aanaimuthu 35027-07-2015 திங்கள் கிழமை மாலை, மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் ((IIM -Indian Institute of Management) மாணவர்கள் நிரம்பிய கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மாலை 6.30 மணிக்கு மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.

உடனே அங்குள்ள பெதானி என்கிற தனியார் மருத்துவமனையில் தீவிர மருத்துவப் பிரிவில் அவரைச் சேர்த்து மருத்துவர்கள் பலரும் வைத்தியம் செய்தனர். ஆனாலும் அவர் மயக்க நிலையிலிருந்து மீளாமல் உயிர் நீத்தார் என்கிற துன்பச் செய்தி, 27 இரவு 9.00 மணிக்கு எனக்குக் கிடைத்தது. என் பசி நேரத்தில் வந்த இந்தத் துன்பச் செய்தி எனக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

ஏனெனில், 27-07-2015 காலை 9.00 மணிக்குத்தான், 17-07-2015 வெள்ளி மாலையில் அரியலூரில் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து அப்துல் கலாம் அவர்கள் உரையாற்றினார் என்கிற செய்தியை “சிந்தனையாளன்” இதழுக்காக எழுதித் தந்தேன். 24 மணி நேரத்தில், 28-07-2015 காலையில், அப் பெருமகனார் மறைவை ஒட்டி இரங்கல் கட்டுரை எழுதும் பேரிடி போன்ற தீய நிகழ்வு நடந்துவிட்டதைக் கேட்டு என் மனம் நொந்துபோயிற்று.

மறைந்த நம் அப்துல் கலாம் அவர்கள் இசுலாம் சமயத்தில் தோன்றிய மிக நல்ல தமிழர்; எல்லா மதங்களைச் சார்ந்தவர்களையும் ஒன்றுபோல் கருதி நடந்தவர்;தம் குடிஅரசுத் தலைவர் பதவிக் காலத்தில் தம் குடும்ப உறுப்பினர்களை அரசுச் செலவில் ஓம்ப விரும்பாத நேர்மையாளர்.

ஓர் துணைக்கண்டம் போன்ற இந்தியாவில், குடிஅரசுத் தலைவர் என்கிற உயரிய பதவியில் இருந்த போதும், நாட்டின் - உலகத்தின் எந்தப் பகுதிக்கு அவர் சென்றாலும் பள்ளி மாணவர்களையும், கல்லூரி - பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடி, “புதிய இந்தியாவை - புதிய உலகத் தைப் படைக்க வேண்டும் என்று கனவு காணுங்கள்” என அறிவுரை கூறி வேண்டிக்கொண்டவர். பதவியின் பெருமையை - உயர்வைப் பெரிதாகவும், உயர்ந்ததாகவும் நினைக்காமல் மிக எளிமையாகவும் அணுக்கமாகவும் எல்லோரிடமும் பழகிய நயத்தக்க நாகரிகம் பேணிய உண்மையான அறிவாளர். இளைஞர்களின் நெஞ்சங்களில் நம்பிக்கையை விதைத்த மாமனிதர்.

விண்வெளி ஆய்வறிஞர்களுள் ஒருவராக விளங்கிய அவர், ‘இந்திய ஏவுகணையின் தந்தை’ என்கிற போற்றுதலைப் பெற்றவர்.

அவர், அணுவியலின் நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஒன்றுபோல் கருதியதால், கூடங்குளத்தில் அணு உலை நிறுவப்பட்டதை மனமார ஆதரித்தார் என்பது பலருக்கும் வருத்தத்தைத் தந்தது ஓர் உண்மை.

அவர் ஓர் ஏழை இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தம் குடும்ப வறுமையையும் புறந்தள்ளி, மிக உயரிய கல்வியைத் தேடிப் பெற்றார். அந்த உயரிய கல்வி பெற அடித்தளமாக விளங்கியது, தாம் பள்ளியிறுதிப் படிப்பு வரையில், தம் தாய்மொழியான தமிழ் வழியில் படித்து எல்லாப் பாடங்களையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டதால்தான் என்பதை எல்லா நேரங்களிலும் கல்வியாளர்களிடையேயும் மாணவர்களிடையேயும் மனந்திறந்து பேசித் தாய்மொழி வழி - தமிழ்வழிக் கல்வியின் தாளாளராக இறுதிவரை விளங்கிய பெருமகனார் அவர்.

