புகளின் ஆளுநர் குழுவில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா மட்டும் 19 விழுக்காடு பெற்று முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (UNCTAD) புள்ளிவிவரப்படி 9 இலட்சம் உலக நிறுவனங்கள் பன்னாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளன. அவற்றுள் 61 ஆயிரம் பன்னாட்டு நிறுவனங் கள் உலக அளவில் உற்பத்தி செய்கின்றன. உற்பத்தி விழுக்காட்டில் அதிக உற்பத்திப் பங்கினை 100 பன் னாட்டு நிறுவனங்கள்தான் வைத்துள்ளன. இந்த 100 நிறுவனங்கள் 1990இல் 27 விழுக்காட்டு அளவிற்கு விற்பனையையும், 21 விழுக்காட்டு அளவிற்கு வேலை வாய்ப்பினையும் அளித்தன. 2002இல் 14 விழுக்காடு விற்பனையையும், 12 விழுக்காடு சொத்து மதிப்பினை யும், 13 விழுக்காடு வேலை வாய்ப்பினையும் அளித் தன. 2001க்குப் பிறகு, இந்நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டினாலும், வேலை வாய்ப்புகள் குறைந்து வரு கின்றன. இதன் காரணமாக, வளர்ந்த நாடுகளில் பெருமளவிற்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வரு கின்றது. உலகமயமாக்கல் கொள்கை என்பது ஊக வணிகமாக மாறி, நிதி மோசடியிலும், பன்னாட்டு நிறு வனங்களை மூடுவதிலும் தான் முடிவடைந்துள்ளன. இந்நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் (Bailout Programmes) அமெரிக்க நாடு மக்களின் வரிப் பணத்தில் பல இலட்சம் கோடி ரூபாயை இழந்து நிதிச் சிக்கலில் தொடர்ந்து திண்டாடி வருகிறது.

இந்தியா, நேரு கடைபிடித்த பொருளாதாரக் கொள் கையை 1980இல் இருந்து குழித்தோண்டிப் புதைக்கத் தொடங்கியது. தற்போது நேருவின் 125ஆம் பிறந்த நாளைச் சோனியா தலைமையில் கொண்டாடும் காங்கிரசுக் கட்சி, 2004க்குப் பிறகு இந்தியப் பொருளா தாரத்தைப் பன்னாட்டு சந்தையாக்கிவிட்டது. மேலும், நேரு, லால்பகதூர் சாஸ்திரி மறைவிற்குப் பிறகு பொறுப் பேற்ற இந்திரா காந்தி, உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் அழுத்தத்தின் காரணமாக, 33 விழுக்காடு அளவிற்கு இந்தியாவின் ரூபாய் நாணய மதிப்பைக் குறைத்தார். இந்த நடவடிக்கையால்தான் விலைவாசி உயர்வும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தொடங்கின. அதன் எதிர்மறைவு விளைவுகளை இன்றளவும் இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது.

பெருந்தலைவர் காமராசர் அகில இந்தியக் காங்கிர சின் தலைவராக இருந்தபோது காலையில் செய்தி ஏட்டில் பார்த்துதான் இந்திய நாணய மதிப்புக் குறைப்புச் செய்தியை அறிந்ததாகக் கட்டுரையாளரிடமும், மார்க்சிய அறிஞர் க.ரா. ஜமத்கனியிடமும் நெருக்கடிநிலைக் காலத்தில் 1975ஆம் ஆண்டு சந்தித்தபோது சுட்டினார்.

1983இல் திருமதி. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மீண்டும் இந்நிதி நிறுவனங்களிடம் இருந்து நடுவண் அரசு 3000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றது. நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அன்றைக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்தக் குரலில் உலக வங்கியிடம் இந்தியாவை அடமானம் வைக்கக்கூடாது என்று வாதிட்டன. இருப்பினும், மீண்டும் 1991இல் நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதிய மைச்சராக இருந்தபோது, இந்தியப் பொருளாதாரம் வளைகுடாப் போரின் காரணமாகப் பெரும் பாதிப்பைச் சந்தித்தபோது, நாடாளுமன்றத்திற்குத் தெரியாமலேயே இந்த இரு அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக காட் ஒப்பந்தத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டது.

