உலகத்திற்கொரு புதுமையாக சோஷலிச புரட்சி நடத்தி சோவியத் ரஷ்யாவின் தந்தையாக மக்களின் மனதில் நிறைந்தவர் மாபெரும் தலைவர் லெனின். அவருடைய பிறந்த நாளை நாடே கொண்டாடியது. அச்சமயம் மக்கள் அவரிடம் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார்கள். புத்தகங்கள் வேண்டுமென லெனின் கேட்ட போது பல இலட்சம் புத்தகங்கள் அவரிடம் குவிந்தனவாம். புத்தகங்கள் நேசிப்புக்கும் வாசிப் புக்கும் உரியன என்பதைச் சுட்டிக்காட்ட இச் சம்பவத்தைப் பலரும் குறிப்பிடுவதுண்டு.

லெனின் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் இலட்சக் கணக்கில் நூலகங்கள் தோன்றின. சிறுவர்களுக் கென்று இரண்டு இலட்சம் நூலகங்கள் உருவாக்கப் பட்டன. ‘நூலகம் உங்களை உயர்த்தும்; வாருங்கள் படிப்போம்’ என்று லெனின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நம் நாட்டின் தந்தை மகாத்மா காந்தியும் நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஒரு பத்திரிகை நிருபர் காந்தியிடம் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம். நம் நாட்டிலும் நூலகத்தின் தேவை உணரப்பட்டுள்ளது. பொது நூலகங் களை அரசு நடத்துகிறது. மக்களிடம் நூலக வரி வசூலிக்கப்படுகிறது.

ஒரு சாதாரண மனிதன் எல்லா நூல்களையும் வாங்கி விட முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பொது நூலகமே வழங்குகிறது.

‘உலகத்தைப் புத்தகத்தில் படிப்போம்; உலகத் தையே புத்தகமாய்ப் படிப்போம்’ என்று சொல்லப் படுகிற நிலையில் வளரும் குழந்தைகளுக்கு உலகத் தைப் புத்தகங்களே செவ்வையாக அறிமுகப்படுத்து கிறது. குழந்தைகளுக்கென்று புத்தகங்கள் வெளி வந்த போது அவை முதலில் பொது நூலகத்தி லேயே இடம் பெற்றன.

பொது நூலகம் பெரியோர் களுக்கானது. அவர்களின் தேவையும் நோக்கமும் வேறுபட்டது. இது புரிந்துகொள்ளப்பட்டபோது குழந்தைகளுக்கென்று சிறுவர் நூலகம் ஏற்படுத்தப் பட்டது. 1885-இல் அமெரிக்காவில்தான் முதன் முதலாகச் சிறுவர் நூலகம் தொடங்கப்பட்டது.

நம் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் நூலகத் திற்கும் உள்ள உறவை எண்ணிப் பார்க்கும் போது வேதனையே வருகிறது. ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் ஆகச்சிறந்த பரிசு புத்தகமாகத்தான் இருக்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

நகைநட்டு, துணிமணிகள் என்று விலையுயர்ந்தவைகளைப் பரிசாகத் தரும் பெற்றோர்கள் புத்தகங்கள் தருவதை இன்னும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆன்மிகக் கோவில்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் அறிவுக் கோவிலாக விளங்கும் நூலகத்திற்குக் கூட்டிச் செல்கிறார்களா, என்றால் அதுவுமில்லை.

நூலகம் குழந்தைகளுக்கு வழங்கும் அளப்பரிய வளர்ச்சிகளைத் தமிழ்க் குழந்தைகள் பெற முடியாமல் இருப்பதை எண்ணி வருந்து வதைத் தவிர வேறுவழியில்லை. இந்நிலையில் குழந்தைகள் புத்தகங்களோடு வளரப் பள்ளி நூலகங்கள் எந்த அளவிற்கு உதவுகின்றன? நம் தொடக்கப்பள்ளிகளில் பள்ளி நூலகமே இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கரும்பலகைத் திட்டத்தின் கீழ்ச் சில நூறு புத்தகங்கள் பள்ளி களுக்கு வழங்கப்படுகின்றன.