தனக்கு இளமையிலும், கல்லூரியிலும் பாடங்களைக் கற்பித்த தம் ஆசிரியப் பெருமக்களைத் தேடிச் சென்று, மரியாதை செலுத்திவந்த உயரிய பண்பாளர்.

அரியலூரில் 17-07-2015 இரவு புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், “வீடுதோறும் நூலகம் வையுங்கள் ! நாள்தோறும் புத்தகம் படியுங்கள் !” என அறிவுரை அளித்ததை, அவ் விழாவின் நிறைவு நாளில் 26-07-2015 அன்று இரவு நான் உரையாற்றியபோது, எனக்கு நண்பர்கள் நினைவூட்டினார்கள். அத்தகைய அறிஞர், மறுநாள்

18-07-2015 அன்று தமக்குக் கல்லூரியில் பாடங்களைக் கற்பித்த பேராசிரியரும், 92 அகவையினருமான பாதிரியார் சின்னதுரை அவர்களைத் திண்டுக்கல்லில் நேரில் பார்த்து அன்றும் தம் நன்றி உணர்வைப் பதிவு செய்தவர்.

அன்னார் குடிஅரசுத் தலைவராக விளங்கியபோது, தில்லியில், 2006, 2007இல் பலதடவைகள் நானும் சங்கமித்ராவும் முயன்றும் அங்கே அவரைக் கண்டு, “பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி கோரிக்கை” வைக்க வாய்ப்பு நேரவில்லை. ஆனால், அதை அவர் மறவாமல், 2007இல் தமிழகத்துக்குப் பயணம் வந்த ஒரு நாளில் இரவு 7.00 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தில் தம்மை நேரில் காணுமாறு, தமிழக அரசினர் வழியாக எனக்கு அழைப்பு விடுத்தார்.

நான், “உடுமலைப்பேட்டையில் கட்சி வேலை நிமித்தம் தங்கியிருக்கிறேன். என் சார்பாக சங்கமித்ரா, இரா. பச்சமலை, துரை. கலையரசு ஆகியோர் குடிஅரசுத் தலைவரைச் சந்திக்க ஒப்புதல் பெற்றுத் தாருங்கள்” எனத் தமிழக அரசு அலுவலர்களைக் கேட்டுக் கொண்டேன். அதன்படி, என் தோழர்கள் மீனம்பாக்கத்தில் குடிஅரசுத் தலைவரான அவரைக் கண்டு பேசினர். பெரிய பயன் விளையவில்லை என்பது வேறு.

அவர் மறைவுற்ற செய்தியைக் கேட்ட அவர்தம் தமையனார் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர் அவர்கள், (தம் 98ஆம் வயதில்) மயங்கி விழுந்தார் என்பது எல்லோரையும் நெகிழ வைப்பது. அவருடனும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் 26 மாலை அப்துல் கலாம் அவர்கள் கைப்பேசியில் பேசினார். ஆனால், 27-07-2015 மாலை அவருடைய மறைவுச் செய்தி வந்தது என்பது அக்குடும்ப உறுப்பினர்களை வாட்டுவது இயல்பு.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர் !” என்கிற பழந்தமிழ்ப் பண்பாட்டினை - தமிழர்க்கான வாழ்க்கை நெறி நூலாக விளங்கும் திருக்குறளைத் தமிழகம் - இந்தியா - உலக நாடுகள் என எங்கிலும் மறவாமல் தூக்கிப் பிடித்த தூய நற்றமிழறிஞர் அவர்.

“லெப்பை” என்கிற பிரிவினர் தமிழ் பேசும் இசுலாமியர்கள்; மரக்கலராயர் - மரக்கலத்தில் கடலில் புழங்குவோர் என்போர் மரைக்காயர்.

அப்துல் கலாம் அவர்களின் மறைவு இராமேசுவரம், மற்றும் சுற்றுப்புற ஊர் மக்கள் - குறிப்பாக மீனவர்கள், மற்றும் ஏழைகளை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

தமிழ்நாடும், தமிழும் வாழும் காலம் வரையில், மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் புகழ் வாழும் !

ஓங்குக அப்துல் கலாம் புகழ் !

Pin It