மேலும், 1991ஆம் ஆண்டு உலக வங்கியின் அழுத்தத்தால் மீண்டும் இந்தியாவினுடைய நாணய மதிப்பு குறைக்கப்பட்டது. நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் பன்னாட்டு நிதியத்தில் பணிபுரிந்த வர் என்பதால் இந்தியப் பொருளாதாரத்தைத் தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல், உலகமயமாக்கல் பற்றி ஒரு புதுவிதமான விளக்கத்தை அளித்தார். இந்தக் கொள்கைகளை ஏற்றால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்; வீழ்ச்சிப் பாதையில் இருந்து பொருளாதாரத்தை மீட்bடுக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் மக்களுக் குத் தேவையான சமூகக் கட்டமைப்புத் துறைகளின் பொதுச் செலவைப் பெருமளவிற்கு மன்மோகன் சிங் குறைத்தார். அதன் விளைவாகக் கல்வி, குடிநீர், சுகா தாரத் துறைகளில் பின்தங்கி மானுட மேம்பாட்டு குறியீடுகளில் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பின்னால் நிற்கிறது இந்தியா.

உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வாஷிங்டன் கொள்கை (Washington Consensus) என்ற அமெரிக்கா வின் முதலாளித்துவக் கொள்கையையே ஒரு திட்ட மாக அறிவித்தார்கள். இலத்தீன் அமெரிக்கா நாடுகள் நிதிச்சிக்கல்களைச் சந்தித்தபோது இக்கொள்கையை முதலில் நடைமுறைப்படுத்தத் தொடங்கின. ஆனால், 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு இலத்தீன் அமெரிக்க நாடுகள் தங்களுக்குள் பொருளாதாரக் கூட்டு ஒப்பந் தத்தை ஏற்படுத்திக் கொண்டு உலக வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனை முழுமையாகத் திருப்பியளித்து விட்டன. இதன் காரணமாக வட்டி வருமானம் குறைந்து, இந்நிதி நிறுவனங்களில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. தற்போது, இந்தியப் பொருளாதாரம் 5 விழுக்காட்டிற்கு மேல் வளர்ச்சி பெற்றாலும், இந்த இரு நிதி நிறுவனங்களின் வலையிலிருந்து தப்ப முடிய வில்லை. இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1950-லிருந்து 1980 வரை நேரு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் இந்தியாவின் கட்ட மைப்புகள் உறுதி செய்யப்பட்டன. வேலை வாய்ப்பு கள் பெருகி, ஏற்றத் தாழ்வுகள் ஓரளவிற்குக் குறைந்து காணப்பட்டன. 1990க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்றத் தாழ்வுகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப் பின்மை பெருகி ஏழை மக்கள் துன்பம் அடைகிறார்கள் என்பதைப் பல புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

இச்சூழலில், பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனங்களினுடைய நலனை ஒட்டியே செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டை இன்றைக்கு மேற்கத்தியப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வளர்ந்த நாடுகளிலேயே தொழிலாளர் நலன் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வரு கிறது என்பதை எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்டு கொள்கை மாற்றம் தேவை என்று அறிவிக்கின்றன.

தொழிலாளர் சட்டங்கள் நீக்குப்போக்குக் (Labour Flexibility) கொண்டவையாக இருக்க வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் வலியுறுத்துகின்றது. இக்கொள்கை யின்படி எந்த நேரத்திலும் தொழிலாளர்களை எவ் விதத் தடையுமின்றி வேலையிலிருந்து நீக்கலாம் என்பதுதான் நீக்குப்போக்குக் கொள்கையின் அடிப் படையாகும். இந்த நீக்குப்போக்குக் கொள்கையை நரேந்திரமோடி அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

எனவேதான் சென்னைக்கு அருகே உள்ள நோக்கியா நிறுவனம், பல கோடி வரிச்சலுகைகளைப் பெற்ற பின்பும், நிலம், நீர், மின்சாரம் ஆகிய சலுகைகளைப் பெற்ற பின்பும், பல இலட்சங் கோடி வரி ஏய்ப்பு செய்த பின்பும் இந்நிறுவனம் நடுவண் அரசு, மாநில அரசிற்கு அறிவிக்காமலேயே தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது. இத்தொழிற்சாலையை மற்றொரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இலாபத்திற்கு விற்று விட்டது. இத்தகைய தன்மைகளை உணர்ந்த பின்பும் பாதுகாப்பு, காப்பீட்டுத் துறைகளில் 49 விழுக்காட்டு அளவு அந்நிய முதலீட்டினை பா.ச.க. அரசு உயர்த்து வோம் என்று அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறு வனங்கள் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல், அதனுடைய புனரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல், இலாபம் தரும் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்திற்கு அடிபணிய வைப்பது காந்தி-நேரு கடைபிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும், நாட்டிற்கும் செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.