அவை பத்திரமாகத் தலைமையாசிரியர் அறையிலுள்ள பீரோவில் தூங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் புத்தகங் களைப் படித்துக் கிழித்து விட்டால் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் எப்படிக் கணக்கு ஒப் படைப்பது?

மேலும் குழந்தைகள் பாடப் புத்தகங் களைத் தவிர வேறு புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் நம்மிடையே ஓங்கி யிருக்கிறது. குழந்தைகள் மதிப்பெண் பெறும் போட்டியில் உந்தித் தள்ளப்படுகிறார்கள். குழந் தைகள் கதைப் புத்தகங்களைத் தொடுவது என்பது தீட்டாகிவிட்டது.

இப்போது ‘அனைவருக்கும் கல்வித்திட்டம்’ புத்தகங்களை பீரோக்களில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. வகுப்பறை மூலையில் ((Reading Corner) ஒரு கயிற்றில் துணிகளை காயப் போடுவது போல் புத்தகங்கள் தொங்குகின்றன.

குழந்தைகள் புத்தகங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத் திருக்கிறது. படிக்கும் வாய்ப்பல்ல! குழந்தைகள் புத்தகங்களைப் படித்ததாக ‘சும்மா’ பதிவுகள் செய்வதைத் தவிர்த்து ஆசிரியர்கள் உண்மையில் குழந்தைகள் புத்தகங்களை நேசிக்க, வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் வாசிக்கும் ருசியை ஏற்படுத்தி விட்டால் நூலகங்கள் குழந்தைகளால் நிரம்பி வழியும்.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைத்தல் என்பது முக்கியமானது. இது புரிந்து கொள்ளப் பட்டுள்ளதால் கல்வித்துறை, பள்ளிக்கும் நூலகத் திற்கும் இணைப்பை ஏற்படுத்த ஆணை வெளி யிட்டுள்ளது. ஆணை மட்டும் போதாது என்பதே உண்மை.

தமிழகத்திலுள்ள நூலகங்களின் நிலை மையை எண்ணிப் பாருங்கள். எந்தக் குழந்தையாவது நூலகத்திற்கு வருமா? குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் நூலகங்கள் இருக்கிறதா? ஆபத்தை விளை விக்கும் சாலை ஓரங்களில் பார்க்கவே பயப்படும் நிலையில் உள்ள கட்டடங்களில் நம் நூலகங்கள் இருக்கின்றன. முதலில் நூலகம் அமைய வேண்டிய இடம் குழந்தைகள் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்க வேண்டும். இதை அமெரிக்காவில் திட்ட மிட்டுச் செய்திருப்பதை நான் பார்த்தேன்.

குழந்தைகள் பல்வேறு பயிற்சிக்கு வரும் இடங்களில் பூங்காக்களின் அருகில் விசாலமான இடத்தில் நூலகங்கள் இருக்கின்றன. எல்லாப் பொது நூலகங்களிலும் சிறுவர் பகுதி குழந்தை களைக் கவரும் விதத்தில் உள்ளன. கூப்பர் டீனோ பொது நூலகத்தின் வாயில் சுவரில் மிகப்பெரிய மீன் தொட்டி சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

நீரில் சுற்றி வரும் வண்ண மீன்கள் குழந்தைகளை வாசிக்க வா என்று அழைப்பது போலிருக்கிறது. சன்னிவேல் பொது நூலகத்தின் முற்றத்தில் உட்கார்ந்த நிலையில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் சிலை உள்ளது. அந்த நூலகத்தின் குறிக்கோள் வாசகம் முன்புறம் எழுதப்பட்டிருக் கிறது.