2001இல் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிசு, கிளின்டன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த போது, பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய வர். அமெரிக்காவின் ஆதரவோடு உலக வங்கியின் தலைமைப் பொருளாதார அறிஞராகவும் பணியாற்றி யவர். உலக வங்கி, வளர்ந்த, வளர்கின்ற நாடுகளின் நிதிச்சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் புதிய புதிய நிதிச்சிக்கல்களைப் பெருக்கி வருகின்றது என்று சுட்டியுள்ளார். பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் நலனை ஒட்டியே இவ்வமைப்புகள் செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உணவு, மருந்துப் பொருள்கள் ஆகிய துறைகளி லும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிக்கின்றன. மக்களிடையே ஏழ்மையும் ஏற்றத் தாழ்வுகளும் பெருகி வருகின்றன. உலகமயமாக் கலின் முதல் அடிப்படை கருத்துருவான சந்தைப் பொருளாதாரம் முழுமையாகத் தோற்றுவிக்கப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றா மல் வளர்ந்த நாடுகள் கூட தடுமாறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகளால் கடைபிடிக் கப்பட்டு வரும் உற்பத்தி முறையும் நுகர்வுக் கலாச் சாரமும் பெருமளவில் சுற்றுச்சூழல் கேட்டினை உல கிற்கு அளித்து இயற்கை வளங்களைச் சூறையாடி வருகின்றன. சந்தைப் பொருளாதார முறையை மாற்றி அமைக்காவிட்டால் வளர்ந்த நாடுகள் சந்திக்கும் இதே நிலையை வளர்கின்ற நாடுகளும் சந்திக்க நேரிடும் என்று ஸ்டிக்லிசு போன்ற பல வல்லுநர்கள் இந்தியா போன்ற நாடுகளை எச்சரிக்கத் தொடங்கி யுள்ளனர். இதுபோன்ற உண்மையான கருத்துகளை வெளியிட்டதன் காரணமாக அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஆய்வு பேராசிரியர் பதவியை ஸ்டிக்லிசிட மிருந்து பிடுங்கிவிட்டன. இதுதான் அமெரிக்காவின் கொடிய முகம் என்பதை இந்திய அரசியல் தலைமை எப்போது உணரப் போகிறதோ!

குறிப்பாக, மும்பையில் இருந்து வெளிவரும் அரசியல் பொருளாதார வார ஏட்டில் (அக்.2014, பக்.23), அலோக் சீல் என்ற ஆய்வாளர் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் வளர்ந்த, வளர்கின்ற நாடுகளின் சிக்கல்களைத் தீர்க்காமல் தோற்றுவிட்டன என்பதை ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பு களின் சனநாயக விரோதத் தன்மையால் எல்லா நிலைகளிலும் இவ்வமைப்புகள் தோற்று வருகின்றன என்பதையும் ஆதாரத்தோடு சுட்டியுள்ளார். குறிப்பாக, பன்னாட்டு நிதியத்தில் பிரேசிலுக்கு 1.7 விழுக்காடும், ரஷ்யாவிற்கு 2 விழுக்காடும், இந்தியாவிற்கு 2 விழுக் காடும், சீனாவிற்கு 3 விழுக்காடும், தென்னாப்பிரிக் காவிற்கு 1 விழுக்காட்டிற்குக் குறைவாகவும் வாக்களிக் கும் அதிகாரம் உள்ளது என்றும் குறித்துள்ளார். எனவே, இந்நாடுகள் எந்தவிதக் கொள்கை முடிவை யும் எடுக்க முடியாத தன்மையைக் காலம் கடந்து உணர்ந்துள்ளன. மேலும், உலக வர்த்தக அமைப்பு இதுபோன்ற வாக்களிப்பு அதிகாரம் துளியும் இல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பு என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் காரணமாகத்தான், தோஹோவில் நடைபெற்ற அமைச்சர் அளவிலான மாநாடு 1999இல் தோல்வியடைந்தது. இன்றுவரை எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மோடி அரசு அமெரிக்கப் பொருளா தாரக் கொள்கையைப் பின்பற்றி வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் குறைக்க விரும்புகிறது. இந்தியா இந்த மூன்று உலக அமைப்புகளின் கெடுபிடிகளி லிருந்து எப்போது விடுபடப் போகிறது. ஆனால், சீனா பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்ற மோசடிகளை அறிந்து இவ்வமைப்புகள் மீது முற்றுரிமை எதிர்ப்புச் சட்டத்தின் வழியாகப் பல நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. உள்நாட்டில் உற்பத்தியாகும் சிமெண்ட் நிறுவனங்களின் மீது ரூ.108 கோடி தண்டமும், ஹோல்சுவேகன் என்கிற ஜெர்மானிய கார் நிறுவனத்தின் மீது ரூ.240 கோடி தண்டமும், ஆடி கார் நிறுவனத்தின் மீது ரூ.24 கோடி தண்டமும், கிரிஸ்லர் நிறுவனத்தின் மீது ரூ.31 கோடியும், அதன் 3 விற்பனையாளர் மீதும் ரூ.2 கோடியும், உள்நாட்டு, வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் மீது ரூ.107 கோடியும், 12 ஜப்பானிய மோட்டார் நிறுவனங்களின் மீது ரூ.1200 கோடியும், நகை உற்பத்தி நிறுவனங் களின் மீது ரூ.96 கோடியும், உள்நாட்டு வெளிநாட்டு பால் பொருட்களின் மீது ரூ.653 கோடியும், சீன மது விற்பனை நிறுவனங்கள் மீது ரூ.420 கோடியும், 6 சீன மற்றும் வெளிநாட்டுத் தொலைக்காட்சி (சாம்சங் உட்பட) நிறுவனங்களின் மீது 345 கோடியும் தண்டம் விதித்து கடுமையான முறையில் எச்சரித்தும் உள்ளது. சீன நாடு அந்நிய முதலீட்டை அதிகளவிற்குப் பெற்றுள்ள போதிலும் உள்நாட்டுச் சட்டங்கள் கடுமையான முறை யில் இருந்த போதிலும் முதலாளித்துவ நிறுவனங்கள் சீன அரசினை ஏமாற்றியுள்ளதால் சீனா இனிமேல் அந்நிய முதலீட்டை அதிகமாக எதிர்பார்த்துப் பொருளா தாரத்தை மேம்படுத்தாது என்று பீஜிங் ரிவியு (செப்.25, 2014, பக்.16) ஏடு குறித்துள்ளது.