‘வாசிப்பில் நுழை’ (Dig into Reading) என்பதே அந்த வாசகம். குழந்தைகள் வாசிப்பில் நுழைவதற் கான ஆயத்தங்கள், உத்திகள் அந்த நூலகத்தில் இருக்கின்றன. குழந்தைகள் அமருவதற்கான இருக் கைகள் அவர்கள் விரும்பும் விதத்தில் இருக்கின்றன. வட்டமாக, சதுரமாக, அடுக்குகள் கொண்டதாக, சாய்வாக இருக்கும் மெத்தை இருக்கைகள் குழந்தை களை ஓரிடத்தில் உட்கார வைத்து விடுகின்றன.

குழந்தைகளுக்கு எட்டும் உயரத்து அலமாரிகள், சுழலும் அலமாரிகள் புத்தகங்களை எளிதாக எடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர் பகுதியிலுள்ள அலங்காரங்கள், பொம்மைகள் குழந்தைகளைக் கவரும் சூழலை ஏற்படுத்தி விடு கின்றன.

புதிய புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் சுவரில் பதிக்கப்பட்டுள்ள தாங்கிகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வழிகாட்டும் விதமாகக் குழந்தைகளின் வயது வாரியாக (Grade) படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களின் தலைப்பும் விஷய சுருக்கமும் ஒவ்வொரு மாதமும் கைப்பிரதிகளாகத் தரப்படுகிறது.

நூலகத்தில் நுழைந்துவிட்ட குழந்தைகள் வாசிப்பில் நுழைய புத்தகங்களே தூண்டில்களாக இருக்க முடியும். அமெரிக்க நூலகங்களிலுள்ள குழந்தை நூல்கள் குழந்தைகளுக்குரியதாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் பெரிய வர்கள் நூல்களுக்கும் குழந்தைகள் நூல்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அங்குக் குழந்தை நூல்கள் பெரிய வடிவத்தில் கெட்டி அட்டை யுடன் கண்ணைக் கவரும் வண்ணப்படங்களுடன் இருக்கின்றன.

புத்தகத் தயாரிப்பில் குழந்தைகளின் வயது கவனத்தில் கொள்ளப்படுகிறது. நூலகத்தில் புத்தகப் பகுதிகளும் வயது அடிப்படையில் (Grade) பிரித்து அடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக நூலகங் களில் இந்நிலை இல்லை. இன்னும் கொடுமை, குழந்தை நூல்கள் அடுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பெரியவர்களுக்கான நூல்களும் இருப்பதுதான்.

நூலகத்தில் குழந்தைகளுக்கு நூல்களை அறிமுகப்படுத்துவது என்பதும் ஒரு கலை தான். நூலகம் அமைந்துள்ள ஊரைப் பற்றிய நூல்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள் பற்றிய நூல்கள் தனியாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. சிறுவர் நாவல் எழுதிய மார்க் ட்வைனின் சிலையும் நூல்களும் அவர் பிறந்த ஊரில் உள்ள நூலகத்தில் விசேஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.

நூலகத்தில் குழந்தைகள் பகுதியில் (Children’s Corner) தனி நூலகர் இருக்கிறார். குழந்தைகளை நேசிக்கும் அவர் குழந்தைகளுக்கு உதவுகிறார்.வழிகாட்டுகிறார். புத்தகத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்சிகள் தருகிறார்.

பள்ளி ஆண்டு விடுமுறைகளில் நூலகத்தில் வாசிப்பு தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் (Events) நடைபெறுகின்றன. கதை சொல்லுதல், ஓவியப் போட்டி, மொழிப் பயிற்சிகள், இணைய தளப் பயன்பாடுகள் எனக் குழந்தைகள் ஊக்கமுடன் ஈடுபடுகிறார்கள். நூலகத்திலேயே குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், செய்த கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் சந்திப்பும் கூட்டமும் நடைபெறு கிறது. கற்றல் தொடர்பான பாதிப் பணிகளை அங்கு நூலகமே செய்து விடுகிறது.