இத்தகைய சூழலில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த அமைப்பான பிரிக்சு (BRICS) அண்மையில் வளர்ச்சி வங்கி (Development Bank) ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த வங்கியின் தலைமையகம் சீனாவில் இயங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இந்தியா இவ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

பிரிக்சு அமைப்பு நாடுகளில் 100 கோடி 40 இலட்சம் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 99 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் தவிக் கிறார்கள். 200 கோடி 60 இலட்சம் மக்கள் போதிய சுகாதார வசதிகளின்றி அவதிப்படுகிறார்கள். இந்தியா வில் 60 கோடி மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் பொது இடங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மக்கள் வசதிகளைப் பெற வேண்டுமென்றால், இதற்கான கட்டமைப்புகளைப் பெருக்க வேண்டும் என்று ஸ்டெப்னி கிரப்த் ஜோன்சு (Stephney-Griffith-Jones) என்ற ஆய்வாளர் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் தொழில் வர்த்தகக் கழக ஏட்டில் (மார்ச் 14, 2014) கட்டுரை தீட்டியுள்ளார்.

இத்தகைய கடுமையான சூழல்களை எதிர் கொண்டு இந்தியாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையும், பக்குவமும் இல்லாமல் மோடி அரசு தடுமாறுகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவின் ஆதரவு நிலையையும், மறுபக்கம் பிரிக்சு நாடுகளோடு இணைந்து இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சொல்வோம் என்றும் பிரதமர் மோடி குழப்புகிறார். இந்தியாவின் வளங்களையும், இலாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களையும் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப் பார்க்கிறார்.

தோல்வியுறும் இந்தியனின் கற்பனை (The Failure of Indian Imagination by Gautam Bhatia, The Hindu, Nov.7, 2014) என்ற தலைப்பில் கட்டுரையாளர் கவுதம் பாட்டியா, பிரிக்சு அமைப்பு குறிப்பிடும் மக்களை முன்னேற்றும் கட்டமைப்புத் திட்டங்களை வடிவமைக்காதது நரேந்திர மோடியின் பெரிய தோல்வியாகும். மோடி அரசின் சிந்தனையற்ற பல கருத்துகள் இந்தியாவின் உண்மை நிலையை வெளிப் படுத்துவதாக இல்லை. இப்போது அறிவிக்கப்படுகின்ற பல திட்டங்கள் பல நாடுகளில் பல முயற்சிகள் மேற் கொண்டு பயனளிக்காமல் தோற்ற திட்டங்கள் ஆகும்; அரைவேக்காட்டுத் திட்டங்களாகும் என்று தனது திறனாய்வில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசு எவ்வகை உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போகிறது? பெரும் பாலான மக்கள் நம்பியிருக்கின்ற வேளாண் துறை யின் சிக்கல்களை எவ்விதம் களையப் போகிறது? இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் திட்டங்களை, சட்டங்களை எப்போது நிறைவேற்றப் போகிறது? அல்லது இருக்கிற பன்னாட்டு நிதி அமைப்புகளிடமிருந்தும், அமையப்போகிற நிதி அமைப்புகளிடமிருந்து புதிதாகக் கடனைப் பெற்று இந்தியாவை அடமானம் வைக்கப் போகிறதா?

 

Pin It