தமிழ்நாட்டின் நிலை என்ன? இங்குச் சிறுவர் நூலகங்கள் இல்லை. பொது நூலகங்களில் சிறுவர் பகுதிகளும் இல்லை. போரினால் சிதைந்து போன ஈழத்தில் கூட யாழ்ப்பாண நூலகத்தில் சிறுவர் பகுதி குழந்தைகளைக் கவரும் விதத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இங்கு யாருக்கும் வெட்க மில்லை! தேவநேயப் பாவாணர் நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறுவர் பகுதி சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கிறது. ‘ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்’ என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நூலக அவலங்களை மறைக்க ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. எல்லாப் பொது நூலகங்களிலும் சிறுவர் பகுதிகள் துவக்கப்படவேண்டும். இதுவே தமிழில் குழந்தை இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்.

நூலகத்தில் சிறுவர் பகுதி ஏற்படுத்துவதற்கு இணையாகச் செய்யப்பட வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. அது குழந்தை நூல்கள் வெளியீடு சம்பந்தப்பட்டது. நீங்கள் நூலகத்திற்குச் சென்று அங்கிருக்கும் குழந்தை நூல்களை பரிசீலனை செய்தால் தெரிய வரும். குழந்தை நூல்களில் 80ரூ கதைப் புத்தகங்களாகவும் நீதி போதனை நூல் களாகவும் இருக்கும். திருக்குறள், ஆத்திசூடி, நல் வழி தொடர்புடைய நூல்கள் அதில் பாதி இருக்கும்.

குழந்தைகளுக்குத் தேவை அறிவியல், நடப்பியல் தொடர்புடைய நூல்களாகும். அவை மிகக் குறை வாகவே இருக்கும். இக்குறைபாட்டை நம் நூலக இயக்கத்தின் தந்தை, உலகப் புகழ் பெற்ற டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் 1957-ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். கிட்டத்தட்ட 56 ஆண்டு களாகக் குழந்தை நூல்களின் தன்மையில் மாற்ற மில்லை. இந்த செக்கு மாட்டுத்தனம் நம் நாட்டில் தான் நடக்கும். அதில் மாற்றம் வேண்டும்.

1957-இல் குழந்தை இலக்கிய நூல்களைப் பற்றி மதிப்பீடு செய்த போது ‘நூலகத் தந்தை’ ஆணித்தரமான கருத்தையும் தெரிவித்தார். ‘குழந்தை இலக்கியத்தைப் புறக்கணித்தால் வருங்காலத்தில் பிற இலக்கியங்கள் புறக்கணிக்கப்படும்’ என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவருடைய நம்பிக்கை நிரூபணம் ஆகிவிட்டது.

தமிழில் இப்போது நல்ல நாவல்கள் வருவதில்லை, நல்ல சிறுகதைகள் வருவதில்லை. மனதைத் தொடும் உருக்கமான கவிதைகள் இல்லை, சமூகத்தின் நிஜமுகத்தைக் காட்டும் ஆய்வுக் கட்டுரைகள் இல்லை. ஒட்டுமொத்த சமூகமே குப்பைத் திரைப் படங்களிலும் பாடல்களிலும் மூழ்கிக் கிடக்கிறது. திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களே நமக்கு முக்கியமானவர்கள், வழிகாட்டிகள்.

நல்ல நூல்களைப் படிப்பதற்கும் அதன் மூலம் சமூக மனிதனாகக் குழந்தைகள் வளர்வதற்கும் நூலகம் உதவமுடியும். நம்மூர் நூலகங்களில் சிறுவர் பகுதிகளை ஏற்படுத்துவதற்கு அரசு செய்யும் காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

குழந்தை எழுத்தாளர்களும் குழந்தை நல ஆர்வலர்களும் அவரவர் வசிக்கும் ஊர்களில் உள்ள நூலகங் களில் சிறுவர் பகுதிகளை ஏற்படுத்த வேண்டும். மாதந்தோறும் நூலகங்களில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழ்க் குழந்தைகள் வாசிப்பில் நுழைய இதுவே வழி.

Pin It